பதிவு செய்த நாள்
10
ஏப்
2023
03:04
பரமக்குடி: மநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பெருங்கரை கிராமத்தில் அருள் பாலிக்கும், சிவபெருமான் 47வது திருவிளையாடல் புராணம் நிகழ்த்திய, சுயம்பு லிங்கம் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
பரமக்குடி அருகே பெருங்கரை கிராமத்தில் அங்கையற்கண்ணி அம்பாள் சமேத அட்டாள சொக்கநாதர் (சுயம்புலிங்கம்) கோயில் உள்ளது. இக்கோயில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 47-ம் திருவிளையாடலாகிய கருங்குருவிக்கு உபதேசம் செய்த சுயம்பு லிங்கம் உள்ளது. கோயில் கருவறையை 8 யானைகளை தாங்கிய நிலையில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு ஏப்., 7 அன்று மாலை அனுக்கையுடன் விழா துவங்கியது. ஏப்., 8 காலை கணபதி ஹோமம், நவக்கிரக, லட்சுமி, கோமாதா பூஜைகள் நடந்தன. மாலை 5:30 மணிக்கு வாஸ்து சாந்தியும், முதல் கால யாக பூஜைகள் பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து ஏப்., 9 ல் 2, 3 ம் காலயாக பூஜைகளும், இன்று காலை 5:30 மணிக்கு 4 ம் யாக சாலை பூஜைகள் துவங்கி, 9:00 மணிக்கு மகாபூர்ணாகுதி நடந்தது. பின்னர் யாத்ரா தானம் நிறைவடைந்து, யாக சாலையில் இருந்து தீர்த்த குடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து விமான கலசங்களை அடைந்தனர். காலை 9:50 மணிக்கு கோயில் 5 கருடன்கள் வட்டமிட அட்டாள சொக்கநாதர், அங்கையற்கண்ணி உள்ளிட்ட அனைத்து பரிவார விமான கலசங்களுக்கும் மகா அபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. சுவாமி, அம்பாளுக்கு மகா அபிஷேகம் நடந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. தக்கார் சுந்தரேஸ்வரி, திருக்கோயில் அர்ச்சகர்கள், கிராம பொதுமக்கள் திறளாக கலந்து கொண்டனர்.