பதிவு செய்த நாள்
24
ஏப்
2023
10:04
அவிநாசி: அவிநாசி வட்டம், நம்பியாம்பாளையம் கிராமம், ராயர்பாளையத்தில் உள்ள காரகுட்டை காடு பகுதியில் ஸ்ரீ செல்வ விநாயகர்,ஸ்ரீ கருப்பராய சாமி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அவிநாசி அடுத்த நம்பியாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராயர்பாளையம் பகுதியில் காரக்குட்டை காட்டில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர்,ஸ்ரீ கருப்பராய சாமி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம்,சிவ ஸ்ரீ கபாலீஸ்வர சிவாச்சாரியார்,சிவ ஸ்ரீ தியாகராஜ குருக்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக 21ம் தேதி கணபதி,லட்சுமி மற்றும் நவகிரக ஹோமம்,கோ பூஜை மற்றும் ராயர் பாளையம் மாகாளியம்மன் கோவிலிலிருந்து தீர்த்தக் கலசம் எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முதற் கால யாக பூஜையில் வாஸ்து சாந்தி, அங்குரார்பணம்,கும்ப அலங்காரம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
22ம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜையில் மஹா பூர்ணாகுதி,விநாயகர் வழிபாடு,மங்கல இசை,தீபாராதனையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மஹா கும்பாபிஷேகம் நேற்று காலை ஸ்ரீ செல்வ விநாயகர்,ஸ்ரீ கருப்பராய ஸ்வாமி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு யாத்ரா தானம்,கலச புறப்பாடு நடைபெற்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோதரிசனம், அலங்கார பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில், 22ம் தேதி கொங்கு பண்பாட்டு மையம் ஈசன் பெருஞ்சலங்கையாட்டக் குழு சார்பில் கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டம்,கும்பாபிஷேக தினமான நேற்று அவிநாசி சிரகிரி வேலன் காவடி குழு வழங்கும் காவடியாட்டம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு,கோவில் திருப்பணி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.