திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2023 02:05
திருச்சி: தென்கயிலாயம் எனப் போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது, இங்கு சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 25ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து, அம்பாளும், தாயுமானவர் சுவாமியும் காமதேனு, ரிஷபம், யானை, தங்கக் குதிரை, கைலாசபர்வதம், அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளினர்.
கடந்த ஏப்ரல் 29ம்தேதி செட்டிப்பெண் பிரசவம் பார்த்தல் வைபவமும், 30ம் தேதி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. மலைக்கோட்டை தாயுமானசுவாமி, அலங்கரிக்கப்பட்ட பெரிய திருத்தேரில் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மற்றொரு தேரில் மட்டுவார் குலழம்மை தாயார் எழுந்தருளினார். முன்னதாக, சண்டிகேஷ்வரர் பரிவார மூர்த்திகள் சிறிய தேரில் எழுந்தருளிச் சென்றனர். பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து ஓம் நமசிவாய என்ற பக்தி கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.