ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா உற்ஸவம் புஷ்ப யாகத்துடன் நேற்று நிறைவடைந்தது. கடந்த மார்ச் 28 அன்று கொடியேற்றத்துடன் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா துவங்கியது. ஏப்ரல் 5 அன்று இரவு முக்கிய நிகழ்வான ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாண திருவிழாவின் நிறைவு நாளான நேற்று மாலை 5:30 மணிக்குமேல் புஷ்ப யாகம் துவங்கியது. இதனை முன்னிட்டு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பல்வகை மலர்களால் பூக்கோலம் இடப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து நேற்றுடன் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா உற்ஸவம் நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.