பதிவு செய்த நாள்
03
மே
2023
02:05
உளுந்தூர்பேட்டை: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா கடந்த 18ம் தேதி சாகை வார்த்தலுடன் துவங்கியது. நேற்று இரவு தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொண்ட திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் பூசாரிகளின் கையால் தாலிக் கட்டிக்கொண்டு இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
தேர் தயார் செய்தல்: தேரோட்டமான இன்று காலை 5 மணிக்கு கூத்தாண்டவர் சிரசு குவாகம் கிராமத்திலிருந்து கொண்டு வரப்பட்டு திருக்கண் திறந்தும், நத்தம் கிராமத்திலிருந்து கை, கால், கொடி, குதிரை ஆகியவையும், கீரிமேடு கிராமத்திலிருந்து புஜம், மார்பு ஆகியவையும், சிவிலியங்குளம் கிராமத்திலிருந்து குடை, தொட்டி கிராமத்திலிருந்து திருத்தேர் அச்சாணி ஆகியவற்றை கொண்டுவரப்பட்டு 21 அடி உயர தேரில் பொருத்தி தேரினை தயார் செய்தனர். பின்னர் 15 அடி மற்றும் 20 அடி உயரம் மாலையை தேரில் சாற்றி பூக்களால் அலங்கரித்தனர். பின்னர் 8.15 மணியளவில் தீபாராதனையுடன் தேரோட்டம் துவங்கியது. தேரோட்டத்தை உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தேரினை இழுத்துச் சென்றனர். அப்போது கிராம மக்கள் தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களையும், சில்லரைக் காசுகளையும் சுவாமி மீது வீசி வழிபட்டனர். தேர் செல்லும் பாதையில் திருநங்கைகள் சூரை தேங்காய்களை உடைத்து மெகா சைஸ் கற்பூரங்களை ஏற்றி கும்மியடித்து வழிபட்டனர். தேர் தொட்டி, நத்தம் வழியாக பந்தலடிக்கு சென்றடைந்ததும், திருநங்கைகள் பந்தலடியில் அழுகளம் நிகழ்ச்சியில் தாங்கள் அணிந்திருந்த தாலியை அறுத்தெறிந்து வெள்ளை புடவை கட்டி விதவை கோலம் பூண்டு ஒப்பாரி வைத்தனர்.
பின் அப்பகுதியில் உள்ள கிணற்றில் திருநங்கைகள், பக்தர்கள் குளித்துவிட்டு தங்கள் ஊருக்கு திரும்பத் தொடங்கினர். தேரோட்டத்தையொட்டி அதிக அளவில் கடைகள் வைக்கப்பட்டதால் பொதுமக்கள் பலாபழம், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். மாலை 5 மணிக்கு உறுமை சோறு (பலி சாதம்) படையல் நடந்தது. இதை வாங்கி சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதால் பக்தர்கள் முண்டியடித்து வாங்கினர். மாலை 7 மணிக்கு காளி கோயிலில் அரவான் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிரசு மட்டும் பந்தலடிக்கு கொண்டுவரப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்வித்து கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நாளை (4ம் தேதி) விடையாத்தி, (5ம் தேதி) தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. தேரோட்டத்தையொட்டி உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கடலூர், திருக்கோவிலூர், பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.