மீனாட்சி திருகல்யாணத்தில் விவசாயிகள் வழங்கிய அன்னதானம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2023 05:05
திருப்புவனம்: திருப்புவனம் கண்மாய்கரை அதிகமுடைய அய்யனார் கோயிலில் விவசாயம் செழிக்கவும், பொதுமக்கள் நலமுடன் வாழவும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருகல்யாணத்தை முன்னிட்டும் விவசாயிகள் அன்னதானம் வழங்கினர். திருப்புவனம் கண்மாயை நம்பி கலியாந்தூர், வெள்ளக்கரை,நெல்முடிகரை, பழையூர், புதூர் விவசாயிகள் ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். வருடம்தோறும் சித்திரை மாதம் விவசாயம் செழிக்கவும், பொதுமக்கள் நலமுடன் வாழவும் , மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் அன்று விவசாயிகள் இணைந்து அய்யனாருக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம், அய்யனாருக்கு கிடாவெட்டிதான் பெரும்பாலான பக்தர்கள் விருந்து வழங்குவார்கள் ஆனால் திருக்கல்யாண நாள் என்பதால் அதிகமுடைய அய்யனாருக்கு சைவ விருந்து வழங்குகின்றனர். நேற்று காலை அன்னதான விழாவை முன்னிட்டு அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின் கோயில் வளாகத்தில் நான்கு வகை கூட்டு, வடை பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அய்யனாரை வணங்கி அன்னதான விழாவில் பங்கேற்றனர்.
பழையூர் விவசாயி ராஜாமணி கூறுகையில்: கண்மாய் கரை காவல் தெய்வமான அய்யனாருக்கு சித்திரையில் சிறப்பு பூஜைகள் செய்து விருந்து வழங்கப்படும், விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆறு ஆண்டுகளாக அன்னதானம் வழங்கி வருகிறோம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர், என்றார்.