சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2023 06:04
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் விழா ஏப்ரல் 25 ல் துவங்கி மே 6 ல் முடிகிறது. கொடியேற்று விழாவிற்குப் பின் மே 1ம் தேதி வரை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தினமும் திருக்கோயில் வலம்வரும் நிகழ்ச்சி நடந்துவருகிறது. காப்புக்கட்டிய பக்தர்கள் பலர் அதிகாலை அங்கபிரதட்சணம் செய்து வருகின்றனர். மே 2ல் கரகத்திடலில் எழுந்தருளும் அம்மன் இரவில் சிம்ம வாகனத்தில் சக்கம்பட்டி முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா சென்று அருள்பாலிக்கிறார். மே 3ல் பக்தர்கள் பொங்கலிடுதல், தீச்சட்டி எடுத்தல் நிகழ்ச்சியும் இரவில் அன்ன வாகனத்திலும் மறுநாள் வியாழன் பூச்சொரிதல் விழா மற்றும் முத்துப் பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். மே 5 ல் பால் குடம், பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சிக்குப் பின் இரவில் வாணவேடிக்கைகளுடன் பூப்பல்லக்கில் வீதி உலா சென்று அருள்பாலித்த பின் மே 6 சனிக்கிழமை அம்மன் பூஞ்சோலை அடையும் நிகழ்ச்சியும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை ஹிந்து அறநிலையத்துறை நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்துவருகின்றனர்.