திருப்புத்தூர்: திருப்புத்தூர் தர்மசாஸ்தா அய்யப்பசுவாமி கோயிலுக்கு 5வது முறையாக நேற்று கும்பாபிேஷகம் நடந்தது. இக்கோயிலில் திருப்பணிகள் நடந்து கடந்த ஏப்.,23ல் யாகசாலை பூஜைகள் ரமேஷ்குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் துவங்கியது. தொடர்ந்து மறுநாள் மாலையில் முதற்கால யாக பூஜையும், ஏப்25 ல் இரண்டாம்,மூன்றாம் கால யாக பூஜைகளும், ஏப்26 ல் நான்கு,ஐந்தாம் காலயாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை 7:35 மணிக்கு ஆறாம் காலயாக பூஜைகள் துவங்கின. பூர்ணாகுதி தீபாராதனைகள் நடந்து காலை10:00 மணி அளவில் யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடு ஆகியது. தொடர்ந்து மூலவர் விமானக் கலசத்திற்கான பூஜைகள் நடந்து, மலர்கள் அணிவிக்கப்பட்டு காலை 10:15 மணிக்கு திருப்பணிக்குழு தலைவர் ராமேஸ்வரன் முன்னிலையில் பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் கும்பத்திற்கு புனித நீரால் அபிேஷகம் செய்து கும்பாபிேஷகம் நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள், மதுரை ஆதீனம், அமைச்சர் பெரியகருப்பன், ஆ.பி.சீ.அ.கல்லுாரி செயலர் ஆறுமுகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சுற்று வட்டார பொதுமக்கள் திரளாக கும்பாபிஷேகத்தை தரிசித்தனர்.