பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த யோக வீரபத்திரர் சிற்பம் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2023 06:04
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த யோக வீரபத்திரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்கள் ஸ்ரீதர், உதவி பேராசிரியர் தாமரைக்கண்ணன் ஆகியோர் விருதுநகர் மாவட்டத்தின் கடைசி பகுதியான திருப்புவனம் அருகில் உள்ள எஸ். நாங்கூரில் கள ஆய்வு மேற்கொண்டனர். அங்கு ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் கால யோக வீரபத்திரர் சிற்பம் கண்டறியப்பட்டது.
இது குறித்து அவர்கள் கூறியதாவது : வீரபத்திரர் 64 சிவ முகூர்த்தங்களின் ஒருவராக அறியப்படுகிறார். அசுர குல வீர மார்த்தாண்டன் மூவுலகையும் ஆள நினைத்து பிரம்மனிடம் வரம் பெற்றான். அதன்படி தேவர்களை கடுமையாக துன்புறுத்தியதால், தேவர்கள் சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்க சிவபெருமானின் வியர்வை துளிகள் ஒவ்வொன்றிலும் வீரபத்திரர்கள் தோன்றி, வீரமார்த்தாண்டனை கொன்ற கோலமே வீரபத்திரர் கோலமாகும். தற்போது நாங்கள் கண்டறிந்த சிற்பமானது யோக நிலையில் அமர்ந்திருக்கும் வீரபத்திரர் சிற்பம். இது மூன்றரை அடி உயரம் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. சிற்பத்தில் 4 கரங்கள் உள்ளன. வலது மேற்கரத்தில் மானும், இடது மேல் கரத்தில் அக்க மாலை (ருத்ராட்ச மாலை) யும், இரண்டு முன் கரங்களும் கீழே தொங்கவிட்டபடியும் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கால்களும் குத்த வைத்தவாறு யோக பட்டையுடன் சிற்பம் உள்ளது. இந்த ஊரில் முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்த விநாயகர் கோவிலில் இரண்டு சதுர வடிவ ஆவடைகளும், சப்தமாதர் தொகுப்பும், விநாயகர் சிற்பமும், ஒரு தவ்வை சிற்பமும் கண்மாய் ஓரத்தில் உள்ளன. இவற்றை வைத்து பார்க்கும் போது இந்த ஊரில் பழமையான சிவன் கோவில் இருந்திருக்க வேண்டும். அந்த கோவிலில் அந்நிய படையெடுப்புகளினாலோ, கால ஓட்டத்தின் காரணமாகவோ சிதைந்து இருக்கலாம். அதன் காரணமாக சிற்பங்கள் சிதறி இருக்க வேண்டும். என்று கூறினர்.