சதுரகிரியில் சித்ரா பவுர்ணமி வழிபாடு; மழை பெய்யாவிட்டால் மலையேற அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மே 2023 03:05
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மே 3 முதல் 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் மழை பெய்தால் பக்தர்கள் அனுமதிக்கபடமாட்டார்கள். ஓடைகளில் நீர் வரத்தை பொறுத்து முடிவு செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
இக்கோயிலில் பவுர்ணமி அமாவாசையை முன்னிட்டு பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மே 3 பிரதோஷ நாள் முதல் மே 6 முடிய 4 நாட்கள் தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மழை வேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வருகிறது. மேலும், எதிர்வரும் நாட்களிலும் மலைப்பகுதியில் கனமழை எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய சூழலில் ஓடைகளில் நீர்வரத்து தன்மையை பொறுத்து பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கன மழை பெய்தால் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.