பதிவு செய்த நாள்
22
ஏப்
2023
10:04
புதுடில்லி: தமிழகம், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை, கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகையில் பலர் ஈடுபட்டனர். கடந்த மார்ச் 24ல் துவங்கிய நோன்பு காலம் முடிந்த நிலையில், பிறை தென்பட்டதால், இன்று(ஏப்ரல் 22) ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தியும், ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கியும் கொண்டாடினர்.
தமிழகத்தில் கோலாகலம்: தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு விருதுநகர் பெரிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது. தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் தவ்ஹீத் ஜமாத் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு தொழுகையில், ஒருவருக்கு, ஒருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர்.
தலைவர்கள் வாழ்த்து: ஜனாதிபதி திரவுபதி முர்மு: ஈத் புனித ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கிறது. இந்த பண்டிகை அன்பு, இரக்கம் மற்றும் பாசம் போன்ற உணர்வுகளை பரப்புகிறது. சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்க உணர்வுகளை மேம்படுத்த இந்த நாளில் உறுதிமொழி எடுப்போம்.இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
பிரதமர் மோடி: சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் கருணை உணர்வு மென்மேலும் வளர வேண்டும். அனைவரும் ஆரோக்கியத்துடன் சிறப்பாக வாழ இந்நன்னாளில் பிரார்த்திக்கிறேன். ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்: ரம்ஜான் கொண்டாடும் முஸ்லிம் சமூகத்தினர் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த ரம்ஜான் வாழ்த்துகள். அவர்களின் வாழ்வில் என்றென்றும் இன்பமும், நலமும் நிறைந்து இனிமை பெருகட்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி: ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை இன்பமுடன் கொண்டாடும் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங் கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் எனக் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இறைத்தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மனதில் நிலைநிறுத்தி; உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி; தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, இறைவனை வழிபட்டு, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை எளியோருக்கு அளித்து, அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியப் பெருமக்கள் கொண்டாடி மகிழ்வார்கள். இஸ்லாமியர்கள் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.
த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்: இஸ்லாம் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் போதிக்கிறது. இறை நம்பிக்கையுடன் நபிகள் நாயகத்தின் தியாகம், நன்மை, ஒழுக்கநெறி உள்ளிட்ட நற்செயல்களை அனைவரும் கடைபிடித்து நல்வழியில் பயணிப்போம். இஸ்லாமிய சகோதர-சகோதரிகளுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.
ரம்ஜான் சிறப்பு: ரம்ஜான் பண்டிகை என்பது 29 அல்லது 30 நாட்கள் நோன்புக்கு, பிறகு உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நோன்பு காலத்தில் காலையில் சூரிய உதயத்திற்கு பிறகு சூரியன் மறைவு வரை உணவு ஏதும் உண்ணாமல் நோன்பு இருப்பர். அதன் முடிவில் ஈகைத் திருநாள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்படும் ரம்ஜான் பண்டிகை நாளில் ஏழை மக்களுக்கு உதவிகள் செய்து, கொண்டாடி மகிழ்வர்.