பதிவு செய்த நாள்
27
ஏப்
2023
03:04
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில், சித்திரை திருவிழாவின் 3-வது நாளான நேற்று, அதிகார நந்தி சேவை, 63 நாயன்மார்கள் வீதி உலா மற்றும் திருஞானசம்பந்தருக்கு பார்வதி தேவி ஞானப்பால் வழங்கும் நிகழ்வு நடைபெற்றன.
அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில், சைவ சமயக்குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற திருத்தலமாகும். ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு, கடந்த 24ம் தேதி, கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவின் மூன்றாவது நாளான நேற்று, அதிகார நந்தி சேவையில், ஆட்சீஸ்வரர் - இளங்கிளி அம்மன் ஆகியோர் அருள்பாளித்தனர். அதன் பின், 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகளுக்கு பின், கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கைலாய வாத்தியம், நாதஸ்வர கச்சேரியுடன் கோவிலின் அதிகார நந்தி சேவையில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆட்சீஸ்வரரும், இளங்கிளி அம்மனும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதன் பின், 63 நாயன்மார்களும் வீதி உலா வந்தனர். இதனிடையே, அச்சிறுபாக்கம் நகரில் உள்ள சங்கு தீர்த்த குளக்கரையில், திருஞானசம்பந்தருக்கு பார்வதி தேவி பால் புகட்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியையும், அம்மனையும் தரிசனம் செய்து, ஞானப்பாலை பெற்றுச் சென்றனர்.