சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதிருத்ர ஜப பாராயணம் மற்றும் மஹாருத்ர ஹோமம் நடந்த வருகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அதிருத்ர ஜப பாராயணம் கடந்த 1 ம் தேதி துவங்கி 10 ம் தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 07.30 மணி முதல் துவங்கி இரவு 10 மணி வரை நடந்து வருகிறது. இதில் 121 தீக்க்ஷிதர்கள் கலந்துக் கொண்டு 11 முறை ஸ்ரீருத்ர மந்திர ஜப பாராயணம் மேற்கொண்டு, 10 நாட்களில் 14 ஆயிரத்து 641 முறை ஸ்ரீ ருத்ர மந்திரங்கள் பாராயணம் செய்யப்படுகிறது. அதேபோல் 11 ம் தேதி காலை 9 மணிக்கு மஹா ருத்ர ஹோமம் துவங்கி, விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து மதியம் மஹாருத்ர ஹோமம், கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை, கன்யா பூஜை, ஸுவாஸினி பூஜை, தம்பதி பூஜைகள் நடைபெற உள்ளது. மேலும் இன்று மாலை நடராஜர் மஹாபிஷேகம் நடைபெற உள்ளது. ஸ்ரீ சிவகாம சுந்தரி ஸமேத ஸ்ரீமன் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு சகல திரவிய மஹாபிஷேகம் நடக்கிறது. சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீக்ஷிதர்கள் இதற்கான பணிகளை செய்து வருகின்றனர்.