பதிவு செய்த நாள்
26
செப்
2012
10:09
நகரி: திருப்பதி, வெங்கடேச பெருமாள் கோவிலில், ஒன்பது நாட்களாக நடந்து வந்த, ஆண்டு பிரமோற்சவ விழா, இன்று (செப்.26) காலை, தெப்ப திருக்குளத்தில், சக்கரஸ்நான திருமஞ்சன சேவையுடன் நிறைவடைகிறது.பிரமோற்சவ விழாவின், எட்டாம் நாளான செப்.25ல், ரத உற்சவம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, மலையப்ப சுவாமி ரத உற்சவ சேவையில், திருமலையின் மாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் நிறைவு நாளான செப்.26 ல்நடைபெறும், சக்கரஸ்நான வைபவ நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்களை பாதிக்கும் வகையில், ஆந்திர மாநில அரசு உயர்த்தியுள்ள பஸ் கட்டணத்தை ஏற்க முடியாது, என, திருப்பதி தேவஸ்தான போர்டின் சேர்மன் பாபிராஜு தெரிவித்தார். இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது: திருப்பதி - திருமலை இடையே இயக்கப்படும் ஆந்திர மாநில சாலை போக்குவரத்துக் கழக (ஆர்.டி.சி.,) பஸ்களில், இம்மாதம், 24ம் தேதி முதல், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. திருப்பதி - திருமலை இடையே இதுவரை, 34 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது, ஆறு ரூபாய் உயர்த்தப்பட்டு, 40 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சாதாரண பஸ்களில், 27 ரூபாய் என, இருந்த கட்டணம், தற்போது, 30 ரூபாய் என, உயர்த்தப்பட்டு உள்ளது. எக்ஸ்பிரஸ் பஸ்சில், 38 ரூபாயிலிருந்து, 44 ரூபாய் என, உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், திருமலைக்கு வரும் ஏழை நடுத்தர பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். உயர்த்தப்பட்டுள்ள கட்டணத்தைக் குறைப்பதற்கு, திருப்பதி தேவஸ்தான போர்டின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் கிரண்குமார் ரெட்டி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சத்தியநாராயணா ஆகியோரை சந்தித்துப் பேச உள்ளேன். இவ்வாறு பாபிராஜு தெரிவித்தார்.