கோவில்பாளையம்: அக்ரஹார சாமக்குளம் விளையாட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
அக்ரஹார சாமக்குளத்தில், பழமையான விளையாட்டு மாரியம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் முடிவடைந்தது. இதையடுத்து முன் மண்டபம் அமைத்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா கடந்த 22ம் தேதி காலை 8:30 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்கியது. மாலையில் முதற்கால வேள்வி பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜையும், கோபுர கலசம் நிறுவுதலும், எண் வகை மருந்து சாத்துதலும் நடந்தது. மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜை நடந்தது. நேற்று காலை 9:45 மணிக்கு விளையாட்டு மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் அருளுரை வழங்குகினர். இதையடுத்து அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. கோவில் பாளையம், பெரிய நாயக்கன் பாளையம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.