பரமக்குடியில் விசாலாட்சி - சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம்: நாளை சித்திரை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2023 04:05
பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் சித்திரை திருவிழா ஏப்., 24 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது. தினமும் சுவாமி, அம்பாள் உட்பட பஞ்சமூர்த்திகள் திருவீதி வலம் வருகின்றனர். ஏப்., 30 இரவு திக் விஜயம் நடந்து, மே 1 கமல வாகனத்தில் விசாலாட்சி அம்மன் தபசு திருக்கோலத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து இன்று காலை 10:30 மணிக்கு சந்திரசேகர சுவாமி மாப்பிள்ளை திருக்கோலத்தில் ரத வீதிகளில் உலா வந்தார். தொடர்ந்து ஈஸ்வரன் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் சுவாமி, அம்பாள் வீற்றிருந்தனர். அப்போது சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க, பெருமாள் முன்னிலையில், விசாலாட்சி அம்பிக்கைக்கும், சந்திர சேகர சுவாமிக்கும் காலை 11:45 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட ஏராளமான பெண்கள் தங்களது திருமாங்கல்யத்தை கோயிலில் புதுப்பித்து அணிந்து கொண்டனர். தொடர்ந்து மகா தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதனையொட்டி பரமக்குடி சுந்தரராஜ பவனத்தில் அன்னதான குழுவினரால் காலை 12:00 மணி தொடங்கி மாலை வரை பக்தர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. நாளை சித்திரை தேரோட்டம் நடைபெறு்கிறது.