சோழவந்தான்: விக்கிரமங்கலத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆச்சாரியார் ரிஷிகேசன் சிவன் தலைமையில் கும்பாபிஷேகம் விழா நடந்தது. இதையடுத்து நேற்று காலை நான்காம் கால யாக பூஜையுடன் கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்தனர். சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். இதையடுத்து அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன், எட்டூர் கிராம கமிட்டி தலைவர் ஜெயபாலன், ஊராட்சி தலைவர் கலியுகநாதன் உட்பட பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். மேக்கிழார்பட்டி, அம்மாபட்டி, குரும்பபட்டியைச் சார்ந்த நல்லகுட்டி வகையறா, விக்கிரமங்கலம் ஆண்டி வகையறா, எட்டூர் கிராம பொதுமக்கள் இவ்விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
சோழவந்தான் அருகே அம்மச்சியாபுரத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் வரதராஜ பண்டிட் ஜி பட்டர் தலைமையில் அங்குரார்பணம், யாக பூஜைகள் நடந்தது. இதையடுத்து மலையாளம் கிருஷ்ணய்யர் வேதசாஸ்திர பாடசாலை வித்யார்த்திகள் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்தனர். இதையடுத்து கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். இதையடுத்து அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். கிராம பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டி ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.