காஞ்சிபுரம்: உத்திரமேரூர் ஆனந்தவல்லி நாயகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், 10 நாட்கள் பிரம்மோற்சவம் விமரிசையாக நடக்கும்.
அதன்படி நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த மாதம் 28 ல் காலை 5:15 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலை பவழக்கால் சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார். இரண்டாம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் காலை ஹம்ச வாகனமும், இரவு சூரிய பிரபை வாகனத்திலும் சுவாமி வீதியுலாவந்தார். மூன்றாம் நாள் உற்சவமான நேற்று காலை கருடசேவை உற்சவம் விமரிசையாக நடந்தது. இதில், கருடவாகனத்தில் எழுந்தருளிய சுந்தர வரதராஜ பெருமாள் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். மாலை ஹனுமந்த வாகன உற்சவம் நடந்தது. ஏழாம் நாள் உற்சவமான வரும் 4ல், தேரோட்டம் நடக்கிறது.