பதிவு செய்த நாள்
03
மே
2023
06:05
உளுந்தூர்பேட்டை: கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் தாலி கட்டிக் கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 18ம் தேதி சாகை வார்த்தலுடன் துவங்கியது. சாகை வார்த்தல் விழாவில் கூவாகம், கூவாகம் காலனி, தொட்டி, நத்தம், அண்ணாநகர், சிவலிங்குளம், பாரதி நகர் உள்ளிட்ட 7 கிராமங்களில் இருந்து பெண்கள் கஞ்சி கலயங்களை ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் வைத்து ஸ்ரீ மாரியம்மனுக்கு படையலிட்டனர்.
19ம் தேதி பந்தலடியில் தாலி கட்டுதல் (பாரதம் ஆரம்பம்) நிகழ்ச்சி நடந்தது. 20ம் தேதி சந்தனு சரிதம், இரவு 10 மணிக்கு சுவாமி புறப்பாடும், 21ம் தேதி பீஷ்மர் பிறப்பும், இரவு சுவாமி புறப்பாடும், 22ம் தேதி தர்மர் பிறப்பும் இரவு சுவாமி புறப்பாடும், 23ம் தேதி பாஞ்சாலி பிறப்பும், இரவு சுவாமி புறப்பாடும், 24ம் தேதி பகாசூரம் வதம், இரவு சுவாமி புறப்பாடும் நடந்தது. 25ம் தேதி பாஞ்சாலி திருமணமும், இரவு சுவாமி புறப்பாடும், 26ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பும், இரவு சுவாமி புறப்பாடும், 27ம் தேதி இராஜசுய யாகம், இரவு சுவாமி புறப்பாடும், 28ம் தேதி விராடபர்வம், வெள்ளிக்கால் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. 29ம் தேதி கிருஷ்ணன் தூது, இரவு சுவாமி புறப்பாடும், 30ம் தேதி காலை அரவான்பலி, கூத்தாண்டவர் சுவாமிக்கு பாலாலயம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை கம்பம் நிறுத்துதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு சுவாமி திருக்கண் திறத்தல், திருநங்கைகள், பக்தர்கள் பூசாரிகளின் கையால் தாலிக் கட்டிக்கொண்டு இரவு முழுதும் ஆடிப்பாடி மகிழுந்தனர். இதில் ஏராளமான திருநங்கைகள் புத்தாடை உடுத்தி கலந்து கொண்டனர். இத்திருவிழாவில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து ஏராளமான திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருவிழா பாதுகாப்பு யொட்டி கள்ளக்குறிச்சி எஸ்.பி., மோகன்ராஜ், கடலூர் எஸ்.பி., ராஜாராமன் தலைமையில் டி.எஸ்.பி. மகேஷ் மற்றும் போலீசார் என 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இன்று(3ம் தேதி) காலை 6.30 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை உளுந்தூர்பேட்டை தொகுதி மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., துவக்கி வைக்கிறார். மாலை பந்தலடி பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல், 4ம் தேதி விடையாத்தி, 5ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.