திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் எளிதாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக 4.15 லட்சம் ரூபாய் செலவில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயிலாக நெல்லையப்பர் கோயில் திகழ்ந்து வருகிறது. இக் கோயிலுக்கு நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் தரிசனம் செய்து வருகின்றனர். முக்கிய திருவிழா நாட்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும் காலங்களில் பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்ய வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தற்போது கோயில் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் கட்டண தரிசன முறை நடைமுறையில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சுவாமி சன்னதி முன் கட்டண தரிசனம், பொது தரிசனத்திற்கு என தனித்தனியாக இரும்பு தடுப்புகள் அமைப்பதற்காக கோயில் நிதியில் இருந்து 4.15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து சுவாமி சன்னதி முன் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுவாமி சன்னதியில் பொது தரிசனத்திற்கு 3சுற்றுகளும், சிறப்பு தரிசனத்திற்கு ஒரே ஒரு சுற்று சென்று சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் ஓரிரு நாளில் நிறைவு பெறவுள்ளது. அதன்பின் பக்தர்கள் இரும்பு தடுப்புகள் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்யவுள்ளனர்.