நெற்குப்பை: திருப்புத்தூர் அருகே கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி மகோற்ஸவத்தை முன்னிட்டு மாலை தேரோட்டம் நடந்தது.
இளையாத்தக்குடி கைலாசநாத சுவாமி நித்ய கல்யாணி அம்மன் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பத்து நாட்கள் பங்குனி மகோத்ஸவம் நடைபெறும். ஏப்.9ல் உற்ஸவ அம்மன் இளையாத்தக்குடியிலிருந்து புறப்பாடாகி கீரணிப்பட்டிக் கோயிலில் எழுந்தருளி காப்புக்கட்டி உத்ஸவம் துவங்கியது. தினசரி இரவு அம்மன் வாகனங்களில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்கள் தரிசித்தனர். ஆறாம் திருநாளில் ஊஞ்சல், ஏப்.15 ல் புஸ்ப ப ல்லாக்கு நடந்தது. இன்று காலை 9:30 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. திரளாக பக்தர்கள் வடம் பிடித்து மாலை 5:15 மணிக்கு நிலைக்கு வந்தது. இன்று மாலை உற்ஸவ அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் இளையாத்தக்குடிக்கு புறப்பாடாகி உத்ஸவம் நிறைவடைகிறது.