பதிவு செய்த நாள்
18
ஏப்
2023
09:04
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலம் பகுதியில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.
சுவாமி, பெருந்தேவி தாயார், ஆண்டாள், ஆழ்வார்கள் வீற்றுள்ளனர். துவக்கத்தில், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த 2019ல், அர்ச்சகர் ஊதிய சிக்கலால், கோவிலை மூடியதால் வழிபாடு தடைபட்டது. மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம், அங்கும் உள்ள நிலையில், காணும் பொங்கலன்று, ஸ்தலசயன பெருமாள் அப்பகுதிக்கு பார்வேட்டை செல்வார். இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்ட நிலையில், பக்தர்களே வழிபாட்டைத் துவக்கினர். இந்நிலையில், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் நிர்வாகத்திற்கு, கடந்த ஆண்டு கோவில் மாற்றப்பட்டது. மாமல்லபுரம் கோவிலில் திருப்பணிகள் நடப்பதால், இரண்டு ஆண்டுகளாக, லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் பார்வேட்டை நடைபெறவில்லை. இக்கோவில் உற்சவங்கள் கருதி, கடந்த ஜன.,ல், புஷ்ப யாகம் நடத்தினர். நேற்று முன்தினம், திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது. காலை, சுவாமியருக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. மாலை, லட்சுமி நாராயண பெருமாள் உற்சவர், மாப்பிள்ளை அலங்காரத்தில் ஒய்யாலி சேவையாற்றினார். இரவு, வேத வழிபாட்டு சடங்குகளுடன், அவருக்கும், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்று, சேர்த்தி சேவையாற்றினர். பக்தர்கள் தரிசித்தனர். பெண்களுக்கு வளையல் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.