பதிவு செய்த நாள்
15
ஏப்
2023
11:04
சென்னை,சாலிகிராமத்தில் உள்ள வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, மாம்பலம் தாசில்தார் அளவீடு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை மாநகரின் பல இடங்களில், வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு சொந்தமாக நிலங்கள் உள்ளன. அந்த வரிசையில், சாலிகிராமம் வீரமாமுனிவர் தெருவில் 1.92 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, மாநகராட்சி, மாம்பலம் தாசில்தார் அளவீடு செய்ய உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2016ல் கோவில் துணை கமிஷனர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனு விபரம்: கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதி, பொது மக்கள் வசதிக்காக சாலை அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த சாலை பகுதியை அளவீடு செய்து, எல்லையை வரையறை செய்ய வேண்டும்; நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றக்கோரி, 2016ல் கோவில் மற்றும் மாநகராட்சிக்கு, மாம்பலம் தாசில்தார் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதில், கோவிலுக்கு சொந்தமான நிலம் இல்லாமல், வேறொரு நிலம் எண் குறிப்பிடப்பட்டது. அதற்கும், கோவில் நிலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால், கோவிலுக்குரிய நிலத்தை அளவீடு செய்யக் கோரி, மாநகராட்சி, மாம்பலம் தாசில்தாரருக்கும் மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், மாநகராட்சி தரப்பில் ரமா தேவி மற்றும் கூடுதல் அரசு வழக்கறிஞர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஆஜராகினர். அனைத்து தரப்பு வாதங்களுக்குப் பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு: நிலத்தை அளவீடு செய்யக்கோரி, பலமுறை கோவில் நிர்வாகம் கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் தரப்பில் பரிசீலிக்கப்படவில்லை. எனவே, கோவில் நிர்வாகம் வழங்கும் ஆவணங்களை ஆய்வு செய்து, தகுதியான நில அளவையாளரை வைத்து, நிலத்தை அளவீடு செய்ய வேண்டும். இப்பணியை, மாம்பலம் தாசில்தார் இரண்டு வாரங்களுக்குள் முடித்து, ஏப்., 26ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.