பதிவு செய்த நாள்
15
ஏப்
2023
11:04
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சென்னை, புறநகரில் உள்ள கோவில்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. பல கோவில்களில் பஞ்சாங்கம் வாசித்து பலன்கள் கூறப்பட்டன.
சுபகிருது ஆண்டில் இருந்து ஸ்ரீசோபகிருது ஆண்டு நேற்று பிறந்தது. தமிழ்ப் புத்தாண்டை பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். பல வீடுகளில், சித்திரை கனி காணும் பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னை மற்றும் புறநகரில் உள்ள, பிரசித்தி பெற்ற கோவில்களில் மின் விளக்குகளில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருத்தணி முருகன் கோவில்: தமிழ் புத்தாண்டு விழாவை ஒட்டி, நேற்று முன்தினம் இரவு முழுதும், கோவில் நடை திறக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு, 12:01 மணிக்கு மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தங்கவேல், தங்க கிரீடம், பச்சை மாணிக்க கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
காலை, 10:30 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு, 1,008 பால்குட அபிஷேகம் நடந்தது.
இரவு 7:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி, தேர் வீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வடபழநி ஆண்டவர் கோவில்: நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கோ பூஜை நடந்தது. தொடர்ந்து காலசந்தி பூஜையும், காலை 8:00 மணிக்கு பாலாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்க நாணயக் கவசம் சாத்தப்பட்டது. காலை 11:00 மணிக்கு உச்சிகால சிறப்பு பாலாபிஷேகமும், பின் மூலவருக்கு ராஜ அலங்காரமும் நடந்தது. பக்தர்கள், அதிகாலை முதல் இரவு 9:00 மணி வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில்: நேற்று காலை 6:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். காலை 10:30 மணிக்கு ஸ்ரீசோபகிருது வருட பஞ்சாங்கம் வாசித்தல், சிறப்பு வழிபாடு நடந்தது.
குன்றத்துார் முருகன் கோவில்: காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சந்தனம், பால், தயிர் உள்ளிட்டவற்றால் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. முருகப்பெருமான் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிறுவாபுரி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்: இக்கோவில் வளாகம், செடிகள், மலர்கள், பழங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோபுரங்கள் மற்றும் மதில் சுவர் முழுதும் வண்ண விளக்குகளால் ஜொலித்தது. கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் முன் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.
அதேபோல, மயிலை கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் கோவில் உட்பட பல கோவில் களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.
அறநிலையத் துறை அமைச்சர் உத்தரவு அலட்சியம்: கோடைக் காலத்தில், கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு வசதியாக வளாக நடைபாதையில் வெள்ளை நிற வண்ணம் பூசுதல், தேங்காய் நார் தரை விரிப்புகள், வரிசை தடுப்புகளில் தற்காலிக நிழற்பந்தல் உள்ளிட்ட வசதி ஏற்படுத்த கோவில் நிர்வாகத்தினருக்கு அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை, பெரும்பாலான கோவில் நிர்வாகத்தினர், தமிழ் புத்தாண்டான நேற்று கண்டு கொள்ளவில்லை. திருத்தணி முருகன் கோவில் உட்பட பல கோவில்களில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால், வெயிலில் தவித்தனர்.