பரமக்குடி: பரமக்குடி கோயில்களில் சித்திரை தமிழ் புத்தாண்டையொட்டி, பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து கோலாகலமாக கொண்டாடினர்.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. காலை 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டன. பின்னர் சிறப்பு தீப ஆராதனைகளுக்குப்பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பெருமாள் சங்கு, சக்கரம் ஏந்தி ராஜாங்க திருக்கோலத்தில் ஏகாந்த சேவையில் அருள் பாலித்தார்.
*எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்குப்பின் பக்தர்கள் திரளாக வழிபாடு செய்தனர். *பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில், சீதா, ராமர், லட்சுமணன் மற்றும் புனித புளி ஆஞ்சநேயருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூச்சொரிதல் விழா நடந்தது. *பரமக்குடி சின்ன கடைத்தெரு துர்க்கை அம்மன் கோயிலில் காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மாலை 6:00 மணிக்கு தட்டுகளில் வண்ண பூக்கள் அலங்கரிக்கப்பட்டு நகர்வலம் வந்தனர். பின்னர் மங்கள இசை முழங்க, துர்க்கை அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. *பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் நேற்று காலை அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.