சீர்காழி கோவிலில் தெய்வத்திருமேனிகள், செப்பேடுகளை அருங்காட்சியாக குழுவினர் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2023 06:04
மயிலாடுதுறை: சீர்காழி சட்டநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தெய்வத்திருமேனிகள் மற்றும் தேவாரப் பதிகம் பதிக்கப்பட்ட செப்பேடுகளை அருங்காட்சியக குழுவினர் ஆய்வு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இக்கோவில் கும்பாபிஷேகம் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் மே மாதம் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி யாகசாலை அமைப்பதற்காக கோவில் வளாகத்தில் மண் எடுக்க பள்ளம் தோண்டிய போது ஐம்பொன்னால் ஆன 23 தெய்வத்திருமேனிகளும், பூஜை பொருட்களும், தேவாரப் பதிகங்கள் பதிக்கப்பட்ட 413 முழுமையான செப்பேடுகள், 83 சேதமடைந்த செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டன. கடந்த 17ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு நூலாக்க திட்ட குழுவினர் சீர்காழி சட்டநாதர் கோவிலுக்கு வந்து செப்பேடுகளை ஆய்வு செய்தனர். அப்போது தேவார பதிகங்கள் பதிக்கப்பட்ட செப்பேடு இந்த கோவிலில் முதல்முறையாக கிடைத்துள்ளது என தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று நாகப்பட்டினம் அருங்காட்சியக காப்பாட்சியர் மணி முத்து தலைமையிலான குழுவினர் கோவிலுக்கு வந்து அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தெய்வத் திருமேனிகள் மற்றும் செப்பேடுகளை சீர்காழி ஆர்.டி.ஓ. அர்ச்சனா, தாசில்தார் செந்தில் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு செய்தனர். தெய்வத் திருமேனிகள் மற்றும் செப்பேடுகள் எந்த ஆண்டை சேர்ந்தவை, உயரம், அகலம், எடை ஆகியவற்றை சேகரித்து விபரங்களை அரசுக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.