பதிவு செய்த நாள்
20
ஏப்
2023
03:04
சென்னை: தமிழகத்தில், 2,000 கோவில்களில் ஒருகால பூஜை திட்டத்தை விரிவுபடுத்த, 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவில் பணியாளர் ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட, 249 அறிவிப்புகளை, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.
சட்டசபையில் நேற்று, அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகள்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி, அக்னிதீர்த்த படித்துறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கு, 50 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்
மரபு சார்ந்த கிராம தெய்வங்களின் சுடுமண் சிற்பங்களான அம்மன், அய்யனார், ஏழு கன்னிமார்கள் போன்ற திருவுருவங்களை சீரமைத்து பாதுகாக்கும் பணிகள், முதல் கட்டமாக ஆறு கோவில்களில், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். திருச்சி மாவட்டம், திருப்பைஞ்ஞீலி ஸ்ரீலிவனேஸ்வரர், விழுப்புரம் ஆடலீஸ்வரர், தஞ்சை கீழப்பழையாறை சோமநாதசுவாமி, ஈரோடு வேலாயுதசுவாமி, நாமக்கல் தோளூர் நாச்சியார், நல்லாயி அம்மன் கோவில்களில் ராஜகோபுரங்கள் கட்டப்படும்
நாமக்கல் அர்த்தநாரீஸ்வரர், திருவாரூர் சதுரங்க வல்லபநாத சுவாமி, துாத்துக்குடி வல்லநாடு திருமூலநாத சுவாமி உள்ளிட்ட 19 கோவில்களுக்கு, 11.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருத்தேர்கள் செய்யப்படும். 53 கோவில் தேர்களுக்கு, 10.25 கோடி ரூபாயில் பாதுகாப்பு கொட்டகை அமைக்கப்படும். 32 கோவில் குளங்கள், 10.04 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 5 கோடி ரூபாய்; சமயபுரம் மாரியம்மன் கோவில கோபுரங்கள், இரவிலும் பக்தர்கள் கண்டுகளிக்க, ஒளிரும் விளக்குகளால் அலங்கரிக்கப்படும்
நாள் முழுதும் அன்னதான திட்டம், மேலும் மூன்று கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும். ஏழு கோவில்களில் அன்னதான திட்டம் புதிதாக துவங்கப்படும்
கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுதும் பிரசாதம் வழங்கும் திட்டம், தற்போது 15 கோவில்களில் உள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், மதுரை கள்ளழகர், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி, திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும்
வடலுர் வள்ளலார் தெய்வ நிலையத்துக்கு, தைப்பூச ஜோதி தரிசனத்துக்காக வரும் பக்தர்களுக்கு, வடலுார் மற்றும் மேட்டுக்குப்பத்தில், மூன்று நாட்கள் அன்னதானம் வழங்கப்படும்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், பழநி, ராமேஸ்வரம் உள்ளிட்ட 10 கோவில்களின் பிரசாத விற்பனை மையங்கள் ஏற்படுத்தப்படும்
அதிக அளவில் பக்தர்கள் வருகை புரியும், 15 கோவில்களில், மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, இத்திட்டம், மேலும் இரண்டு கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும்
பொருளாதாரத்தில் பின்தங்கிய 600 ஜோடிகளுக்கு, கோவில்கள் சார்பாக, 4 கிராம் தங்க தாலி உள்பட, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி, திருமண விழா நடத்தப்படும்
கோவில்களில் நடக்கும் திருமணங்களில், மணமக்களில் ஒருவர் மாற்று திறனாளியாக இருந்தால், அவர்களுக்கு புத்தாடைகளுடன் கட்டணமில்லா திருமணம் நடத்தப்படுகிறது. இதில் நடப்பாண்டு முதல், 4 கிராம் தங்க தாலி கோவில் சார்பாக வழங்கப்படும். நிதி வசதியற்ற, 2,000 கோவில்களுக்கு ஒருகால பூஜை திட்டத்துக்காக, அரசு மானியமாக 30 கோடி ரூபாயும், அறநிலையத் துறை பொது நல நிதியில் இருந்து, 10 கோடி ரூபாயும் வழங்கப்படும். இக்கோவில் அர்ச்சகர்களுக்கு மாத உதவித் தொகையாக, 1,000 ரூபாய் வழங்கப்படும். கோவில் பணியாளர்களுக்கான மாத ஓய்வூதியம், 3,000 ரூபாயில் இருந்து, 4,000 ரூபாயாக உயர்த்தப்படும், குடும்ப ஓய்வூதியம், 1,500 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்படும். கோவில்களில் அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்கள், பணி அனுபவம் பெறும் சமயத்தில், மாதம் 6,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.