பதிவு செய்த நாள்
03
மே
2023
03:05
சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் அர்ச்சகர் செந்தில், நாகேஸ்வரன் தலைமையில் நடந்தது.
சிவாச்சாரியார்கள் குமரேசன் சிவம், கிருஷ்ணமூர்த்தி தலைமையில் யாக புஜைகள் நடந்தது. இதையடுத்து மாப்பிள்ளை வீட்டாராக பட்டர் விஷ்வசேனனும், பெண்வீட்டாராக முகேஷ் சிவமும் முன்னின்று அகிலாண்டேஸ்வரி மூலநாதனுக்கு திருக்கல்யாண வைபவத்தை நடத்தினர். இதில் கிராம பெண்கள் சீர்வரிசை சுமந்து ஊர்வலமாக வந்தனர். திருக்கல்யாண மேடையில் பெருமாள் வீற்றிருந்தார். இதையடுத்து மூலநாதன் அகிலாண்டேஸ்வரிக்கு திருமாங்கல்யம் பூட்டும் வைபோகம் நடந்தது. சுவாமிக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. சுவாமி சமேதரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அன்னதானத்தில் பங்கேற்று மொய் எழுதிச் சென்றனர். செயல் அலுவலர் பாலமுருகன், தக்கார் இளங்கோவன், கோயில் நிர்வாகத்தினர் சங்கரன், ரவி ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் பங்கேற்று, தங்களது திருமாங்கல்ய கயிறை மாற்றி சுவாமி சமேதரிடம் ஆசி பெற்றனர். சுவாமி சமேதராய் அதிகார நந்தி வாகனத்திலும், அம்மன் அன்னபக்ஷி வாகனத்திலும் வீதியுலா புறப்பாடு நடந்தது.
மண்ணாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் கோயில் வளாகத்தில் திருக்கல்யாண பந்தல் ஏற்பாடு செய்தனர். நேற்றுமுன்தினம் இரவு பெய்த மழையால் பக்தர்கள் அமர்ந்து சுவாமி சமேதரரின் திருக்கல்யாண நிகழ்வை காண சிரமப்பட்டனர். இதனால் பக்தர்கள் கோயிலின் முன்புறம் உள்ள இடத்தில் மண்டபம் அமைக்குமாறு கோயில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பெண்கள் திருமாங்கல்ய கயிறை மாற்றி, சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானத்தில் பங்கேற்று பக்தர்கள் மொய் எழுதிச் சென்றனர். கிராம மக்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இதையடுத்து மாலை திருக்கல்யாண கோலத்தில் சுவாமி சமேதராய் வீதியுலா புறப்பாடு நடந்தது. தொடர்ந்து பாராயணங்கள், பாடல்கள் பாடி ஊஞ்சலாடும் நிகழ்வு நடந்தது.
இதேபோல் திருவாலவாயநல்லூர் சப்பாணி கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் பூசாரி கணேசன் தலைமையில் நடந்தது. சிவாச்சாரியார் பாலசுப்பிரமணி தலைமையில் யாக பூஜைகள் செய்து, மாப்பிள்ளை வீட்டாராகவும், பெண் வீட்டாராகவும் இருந்து திருக்கல்யாண வைபவத்தை நடத்தினர். தொடர்ந்து புஷ்பாஞ்சலி, மாலை மாற்றும் நிகழ்வுகள் நடந்தது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் அன்னதானத்தில் பங்கேற்று மொய் எழுதிச் சென்றனர். கிராம பொதுமக்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மாலையில் திருக்கல்யாண கோலத்தில் சுவாமி சமேதராய் வீதியுலா புறப்பாடு நடந்தது.