பதிவு செய்த நாள்
24
ஏப்
2023
11:04
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள புரதான, கலை வேலைபாடுகளை கொண்ட கல் மண்டபங்கள் முறையாக பராமரிக்காமல் சிதைந்து வருகிறது. இதனை புனரமைத்து பாதுகாக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை செல்லும் ரோட்டில் பட்டத்தரசி அம்மன் கோயில், இந்திரா நகர், பூவாணி உட்பட பல்வேறு இடங்களிலும், நகரின் மேற்கு பகுதியான சாலியன் தோப்பு மற்றும் செண்பகத் தோப்பு பகுதிகளிலும் கலை வேலைப்பாடுகள் மிக்க, புரதானமான கல் மண்டபங்கள் பல உள்ளன. தற்போதைய நவீன உலகில் கூட கட்டப்பட முடியாத இந்த கல் மண்டபங்கள், கடந்த பல வருடங்களாக அறநிலை துறை, வருவாய்த்துறை, தொல்லியல் துறைகளின் அலட்சியப் போக்கால் கண்டுகொள்ளப்படாமல், முறையாக பராமரிக்கப்படாமல் சுற்றுச்சுவர்கள் மற்றும் கல் தூண்கள் பெயர்ந்து வருகிறது. இதனால் இக்கல் மண்டபங்கள் மாலை 6:00 மணிக்குமேல் மது அருந்தும் கூடமாக குடிமகன்கள் பயன்படுத்தி வருகின்றனர். பல சமூக விரோத செயல்களும் நடக்கிறது. இது ஸ்ரீவில்லிபுத்தூர் பொதுமக்களிடம் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட அரசு நிர்வாகம் வரலாற்று சிறப்புமிக்க கல் மண்டபங்களை புனரமைத்து, பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்ரீவில்லிபுத்தூர் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.