பதிவு செய்த நாள்
18
ஏப்
2023
09:04
ஜம்மு, ஜம்மு - காஷ்மீரில் உள்ள அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்கும் புனித யாத்திரைக்கான முன்பதிவு நேற்று துவங்கியது.
இமயமலைத் தொடரில் தெற்கு காஷ்மீரில் உள்ள அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க நாடு முழுதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வருவர்.
ஆதார் விபரங்கள்: கடல் மட்டத்தில் இருந்து 12 ஆயிரத்து 800 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த குகை கோவிலுக்கு, இந்த ஆண்டு செல்வதற்கான யாத்திரை, வரும் ஜூலை 1ல் துவங்கி, ஆகஸ்ட் 31 வரை நடக்க உள்ளது. இதற்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் அமர்நாத் கோவில் நிர்வாகத்தின் பிரத்யேக செயலி வாயிலாக நேற்று துவங்கியது. அதோடு, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஜம்மு - காஷ்மீர் வங்கி, எஸ்.பி.ஐ., வங்கிகளின் 542 கிளைகளில் நேரடியாக கட்டணம் செலுத்தி, முன்பதிவு செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் ரோஹித் ராய்னா கூறியதாவது: கடந்த ஆண்டு வரை அமர்நாத் பயணத்துக்கான விண்ணப்பங்கள் யாத்திரீகர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டன. இந்த ஆண்டு முதல், ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாத்திரை மேற்கொள்பவர்கள் கண்டிப்பாக ஆதார் விபரங்களைக் கொண்டு வர வேண்டும். அனைத்து யாத்திரீகர்களும் சுகாதாரச் சான்றிதழைப் பெறுவது கட்டாயமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
அனுமதி இல்லை: இந்த யாத்திரைக்கு, 13லிருந்து 75 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில், ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட வாரங்களில் உள்ள கர்ப்பிணியருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. யாத்திரீகர்கள், https://jksasb.nic.in என்ற இணைய தளத்திலும், SASB என்ற அமர்நாத் கோவில் நிர்வாகத்தின் பிரத்யேக செயலியிலும் அமர்நாத் யாத்திரைக்கு முன்பதிவு செய்யலாம்.