பதிவு செய்த நாள்
25
ஏப்
2023
03:04
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பிரிவு, பயனீர் நகரில் உள்ள நாகலிங்கேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவை ஒட்டி, 21ம் தேதி மங்கல இசையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி, துர்கா, சரஸ்வதி ஹோமம், நவகிரக ஹோமம், கோமாதா பூஜைகள் நடந்தன. மறுநாள் ஜோதிபுரம் ஐயப்பசாமி கோவிலில் இருந்து தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாரி எடுத்துக் கொண்டு பெண்கள், குழந்தைகள் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, வேள்வி சாலைகள் அமைக்கப்பட்டு, நான்கு கால பூஜைகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா கோவை அருள்பிடம் கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள், செல்வபுரம் சிவானந்தா தவக்குடில் ஸ்வயம் பிரகாஷ் ஆனந்த ஸ்வாமிகள், ராஜராஜேஸ்வரி வேள்விக்குழு சர்வ சாதகம் மணிகண்டன், கோவில் பூசாரி கருப்புசாமி ஆகியோர் முன்னிலையில் தீர்த்த குடங்கள் கோவிலை சுற்றி வலம் வந்தன. பின்னர், விமானத்தில் தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேக விழா நடந்தது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.