மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2023 03:05
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி கோயிலில் கைலாய வாத்தியங்கள் முழங்க, சிலம்பாட்டத்துடன் நடைபெற்ற தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் போது அம்மனும்,சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று வந்தனர். நேற்று காலை சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து அன்று இரவு ஆனந்தவல்லி அம்மன் பூப் பல்லக்கிலும், சோமநாதர் சுவாமி வி.புதுக்குளம் கிராமத்தார்களால் செய்யப்பட்ட புதிய யானை வாகனத்திலும் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்திற்காக இன்று காலை 7:00மணிக்கு சோமநாதர் சுவாமி பிரியாவிடை யுடன் கோயில் முன்பாக அலங்கரிக்கப்பட்டிருந்த பெரிய தேருக்கு எழுந்தருளினார்.ஆனந்தவல்லி அம்மன் பெரிய தேருக்கு பின்னால் இருந்த சிறிய தேருக்கு எழுந்தருளினார். இத்தேர்களுக்கு முன்னால் விநாயகர் மற்றும் முருகன் வள்ளி, தெய்வானையுடன் சிறிய தேர்களில் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள், கைலாய வாத்தியங்கள் முழங்க மானாமதுரை வீர விதை சிலம்பாட்ட குழுவைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் சிலம்பாட்டத்துடன் காலை 9;20 மணிக்கு தேர்கள் நிலையிலிருந்து கிளம்பியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து 4 ரத வீதிகளிலும் இழுத்து வந்தனர்.தேர் காலை 10:20 மணிக்கு நிலையை அடைந்தவுடன் ஏராளமான பக்தர்கள் பூக்கள் மற்றும் காய்கறிகள்,நவதானியங்களை சுவாமிகளுக்கு தூவி வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமானோர் 4 ரத வீதிகளிலும் குடிநீர்,மோர்,மற்றும் குளிர்பானங்களை வழங்கினர்.தேரோட்ட விழாவில் மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.