பதிவு செய்த நாள்
20
ஏப்
2023
03:04
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா திருகம்பம் நடுதல் நிகழ்வுடன் துவங்கியது.
தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை திருவிழா பிரபலமான திருவிழாக்களில் ஒன்றாகும். திருவிழாவிற்கு தேனி மாவட்டம் மட்டும் இன்றி மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து செல்வர். நேற்று முன்தினம் சுவாமி வாக்கின் படி திருக்கம்பம் வீரபாண்டி கோயில் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து திருக்கம்பம் வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோயில் கொண்டு செல்லப்பட்டது. நேற்று காலை கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் இருந்து பக்தர்கள் சூழ வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு திருகம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் மாரிமுத்து, செயலாளர் பாலசுப்பிரமணியன், கணக்காளர் பழனியப்பன், பேரூராட்சி தலைவர் கீதா, பேரூராட்சி செயலாளர் ஆறுமுகநாயினார், மண்டகப்படிதார்கள், முறைதாரர்கள் பங்கேற்றனர். மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மே 9ல் சுவாமி கோயில் வீட்டில் இருந்து கோயிலுக்கு பவனி வருதல், மே 10, 11 சுவாமி முத்துப்பல்லக்கு, புஷ்ப பல்லக்கில் புறப்பாடும், 12ல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வும், 16 ஊர் பொங்கல் நிகழ்வும் நடக்கிறது. கோயில் அலுவலர்கள் கூறுகையில், ‘தீச்சட்டி, காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை பக்தர்கள் முதல் 6 வரை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கப்பிரதட்சனம் செய்தல், ஆயிரம் கண் பானை நேர்த்திக்கடன் செலுத்தலாம்.’, என்றனர்