பதிவு செய்த நாள்
18
ஏப்
2023
05:04
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் உற்சவ விழா துவங்கியுள்ள நிலையில், அவரது நினைவாக கட்டப்பட்ட மணிமண்டபம் பராமரிப்பின்றி மூடிக் கிடப்பதால், பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுாரில், 1017ம் ஆண்டு அவதரித்தவர், வைணவ மகான் ராமானுஜர். ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு அவதார விழா, 2017ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. இதை சிறப்பிக்கும் வகையில், ராமானுஜருக்கு ஸ்ரீபெரும்புதுாரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என, 2016ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் அருகே ஜீயர் தோப்பு பகுதியில் 2.79 ஏக்கர் இடத்தில் 7.24 கோடி ரூபாய் மதிப்பில் ராமானுஜர் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. மேலும், இங்கு வேதபாட சாலை, மாணவர் தங்கும் விடுதி, அன்னதானக் கூடம், ராமானுஜர் வரலாற்று தகவல் மையம், நுாலகம், ராமானுஜர் வாழ்க்கை வரலாறு குறித்த குறும்படத்தை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் வசதிகளுடன் கட்டடங்கள் கட்டிமுடிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, 2021, பிப்., 26ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி, ராமானுஜர் மணிமண்டபத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், இந்த மணிமண்டபத்தை பராமரிக்க கவனம் செலுத்தவில்லை. இதனால், மணிமண்டபம் பராமரிப்பின்றி மூடிக் கிடக்கிறது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜரின் 1006ம் ஆண்டு அவதார உற்சவ விழா ஏப்.16ல் துவங்கியது. இந்த விழாவுக்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஸ்ரீபெரும்புதுார் வருகின்றனர். ஸ்ரீபெரும்புதுாரில் பராமரிப்பில்லாமல் மூடிக் கிடக்கும் ராமானுஜர் மணிமண்டபத்தை பார்க்கும் பக்தர்கள் வேதனையடைகின்றனர். மணிமண்டபத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அவர்கள், கோரிக்கை வைத்துள்ளனர்.