பதிவு செய்த நாள்
01
மே
2023
05:05
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் தேர் திருவிழாவை முன்னிட்டு,பெங்களூரு வேத ஆகம ஸமஸ்கிருத மஹா பாடசாலை மாணவர்கள் பாராயணம் படித்தனர்.
அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழாவான தேர் விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத சந்திரசேகர பெருமான் சூரிய சந்திர மண்டல காட்சிகள், அதிகார நந்தி, கிளி,பூதம்,அன்ன வாகன காட்சிகள், கைலாச வாகனம், புஷ்ப பல்லாக்கு ஆகியவற்றில் நான்கு ரத வீதிகளிலும் பக்தர்களுக்கு எழுந்தருளி காட்சி தந்தனர். தேர் விழாவில் ஐந்தாம் நாளில் பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள நடைபெற்றது. இன்று காலை அபிஷேகம் நடைபெற்று பஞ்சமூர்த்திகளும்,பெருமாளும் திருத்தேருக்கு பூரம் நட்சத்திரத்தில் எழுந்தருளினர். அதனைத்தொடர்ந்து, பெங்களூரு வேத ஆகம ஸமஸ்கிருத மஹா பாடசாலை முதல்வர் சிவஸ்ரீ சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் முன்னிலையில்,பாடசாலை மாணவர்கள் ஸ்ரீ மஹா ருத்ர பாராயணம்,வேத பாராயணம்,திருமுறை பாராயணம் ஆகியவை பாராயணம் செய்யப்பட்டது. சாமி திருத்தேருக்கு எழுந்தருளியதை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இன்று குரு மஹா சன்னிதானங்கள்,அமைச்சர்கள் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள தேரோட்டம் நடைபெற உள்ளது.