பதிவு செய்த நாள்
24
ஏப்
2023
10:04
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
இக்கோயிலில் ஏப்., 22 இரவு அனுக்கை, காப்பு கட்டுதல் நடந்தது. இந்த நேற்று காலை 10:00 மணிக்கு கோயில் கொடி மரத்தில் நந்தி கொடி ஏற்றப்பட்டு, அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை பஞ்சமூர்த்திகள் சிம்மாசனத்தில் உலா வந்தனர். மேலும் தினமும் சுவாமி, அம்பாள், காலை, மாலை என கேடயம், கற்பகத்தரு, கிளி, பூத, சிங்க, குதிரை, கைலாச, காமதேனு, வெள்ளி ரிஷபம், நந்திகேஸ்வரர், அன்ன வாகனங்களில் வீதி வலம் வருவர். ஏப்., 29 காலை நடராஜர் வீதி வலமும், மறுநாள் பிச்சாண்டவர் புஷ்ப சப்ரத்தில் அருள்பாலிக்கிறார். மே 1 விசாலாட்சி அம்மையுடன் சந்திரசேகர சுவாமி அருள் பாலித்து, திருக்கல்யாண மண்டபத்தில் சீர்வரிசை நிகழ்ச்சி நடக்கிறது. மே 2 அன்று மாலை 6:00 மணிக்கு சுந்தரேஸ்வரர் மாப்பிள்ளை திருக்கோலத்தில் வலம் வந்து, கோயில் வளாகத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடக்கிறது. பின்னர் யானை மற்றும் புஷ்ப பல்லக்கில் பட்டண பிரவேசம் நடைபெறும். மே 3 காலை 9.30 மணிக்கு சித்திரை தேரோட்டம் நடக்கிறது மறுநாள் தீர்த்தவாரி உற்சவமும், இரவு ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா மற்றும் கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் மற்றும் ஆயிரவைசிய சபையினர் செய்து வருகின்றனர்.