பதிவு செய்த நாள்
24
செப்
2012
10:09
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், மூன்றாம் பிரகாரத்தை சித்திரப் பிரகாரமாக மாற்றுவதற்காக, தூண்களில் கலர் பெயின்ட் அடிக்கும் பணி நடந்து வருகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மூன்றாம் பிரகாரம், 75 ஆண்டுகளுக்கு முன் வண்ணச்சித்திரங்கள் அடங்கிய பிரகாரமாக விளங்கியது. நாளடைவில் பிரகாரச்சுவர் மற்றும் தூண்களில் இருந்த சித்திரங்கள் புதுப்பிக்கப்படாமல், சுண்ணாம்பு மற்றும் காவி மட்டும் அடிக்கப்பட்டது. இதனால், தூண்களுக்கு இடையில் மேல் பகுதியில் இருந்த சுண்ணாம்பு சுதை சிற்பங்கள் சிதிலமடைந்து வந்தன. மேலும், தூண்களுக்கும் ஒரே கலர் பெயின்ட் அடிக்கப்பட்டதால், பிரகாரத்தில் அமைந்துள்ள சிற்ப வேலைப்பாடுகள், பார்ப்பவர்களின் கண்களுக்கு தெரியாமல் இருந்தது. இந்நிலையில், மூன்றாம் பிரகாரத்தை முன் இருந்தது போல் சித்திரப் பிரகாரமாக மாற்ற, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. தற்போது, பிரகாரத்தில் உள்ள தூண்கள் மற்றும் சிற்பங்களுக்கு, பல வண்ணத்தில் பெயின்ட் அடிக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது, மூன்றாம் பிரகாரத்தில் செல்பவர்கள், 10 நிமிடத்தில் சுற்றி வந்து விடுகின்றனர். வண்ணம் பூசும் பணிகள் முடிந்ததும், பிரகாரத்தில் உள்ள புராண வரலாற்றுச் சித்திரங்கள், சுதை சிற்பங்களை பார்த்து ரசித்து சுற்றிவர அதிக நேரம் ஆகும். மூன்றாம் பிரகாரத்தை தொடர்ந்து, திருக்கல்யாண மண்டபம், நவசக்தி மண்டபத்திலும், பல வண்ணத்தில் பெயின்ட் அடிக்கும் பணி துவங்கப்படவுள்ளது.
2007 விளக்கு பூஜை: ராமநாதசுவாமி கோயிலில் உலக நன்மைக்காக விவேகானந்த கேந்திரம் சார்பில் 2007 விளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி நேற்று மாலை ஏராளமான பெண்கள் நான்குரத வீதியில் ஊர்வலமாக வந்து ராமநாதசுவாமியை தரிசனம் செய்தனர். கோயில் மூன்றாம் பிரகாரத்தில் விவேகானந்த கேந்திரத்தின் மூத்த தொண்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் விளக்கு பூஜை நடந்தது.