Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நூலாசிரியர் நக்கீரர் வரலாறு!
முதல் பக்கம் » திருமுருகாற்றுப்படை
திருமுருகாற்றுப்படை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 செப்
2012
03:09

1. திருப்பரங்குன்றம்

உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை .  5

மறுவில் கற்பின் வாணுதற் கணவன்  
கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித்
தலைப்பெயல் தலை இய தண்ணறுங் கானத்து
இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து  10

உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன்  
மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற்
கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடி,
கணைக்கால் வாங்கிய நுசுப்பின், பணைத்தோள்,
கோபத் தன்ன தோயாப் பூந்துகில்,  15

பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்,
கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின்,
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழை,
சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனி,
துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச்  20

செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு
பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித்
தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத்
திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல்
மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத்  25

துவர முடித்த துகளறு முச்சிப்
பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்டு
உளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக்
கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு
இணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக  30

வண்காது நிறைந்த பிண்டி ஒண்டளிர்
நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ்
நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின்
குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர்  35

வேங்கை நுண்டாது அப்பிக் காண்வர
வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக்
கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி
வாழிய பெரிöதன்று ஏத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடி  40

சூரர மகளிர் ஆடும் சோலை  
மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்
சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தட்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்  
பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச்  45

சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்  
உலறிய கதுப்பின் பிறழ்பற் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின்
கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்கும் காதின் பிணர்மோட்டு  50

உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரற்
கண்தொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவர
வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா  55

நிணம்தின் வாயள் துணங்கை தூங்க  
இருபே ருருவின் ஒருபே ரியாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர்
மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து  60

எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்  
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையும்
செலவுநீ நயந்தனை யாயின், பலவுடன்
நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப  65

இன்னே பெறுதிநீ முன்னிய வினையே  
செருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போரரு வாயில்
திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து  70

மாடமலி மறுகின் கூடற் குடவயின் இருஞ்சேற்று
அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முட்டாள்
தாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர்  75

அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றமர்ந்து உறைதலும் உரியன். அதாஅன்று  
வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வரப்
படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக்.  80

கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின்
கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்டு  
ஐவேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
மின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப  85

நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
சேண்விளங்கு இயற்கை வாண்மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்பத்
தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார்
மனனேர்பு எழுதரு வாள்நிற முகனே.  90

மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்;ஒருமுகம்,
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்,
மந்திர விதியின் மரபுளி வழாஅ  95

அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம்,
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே ஒருமுகம்.  100

குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே.
ஆங்குஅம் மூவிருமுகனும் முறைநவின்று ஒழுகலின்  
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்
செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபு  105

வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்
விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒருகை; உக்கம் சேர்த்தியது ஒருகை;
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயதொருகை;
அங்குசங் கடாவ ஒருகை,இருகை  110

ஐயிரு வட்டமொடு எஃகுவலந் திரிப்ப,
ஒருகை மார்பொடு விளங்க ஒருகை
ஒருகை தாரொடு பொலிய, ஒருகை
கீழ்வீழ் தொடியொடு மீமிசைக்கொட்ப, ஒருகை
பாடின் படுமணி இரட்ட, ஒருகை  115

நீனிற விசும்பின் மலிதுளி பொழிய, ஒருகை
வானர மகளிர்க்கு வதுவை சூட்ட,
ஆங்குஅப் பன்னிரு கையும் பாற்படஇயற்ற  
அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்
வயிர்எழுந் திசைப்ப, வால்வளை ஞரல  120

உரந்தலைக் கொண்ட உருமிடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ,
விசும்பஆ றாக விரைசெலல் முன்னி,
உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பேஅதான்று  125

சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்
மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல்.  130

பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை  135

யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனியில் காட்சி முனிவர் முற்புக  
புகைமுகந் தன்ன மாசில் தூவுடை
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்.  140

நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர் இன்னரம்பு உளர  
நோயின்று இயன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்னகைப்  145

பருமம் தாங்கிய பணிந்தேந்து அல்குல்
மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்க  
கடுவொடு ஒடுங்கிய தூம்படை வால்எயிற்று
அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்  150

புள்ளணி நீள்கொடிச் செல்வனும், வெள்ளேறு
வலைவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்,
நூற்றுப்பத்துஅடுக்கியநாட்டத்துநூறுபல்  155

வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து
ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்,  
நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய   160

உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவரும் தலைவ ராக
ஏமுறு ஞாலந் தன்னில் தோன்றித்
தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவற் சுட்டிக் காண்வர  165

பகலிற் றோன்றும் இகலில் காட்சி
நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு
ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர்  
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத்  170

தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட
உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கிந்தம் பெறுமுறை கொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்  
தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள்  175

ஆவினன்குடி அசைதலும் உரியன்: அதான்று,  
இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை  180

மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல,  
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ,
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து  185

ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்: அதான்று,  
பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன்   190

அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு
வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்
நீடமை விளைந்த தேக்கள் தேறல்  195

குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர  
விரலுளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கால்
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல்  200

முடித்த குல்லை இலையுடை நறும்பூச்
செங்கால் மராஅத்த வாலிணர் இடையிடுபு
சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ
மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு  205

செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங்   210

கொடியன் நெடியன் தொடியணி தோளன்
நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கிற் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்
முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி  215
       
மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதொ றாடலும் நின்றதன்பண்பே; அதான்று,  
சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்,  220

ஆர்வலர் ஏத்த மேவரும் நிலையினும்,
வேலன் தைஇய வெறியயர் களனும்,
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்,
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்,
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்,  225

மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்  
மாண்டலைக் கொடியொடு மண்ணி அமைவர
நெய்யொடு ஐயவி அப்பி ஐதுரைத்துக்
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி
முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச்.  230

செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் ளரிசி
சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச்
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்  235

பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணையற அறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழிசை அருவியொடு இன்னியம் கறங்க.  240

உருவப் பல்பூதத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகியம் நிறுத்து முரணினர் உட்க
முருகாற்றுப் படுத்த உருகெழு வியல்நகர்  
ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன்  245

கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தனர் வழிபட
ஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறே  
ஆண்டாண்டு ஆயினும் ஆக; காண்தக.  250

முந்துநீ கண்டுழி முகனமர்ந்து ஏத்திக்
கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி,
நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ!  255

ஆல்கெழு கடவுட் புதல்வ! மால்வரை
மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!
இழையணி சிறப்பின் பழையோள் குழவி!
வானோர் வணங்குவில் தானைத் தலைவ!  260

மாலை மார்ப! நூலறி புலவி!
செருவில் ஒருவ! பொருவிறல் மள்ள!
அந்தணர் வெறுக்கை! அறிந்தோர் சொல்மலை!
மங்கையர் கணவ! மைந்தர் ஏறே!
வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ!  265

குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ!
பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே!
அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக!
நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபே ராள!  270

அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்!
மண்டமர் கடந்தநின் வென்றாடு அகலத்துப்
பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்!
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்!
சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி!  275

போர்மிகு பொருந! குரிசில்! எனப்பல
யானறி அளவையின் ஏத்தி ஆனாது,  
நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்
நின்னடி உள்ளி வந்தனென்; நின்னொடு
புரையுநர் இல்லாப் புலமை யோய்!எனக்.  280

குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன்  
வேறுபல் உருவின் குறும்பல் கூளியர்
சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றி,
அளியன் றானே முதுவாய் இரவலன் வந்தோன்
பெரும!நின் வண்புகழ் நயந்தென  285

இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித்  
தெய்வம் சான்ற திறல்விளங்கு உருவின்
வான்தோய் நிவப்பின் தான்வந் தெய்தி
அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன்
மணங்கமழ் தெய்வத்து இளநலங் காட்டி,  290

அஞ்சல் ஓம்புமதி; அறிவல்நின் வரவென
அன்புடன் நன்மொழி அளைஇ விளிவின்று
இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒருநீ யாகித் தோன்ற விழுமிய
பெறலரும் பரிசில் நல்கும்;அதி பலவுடன்  295

வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்து
ஆர முழுமுதல் உருட்டி வேரற்
பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு
விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த
தண்கமழ் அலரிறால் சிதைய நன்பல.  300

ஆசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உதிர ஊகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று  305

நன்பொன் மணிநிறம் கிளரப்பொன் கொழியா
வாழை முழுமுதல் துமியத் தாழை
இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்.  310

கோழி வயப்பெடை இரியக் கேழலொடு
இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம்
பெருங்கல் விடரளைச் செறியக் கருந்கோட்டு
ஆமா நல்லேறு சிலைப்பச் சேணின்று  315
இழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே.  

உரை

திணை: பாடாண்.  துறை : ஆற்றுப்படை

1. உலகம் என்பது தொடங்கி, 66, இன்னே பெறுதி நீ முன்னிய வினையே என்னுந் துணையும் ஒரு தொடர்; இதன்கண், முருகப் பெருமானுடைய திருவருட்செல்வம் நிரம்பப்பெற்று இம்மையிலேயே சீவன் முத்தத்தன்மை யெய்திய சான்றோன் ஒருவன், அத்தகைய பேற்றைப் பெறுந் தகுதியுடையனாய், அதனைப் பெறுதற் கவாவித் தன் எதிர்ப்பட்ட ஒருவனை அளவளாவும் வாயிலாய், முருகப் பெருமானுடைய இறையியல் முதலியவற்றையும், அவ்விறைவன் அடையாளப் பூமாலையினையும், சூரரமகளிர் அப்பெருமான் சீர்த்தியைப் பாடி ஆடுமாற்றையும், அப்பெருமானுடைய தெறற் சிறப்பையும், பிறவற்றையும் விரித்தோதுகின்றார்.

முருகப்பெருமானுடைய இறைமைத்தன்மை

1-3: உலகம் ........... அவிரொளி

பொருள் : உலகம் உவப்ப - உயிர்கள் மகிழும் பொருட்டு, வலன் ஏர்பு திரிதரு - மேருவை வலமாக எழுந்து திரிதலைச் செய்யும்; பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு - பற்பல சமயத்தினரும் புகழா நின்ற ஞாயிற்று மண்டிலம் கீழ்கடலிடத்தே எழக் கண்டாற் போன்று, ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி - இருவகைக் கருவிகளும் தாம் செல்லுதற்குரிய பொருள்கண்மேற் சென்று தங்குதல் இல்லையாக உள்ளத்துள்ளே ஒளிர்வதும் உள்ளத்திற்குச் சேய்த்தாய் நின்றே எங்கும் இயல்பாகவே விளங்குவதுமாகிய ஒளியானவனும்,

கருத்துரை : உயிர்கள் மகிழும் பொருட்டு மேருவை வலஞ்சுழ எழுந்து திரிதலைச் செய்யும் ஞாயிற்று மண்டிலத்தைக் கீழ்கடலிடத்தே எழுகின்ற செவ்வியிலே கண்டாற்போன்று, அன்பர்கள் தம் பத்துக் கருவிகளும் தத்தமக்குரிய பொருள்களிடத்தே செல்லாதனவாய் அடக்கிப் பொழுது, அவர்தம் உள்ளத்தே ஒளிர்வதும் அவர் கருத்திற்குச் சேய்த்தாய் நின்றே விளங்குவதுமாகிய இயற்கை ஒளியாகியவனும் என்பதாம்.

அகலவுரை : உலகம் என்பது பூமி. அஃது அதன் கூறுபாடுகள், சான்றோர், உயிர், ஒழுக்கம் முதலிய பல பொருள் குறித்த ஒரு சொல்லாயினும் ஈண்டு உவப்ப என்னும் வினையினால் உயிர் என்னும் பொருட்டாய் நின்றமை உணரலாம்: என்னை? உயிரற்ற சடவுலகிற்கு உவத்தற்றொழில் இன்மையான்.

பேரிருள் சூழ்ந்த இரவின்கண் அனைத்துயிரும் உறங்கிக் கிடப்பனவாகக் கீழ்கடலிடத்தே ஞாயிற்று மண்டிலந் தோன்றியவுடன், அவை விழிப்புற்றுத் தத்தம் வினையிடத்தே சென்று மகிழ்தலும், ஆணவப் பேரிருளிற்பட்டுத் தம்முண்மையும் உணரமாட்டாதனவாய்ச் சடம்போலக் கிடந்த உயிர்ப் பொருள்கள் இறைவன் அருள்கூர்ந்து அவையிற்றை விழிப்பூட்டுவான் உலகத்தைப் படைத்தருளி அவ்வுயிர்களைச் சகலாவத்தையிலேற்றி விழிப்பூட்டியவுடன் தம்மியல்பாகிய இன்ப உணர்வு விளங்கப்பெற்று அதனை நாடிச் சுத்தாவத்தை எய்தி அழிவில்லாத வீட்டின்கண் மகிழ்தலும் என உவமை யிடத்தும், பொருளிடத்தும் உயிர்கள் உவத்தற்குரிய ஏதுக்கள் ஒப்ப உண்மை நுண்ணிதிற் கண்டுகொள்க. வலன் என்னும் சொற்கு ஆற்றல் என்னும் பொருளுண்மையானே ஞாயிற்று மண்டிலத்திற்குக் கொள்ளுங்கால், மேருவை வலமாகச் சூழ்ந்தென்றும் இறைவனுக்கு ஓதுங்கால் தனது சத்தி மேலிட்டெழுந்து படைத்தன்முதலிய தொழில்களிடத்தே (உள்முகப்பட்டு) ஈடுபட்டு இயங்குதலைச் செய்யும் ஒளி என்றும் பொருள் காண்க.

இனி, ஞாயிற்று மண்டிலத்தையும், இறைப்பொருளையும் பல சமயத்தாரும் போற்றுதல் இயல்பாதலும் அறிக. இங்ஙனம் இறைப்பொருள் தனது திருவருளாகிய சத்திமேலிட்ட காலத்தே அவ்வருள் காரணமாகவே உயிர்கள் ஆணவமல இருளினின்றும் நீங்கித் தனது திருவடி ஒளியாகிய வீடுபெற்று மகிழும் பொருட்டுப் படைப்பு முதலிய தொழில்களைச் செய்வன் என்பதனை,

நீடுபரா சத்திநிகழ் இச்சா ஞானம்
நிறைகிரியை தரஅதனை நிமலன் மேவி
நாடரிய கருணைதிரு உருவ மாகி
நவின்றுபல கலைநாத விந்து வாதி
கூடுமொளி வளர்குடிலை மாயை மேவிக்
கொடுவினைகொள் தனுகரண புவன போகம்
பீடுபெற நிறுவியவை ஒடுக்கு மேனி
பிறங்கியநிட் களசகளப் பெற்றி யாமே

எனவரும் சிவப்பிரகாசச் செய்யுளானும் உணர்க.

ஓ, தங்குதல் என்னும் பொருளுடைய ஓரெழுத் தொருமொழி. ஓவற இமைக்கும் ஒளி, என்றது உயிர் மனமுதலிய கருவிகளிலே சென்று தங்குதலில்லையாய்த் தனித்தவழி அதன்கண் விளங்குகின்ற அறிவொளி என்றவாறு. எனவே, உயிர் எல்லாம் இறைப் பொருளின் செயலேயன்றித் தன் செயல் ஒரு சிறிதும் இல்லை என்றுணர்ந்து முனைப்படங்கி அவ்விறையருளில் மூழ்கி நிற்கும் காலத்தே அவ்வுயிரின் கண் இறைவனின் அருளொளி விளங்குவதாம் என்றவாறு. இதனை,

அவனே தானே ஆகிய அந்நெறி
ஏக னாகி இறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை யின்றே

எனவரும் சிவஞான போதத்துப் பத்தாஞ் சூத்திரத்தானும் உணர்க.

இனிப் புறக்கண்ணை மறைக்கும் புறவிருளைக் கெடுத்துப் புறப்பொருளை உயிர்கட்குத் தெரித்துணர்த்தும் பூதவொளியாகிய ஞாயிற்று மண்டிலமே உயிர்களின் அகக்கண்ணை மறைக்கும் ஆணவப் பேரிருளை அகற்றி மெய்ப்பொருளைத் தெரித்துணர்த்தும் அறிவுப் பேரொளியாகிய இறைப் பொருட்கு முற்றுவமையாய் நின்று சிறத்தல் அறிக. இறைப்பொருளை ஒளியென்றே மெய்ந்நூல்கள் ஓதுவதனை, ஓங்கொளியாய் அருள்ஞான மூர்த்தி யாகி (சிவப்பிரகாசம் -1) என்றும், பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானை (திருநாவு-தேவா-6-1-10) என்றும் மெய்ச்சுடருக்கெல்லாம் ஒளிவந்த பூங்கழல் (திருவாசகம் - 8.6.15)என்றும் வரும் சான்றோர் மெய்ம்மொழிகளானே உணர்க. இனி, தன்முனைப்படங்கிய உயிரின்கண் அவ்விறைப்பொருள் ஒளியாயே விளங்கும் என்பதை,

எங்குந்தான் நிறைந்துசிவன் நின்றா னாகில்
எல்லாருங் காணவே வேண்டுந்தா னென்னில்
இங்குந்தான் அந்தகருக் கிரவியிருளாகும்
ஈசனருட் கண்ணிலார்க் கொளியாயே யிருளாம்
பங்கந்தா னெழும்பதுமம் பக்குவத்தை யடையப்
பரிதியலர்த் திடுவதுபோல் பருவஞ்சேர் உயிர்க்குத்
துங்க அரன் ஞானக்கண் கொடுத்தருளி னாலே
சோதிக்குட் சோதியாய்த் தோன்றிடுவன் காணே

என்றும்,

தெரிவரிய மெய்ஞ்ஞானத் சேர்ந்த வாறே
சிவப்பிரகா சிக்குமிங்கே சீவன்முத்த னாகும்

என்றும், பிற சான்றோர் கூறுமாற்றானும் உணர்க. இமைத்தல் - ஒளிர்தல். மாசற இமைக்கும் உருவினர் (முருகு-128) என்புழியும் அஃதப்பொருட்டாத லுணர்க.

இங்ஙனம் பொருள் கூறாது ஆசிரியர் நச்சினார்க்கினியர் இமைக்கும் என்றதற்கு, இமைத்துப் பார்த்தற்குக் காரணமாகும் எனவும், இமைத்தல் - கண்களின் இதழ்கள் இரண்டினையும் குவித்தல் என்றும் வேண்டாதே உரைவிரித்தல் உணர்க. இனி இது வினையெச்சவுமம்; விரவியும் வரும் மரபின என்ப, என்பதனால் தொழிலுவமமும் வண்ணவுவமும் பற்றி வந்தது. என்னை? ஞாயிறு இருளைக் கெடுக்குமாறுபோலத் தன்னை மனத்தால் நோக்குவார்க்கு மாயையைக் கெடுத்தலிற் றொழிலுவமும், தன்னைக் கட்புலனால் நோக்குவார்க்குக் கடலிற் பசுமையும் ஞாயிற்றின் செம்மையும்போல மயிலிற் பசுமையும் திருமேனிச் செம்மையும் தோன்றலின் வண்ணவுவமமும் கொள்ளக் கிடந்தமை காண்க, என ஆசிரியர் நச்சினார்க்கினியர் ஓதிய இனிய விளக்கமும் காண்க.

இனி இறைவன் உவமையிறந்தவன் ஆயினும் அன்பர்கள் தம் ஆராமையாலே இவ்வுலகின்கண் உள்ள பொருள்களிலே சாலச் சிறந்த பொருள்களை அவ்விறைவனுக்கு உவமையாக எடுத்தோதி வாழ்த்தும் வழக்கமுண்மையை ஆன்றோர் நூல்கள் பலவற்றுள்ளும் கண்டு தெளிக. மேலும், திருக்கோவையாரில் ஐந்தாஞ் செய்யுட்குப் பேராசிரியர் அணியும் அமிழ்தும் என்னாவியும் ஆயவன், என்னும் அடிக்கு இவை இறப்ப இழிந்தன வாயினும் பொருளது புரைவே புணர்ப்போன் குறிப்பின், மருளற வரூஉம் மரபிற் றென்ப என்பதனான் ஈண்டுச் சொல்வானது கருத்துவகையானும், உலகத்துப் பொருள்களுள் அவற்றினூஉங்கு மிக்கன இன்மையானும் உயர்ந்தனவாய் உவமையாயின என நுண்ணிதின் விளக்கிச் சேறலான் உணர்க. இனி, இவ்வுலகப் பொருள்களிலே ஒளிப்பிழம்பாகிய ஞாயிற்று மண்டிலத்தின் மிக்கதின்மையானும் ஞாயிற்று மண்டிலத்தே உலகை ஆக்கல் அளித்தல் அழித்தலாகிய இறைத்தொழில் மூன்றும் அமைந்திருத்தலானும், இறைவனுக்கோதிய எட்டு வடிவங்களுள் ஞாயிற்று மண்டிலமும் ஒன்றாதலானும், அதனினும் சிறந்துயர்ந்த உவமை இறைப்பொருட்குக் காண்டல் அரிதென்க. இறைவிளக்கம் மிக்குத்தோன்றுதல் பற்றியன்றே ஆசிரியர் தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரும் இறைவனுக்குச் சுதந்திர வடிவமாய்த் திகழும் சுத்தமாயையின் விருத்தியாதல் பற்றி,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என எழுத்தினை உவமையாக எடுத்தோதியதும் என்க.

இனி, இவ்வுலகத்துப் பொருள்களுள் ஞாயிற்று மண்டிலத்தின் கண் இறைமைத்தன்மை மிக்குத் தோன்றுதல் பற்றி அதனையே இறைவனாக வைத்து வணங்குதலும் சான்றோர் வழக்கமாதலை,

தரவு

ஆயிரங் கதிராழி ஒருபுறந்தோன் றகலத்தான்
மாயிருந் திசைசூழ வருகின்ற வரவுணர்த்த
மனக்கமல மலரினையும் மலர்த்துவான் தானாதல்
இனக்கமலம் உணர்த்துவன்போன் றெவ்வாயும் வாய்திறப்பக்
குடதிசையின் மறைவதூஉ மறையென்று கொள்ளாமைக்
கடவுளர்தம் உறங்காத கண்மலரே கரிபோக
ஆரிருளும் புலப்படுப்பான் அவனேஎன் றுலகறியப்
பாரகலத் திருள்பருகும் பரிதியஞ் செல்வகேள்;

தாழிசை

மண்டலத்தி னிடைநின்றும் வாங்குவார் வைப்பாராய்
விண்டலத்திற் கடவுளரை வெவ்வேறு வழிப்படுவார்
ஆங்குலகம் முழுதுபோர்த் திருவுருவி னொன்றாக்கி
ஆங்கவரை வேறுவே றளித்தியென் றறியாரால்;
மின்னுருவத் தாரகைநீ வெளிப்பட்ட விடியல்வாய்
நின்னுருவத் தொடுங்குதலால் நெடுவிசும்பிற் காணாதார்
எம்மீனுங் காலைவா யிடைகரந்து மாலைவாய்
அம்மீனை வெளிப்படுப்பாய் நீயேஎன் றறியாரால்;
தவாமதியந் தொறுநிறைந்த தண்கலைகள் தலைதேய்ந்து
உவாமதிய நின்னொடுவந் தொன்றாகும் என உணரார்
தண்மதியின் நின்னொளிபுக் கிருள் அகற்றாத் தவற்றாற்கொல்
அம்மதியம் படைத்தாயும் நீயேஎன் றறியாரால்;

இருசீர் நான்கு

நீராகி நிலம்படைத்தனை நெருப்பாகி நீர்பயந்தனை
ஊழியிற் காற்றெழுவினை ஒளிகாட்டி வெளிகாட்டினை

ஒருசீரெட்டு

கருவாயினை விடராயினை
கதியாயினை விதியாயினை
உருவாயினை அருவாயினை
ஒன்றாயினை பலவாயினை

தனிச்சொல்

எனவாங்கு,

சுரிதகம்

விரிதிரைப் பெருங்கடல் அமிழ்தத் தன்ன
ஒருமுதற் கடவுள்நிற் பரவுதும் திருவொடு
சுற்றந் தமீஇக் குற்ற நீக்கித்
துன்பந் தொடரா இன்ப மெய்திக்
கூற்றுத்தலை பனிக்கும் ஆற்றல் சான்று
கழிபெருஞ் சிறப்பின் வழிவழிப் பெருகி
நன்றறி புலவர் நாப்பண்
வென்றியொடு விளங்கி மிகுகம்யாம் எனவே      (தொல்.பொருள்.458 மேற்கோள்)
 
எனவரும் அமிழ்தினுமினிய பழம்பெருந் தமிழ்ப்பனுவலானே அறிக. இனிச் சேண் விளங்கு ஒளியென்றதனை ஞாயிற்றுமண்டிலத்திற்குக் கொள்ளுங்கால், வானத்தின்கண் நனிசேய்த்தாய் நின்று விளங்குதலையும், முருகப்பெருமானுக்குக் கொள்ளுங்கால் அன்பர் உளத்தே விளங்கும்பொழுதும் அவர் கருத்திற்குச் சேயனாய் நின்றே விளங்குதலையும் கொள்க. என்னை?

கடல்அலைக்கே ஆடுதற்குக் கைவந்து நின்றும்
கடல்அளக்க வாராதாற் போலப் - படியில்
அருத்திசெய்த அன்பரைவந் தாண்டதுவும் எல்லாம்
கருத்துக்குச் சேயனாய்க் காண்   (திருக்களிற்றுப்படியார். 90)

என ஆன்றோர் ஓதுதலான் என்க.

அவிர் ஒளி - இயல்பானே விளங்கும் ஒளி என்க. இனி இம்மூன்றடிகளிலே நல்லிசைப்புலவரான நக்கீரனார் முருகப்பெருமானுடைய இறைமைத்தன்மையை நன்கு எடுத்தோதி விளக்கினமையை அறிக. இதனைப் பரத்துவம் என்பர் வடநூலார். ஈண்டு நக்கீரர் தாம் வழிபடும் முருகப்பெருமானைப் பரத்துவமுடைய முழுமுதலாகவே கொண்டனர். இல்லைஎனின் அந்தமில் இன்பத்து அழியாவீடு நல்குதல் அமையாதாகும் என்க.

முருகப்பெருமானுடைய அளியும் தெறலும்

4-6 : உறுநர் .................. கணவன்

பொருள் : உறுநர் தாங்கிய - தன்னைச் சேர்ந்தவர்கள் தீவினையைப் போக்கி அவரைத் தாங்குகின்ற, மதன் உடை நோன்றாள் - அவர்தம் அறியாமையை உடைத்தற்குக் காரணமான வலிய திருவடிகளையும், செறுநர் தேய்த்த - அழித்தற்குரியாரை அழித்த, செல் உறழ் தடக்கை - இடியோடு மாறுபட்ட பெரிய கையினையும் உடையவனும், மறுஇல் கற்பின் - குற்றமற்ற கற்பினையும், வாணுதல் - ஒளியுடைய நெற்றியினையும் உடைய தெய்வயானையார்க்கு, கணவன் - கொழுநன் ஆகியவனும்,

கருத்துரை : தன்னைச் சேர்ந்த அன்பர்களின் மாசுபோக்கி வீட்டின்பத்தினை நல்கித் தாங்கும் வலிய திருவடிகளையும், அழித்தற்குரியாரை அழிக்கும் இடியோடே மாறுபட்ட பெரிய கையினையும் உடையவனும் குற்றமற்ற கற்பினையுடைய தெய்வயானையார்க்குக் கணவன் ஆகியவனும் என்பதாம்.

அகலவுரை : உறுநர், அவனுடைய திருவருளாலே இருவினை ஒப்பும் மலபரிபாகமும் எய்தப்பெற்று,

உலகினில்என் செயலெல்லாம் உன்விதியே நீயே
உண்ணின்றும் செய்வித்தும் செய்கின்றாய் என்றும்
நிலவுவதோர் செயல் எனக்கின் றுன்செயலே என்றும்  (சித்-10.4)

நினைவாராய் மெய்யுணர்ந்து தனது திருவடியில் தஞ்சம்புக்க சான்றோர்கள். அங்ஙனம் தற்செயலற்றுத் தான் அற்றுத் தன் அடியின்கட் புகல்புக்க அன்பரை, அவர் செயலெல்லாம் தன் செயலாக ஏற்றுக்கொண்டு அவரைத் தானாக்கி அவர்தம் பழவினைக்கட்டை எல்லாம் தானே முன் நின்று போக்கும் பெருமை தோன்றத் தாங்கிய தாள் என்றார். என்னை

சலமிலனாய் ஞானத்தால் தனையடைந்தார் தம்மைத்
தானாக்கித் தலைவன்அவர் தாஞ்செய்வினை தன்னால்
நலமுடனே பிறர்செய்வினை ஊட்டிஒழிப் பானாய்
நணுகாமல் வினையவரை நாடிக் காப்பான்  (சித்.10-4)

என்றும்,

இவனுலகின் இதமகிதம் செய்த வெல்லாம்
இதமகிதம் இவனுக்குச் செய்தார்பால் இயையும்
அவனிவனாய் நின்றமுறை ஏக னாகி
அரன்பணியின் நின்றிடவும் அகலும் குற்றம்
சிவனும்இவன் செய்திஎல்லாம் என்செய்தி என்றும்
செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும்
பவமகல உடனாகி நின்றுகொள்வன் பரிவாற்
பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே   (சித்தியார் சுபக்.10-1)

என்றும்,

கிடைக்கத் தகுமேநற் கேண்மையார்க் கல்லால்
எடுத்துச் சுமப்பானை இன்று  (திருவருட்பயன் - 65)

என்றும், அடியாரை முழுதும் தாங்கும் இறைவன் திருவருள் மாண்பினைச் சான்றோர் பிறவும் எடுத்தோதுதலானும் உணர்க. மதன் - அறியாமை: ஈண்டு ஆணவமலம். அம்மலத்தை அகற்றுதல் அரிது என்பது தோன்ற உடை நோன்றாள் என்றார்; உடைத்தல், திண்ணிய பொருள்களை யாகலின். திருவடியே வீடாகலின் தாங்கிய தாள் என்றார். திருவடியே வீடாயிருக்கும் என்பதை, யானெனதென் றற்ற இடமே திருவடியா (கந்தர் கலி - 34) எனவரும் குமரகுருபர அடிகளார் திருமொழியானும் உணர்க. உலகத்தைப் படைத்தன் முதலிய ஐந்தொழிலையும் விளையாட்டாக நிகழ்த்தும் அப்பெருமானது பேராற்றலைத் திருவடிமேல் வைத்து நோன்றாள் என்றார். அத் திருவடியை அல்லால் உயிர்களின் துயர்போக்குதல் பிறிதொன்றான் ஆகாமையான் தாளின் பெருமையை விதந்து முதற்கட் கூறினார். ஆசிரியர் திருவள்ளுவனாரும்,

தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது  (திருக்குறள் - 7)

என்றோதுதல் அறிக. இது,

சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்பிரிந் துறையுஞ்
செலவுநீ நயந்தனை ஆயின் பலவுடன்
நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே  (முருகு - 62-66)

எனப் பின்னர்ச் செவியறிவுறுத்தற்கு ஈண்டு ஏதுக் கூறியவாறாதலும் உணர்க. இது முருகப்பெருமானுடைய திருவருளில் அறத்திருவருளை விதந்தோதியவாறாம். இனி, அப்பெருமானுடைய மறத்திருவருளை எடுத்தோதுகின்றார் என்க. செறுநர் - அழிக்கத்தக்கவர். இவராவார், இறைவன் திருவருட் குறிப்பினின் றொழுகாது, தீவினையை நயந்து, பிறர்க்கும் தமக்கும் கேடுசூழ்விக்கும் அசுரரும், மானிடருள், அவ் வசுரத்தன்மையுடைய தீவினைமாக்களும் ஆவர் என்க. இங்ஙனம் நல்லொழுக்க நெறியின் வழீஇக் கெடுவார், மேலும் கெட்டழியாவண்ணம், அவர் உடற்பொறையை மாற்றி அவரை உய்யக் கோடலும் இன்றியமையாமையின், இறைவற்கு அழித்தற் செயலும் அருள்பற்றிய செயலே ஆயிற்றென்க. இதனை,

நிக்கிர கங்கள் தானும் நேசத்தா லீசன் செய்வது
அக்கிர மத்தாற் குற்றம் அழித்துத்தீர்த் தச்சம் பண்ணி
இக்கிர மத்தி னாலே ஈண்டறம் இயற்றி டென்பன்
எக்கிர மத்தி னாலும் இறைசெயல் அருளே என்றும்   (சித்தியார் சுபக்.106)

என்றும்,

தந்தைதாய் பெற்ற தத்தம் புதல்வர்கள் தஞ்சொ லாற்றின்
வந்திடா விடின்உ றுக்கி வளாரினால் அடித்துத் தீய
பந்தமும் இடுவர் எல்லாம் பார்த்திடிற் பரிவே யாகும்
இந்தநீர் முறைமை யன்றோ ஈசனார் முனிவு மென்றும்  (சித்தியார் சுபக்.107)

என்றும் வரும் சிவஞானசித்தியாரான் உணர்க.

இனி உறுநர்த்தாங்கும் என்றதற்கேற்ப, ஈண்டுச் செறுநர்த் தேய்த்த என்று பொருந்திய வினைகொடுத்தோதுதல் உணர்க. செல் - முகில் : ஈண்டு இடிக்கு ஆகுபெயராய் நின்றது. முகில் மழைபெய்து உலகை ஓம்புதலே இயற்கைக் கடப்பாடாக உள்ளதன்றி அழிப்பது அதன் செயலன்று, ஒரோவழி அஃது இடியெறிந்து ஒருவனைக் கொல்லுமாயின், அது கொல்லப்பட்டான் தீவினைப்பயன் அன்றி முகிலின் செயல் அன்று. எனவே, இறைவன் தடக்கையும் அம் முகில்போல உயிரை ஓம்புதற் றொழிலையே பெரிதும் செய்யும் என்றும், அழிக்கத்தக்கார் உளராயவழி இடி போல அழிக்கும் என்றும் கொள்ளக்கிடந்தமை நுண்ணுணர்வான் அறிக. ஒன்றனை விரைந்தழிப்பதன்கண் இடியினும் சிறந்தது பிறிதின்மையும் உணர்க. இனி மறுவில் கற்பின் வாணுதல் கணவன் என்றது, அவ்விறைப் பொருள் ஒன்றே உலகத்தை நடத்துங்கால் தன்னுள்ளே ஆணும் பெண்ணுமாகிய இருவேறு தன்மைகளை அமைத்துக்கொண்டு நடத்துதல். அவ்வாறு தன்னுள் இருவேறு தன்மைகள் வையாவழி உலகின் உயிர்களும் தம்முள் ஆண் பெண் என்னும் இருவேறு வடிவமுடையவாய்க் களித்து வாழ இடமின்றாதல்பற்றி உயிர்கள் காதலாற் கூடிக் களித்து வாழும் பொருட்டே ஆகலான், இன்றியமையா அத்திருக்கோலத்தை விதந்து கூறியபடியாம். மரமும் காழ்ப்பும்போல இறைவனும் இறைவியும் ஒன்றே என்பார், வாணுதல் கணவன் என்னுந் தொடர் முருகன் என்னும் பெயர்ப்பொருட்டாய் நிற்குமாற்றானே அமைத்தனர். இதனை,

சத்தியும் சிவமு மாய தன்மையிவ் வுலக மெல்லாம்
ஒத்தொவ்வா ஆணும் பெண்ணும் உணர்குண குணியு மாகி
வைத்தனன் அவளால் வந்த ஆக்கமிவ் வாழ்க்கை எல்லாம்
இத்தையும் அறியார் பீட லிங்கத்தின் இயல்பு மோரார்  (சித்தியார் சுபக். 89)

என்றும்,

அருளது சத்தி யாகும் அரன்தனக் கருளை யின்றித்
தெருள்சிவ மில்லை அந்தச் சிவமின்றிச் சத்தி யில்லை  (சித்தியார் சுபக். 239)

என்றும் வருதலான் அறிக.

இறைவன் கருத்தோடு எட்டுணையும் இறைவி மாறுபாடின்றி இயைந்து நடத்தலின் மறுவில் கற்பின் வாணுதல் என்றார். எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள் (சித்தி - 74) என்றார் பிறரும். கற்புடைமையால் அக அழகும் வாணுதல் உடைமையால் புற அழகும் சேரக் கூறிய நுணுக்கம் உணர்க.

முருகக் கடவுளின் தார்

7-11 : கார் கோள் ................. மார்பினன்

பொருள் : கார்கோள் முகந்த கமஞ்சூழ் மாமழை - கடலிலே நீர்முகந்ததனாலுண்டாகிய நிறைவினையுடைத்தாகிய சூலினையுடைய முகில், வாள்போழ் விசும்பில் வள்உறை சிதறி - ஞாயிறுந் திங்களும் இருளைநீக்கும் வானிடத்தே பெருமையுடைய துளியை முற்படச் சிதறி, தலைப்பெயல் தலைஇய தண்நறுங் கானத்து - கார்காலத்து முதற்பெயலைத் பொழிந்த தண்ணிய நறிய காட்டிடத்தே, இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து - இருட்சியுண்டாகத் தழைத்த பரிய அடியையுடைய செங்கடம்பினது, உருள்பூந் தண் தார் புரளும் மார்பினன் - தேருருள் போலும் பூவாற் செய்யப்பட்ட குளிர்ந்த மாலையசையும் மார்பினையுடையவனும்;

கருத்துரை : கடலின்கண் நீர் முகந்து நிறைந்த சூல் மேகங்கள் ஞாயிறுந் திங்களும் இருளை நீக்கும் விண்ணிடத்தே பெரிய துளியை முற்படச் சொரிந்து, கார்காலத்து முதற்பெயலைச் சொரிந்த தண்ணிய நறிய காட்டிடத்தே, இருட்சியுண்டாகத் தழைத்த பரிய அடியினையுடைய செங்கடம்பினது தேருருள்போலும் பூவாற் செய்யப்பட்ட குளிர்ந்த மாலை அசையும் மார்பினையுடையவனும் என்பதாம்.

அகலவுரை : மழை சிதறித் தலைஇய கானத்து மராஅத்துத் தார்புரளும் மார்பினன் என்க. கார்கோள் - கடல்; காராலே கொள்ளப்படுவது என்னும் பொருட்டு; கார் - முகில்; கோள் - கொள்ளப்படுவது. முகந்த - நீரைப் பருகிய என்க. கடனீரே முகிலாக மாறுதலின், முகில்கள் கடனீரை முகந்து கொண்டுவந்து மழை பெய்வதாகக் கூறுவது புலவர் மரபென்க. கமம் - நிறைவு. கமம் நிறைந்தியலும் (உரி - 57) என்பது தொல்காப்பியம். சூல் - கரு. மழை பெய்தற்குரிய செவ்வி முகிலைச் சூல் முகில் என்ப. முழங்கு கடன் முகந்த கமஞ்சூன் மாமாழை (நற்-347:1) என்றும், கமஞ்சூன் மாமழை கார்பயந்திறுத்தென (அகம் -134:2) என்றும் பிறரும் ஓதுதல் காண்க.

வாள் - ஒளி; ஈண்டு ஞாயிற்றையும் திங்களையும் குறித்து நிற்றலின் ஆகுபெயர் என்க. போழ்தல் - பிளத்தல்: ஈண்டு அகற்றுதல் என்னும் பொருட்டாய் நின்றது. விசும்பு - வானம். வள்ளுறை சிதறி - பெரிய பெரிய துளிகளை வீழ்த்து என்றவாறு. காட்டின்கண் மரங்கள் தழைத்தற்கு மழைமட்டும் போதியதாகாது; ஒளியும் மழைபோல இன்றியமையாது வேண்டப்படும் ஆதலின், வெப்பமும் தட்பமும் வேண்டியாங்குப் பெற்றுத் தழைத்த செங்கடம்பு என்பார், வாளா விசும்பென்னாது வாள் போழ்விசும் பென்றார். வாள் போழ்தலும் மழை சிதறலும் உயிர்கள் தழைத்தலும் அவனருளாலே என்பதும் குறிப்பாற் கொள்க. இறையருளாலே மழை பொழிதலும் அம்மழையாலே உலகின்கண் தவமும் அறமுதற் பொருள்களும் மிகுதலும் குறிப்பாற் கூறுவார், தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரும், தம் திருக்குறளில் கடவுள் வாழ்த்திற்குப்பின் வான்சிறப்பையும், நீத்தார்பெருமையையும், அறன் வலியுறுத்தலையும் நிரலே வைத்தோதுதல் அறிக. ஈண்டும் அக்கடவுள் அருள்வெளிப்பாடாகிய வான்சிறப்பே ஆசிரியர் நக்கீரனார் குறிப்பாற் கூறினர் என்க. உறை - மழைத்துளி. சிதறுதல் - துளித்தல். வள்ளுறை ... தலைஇய கானம் (35) என்றார் குறுந்தொகையினும். தலைப்பெயல் - கார்காலத்தொடக்கத்தே பெய்யும் முதல்மழை என்க. தலைஇய - பெய்த; தலையல் என்பதன் எச்சம். தலைய லென்பது மழைபெய்து விடுதல் (149) என்பது திவாகரச் சூத்திரம். தண்ணறுங் கானமாதற்கு வாள் விசும்பு போழ்தலும் மாமழை தலைதலும் ஏதுக்கள் என்க. தண்ணறுங்கானம் என்றார் தழைமிகுதியாலே குளிர்ச்சியும், மலர் மிகுதியாலே நறுமணமும் ஒருங்கே உடைத்தாகிய காடு என்றற்கு. இலை நெருக்கத்தாலே இருள் உண்டாகும்படி தழைத்த காடு என்க. பொதுளிய - தழைத்த. பருமை அரை என்பன பராரை எனப் புணர்ந்தது செய்யுள் முடிபென்க. இது வழக்கின்கட் பருவரை என முடியும். மராம் - கடப்ப மரம். மராவத்து என்பது, மராஅத்தெனத் திரிந்து நின்றது.

இனிக் கொன்றை போன்று கடம்பும், மாலைபோல இயல்பாகவே மலர்தல் அறிக. இது முருகக் கடவுளுக்குரிய போகமாலை என்ப. இதனால், முருகக் கடவுளைக் கடம்பன் என்று வழங்குதலும் அறிக. காரலர் கடம்பன் அல்லன் என்பதை, ஆரங் கண்ணியிற் சாற்றினன் வருவோன் (4: 49. 50) என மணிமேகலையினுங், கார்க் கடம்பந்தார் எங்கடவுள் எனச் சிலப்பதிகாரத்தும், கார் நறுங்கடம்பின் கண்ணிசூடி... முருகே (34-8: 11) என நற்றிணையினும், கார்நறுங் கடம்பின ... தெரியற் சூர்நவை முருகன் எனப் புறத்தினும் வருதல் அறிக. இக்கடம்பு கொன்றைபோன்று கார்காலத்தே மலரும் இயல்புடைய தென்பதனை, இதனோடு கார் என்னும் அடைபுணர்த்தே சான்றோர் பலரும் கூறுமாற்றானறிக. உருள் - தேருருள். இம்மலர், தேருருள் போன்ற வடிவுடைத்தாதலை நோக்கியறிக. இனி, உருட்சியையுடைய பூ எனினுமாம். உருள்பூ என்பது, உருள்பூ என இயல்பாகவும் உருட்பூ எனத்திரிந்தும் உறழ்ச்சி முடிபெய்தும், ஆகலின் உருள்பூ என இயல்பாக நின்றதென்க. தண்டார் - குளிர்ந்த மாலை. தார் என்பது மார்பிலணிவதற்குரிய மாலை. தலையிலணிவதைக் கண்ணி என்ப. இதனைக் கண்ணி கார்நறுங் கொன்றை காமர், வண்ண மார்பிற் றாருங் கொன்றை (புறம் - கடவுள்.) என வேறுபடுத் தோதுமாற்றான் உணர்க. இனி, முருகன் குறிஞ்சிநிலத் தெய்வமாகலின் அவனது கண்ணியாகிய செங்காந்தளின் சிறப்புரைக்கு முகத்தானே அப்பெருமான் உவந்துறையும் மலைவளஞ் சோலைவளம் ஆண்டுச் சூரர மகளிர் செயல் முதலியவெல்லாம் 12-மால்வரை என்பது தொடங்கி, 44 - சென்னியன் என்னுந் துணையும் விரித்தோதுகின்றார்.

சூரரமகளிர் மாண்பு

12-19 : மால்வரை .............. மேனி

பொருள் : மால்வரை நிவந்த சேண் உயர்வெற்பில் - பெரிய மூங்கில் வளர்ந்துள்ள வானளாவிய மலையிடத்தே, கிண்கிணி சுவைஇய ஒள்செஞ் சீறடி - சிறு சதங்கை சூழ்ந்த ஒள்ளிதாகிய அடியினையும், கணைக்கால் - திரட்சியுடைய காலினையும், வாங்கிய நுசுப்பின் - வளைந்து நுடங்கிய இடையினையும், பணைதோள் - பெருமையுடைய தோளினையும், கோபத்து அன்ன தோயா பூ துகில் - இந்திரகோபத்தை ஒத்து நிறம்பிடியாது இயல்பாகவே சிவந்த பூத்தொழிலையுடைய துகிலினையும், பல் காசு நிரைத்த சில்காழ் அல்குல் - பலமணிகள் கோத்த ஏழுவடமாகிய மேகலையை அணிந்த அல்குலினையும், கைபுனைந்து இயற்றா கவின்பெறு வனப்பின் - ஒருவர் கையாற் சிறப்பித்துப் பிறப்பியாத அழகைத் தமக்கு இயல்பாகப் பெற்ற அழகினையும், நாவலொடு பெயரிய பொலம்புனை அவிர்இழை - சாம்பூநதமென்று நாவலோடடுத்துப் பெயர்பெற்ற பொன்னாலியற்றி விளங்குகின்ற அணிகலன்களையும், சேண் இகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனி - சேய்நிலத்தையும் கடந்து விளங்குகின்ற குற்றந்தீர்ந்த நிறத்தினையுமுடையவராகிய சூரர மகளிர்கள்;

கருத்துரை : மூங்கில் வளர்ந்துள்ள வானளாவிய மலையிடத்தே சிறு சதங்கை சூழ்ந்த ஒள்ளிதாகிய அடியினையும், கணைக்காலையும், வளைந்து நுடங்குமிடையினையும், பருத்த தோளினையும் இந்திர கோபத்தைப் போன்று இயல்பாகவே சிவந்த ஒருவரால் நிறம்பிடிப்பியாத பூத்தொழில் உடைய துகிலினையும், பலமணிகள் கோத்த மேகலையின் அணிந்த அல்குலினையும், ஒருவர் கையால் ஒப்பனை செய்து தோற்றுவியாது இயல்பாகவே பெற்ற அழகினையும், சாம்பூநத மென்னும் பொன்னாலியற்றிய அணிகலன்களையும், தொலைவினுஞ் சென்று ஒளிரும் நிறத்தினையும் உடையவர் ஆகிய சூரரமகளிர்கள் என்பதாம்.

அகலவுரை : ஈண்டு எண்ணும்மையாற் றொடர்ந்தவற்றையும் மேலே தொடருபவைகளையும் (41) சூரரமகளிர்க்கு அடையாக்கி முடித்திடுக. மால்வரை - பெரிய மூங்கில். வரை - கோடு; கணு. கணு உடைமையால் வரை என்பது ஆகுபெயராய் மூங்கிலைக் குறிக்கும். இது மலைக்குப் பெயராங்காலும் ஆகுபெயரே என்க. ஈண்டு - வரை என்பதன் பின்னர் வெற்பு என வருதலால் மூங்கில் வளர்ந்த மலை என்க. இனி மால்வரை நிவந்த வெற்பென்பதற்குத் திருமால்போலும் குவடுகள் ஓங்கிய வெற்பென்றுமாம். மாயோன் அன்ன மால்வரைக் கவான் என்றார் பிறரும்.

வேற்பு - மலை; வெற்பிடத்தே (41) சூரரமகளிர் ஆடுஞ்சோலை என இயையும். கிண்கிணி - சதங்கை என்னுமொரு காலணி. கிண்கிணி களைந்த கால் (77) என்றார் புறத்தினும். ஒண்செஞ்சீறடி - ஒளியும் சிவப்பு நிறமும் உடைய சிறிய அடி என்க. கணை - திரட்சி. கருவிசைக் கணைக்கோல் (மலைபடு 380) என்புழியும் அஃதப் பொருட்டாதலறிக. வாங்கிய - வளைந்த; நுசுப்பு - இடை. பணை - மூங்கிலுமாம். கோபம் - இந்திர கோபப்புழு. இது துகிலின்நிறத்திற்குவமை. இந்திரகோபம், சிவப்புநிறமுடையது ஆதல் காண்க. தெய்வப் பூந்துகில் ஆகலின் மாந்தர் துகில்போன்று ஒருவரால் நிறம்பிடிப்பிக்கப்பட்டன அல்ல, இயல்பாகவே செந்நிற முடையது என்பார், தோயாப் பூந்துகில் என்றார். பூந்துகில் - பூத்தொழிலையுடைய துகில் என்க. பல்காசு - பல மணிகள். நிரைத்தல் - நிரல்பட அமைத்தல். சில்காழ் - சிலவாகிய வடம். காழ் - ஈண்டு வடம் என்னும் பொருட்டு. எழுகோவையுடைய மேகலை என்றார் நச்சினார்க்கினியர். சில்காழ் என்றதனால் இருவடமுடைத்தாகிய காஞ்சி என்பாருமுளர். அவர்,

எண்கோவை மேகலை காஞ்சி யிருகோவை
பண்கொள் கலாபமிரு பத்தொன்று - கண்கொள்
பருமம் பதினான்கு முப்பத் திரண்டு
விரிசிகை என்றுணரற் பாற்று

எனக் காட்டுவர்.

இவ்வெண்பாவே,

எண்கோவை காஞ்சி எழுகோவை மேகலை
பண்கொள் கலாபம் பதினாறு - கண்கொள்
பருமம் பதினெட்டு முப்பத் திரண்டு
விரிசிகை யென்றுணரற் பாற்று

எனப் பாடபேதமாகவும் ஓதப்படுதலின், நச்சினார்க்கினியர் இதனையே கொண்டு மேகலை என்று பொருள் கூறுவாராயினர்.

காழ் - வடம், ஆயிதழ் அலரி அந்தொடை ஒரு காழ் (118) என்னும் குறிஞ்சியினும் காழ் அப்பொருட்டாதல் அறிக. மானிடமகளிர்க்குச் செவிலிமுதலியோர் கைசெய்து பிறப்பிக்கும் அழகு போலன்றி இவர் தெய்வமகளிராதலின் இயல்பாகவே அழகினையுடையார் என்பார், கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பு என்றார். கவின் - அழகு. வனப்பென்பது பல உறுப்புந் திரண்டவழிப் பெறுவதோர் அழகென்ப. சம்பு என்பது, நாவல்மரத்தின் பெயர் (வடமொழி) நாவற் கனிச்சாறு பாயும் சம்புநதியின்கண் தோன்றும் பொன் என்னும் கொள்கைபற்றி நால்வகைப் பொன்னுள் வைத்து ஒன்றனைச் சாம்பூநதம் என்ப. சம்புவின் தொடர்புடையது என்னும் பொருட்டு. இதனை,

சாத ரூபங் கிளிச்சிறை ஆடகம்
சாம்பூ நதமென வோங்கிய கொள்கையிற்
பொலந்தெரி மாக்கள்  (சிலப்: 14:201-3)

எனவரும் இளங்கோவடிகளார் கூற்றானும் அறிக. நால்வகைப் பொன்னுள்ளும் சாம்பூநதமே சிறந்ததென்ப; இதனை,

பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புநதம்  (திருவள்ளுவமாலை - 34)

என்னும் வெண்பாவானும் அறிக.  ஆதலால் சாம்பூநதப் பொன் என்பார் நாவலொடு பெயரிய பொலம் என்றார். நாவலம் பொலந்தகடென (அரங் - 117)ச் சிலப்பதிகாரத்தினும் கூறப்படுதலறிக.

பொலம் - பொன்.

பொன்னென் கிளவி யீறுகெட முறையின்
முன்னர்த் தோன்றும் லகார மகாரம்
செய்யுண் மருங்கிற் றொடரிய லான  (தொல்.எழுத் - 355)

என்னும் தொல்காப்பிய விதிப்படி பொன் என்பது பொலம் என வந்தது. பொலம்புனை அவிர் இழை என்றது, பொன்னாலியற்றி மணிகள் வைத்திழைத்த விளக்கமுடைய அணிகலன் என்றவாறு. இழைக்கப்படுதலால் அணிகலனை, இழை என்ப. தெய்வங்களின் திருமேனி ஒளியுடையன என்ப. இதனை,

பூவந்த வுண்கண் பொறுக்கென்று மேவித்தன்
மூவா இளநலங் காட்டி  (சிலப்.9.34-5)

என்னும் அடிகளானும் இவற்றிற்கு, தெய்வயாக்கை யாதலாற் பொறாதென்று பொறுப்பித்தான் என்க என அரும்பதவுரையாசிரியரும்,

பூவின் தன்மை தலைவந்த மையுண்ட கண்கள் இதனைப் பொறுப்பனவாக வென நிருமித்துக் கொண்டு பின்பு அவளை மேவித் தனது எக்காலத்தும் முதிராத இளைய அழகினது நலத்தை வெளிப்படுத்தி என உரை வகுத்து, மேலும், மக்கள் கண்ணிற்குத் தெய்வயாக்கை காணப் பொறாதாகலின் இவள் கண்ணுக்குப் பொறுக்கக் கடவதென்று நிருமித்துக் கொண்டான் என அடியார்க்கு நல்லார் விளக்கிச் சேறலானும் அறிக. மக்கள் யாக்கை போன்று மலமூத்திரங்கள் உடைமையும் எழுவகைத் தாதுக்கள் முதலியவற்றான் ஆதலும் இன்மையின், இக்குற்றந் தீர்ந்த திருமேனி என்பார். செயிர்தீர்மேனி என்றார். இவ்வடை மொழிகளைத் துணையோர்க்கேற்றி யுரைப்பாருமுளர். அங்ஙனம் ஏற்றி மொழிதல் சிறப்பன்மை உணர்க.

சூரரமகளிரின் செயல்களும் விளையாட்டும்

20-30 : துணையோர் ............. வளைஇ

பொருள் : துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதி - தோழியர் நன்றென்று ஆராய்ந்த கடையொத்த நெய்ப்பினையுடைய மயிரிலே, செங்கால் வெட்சி சீறிதழ் இடைஇடுபு - சிவந்த காலையுடைய வெட்சியினது சிறிய பூக்களை நடுவே விடுபூவாக இட்டு, பைந்தாள் குவளை தூஇதழ் கிள்ளி - பசிய தண்டினையுடைய குவளையினது தூயஇதழ்களைக் கிள்ளியிட்டு, தெய்வ உத்தியொடு வலம்புரி வயின் வைத்து - சீதேவி என்னுந் தலைக்கோலத்துடனே வலம்புரி வடிவாகச் செய்த தலைக்கோலத்தையும் வைத்தற்குரிய இடத்திலே வைத்து, திலகம் தைஇய தேம் கமழ் திருநுதல் மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து - திலகமிட்ட மணம் நாறுகின்ற அழகினையுடைய நெற்றியின்கண்ணே சுறாவினது அங்காந்த வாயாகப் பண்ணின தலைக்கோலம் தங்கச் செய்து, துவர முடித்த துகள்அறும் முச்சி - முற்ற முடித்த குற்றமறுகின்ற கொண்டையிலே, பெருந்தண் சண்பகம் செரீஇ - பெரிய குளிர்ந்த சண்பகப்பூவைச் செருகி, கரும் தகட்டு உள்ஐபூ மருதின் ஒள்இணர் அட்டி - கரிய புறவிதழினையும் அகத்தே துய்யினையும் உடைய பூக்களையுடைய மருதினது ஒள்ளிய பூங்கொத்துக்களை அதன் மேலே இட்டு, கிளை கவின்று எழுதரு கீழ் நீர் செவ்வரும்பு இணைப்புஉறு பிணையல் வளைஇ -கிளையினின்றும் தோன்றி அழகுற்று வளராநின்ற நீர்க்கீழ் நின்ற சிவந்த அரும்பைக் கட்டுதலுறுகின்ற மாலையை வளைய வைத்து;

கருத்துரை : தோழியராலே இவை நன்றென்று ஆராய்தற்குரிய அழகுடைய கடையொத்த நெய்ப்பினையுடைய கூந்தலிலே செங்கால் வெட்சியின் சிறிய பூக்களை நடுவே விடுபூவாக இட்டுப் பசிய தண்டினையுடைய குவளை மலரின் இதழ்களையும் கிள்ளியிட்டு, சீதேவி வலம்புரி என்னுந் தலைக்கோலங்களை அவ்வவற்றிற்குரிய இடத்திலே வைத்துத் திலகமிட்ட மணங்கமழும் அழகிய நெற்றியின்கண்ணே மகரமீனின் அங்காந்த வாய் வடிவிற்றாகச் செய்த தலைக்கோலம் தங்கும்படி செய்து, முற்ற முடித்த குற்றமற்ற கொண்டையிலே பரிய குளிர்ந்த சண்பகப் பூவைச் செருகி, மருதம் பூங்கொத்துக்களை அதன் மேலே இட்டு நீர்க் கீழ் அரும்புகளைக் கட்டிய மாலையினை அக்கொண்டையை வளையச் சுற்றி என்பதாம்.

அகலவுரை : துணையோர் - தோழியர்; இனித் துணையோர் என்பதற்குத் தம்மோடொத்த மகளிர் எனக் கொண்டு அவர் பாராட்டுதற்குரிய கூந்தல் எனினுமாம். இனி, தங் காதலராலே இவை நன்றென்று பாராட்டிய அழகுடைய கூந்தல் எனினுமாம். ஆய்தல் - ஆராய்தல். இணைதல் - கடையொத்தல். ஈரோதி - நெய்ப்புடைய கூந்தல். வெட்சிமலரின் காம்பு சிவந்த நிறமுடைத்தாகலின் செங்கால் வெட்சி, என்றார். செங்கால் வெட்சியும் நரந்தமும் நாகமும் (3: 191-2) என்றார் மணிமேகலையினும். சீறிதழ் - சிறிய இதழ்: சிறிய இதழை விடுபூவாக இட்டென்க. இடுபு - இட்டு; செய்பு என்னெச்சம்; செங்கால் வெட்சி, பைந்தாட்குவளை என்பவற்றுள் முரண்தோன்றிச் செய்யுளின்பம் மிகுதலுணர்க. பைந்தாள் - பசிய தண்டு. கிள்ளி என்பதனோடும் இடுபு என்னும் எச்சத்தைக் கூட்டுக. தெய்வவுத்தி - ஒருவகைத் தலைக்கோலம். வலம்புரி, வலம்புரிச் சங்கின் வடிவிற்றாகச் செய்ததொரு தலைக்கோலம் என்க. இதனை,

தெய்வ வுத்தியொடு செழுநீர் வலம்புரி
தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கணி
மையீ ரோதிக்கு மாண்புற அணிந்து  (சிலப். 6: 106 - 8)

என்னும் இளங்கோவடிகள் கூற்றானும் அறிக. இதனைச் சீதேவி என்றும், சீதேவியார் என்றுங் கூறுப. இச்சிலப்பதிகார அடிகட்கு ஆசிரியர் அடியார்க்கு நல்லார், சீதேவியார் என்னும் பணியுடனே வலம்புரிச் சங்கும், பூரப்பாளையும், தென்பல்லி வடபல்லி யென்னும் இவையும் தம்மில் தொடர்ந்து ஒன்றான தலைக்கோலம் என உரை வகுத்துள்ளார். அவ்வத் தலைக்கோலமும் வைத்தற்குரிய இடத்திலே வைத்தென்பார், வயின் வைத்தென்றார். வயின் -இடம். திலகம் - நுதற் பொருட்டு. தைஇய - இட்ட. தேம் - மணம். திருநுதல் - அழகிய நெற்றி. மகரம் - சுறாமீன் - சுறாமீனின் அங்காந்த வாயையுடைய தலைவடிவிற்றாகச் செய்ததொரு தலைக்கோலம் என்க. நெற்றியிலே தங்கும்படி செய்தென்பார், தாழமண்ணுறுத்து என்றார். ஈண்டு மண்ணுறுத்தல் - கைசெய்தல் என்னும் பொருட்டு. மண்ணுதல் - செய்தல் என்க. ஆவுதி மண்ணி (மதுரைக் - 494) என்புழியும் அஃதப் பொருட்டாதலறிக. துவர - முற்ற. இலக்கணமெல்லாம் முற்றுப்பெறும்படி முடித்த மூச்சி என்க. முச்சி - கொண்டை. சண்பகம் - ஒருவகைப்பூ. செரீஇ - செருகி. தருந்தகடு - கருநிறமுடைய புறவிதழ். உளைப்பூ என்பதனை உள் ஐ பூ, எனக் கண்ணழித்து உள்ளே துய்யை உடைய பூ என்க. மருதின் ஒள்ளிணர் எனப் பின் வருதலால் உளைப் பூ மருதம் என்றது பொருட்கேற்ற அடையாய் நின்றதென்பர் நச்சினார்க்கினியர். ஒள்ளிணர் - ஒள்ளிய பூங்கொத்து. அட்டி - இட்டு.

கிளைக் கவின்றெழுதரு என்றதற்குக் கிளையாக அழகுபெற்று வளர்ந்த எனினுமாம். கீழ்நீர் - நீர்க்கீழ் என்பதன் இலக்கணத்தோடு பொருந்திய மரூஉ. கவின் - அழகு. கவின் என்னும் பண்படியாகக் கவின்று என்னும் வினை தோன்றிற்று. இணைப்புறு பிணையல் - தொடுத்தலுற்ற மாலை. வளைஇ- வளையவைத்து; கொண்டையை வளையக்கட்டி என்றவாறு. நீர்க்கீழரும்பு மிகச் சிவந்திருத்தலாலே ஒப்பனைக்குக் கொள்வர் என்பர் நச்சினார்க்கினியர். நீர்க்கீழரும்பு மிகச் சிவந்த நிறமுடைத்தாதலை, கண்ணும் நீர்க்கீழரும்பினது சிவப்பினும் சிவந்தது என்னும் (நச்சி) சீவகசிந்தாமணி 1016- உரையானும் உணர்க.

இதுவுமது

30-41 : துணைத்தக ........... சோலை

பொருள் : துணைத்தக வள்காது நிறைந்த பிண்டி ஒள் தளிர் நுண்பூண் ஆகம் திளைப்ப - தம்மில் ஒத்தற்குப் பொருந்த வளவிய காதிலே இட்டுநிறைந்த பிண்டியினது ஒள்ளிய தளிர் நுண்ணிய பூணையுடைய மார்பிடத்தே அசையாநிற்க, திண்காழ் நறு குறடு உரிஞ்சிய பூகேழ் தேய்வை தேம் கமழ் மருதிணர் கடுப்ப கோங்கின் குவிமுகிழ் இளமுலை கொட்டி - திண்ணிய வயிரத்தையுடைய நறிய சந்தனத்தை உரைத்த பொலிவினை யுடைய நிறத்தையுடைத்தாகிய குழம்பை மணம் நாறுகின்ற மருதம்பூவை அப்பினாலொப்பக் கோங்கினது குவிந்த அரும்பை ஒத்த இளமுலையிலே அப்பி, விரிமலர் வேங்கை நுண் தாது அப்பி - அந்த ஈரம் புலருமுன்னே விரிந்த மலரையுடைய வேங்கைப் பூவினது நுண்ணிய தாதையும் அதன்மேல் அப்பி, காண்வர - மேலும் அழகுண்டாகும்படி, வெள்ளில் குறுமுறி கிள்ளுபு தெறியா - விளவினது சிறிய தளிரைக் கிள்ளித் தெறித்துக் கொண்டு, கோழி ஓங்கிய ஏன்று அடு விறற்கொடி வாழிய பெரிது என்று ஏத்தி - கோழியின் உருவத்தைத் தன்னிடத்தே கொண்டு உயர்ந்த வஞ்சியாது எதிர்நின்று அடுகின்ற வெற்றியையுடைய கொடி நெடுங்காலம் வாழ்வதாக என்று வாழ்த்தி, பலருடன் சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடி - பலரும் ஒருங்கே கூடிச் சீர்மை விளங்குகின்ற மலையிட மெல்லாம் எதிரொலிசெய்யுமாறு பாடி, சூரரமகளிர் ஆடுஞ் சோலை - கொடுமையுடைய தெய்வமகளிர்கள் ஆடாநிற்கும் சோலையினை உடைய;

கருத்துரை : தம்மில் ஒத்த தகுதியுடைத்தாம்படி வளவிய காதிலே இட்டு நிறைந்த பிண்டியினது ஒள்ளிய தளிர் நுண்பூ ணணிந்த தம் மார்பிலே அசையாநிற்பவும், திண்ணிய வயிரத்தையுடைய நறிய சந்தனத்தை உரைத்த அழகிய நிறத்தையுடைய குழம்பை மணமிக்க மருதம்பூவை அப்பினார்போலக் கோங்கரும்பை ஒத்த இளமுலை மேலே கொட்டி அவ் வீரம் புலருமுன்னே அதன்மேலே வேங்கைமலரின் நுண்ணிய தாதை அப்பி மேலும் அழகுண்டாகும்படி விளவின் குறுந்தளிரைக் கிள்ளிச் சிதறிக்கொண்டு வஞ்சமின்றி எதிர்நின்று வென்றடுகின்ற கோழிக்கொடி நெடுங்காலம் வாழ்வதாக என்று வாழ்த்திப் பலரும் ஒருங்கே கூடிச் சீர்மை விளங்கும் மலையிடமெல்லாம் எதிரொலி செய்யும்படி பாடிச் சூரரமகளிர் ஆடாநின்ற சோலையினையுடைய என்பதாம்.

அகலவுரை : சோலையினையுடைய (42) அடுக்கம் என இயையும். துணைத்தக என்றது - இரண்டு காதினும் இடப்படும் தளிர் இரண்டும் தம்மில் ஒத்திருத்தற்குத் தகுதியாக என்றவாறு. வண்காது - வளமுடைய செவிகள். பிண்டி -அசோகு. அசோகந்தளிரைக் காதிற் செருகி அணிசெய்யும் வழக்கத்தை இப்பாட்டிலேயே, (207) செயலைத் தண்டளிர் துயல்வரும் காதினன் எனப் பின்னர் ஓதுதலானும், சாய்குழைப் பிண்டித் தளிர் காதிற் றையினாள், எனவும், கடிமலர்ப் பிண்டிதன் காதிற் செரீஇ (பரி - 11: 95, 12:88) எனவும், செந்தீ யொண்பூம் பிண்டி யொருகாது செரீஇ (118-9) எனக் குறிஞ்சியினும் வருதலானறிக. நுண்பூண் - நுணுகிய தொழிற்றிறமமைந்த அணிகலன்கள். ஆகம் - மார்பு. தளிர் நுண்பூணாகம் திளைப்ப என்றதனால் அசோகந்தளிர் காதிற் செருகப்பட்டது மார்பிற் கிடந்து திளைக்குமளவு நீளிதாதலறிக. திண்காழ் நறுங்குறடு என்றது, சந்தனக்கட்டையை. சந்தனக்கட்டையின் சிறப்பியல்புகளை அழகாக அடுக்கி அடையாக்கிய அழகினை உணர்க. திண்ணிதாதலும் வயிர முடைத்தாதலும் மணமுடைத்தாதலும் சந்தனக்கட்டையின் சிறப்புகளாம். குறடு - கட்டை. ஈண்டுக் குறிப்பாற் சந்தனக்கட்டையை உணர்த்திற்று. உரிஞ்சுதல் - உரைத்தல். திண்காழ் நறுங்குறடு என்றாங்கே சந்தனக் குழம்பைப் பூங்கேழ்த்தேய்வை என்றதன்கண்ணும் தமிழின்பம் ததும்புதலறிக. பொலிவுடைய நிறமமைந்த குழம்பென்றவாறு - கேழ் -நிறம். தேய்க்கப்படுதலால், குழம்பு தேய்வை எனப்பட்டது. மருதம்பூ - சந்தனக் குழம்பிற்கு நிறவுவமை என்க. தேங்கமழ் மருது என்பதன்கண் சொல்லின்பம் உணர்க. இணர் - மலர்: ஆகுபெயர். கோங்கரும்பு, முலைக்குவமை.

யாணர்க் கோங்கின் அவிர்முகை எள்ளிப்
பூணகத் தொடுங்கிய வெம்முலை  (சிறுபாண். 25-6)

என்றும்,

முலையேர் மென்முகை அவிழ்ந்த கோங்கின்  (குறுந். 254 -2)

என்றும்,

கோங்கு முகைத்தன்ன குவிமுலை   (அகம். 240-11)

என்றும், பிறரும் ஓதுதல் காண்க. கொட்டுதல் - ஈண்டு அப்புதல் என்னும் பொருட்டென்க. அச்சந்தனக் குழம்பின்மேல் வேங்கைப்பூந்தாதை அப்பி என்க, காண் - ஈண்டு அழகு என்னும் பொருட்டு. காண்வர என்றது. மேலும் அழகு உண்டாகும்பொருட்டு என்றவாறு. குவிமுலையின்மேற் சந்தனக்குழம்பை நீவி அதன்மேல் வேங்கைப்பூந்தாதப்பி மேலும் அழகுண்டாம் பொருட்டு விளவின் சிறிய தளிரைக் கிள்ளி அம் முலையின்மேற் சிதறினர் என்றவாறு. கோழி யோங்கிய - கோழியின் உருவம் எழுதப்பட்டுயர்ந்த என்க. ஏன்றடு விறற்கொடி - வஞ்சியாமல் எதிர்நின்று அடுங்கொடி என்க. வென்றடு விறற் கொடி என்றும் பாடம். நச்சினார்க்கினியர் ஏன்றடு விறற் கொடி என்றே பாடங்கொண்டனர் என்பதனை அவர் உரைநோக்கி அறிக. விறல் - வெற்றி. முருகக்கடவுளுக்குக் கோழிக்கொடி அடையாளக்கொடி என்க. முன்னர், முருகனுக்குரிய கடம்பந்தார் கூறியவர், ஈண்டு அக் கடவுட்குரிய அடையாளக்கொடி கூறியவாறறிக. சீர் - சிறப்பு. சிலம்பகம் சிலம்ப - மலையிடம் எதிரொலிசெய்யும்படி என்க. சிலம்பு - மலை. சிலம்ப - ஒலிப்ப.

முருகக் கடவுட்குரிய அடையாளப்பூ

42- 44 : மந்தியும் ............. சென்னியன்

பொருள் : மந்தியும் அறியா மரம்பியல் அடுக்கத்து - மரமேறுதற் றொழிலில் சிறப்புடைய மந்திகளும் மரங்களின் நீட்டத்தால் ஏறியறியாத மரம் நெருங்கின பக்கமலையிடத்து நின்ற, சுரும்பும் மூசாச் சுடர்ப் பூங் காந்தள் பெருந் தண் கண்ணிமிலைந்த சென்னியன் - தான் விரும்புதலாலே வண்டுகளும் மொய்த்தலில்லாத நெருப்புப் போலும் பூவினையுடைய செங்காந்தளினது பெரிய குளிர்ந்த கண்ணியைச் சூடிய திருமுடியையுடையவனும்,

கருத்துரை : குரங்குகளும் ஏறியறிதற்கியலாத நீட்சியையுடைய மரங்கள் செறிந்த பக்கமலையிடத்து நின்ற வண்டுகள் மொய்த்தலில்லாத நெருப்புப்போன்ற பூவினையுடைய செங்காந்தளின் பரிய குளிர்ந்த கண்ணியைச் சூடிய திருமுடியை உடையவனும் என்பதாம்.

அகலவுரை : மந்தி - குரங்கு. மந்தியும் அறியா, என்றதன்கண் உம்மை சிறப்பும்மை, குறவருமருளும் குன்றம் (மலைபடு - 275) என்புழிப்போல. கடவுள் மாலையாதலின் வண்டுகள் மொய்த்தில என்க. கடவுளர்க்குரிய மாலையில் வண்டுகள் மொய்க்கமாட்டா என்பதனை, வண்டே இழையே என்னுந் தொல்காப்பிய நூற்பாவானறிக. என்னை? இவள் தெய்வமகள் அல்லள் எனக் காண்டற்கு அவள் மாலையில் வண்டு மொய்த்தல் அறிகருவி என்றாராகலான். சுரும்பு - வண்டு. மூசா - மொய்யாத. சுடர் - தீ. தீயினன்ன ஒண்செங்காந்தள் (145) என்றார் மலைபடு கடாத்தினும். கார்த்திகை விளக்கிற் பூத்தன தோன்றி (கார் -26) என்றும், தண்காந்தளம்பூத் தழல்போல் விரியும் (பாண்டிக்கோவை) என்றும், பிறரும் ஓதுதல் காண்க. இதனான் அடையாளப்பூக் கூறினார். இதனை, வெறியாட்டயர்ந்த காந்தளும் என்பதனானும் உணர்க என்பர் நச்சினார்க்கினியர். அடையாளப்பூவாவது : சிவனுக்குக் கொன்றை, திருமாலுக்குத் துளவம், சோழனுக்கு ஆத்தி, பாண்டியனுக்கு வேம்பு என்றாற்போல இம்மாலை இன்னவர்க்கே உரியது என்றாற்போல்வது.

இனி, அடியினையும் காலினையும் நுசுப்பினையும் தோளினையும், துகிலினையும் அல்குலினையும் வனப்பினையும் இழையினையும் மேனியினையும் உடையராய், இடையிடுபு இட்டு வைத்துத் தாழப் பண்ணிச் செரீஇ அட்டி வளைஇத் திளைப்பக் கொட்டி அப்பித் தெறித்து ஏத்திப் பாடிச் சூரரமகளிர் ஆடுஞ்சோலையை உடைய அடுக்கத்துக் காந்தட் கண்ணி மிலைந்த சென்னியன் என முடிவு காண்க. இனி, 45 - பார்முதிர் என்பது முதல் 61 -சேஎய் என்னுந் துணையும் ஒருதொடர். இதன்கண் முருகக்கடவுளின் தெறற்சிறப்பு விரித்தோதப்படும்.

அஞ்சுவரு பேய்மகளின் இயற்கை

45-51 : பார்முதிர் ................. பேய்மகள்

பொருள் : பார்முதிர் பனிக்கடல் கலங்க உள்புக்கு - பாறை நிலம் முதிர்வு பெற்ற குளிர்ந்த கடல் தன் நிலை குலையும்படி உள்ளே சென்று, சூர்முதல் தடிந்த சுடர்இலை நெடுவேல் - சூரபன்மாவாகிய தலைவனைக் கொன்ற ஒளிருகின்ற இலைத்தொழிலை யுடைய நெடிய வேலாலே, உலறிய கதுப்பின் - காய்ந்த மயிரினையும், பிறழ்பல் - நிரை ஒவ்வாத பல்லினையும், பேழ்வாய் - பெருமையுடைய வாயினையும், சுழல் விழிப் பசுங்கண் - சினத்தாலே சுழலும் விழியையுடைய பசிய கண்ணினையும், சூர்த்த நோக்கின் - கொடிய பார்வையினையும், கழல் கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப் பெருமுலை யலைக்குங் காதின் - பிதுங்கிய கண்ணையுடைய கூகையோடே கடிய பாம்பு தூங்குவதனாலே பெரிய முலையை வருத்துகின்ற காதினையும், பிணர்மோட்டு உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் - சருச்சரையையுடைய பெரிய வயிற்றையும் கண்டோர் உட்குதல் பொருந்தும் நடையினையும் உடைய கண்டார்க்கு அச்சந் தோன்றுகின்ற பேயாகிய மகள்;

கருத்துரை : பாறை முதிர்ந்த குளிர்ந்த கடல் கலங்கும்படி உள்ளே சென்று சூரபன்மாவாகிய தலைவனைக் கொன்ற சுடர்வேலாலே, நெய்ப்பற்ற மயிரினையும், நிறைஒவ்வாத பல்லினையும், பெரிய வாயினையும், சினத்தாலே சுழல்கின்ற பசிய கண்ணையும், கொடிய பார்வையினையும், பேராந்தையும் கடிய பாம்பும் தூங்குதலாலே பெரிய முலையிடத்தே வீழ்ந்து வருத்துகின்ற காதையும், சருச்சரையுடைய பெரிய வயிற்றையும், கண்டார் உட்கும் நடையினையும் உடைய கண்டார்க்கு அச்சந்தோன்றும் பெண்பேய் என்பதாம்.

அகலவுரை : யார் - பாறை: பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்கு (5-1) என்னும் பரிபாடலினும், பாருடைப் பனிக்கடல் என்னும் சீவகசிந்தாமணியினும் பார் இப்பொருட்டாதலறிக. இனி, பார்முதிர் என்பதற்கு, உலகை வளைந்த என்பாருமுளர். மண்ணினும் முதிர்ந்த கடல் எனினுமாம். என்னை? மண்தோன்றாக் காலத்திற்குமுன் தோன்றியது கடல் ஆகலான் என்க.

பனிக்கடல் - குளிர்ந்த கடல். சூர் - சூரன், ஈண்டுச் சூரபதுமன் என்க. முருகக்கடவுள் சூரபதுமனைக் கொன்ற வரலாற்றைக் கந்த புராணம் முதலியவற்றான் அறிக. வெண்டிரைப் பரப்பிற் கடுஞ்சூர் கொன்ற பைம்பூட் சேய் (457 - 8) எனப் பெரும்பாணாற்றினும், சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் (59-10) என அகத்தினும் பிறாண்டும் பண்டைத் தமிழ் நூல்களினும் இவ்வரலாறு மிக்குக் காணப்படுதலறிக. தடிந்த - கொன்ற. முருகக்கடவுளுக்கு வேல் அறிவுச்சத்தியாகலின், சுடரிலை நெடுவேல் என்றார். நெடுவேலாலே (60) மாமுதல் தடிந்த சேய் என்று இயைபு காண்க. இனி, அவுணரை அட்டகளத்துப் பேய்மகள் களித்தாடும் காட்சியைச் சொல்லோவியமாக்குகின்றார் என்க. எண்ணெய் முதலிய வார்த்துப் பேணப்படாத மயிர் என்பார். உலறிய கதுப்பு என்றார். உலறுதல் - நெய்ப்பின்றிக் காய்ந்து கிடத்தல். கதுப்பு - மயிர். ஐதுவீ ழிகுபெயல் அழகுகொண்டருளி, நெய்கனிந் திருளிய கதுப்பு (சிறுபாண். 13-4) என்புழியும், அஃதப் பொருட்டாதல் அறிக. பிறழ்பல் - வரிசை ஒவ்வாத பல். பேழ்வாய் - பெரிய வாய். சினத்தாலே சுழலும் விழி என்க. சூர்த்த - கொடுமையுடைய. கூகையின் கண் பிதுங்கியிருத்தலால் கழல் கண் என்றார். கொல்லும் நஞ்சுடைமையாலே கடும்பாம்பென்றார். கடும் பாம்பைப் பேய்மகள் காதணிகலனாய் இட்டுள்ளாள் ஆகலின் நெடிய காது முலையின்மேல் வீழ்ந்து வருத்த என்க. பேய்மகளின் செவித் தொளை வங்குபோறலின் கூகைகள் ஆண்டு அடைந்தன. பாம்புகள் புக்குறங்கின எனினுமாம். பிணர் மோட்டுருகெழு எனக் கூட்டிச் சருச்சரையுடைய வயிற்றையும் உருவத்தையும் உடைய எனினுமாம்.

பேய்மகளின் செயல்

52-56 : குருதி ........... தூங்க

பொருள் : குருதியாடிய கூருகிர்க் கொடுவிரல் - செந்நீரை அளைந்த கூரிய உகிரினையுடைய கொடிய விரலாலே, கண் தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை ஒண் தொடித் தடக்கையின் ஏந்தி - கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட மிக்க முடை நாற்றத்தையுடைய கரிய தலையை ஒள்ளிய தொடியினையுடைய பெரிய கையிலே எடுத்து, வெருவர ஏன்று அடு விறற்களம் பாடி - அவுணர்க்கு அச்சந்தோன்ற வஞ்சியாது எதிர்நின்று கொல்கின்ற வெற்றிக் களத்தைப் பாடி, தோள் பெயரா நிணந்தின் வாயள் - தோளையசைத்து நிணத்தைத் தின்கின்ற வாயை உடையளாய், துணங்கை தூங்க - துணங்கைக் கூத்தாடாநிற்ப;

கருத்துரை : குருதியை அளைந்த கூரிய நகத்தையுடைய கொடிய விரலாலே கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட மிக்க முடை நாற்றத்தையுடைய கரிய தலையைத் தொடியணிந்த கையிலேந்தி அவுணர்க்கு அச்சந்தோன்ற எதிர்நின்று கொன்ற வெற்றிக்களத்தைப் பாடித் தோளை அசைத்து நிணத்தைத் தின்கின்ற வாயையுடையளாய்த் துணங்கைக் கூத்தாட என்பதாம்.

அகலவுரை : கதுப்பையும், பல்லையும், வாயையும், விழியையும், பார்வையினையும், காதினையும், மோட்டினையும், செலவினையும் உடைய பேய்மகள், விரலாலே கண் தொட்டு உண்ட தலையை ஏந்தி வெருவர அடுகளம் பாடித் தோள் பெயராத் துணங்கை தூங்க என்க. குருதிக்கறை படிந்த விரல்களானும் கண்ணைத் தோண்டுதலானும், கொடுஞ் செயல் செய்யும் விரல் என்பார் கொடுவிரல் என்றார். கூருகிர் - கூரிய நகம். தொட்டு - தோண்டி. கண்ணைத் தோண்டி யுண்டபின் அத்தலையைக் கையிலேந்தி நிணத்தைத் தின்று துணங்கை ஆட என்றபடி. கழி : மிகுதிப் பொருள் குறித்து நின்ற உரிச்சொல். இதனை, கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல். உரி-16) என்பதனானும் அறிக. தொடி - வளையல். தடக்கை -பெரிய கை; தடவுங்கயவும் நளியும் பெருமை (உரி -22) என்பது தொல்காப்பியம். வெருவர - அச்சந்தோன்றும்படி. ஏன்றடு விறற்கொடி (38) என்புழிப் போல ஈண்டும் ஏன்றடு விறற்களம் என்பதே நச்சிவார்க்கினியர் கொண்ட பாடம் என்பது ஈரிடத்தும் அவர் உரை கண்டுணர்க. நிணத்தைத் தின்றுகொண்டே அக்களிப்பு மிகுதியால் பேய் துணங்கையாடிற்று என்பது தோன்ற, நிணந்தின் வாயள் துணங்கை தூங்க என்றார்.

நிணம்வாய்ப்பெய்த பேய்மகளிர்
இணையொலியிமிழ் துணங்கைச்சீர்   (மதுரைக் : 25-6)

என்றார், மதுரைக்காஞ்சியினும்.

கருந்தலை வாங்கிக் கையகத் தேந்தி
இரும்பே ருவகையின் எழுந்தோர் பேய்மகள்
புயலோ குழலோ கயலோ கண்ணோ
குமிழோ மூக்கோ இதழோ கவிரோ
பல்லோ முத்தோ என்னா திரங்காது
கண்டொட் டுண்டு கவையடி பெயர்த்துத்
தண்டாக் களிப்பின் ஆடுங் கூத்து  (மணி. 6:120-6)

என்றார் மணிமேகலையினும். துணங்கைக் கூத்தாவது : பழுப்புடை இருகை முடக்கி யடிக்கத், துடக்கிய நடையது துணங்கை யாகும் (9) என்னுந் திவாகரத்தான் அறிக. இதனைச் சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர், சிங்கிக் கூத்தென்பர். தூங்க - ஆடாநிற்ப.

செவ்வேற் சேய்

57-61 : இருபேருருவின் ............... சேஎய்

பொருள் : இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை - மக்கள் வடிவும் விலங்கின் வடிவுமாகிய இரண்டு பெரிய வடிவினையுடைய ஒன்றாகிய பெரிய உடல், அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி - அற்று வேறாம் வகையாலே அச்சந்தோன்ற மிக்குச் சென்று, அவுணர் நல்வலம் அடங்க - அவனை யொழிந்த அவுணருடைய நல்ல வெற்றி இல்லையாம்படி, கவிழ் இணர் மாமுதல் தடிந்த - கீழ்நோக்கின பூங்கொத்துக்களையுடைய மாமரத்தை வெட்டின, மறுஇல் கொற்றத்து எய்யா நல்இசைச் செவ்வேல் சேஎய் - குற்றமில்லாத வெற்றியினையும் ஒருவரானும் அளந்தறிய வொண்ணாத நல்ல புகழினையும் செவ்விய வேலையும் உடைய முருகக்கடவுள்;

கருத்துரை : மக்கள் வடிவும் விலங்கின் வடிவுமாகிய இரண்டு பெரிய வடிவுங் கலந்து ஒன்றாகிய உடல் அற்று வேறாம் வகையாலே மிக்குச்சென்று, அவுணர்களின் வெற்றியில்லையாம்படி செய்து கீழ் நோக்கின பூங்கொத்துக்களையுடைய மாமரத்தை வெட்டின குற்றமற்ற வெற்றியினையும், அளக்கலாகாத நல்ல புகழினையும், செவ்விய வேலினையும் உடைய முருகக் கடவுளினது, (சேவடி) என்பதாம்.

அகலவுரை : அஞ்சி ஓடிக் கடல் கலங்கப்புக்க, சூரபன்மாவைத் தடிந்த காலை அவன் உடல் அற்று வேறாம் வகைசெய்ய மேலும் அவுணர் நல்வலமடங்க மாமரமாயினானையும் தடிந்த கொற்றத்துச் சேய் என்று சொற்கிடந்தவாறே இயைபு காண்க. மா என்பதற்கு அவுணரெல்லாம் தம்முடனே எதிர்ந்தார் வலியிலே பாதி தங்கள் வலியிலே கூடும்படி மந்திரங்கொண்டிருந்து சாதித்ததொரு மாமரம் என்பர் நச்சினார்க்கினியர்.

அறுவேறு வகையின் என்பதற்கு ஆறாகிய வேறுபட்ட கூற்றாலே என்றார் நச்சினார்க்கினியர். அறுவேறு வகையின் என்ற தொடரில் அறு என்பது முதனிலைத் தனிவினை யென்றும், அஃது அற்று எனப் பொருள்பட்டு வினையெச்சம் ஆயிற்றென்றும், பிறரும் (இ- கொ.சூ. 46 உரை) (நன் - விருத்தி 351) கூறுதலான் அவரெல்லாம் இதனை ஆறு என்னும் எண்ணுப் பெயராகக் கொள்ளாமல் வினைச் சொல்லாகவே கொண்டமை உணரலாம். இனி ஆறாகிய வேறுபட்ட கூற்றாலே அச்சந்தோன்ற மிக்குச் சென்றெனப் பொருள்கூறி, ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறும் கதை வருமாறு :

என்றதனான், இறைவன் உமையை வதுவை செய்து கொண்ட நாளிலே இந்திரன் சென்று நீ புணர்ச்சி தவிர வேண்டும் என்று வேண்டிக்கொள்ள, அவனும் அதற்கு உடம்பட்டு அது தப்பானாகிப் புணர்ச்சி தவிர்ந்து கருப்பத்தை இந்திரன் கையிற் கொடுப்ப, அதனை இருடிகள் உணர்ந்து அவன் பக்கனின்றும் வாங்கித் தமக்குத் தரித்தல் அரிதாகையினாலே இறைவன் கூறாகிய முத்தீக்கட் பெய்து, அதனைத் தம் மனைவியர் கையிற் கொடுப்ப, அருந்ததி யொழிந்த அறுவரும் வாங்கிக் கொண்டு விழுங்கிச் சூன்முதிர்ந்து சரவணப் பொய்கையிற் பதுமப் பாயலிலே பயந்தாராக, ஆறுகூறாகி வளர்கின்ற காலத்து இந்திரன் தான் இருடிகளுக்குக் கொடுத்த நிலையை மறந்து ஆண்டு வந்து வச்சிரத்தான் எறிய, அவ்வாறு வடிவும் ஒன்றாய் அவனுடனே பொருது அவனைக் கெடுத்துப் பின் சூரபன்மாவைக் கொல்லுதற்கு அவ்வடிவம் ஆறாகிய வேறுபட்ட கூற்றாலே மண்டிச் சென்றதென்று புராணங் கூறிற்று: இதனைப் பாயிரும் பனிக்கடல் (பரி-5) என்னும் பரி பாடற் பாட்டானுணர்க. இவ்வாறன்றி வேறு வேறு புராணங் கூறுவாருமுளர், என்பதாம்; அவுணர்-அசுரர். நல்வலம் -நல்ல வெற்றி. அவுணர் அதுகாறும் எய்தியுள்ள சிறந்த வெற்றியெல்லாம் அழிய என்பார், அவுணர் நல்வலம் அடங்க என்றார்.

உலகில் அரசர்கள் ஒருவர்பால் ஒருவர் காம முதலியவற்றால் இகல் கொண்டு போர் செய்து வெல்லுதல் போலாது, அவுணர்பாலும் அருள்கூர்ந்து அவ்வருள் காரணமாகப் போர் செய்தடர்த்து வெல்லுதலாலே மறுஇல் கொற்றம் என்றார். மறு - அவா முதலியன உண்மை என்க. போர் செய்து கொல்லற்கு அருள் காரணமாதல் யாண்டையதென்னிற் கூறுதும். இறைப்பொருள் உலகினைப் படைத்துக் காத்து அழித்து மறைத்து அருளிச் செய்யும் ஐந்தொழிலும் அருளாலே செய்தலன்றி உயிர்கள் போன்று அவாவாலே செய்தலில்லை. அங்ஙனம் ஐந்தொழில் செய்யுமிடத்தே யாதானுமோர் உயிர் அறியாமையாலே தீநெறிக்கண் மிக்குச் செல்லுங்கால், அதனை அந்நெறிக்கண் போகாமற் றடுத்தற் பொருட்டு அவ்வுடற் பொறையை அகற்றி, அச்செலவினை நீக்கியருளுதலல்லால், அவர்பால் செற்றங் கொள்வதில்லை. இதனை,

நிக்கிர கங்கள் தானும் நேசத்தால் ஈசன் செய்வது
அக்கிர மத்தால் குற்றம் அடித்துத்தீர்த் தச்சம் பண்ணி
இக்கிர மத்தி னாலே ஈண்டறம் இயற்றி டென்பன்
எக்கிர மத்தி னாலும் இறைசெயல் அருளே என்றும்   (சித்தியார் சுபக். 105)

எனவும்,

தந்தைதாய் பெற்ற தத்தம் புதல்வர்கள் தம்சொ லாற்றின்
வந்திடா விடின்உறுக்கி வளாரினால் அடித்துத் தீய
பந்தமும் இடுவர் எல்லாம் பார்த்திடிற் பரிவே யாகும்
இந்தநீர் முறைமை யன்றோ ஈசனாற் முனிவு மென்றும்  (சித்தியார் சுபக். 109)

எனவும், வரும் மெய்கண்ட மொழிகளானும் உணர்க. இப்பகுதியால் முருகக்கடவுளின் மறத்திருவருளைச் சிறப்பித் தோதியவாறறிக. தலைகீழாய் நின்ற மாமரம் என்றதும் நன்னெறிக்கண் நில்லாது தீநெறிப்படர்ந்த உயிர் என்னும் குறிப்புடைத்தாகும் என்க. எய்யா நல்லிசை என்றது, ஓரளவானே உணர்தலன்றி முற்ற உணரலாகாப் பெருமையன் என்றவாறு, என்னை?

பந்தமும் வீடு மாய பதபதார்த் தங்கள் அல்லான்
அந்தமும் ஆதி யில்லான் அளப்பில் னாத லாலே
எந்தைதான் இன்ன னென்றும் இன்னதாம் இன்ன தாகி
வந்திடான் என்றுஞ் சொல்ல வழக்கொடு மாற்ற மின்றே  (சித்தியார் சுபக். 64)

என்றும், அளவைகளானே அளக்கப் படாதவனென்றும், அறிவுக்கும் அப்பாற் பட்டவனென்றும் சான்றோர் ஓதுதலான், அவன்புகழ் முழுதும் உயிர்களால் அறியப்படா தாயிற்றென்க. செவ்வேல் - செவ்விய வேல். ஞானசத்தியே முருகன் வேலாதலின் செம்மையுடைய வேல் என்றார். செய்ய வேல் என்பர் நச்சினார்க்கினியர். இனி நானிலத் தெய்வமாகிய முருகன் திருமால் இந்திரன் வருணன் என்னும் நான்கு தெய்வங்களுள்ளும் குறிஞ்சித் தெய்வமாகிய முருகனையே சங்க காலத்து நல்லிசைப்புலவர்கள் யாண்டும் கிளந்தெடுத்துப் போற்றிக் கூறுதலையும் முருகக்கடவுள் கடலினின்ற மாமரத்தை வெட்டின வரலாற்றினை யாண்டும் பயில வழங்குதலையும் காணலாம். அவற்றுட் சில வருமாறு :

மாக்கடல் முன்னி அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும் சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக் கடுஞ்சின விறல்வேள் (பதிற் - 11: 3-6) என்றும் கடுஞ்சூர் மாமுதல் தடிந்தறுத்த வேலடு போராள (பரி -9: 70-71) என்றும், நீர்நிரந் தேற்ற நிலந்தாங் கழுவத்துச் சூர்நிரந்து சுற்றிய மாதபுத்த வேலோய் (பரி-18 : 3-4) என்றும், உரவு நீர் மாகொன்ற வென்வேலான் (கலி-27-156) என்றும், மாகடல் கலக்குற மாகொன்ற மடங்காப் போர் வேல் வல்லான் (கலி-104-13-4) என்றும், உரவுநீர் மாகொன்ற வேல் (சிலப் - 24-பாட்டுமடை.7) என்றும், பாரிரும் பௌவத்தினுள்புக்குப் பண்டொரு நாள் சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே, (சிலப் - 29 : பாட்டுமடை - 8) அகறிரைப் பரப்பிற் சடையசைந் தலையாது கீழிணர் நின்ற மேற்பகை மாவின் ஓருடல் இரண்டு கூறுபட விடுத்த அமையா வென்றி யரத்த நெடுவேலோய், கட்டுடைச் சூருடல் காமங்கொண்டு பற்றியுட் புகுந்து பசுங்கடல் கண்டு மாவுடல் கொன்ற மணிநெடுந் திருவேல் கடன்மாக் கொன்ற தீப்படர் நெடுவேல் கருங்கடல் குடித்தலிற் பெருந்தழற் கொழுந்து மாவுயிர் வெளவலிற் றீவழிக் கூற்றும்..... ஆகிய மணிவேற் சேவலங் கொடியோன் மணிதிரைக் கடலுண் மாவெனக் கவிழ்ந்த களவுடல் பிளந்த வொளிகெழு திருவேல் (கல்) என்றும், கடலுண் மாத்தடிந்தான் (பு.வெ.103) என்றும் வரும்.

62-66 : சேவடி ............... வினையே

பொருள் : சேவடி படரும் செம்மல் உள்ளமொடு - திருவடியிற் செல்லுதற்குரிய தலைமை பெற்ற உள்ளத்தோடே, நலம்புரி கொள்கைப் புலம் புரிந்து உறையும் செலவு நீ நயந்தனை யாயின் - நன்மைகளையே செய்யும் மேற்கோளுடனே மெய்யறி தலையே செய்து எஞ்ஞான்றும் தங்குதற்குரிய நெறியிற் செல்லும் செலவை நீ விரும்பியே விட்டாயாயின், பலவுடல் நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப - கழிந்த பற்பல பிறப்புக்களினும் தொடர்ந்து முதிர்ந்தமையாலே நன்றாகிய நெஞ்சத்திற் கிடந்த இனி தாகிய வீடுபேற்றின்கண் விருப்பம் நிறைவுறும்படி இன்னே பெறுதிநீ முன்னிய வினையே - இப்பொழுது பெறுவாய் நீ கருதிய வினையின் பயனை :

கருத்துரை : திருவடியிற் செல்லுதற்குரிய தலைமை பெற்ற உள்ளத்தோடே நன்மைகளையே செய்யும் மேற்கோளுடனே மெய்யுணர்ந்து எஞ்ஞான்றும் தங்குதற்குரிய நெறியிற் செல்லும் செலவை நீ விரும்பியே விட்டாயாயின், கழிந்த பற்பல உடல்களிலும் தொடர்ந்து முதிர்ந்தமையாலே இவ்வாறு நன்றாகிய நின் நெஞ்சத்திற் கிடந்த இனிதாகிய வீடுபேற்றவா நிறைவுறும்படி இப்பொழுதே பெறுவாய் நீ கருதிய வினையின் பயனை என்பதாம். திருவடியே வீடாயிருக்கும் என்றார், அது,

........ தென்னன் பெருந்துறையான்
காட்டா தனவெல்லாம் காட்டிச் சிவங்காட்டித்
தாட்டா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி  (திருவா - திருவம்மானை, 6)

என்பதனாலும், பிறருந் திருவடியைக் கூறுமாற்றானும் உணர்க என்று விளக்கங் கூறினர் நச்சினார்க்கினியர்.

படர்தல் - செல்லுதல்

இறுமாந் திருப்பன்கொலோ ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்கு
இறுமாந் திருப்பன் கொலோ

என்றும்,

புண்ணியனே நின்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே

என்றும் திருநாவுக்கரசரும் திருவடியை ஓதுதல் காண்க.

இனி,

புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும்
புகன்மிருதி வழிஉழன்றும் புகலும்ஆச் சிரம
அறத்துறைகள் அவையடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும்
அருங்கலைகள் பலதெரிந்தும் ஆரணங்கள் படித்தும்
சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத
சிரப்பொருளை மிகத்தெளிந்தும் சென்றாற் சைவத்
திறத்தடைவர் இதிற்சரியை கிரியா யோகம்
செலுத்தியபின் ஞானத்தால் சிவனடியைச் சேர்வர்  (சித்தியார் சுபக். 263)

எனச் சான்றோர் கூறியாங்கு, ஒருவற்கு வீடுபேற்றின்கண் விருப்பமுண்டாதலும் விருப்பமுண்டாயவழி அவ்வழி முயன்று அதனைப் பெறத் தகுதி எய்துதலும் படிமுறையானே பல பிறவிகளினும் ஏற்பட்டு நிகழ்ந்து முற்றுப்பெறுவதன்றி ஒருங்கே ஒரு காலத்து முற்றுப்பெறுதல் இல்லையாகலின் சேவடிபடரும் உள்ளத்தைச் செம்மல் உள்ளம் என்றும், அவ்வழி நல்வினைசெய்தலை நலம்புரி கொள்கை என்றும், ஞானம் எய்துதலைப் புலம்புரிதல் என்றும், இறையடி எய்துதலை உறையும் என்றும், அச்செலவு நயத்தல் அரிதாகலின் நயந்தனையாயின் என்றும், நயந்தனை எனில் அது பலவுடல்களில் தொடர்ந்து முற்றிய நன்னர் நெஞ்சமுடையை ஆதலைக் காட்டும் என்பார், நன்னர் நெஞ்சம் என்றும், உலகப் பொருள்களிற் செலுத்தும் ஆசைபோலாது இது வீட்டிற் செலுத்தும் ஆசையாகலான், இன்னசை என்றும், அதனைப் பெறற்கு நீ நயத்தலே காரணமாகலின் நயந்தவுடனே பெறுவாய் என்பார், இன்னே பெறுதி என்றும் இயம்பினார்.

செம்மல் - தலைமை. ஈண்டு வீடுபேற்றினைப் பெறத்தக்க பருவம் உடைமையைத் தலைமை என்றார். நலம் புரிதலாவது, சரியை முதலிய இறைபணியிலே நிற்றல். புலம்புரிதல் - ஞானத்தை மேற்கோடல். சரியை முதலிய மூன்றும் ஞானத்தை நல்க ஞானம் ஒன்றே வீடுபேறு நல்குதலின், புலம்புரிந்து உறையும் செலவு என்றார். ஞானத்தை விரும்புமாற்றானே சென்று உறைதற்குக் காரணமான செலவென்க. ஞானத்தான் மட்டுமே வீடு எய்தற்பாலது என்பதனை,

பின்மார்க்கச் சிவனுடனாம் பெற்றி ஞானப்
பெருமையுடை யோர்சிவனைப் பெறுவர் காணே  (சித்தியார் சுபக்.274)

என்றும்,

மேலான ஞானத்தால் அரனை
அருச்சிப்பர் வீடெய்த அறிந்தோ ரெல்லாம் (சித்தியார் சுபக் - 275)

என்றும்,

ஞானத்தால் வீடென்றே நான்மறைகள் புராணம்
நல்லஆ கமம்சொல்ல அல்லவாம் என்னும்
ஊனத்தார் என்கடவர் அஞ்ஞா னத்தால்
உறுவதுதான் பந்தமுயர் மெய்ஞ்ஞா னந்தான்
ஆனத்தா லதுபோவ தலர்கதிர்முன் னிருள்போல்
அஞ்ஞானம் விடப்பந்தம் அறும்முத்தி யாகும்
ஈனத்தார் ஞானங்கள் அல்லா ஞானம்
இறைவனடி ஞானமே ஞான மென்பர்  (சித்தியார் சுபக். 8-27)

என்றும் வரும் சான்றோர் மெய்ம்மொழிகளானும் அறிக. எனவே, ஈண்டு முருகன் சேவடியின்கண் ஆற்றுப்படுத்தப்படுவோன் பல பிறவிகளினும் இறைபணி நின்று அறம் நிரம்பிய அருளுடை நெஞ்சத்தை யுடையவனாய்த் தக்க பருவம் பெற்றுழி, இறைவனே நல்லாசிரியன் வடிவுகொண்டு அருளாலே அவனை வலிந்து எதிர்ப்பட்டு அவ்வீடுபேற்றிற்குரிய நெறிகூறி ஆற்றுப்படுத்துகின்றான் என்க. அவனரு ளாலே அவன்தாள் வணங்கி என்றார் மாணிக்கவாசகப் பெருமானும். மேலும்,

இங்ஙனம் உயிரின் பருவமறிந்து நல்லாசிரியனாய் எதிர்வந்து செவியறிவுறுத்து வீட்டிற் செலுத்துதல் இறைவன் செயல் என்பதனை,

சித்தாந்தத் தேசிவன்தன் திருக்கடைக்கண் சேர்த்திச்
செனனமொன்றி லேசீவன் முத்த ராக
வைத்தாண்டு மலங்கழுவி ஞான வாரி
மடுத்தானந் தம்பொழிந்து வரும்பிறப்பை அறுத்து
முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பன் (சித்தியார் சுபக். 268)

என்றும்,

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்தவிட்
டன்னிய மின்மையின் அரன்கழல் செலுமே  (சிவஞானபோ. 8)

என்றும், ஆன்றோர் கூறுமாற்றால் உணர்க. புலம்பிரிந்துறையும் என்பதும் பாடம். இதற்கு, சுவை முதலிய ஐம்புலங்களினின்றும் பிரிந்து தங்குகின்ற எனப் பொருள் கொள்க. இனி, வாணுதல் கணவனும், மார்பினனும், சென்னியனும் ஆகிய சேயின் சேவடி படரும் உள்ளமொடு செலவு நீ நயந்தனையாயின் இன்னே பெறுதி நீ முன்னிய வினை என அணுக இணைத்துக் காண்க. இனி, அவ்விறைவனை யாண்டுக் காண்பல் எனக் குறிப்பான் வினாய மாணவனுக்கு நல்லாசிரியன், அவ்விறைவன் உறையும் இடங்களைக் கூறுவான் புகுந்து முன்னர் அம் முருகக்கடவுள் உவந்துறையும் திருப்பரங்குன்றத்தைப்பற்றிக் கூறுகின்றான் என்க.

திருப்பரங்குன்றம்

67-77 : செருப்புகன்று ............. உரியன்

பொருள் : செரு புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடி - போரை விரும்பிக்கட்டின சேய்நிலத்தே சென்றுயர்ந்த நெடிய கொடிக்கு அருகே, வரிப்புனை பந்தொடு பாவை தூங்க - நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும் பாவையும் அறுப்பாரின்மையின் தூங்கியே கிடப்ப, பொருநர்த் தேய்த்த போர் அரு வாயில் - பொருவாரை இல்லையாக்குகையினாலே எக்காலமும் போர்த்தொழில் அரிதாகிய வாயிலினையும், திருவீற்றிருந்த தீதுதீர் நியமத்து - திருமகள் வருத்தமின்றி இருந்த குற்றந்தீர்ந்த அங்காடித் தெருவினையும், மாடம் மலிமறுகிற் கூடற் குடவயின் - மாடங்கள் மிக்க ஏனைத் தெருக்களையும் உடைய மதுரையின் மேற்றிசையிடத்து, இருஞ்சேற்று அகல்வயல் விரிந்து வாய் அவிழ்ந்த - கரிய சேற்றினையுடைய அகன்ற வயலிலே முறுக்கவிழ்ந்து மலர்ந்த, முள் தாள் தாமரை துஞ்சி - முள்ளையுடைத்தாகிய தாளையுடைய தாமரைப் பூவிலே இராப்பொழுது துயில் கொண்டு, வைகறை கள் கமழ் நெய்தல் ஊதி - விடியற்காலத்தே தேன் நாறுகின்ற நெய்தற்பூவை ஊதி, எல் பட -ஞாயிறு தோன்றிய காலத்தே, கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர் அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் - கண்ணைப்போன்று விரிந்த விருப்பம் மருவின சுனைப்பூக்களிலே அழகிய சிறகையுடைய வண்டினுடைய அழகிய திரள் சென்று ஆரவாரிக்கும், குன்று அமர்ந்து உறைதலும் உரியன் - திருப்பரங்குன்றிலே நெஞ்சமர்ந்து இருத்தலும் உரியன்.

கருத்துரை : போரை விரும்பிக் கட்டின நெடிய கொடியின் அருகே தூங்கவிட்ட பந்தும் பாவையும் அறுப்பாரின்மையாலே தூங்கியே கிடக்கும்படி போர்செய்வோர் இல்லையாம்படி செய்தனாலே எக்காலமும் போர்த்தொழில் அரிதாகிய வாயிலையும், திருமகள் வீற்றிருந்த குற்றமற்ற அங்காடித் தெருவினையும், மாடங்கள் மிக்க ஏனைத் தெருக்களையும் உடைய மதுரையின் மேற்றிசைக் கண்ணே, கரிய சேற்றையுடைய அகன்ற வயலிலே மலர்ந்த தாமரைப் பூவிலே இரவில் துயில் கொண்டு, வைகறைப்போதிலே தேன்மணக்கும் நெய்தற்பூவை ஊதி, ஞாயிறு தோன்றின பின்னர்க் கண்போன்று மலர்ந்த சுனை மலரின்கண் சென்று, அழகிய சிறையுடைய வண்டுக் கூட்டம் ஆரவாரியாநின்ற திருப்பரங்குன்றிலே நெஞ்சமர்ந்து தங்குதலும் உரியன் என்பதாம்.

அகலவுரை : செரு - போர். புகன்று - விரும்பி; கூறி எனினுமாம். சேண் - சேய்நிலம். கொடியின் அருகே தூங்கவிட்ட பந்தும், பாவையும் அறுப்பார் இன்மையின் எப்பொழுதும் தூங்கியே கிடக்க என்க. எனவே, பண்டைக்காலத்தே மன்னர்கள் பகைவரைப் பெறுதற்பொருட்டுத் தம்மரண்மனைமுற்றத்தே கொடியுயர்த்து அதன் அருகே பந்தையும் பாவையையும் தூங்கவிட்டிருப்பர் என்றும், அப்பந்தும் பாவையும் தூங்கவிடுதலின் கருத்து, எம்மை வெல்லும் ஆண்மையாளர் யாருமிலர்; எம் பகைவரை யாம் பெண்டிர்போலக் கருதுகின்றோம்; ஆண்மையாளர் உளீரேல் இவற்றை அறுமின் என்னும் குறிப்பே என்றும் அறியலாம். ஆசிரியர் நச்சினார்க்கினியர் பகைவரை மகளிராக்கி அவர் கொண்டு விளையாடுதற்குத் தூக்கின என்றவாறு என்பர். இங்ஙனம் தூக்கும் வழக்கத்தை,

பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலும்
என்றிவை பலவுஞ் சென்றுசென் றெறியும்
முந்தை மகளிரை இயற்றி   (தொல்.புறத். 12,மேற்.)

என்றும்,

பகைவரைப் பாவை மாரெனத் தெரிப்பப் பந்தொடு பாவைக டூங்கித்
தகைசிறி தறியா வாயில்சா னாஞ்சிற் றடப்பெரு நொச்சியும்   (திருநாகை - திருநகர - 90)

என்றும்,

பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலும் பலவுஞ்சென் றெறிகிற்கும்
முந்தை மாதரை யியற்றுபு பின்றைமொய்ப் பகழி வாயிலிற் றூக்கி  (தணிகை. சீபரி - 58)

என்றும், பிறசான்றோர் கூறுமாற்றானும் உணர்க. வரி என்னும் முதனிலைத் தனிவினை வரிந்து எனப் பொருள் பட்டு வினையெச்சமாய் நின்றது. பாவையும் பந்தும் அறுப்போரிலராம்படி தம்மோடு போர் செய்வாரை இல்லையாக்கின என்க. இங்ஙனம் இல்லையாக்குதல் போர் எக்காலமும் அரிதாதற்கு ஏது வென்க. திரு - திருமகள். திருமகள் வீற்றிருத்தலாவது - எல்லாப் பொருளும் மிக்குக் கிடத்தல்,

நியமம் - அங்காடித் தெரு. தமவும் பிறவும் ஒப்பநாடிக், கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறைகொடாது, பல்பண்டம் பகர்ந்துவீசும் அங்காடித் தெருவென்பார் தீதுதீர் நியமம் என்றார்: திருநிலைபெற்ற தீதுதீர் சிறப்பின் (நெடுநல - 89) என்றார் இவ்வாசிரியரே நெடுநல்வாடையினும். மதுரைக்கு நான்மாடக்கூடல் என்னும் பெயருண்மையின் மாடம் மலிமறுகிற் கூடல் என்றார். மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் (மதுரைக் - 429) என்றும், மாடமலி மறுகிற் கூடலாங்கண் (அகநா.346:20) என்றும், நான்மாடக் கூடல் நகர் (பரி. 20: 26) என்றும் பிற சான்றோரும் மதுரையை மாடத்தாலே சிறப்புடையதாய் ஓதுதலறிக. இங்ஙனம் மதுரையை விதந்தெடுத் தோதிய தன் காரணம் பாண்டியனையும் ஒருமுகத்தால் இதனுட் சார்த்துதலை விரும்பும் விருப்பமே என்பர் இளம்பூரண அடிகளார். குடவயின் - மேற்றிசைக் கண்ணே :

கொடிநுடங்கு மறுகிற் கூடற் குடாஅது
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யுயரிய
ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து   (அகம். 149:14-7)

என்றார் அகத்தினும். இனி, வண்டுகளின் செயற்கண் வைத்துத் திருப்பரங்குன்றத்தின் வளத்தினை அழகாக ஓதும் நக்கீரனார் நல்லிசைப் புலமை மாண்பினை உணர்ந்தின்புறுக. துஞ்சி - துயில்கொண்டு. எல் - ஞாயிறு. காமரு என்பதனைக் காமம் வரும் என்பதன் மரூஉ என்பர் அடியார்க்கு நல்லார். அரி - அழகு. குன்று - திருப்பரங்குன்றம். அமர்ந்து - நெஞ்சாலே விரும்பி. உரியன் - தனக்குரிய செயலாகக் கொண்டவன். அங்கிங்கெனாதபடி எங்கும் உளனாகிய இறைவனை ஒருசில இடங்களைச் சுட்டி ஆண்டுறைவன் என்றல் என்னையோ எனின்?

இறைப் பொருள் உயிர் அறிவால் சுட்டியுணரப்படாததேயாயினும் இவ்வுயிர்களின்பால் வைத்த அருளாலே அருளுருக் கொண்டு தன் அன்பர்கள் கருதிய வடிவிற்சென்று காட்சி நல்குவன் என்பதும், தோற்ற முதலிய ஐந்தொழில் செய்தற்கும் அவ்வருள்மேனி இன்றியமையாதென்பதும்,

படைப்பாகித் தொழிலும் பத்தர்க் கருளும் பாவனையும் நூலும்
இடப்பாக மாத ராளோடு இயைந்துயிர்க்கு இன்பம் என்றும்
அடைப்பானாம் அதுவும் முத்தி அளித்திடும் யோகும் பாசந்
துடைப்பானாந் தொழிலும் மேனி தொடக்கானேற் சொல்லொ ணாதே  (சித்தியார் சுபக். 1.54)

என்னும் மெய்ம்மொழியான் அறிக. மேலும் இச்செய்யுட்கு மாதவச் சிவஞான யோகியார், படைப்புக்கு வாதுளாகமத்தின் ஓதியவாறே இயங்கியற் பொருளும் நிலையியற் பொருளுமாகிய உலகங்கள் முதல்வனது திருமேனியில் ஒவ்வோர் உறுப்புக்களினின்று தோன்றுமாறு செய்யவேண்டுதலானும், மறைப்புக்கு ஊனநடனம் இயற்றவேண்டுதலானும் திதிக்கு மாதராளோடியை வேண்டுதலானும் அழிப்பிற்குத் தோன்றின முறையே அவ்வவ் வுறுப்புக்களின் ஒடுக்க வேண்டுதலானும் செவியறிவுறுத்தற்பொருட்டு ஆசிரிய உருக்கோடல் வேண்டுதலானும் உருவத்திருமேனி இன்றியமையாச் சிறப்பின என விளக்கிச் சேறலும் உணர்க.

இனி,

செம்மலர் நோன்றாள் சேரல் ஒட்டா
அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ
மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயந் தானும் அரன் எனத் தொழுமே

எனவரும் சிவஞானபோதம் பன்னிரண்டாம் சூத்திரத்திற்கு, இது அசிந்திதனாய் நின்ற பதியைச் சிந்திதனாகக் கண்டு வழிபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று என்றும், அவன் மற்றிவ் விடங்களிற் பிரகாசமாய் நின்றே அல்லாதவிடத்து அப்பிரகாசமாய் நிற்றலான் என்றும்,

கண்டதொரு மந்திரத்தால் காட்டத்தில் அங்கிவே
றுண்டல்போல் நின்றங் குளதாமாற் - கண்டவுருத்
தானதுவா யன்றானான் றானதுவாய்த் தோன்றானோ
தானதுவாய்க் காணுந் தவர்க்கு  (சிவஞானபோதம், 12-32)

என்றும், மெய்கண்டாரடிகளும்,

திருக்கோயில் உள்ளிருக்கும் திருமேனி தன்னைச்
சிவனெனவே கண்டவர்க்குச் சிவனுறைவன் அங்கே
உருக்கோலி மந்திரத்தால் எனநினையும் அவர்க்கும்
உளனெங்கும் இலன்இங்கும் உளன்என் பார்க்கும்
விருப்பாய வடிவாகி இந்தனத்தின் எரிபோல்
மந்திரத்தில் வந்துதித்து மிகும்சுரபிக் கெங்கும்
உருக்காண வொண்ணாத பால்முலைப்பால் விம்மி
ஒழுகுவது போல்வெளிப்பட் டருளுவன் அன்பர்க்கே   (சித்தியார் சுபக். 12.4)

என்று, அருள்நந்தி சிவாசாரியாரும் உணர்த்தி, ஆதலானே, இவ்விடங்களின் வழிபடுக என, அருளிப் போதலானும், சின்னாட்பல் பிணிச் சிற்றறிவினராகிய மக்கள் அவ்விறைப் பொருளைத் திருக்கோயில் திருவுருவ வழிபாடுசெய்தன்றி எய்துதல் எவ்வாற்றானும் இயலாதென்க. எனவே, ஈண்டு மாணவனை ஆற்றுப்படுத்தும் ஆசிரியர், திருப்பரங்குன்றம் முதலிய திருக்கோயில்களையும் ஆண்டுறையும்முருகப் பெருமானையும் வழிபடுமாறுணர்த்தியருளுகின்றார் என்க. சிவபெருமானும் முருகப்பெருமானும் வெவ்வேறு உருவங்களும் செயலும் உடையராக ஓதப்படினும் இரண்டுருவமும் ஒரே முழுமுதலின் இருவேறு அருளுருவங்கள் ஆகலான், சிவபெருமானுக்கோதிய அளவை நூலோர் மொழிகள் முழுதும் முருகக்கடவுளுக்கும் ஒக்கும் என்பதறிந்து கடைப்பிடிக்க. இதனை,

ஆதலின் நமது சத்தி யறுமுகன் அவனும் யாமும்
பேதகம் அன்றால் நம்போற் பிரிவிலன் யாண்டும் நின்றான்
ஏதமில் குழவி போல்வான் யாவையும் உணர்ந்தான் சீரும்
போதமும் அழிவில் வீடும் போற்றினர்க் கருள வல்லான்  (கந்த.திருவிளை.19)

எனவரும் கந்தபுராணச் செய்யுளானும் அறிக. இனி, 78-வைந்நுதி என்பது முதல் 125-அலைவாய்ச் சேறல் என்னுந்துணையும் ஒரு தொடர். இதன்கண், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) என்னும் பதியில் எழுந்தருளியிருக்கும் முருகக்கடவுளின் ஆறு திருமுகங்களின் மாண்பும் செயலும் பன்னிரு கைகளின் மாண்பும் செயலும் விரித்துக் கூறுமாற்றால் அவ்விறைவனின் திருவுருவ மாண்பு தெரித்தோதப்படும்.

திருச்சீரலைவாய்

முருகக் கடவுள் ஊர்ந்தருளும் யானை மாண்பு

77-82 : அதாஅன்று ............... வேழமேற்கொண்டு

பொருள் : அதாஅன்று- அத்திருப்பரங்குன்றத்தேயல்லாமலும், வைந்நுதி பொருத வடு ஆழ் வரிநுதல் - கூரிய தோட்டி வெட்டின வடுவழுந்தின புகரையுடைய நெற்றியின்கண், வாடா மாலை ஓடையொடு துயல்வர - பொன்னரிமாலை பட்டத்தோடே கிடந்து அசைய, படுமணி இரட்டும் மருங்கின் - தாழ்கின்ற மணி மாறியொலிக்கின்ற பக்கத்தினையும், கடுநடைக் கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின் - கடிய நடையினையும் கூற்றுவனை ஒத்த பிறரால் தடுத்தற்கரிய வலியினையும் உடைய, கால் கிளர்ந்தன்ன வேழம் மேல் கொண்டு - ஓடுங்காற் காற்றெழுந்தாலொத்த களிற்றை ஏறி;

கருத்துரை : கூரிய தோட்டிவெட்டின வடுவழுந்தின நெற்றியின் கண் பொன்னரிமாலை பட்டத்தோடே கிடந்து அசையாநிற்ப, தாழ்கின்ற மணி மாறிமாறி ஒலிக்கின்ற பக்கங்களையும், விரைந்த நடையினையும் கூற்றுவனை ஒத்த வலியினையும் உடையதாய், ஓடுங்கால் காற்றெழுந்தாற் போன்று விரையும் களிற்றியானையை ஏறி என்பதாம்.

அகலவுரை : வை - கூர்மை; வையே கூர்மை என்பது தொல்காப்பியம். நுதி - நுனி. வைந்நுதி - ஈண்டுத் தோட்டிக்குப் பெயராய் நின்ற அன்மொழித்தொகை. ஆகுபெயர் என்பர் நச்சினார்க்கினியர். பொருத - வெட்டின. வடு - தழும்பு. வரி - புகர். வாடாமாலை - பொன்னரிமாலை. ஓடை - நெற்றிப்பட்டம் துயல் வருதல் - அசைதல். நடக்கும்போது விரைந்த நடையுடையதும் ஓடுங்காற் காற்றுப்போல விரைந்தோடுவதும் ஆகிய களிறு என்க. மாறி மாறி அடியிடுந்தோறும் மணியும் மாறி மாறி ஒலிக்குமாகலான், படுமணியிரட்ட என்றார். படு மணி - ஓசை தோன்றும் மணி எனினுமாம். கூற்றம், தறுகண்மைக்கும் உருவிற்கும் வலிமைக்கும் களிற்றிற்குவமை என்க. மொய்ம்பு - வலிமை. பகைவரைத் தப்பாமற் கொல்லும் வலியுடைமையாற் கூற்றத்தை உவமை எடுத்தோதினர். கால் - காற்று. மருங்கினையும் நடையினையும் மொய்ம்பினையும் உடைய யானையை ஏறி என்க. ஏறி என்பது 125. சேறலும் என்பதனோடு இயையும். இடைப்பிறவரலாக அப்பெருமானுடைய முகம் முதலியவற்றை இனிக் கூறுகின்றார்.

அன்பர் நெஞ்சத்தே அம்முருகன் திருமுகந் தோன்றும் மாண்பு

83-90 : ஐவேறுருவின் ................ முகனே

பொருள் : ஐவேறு உருவின் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி - ஐந்தாகிய வேறுபட்ட வடிவினையுடைய முடிக்குச் செய்யும் தொழிலெல்லாம் முற்றுப் பெற்ற முடியோடே கூடி விளங்கிய ஒன்றற் கொன்று மாறுபாடு மிகும் அழகினையுடைய மணிகள், மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப - மின்னலோடே மாறுபடுகின்ற விளக்கத்தோடே தலையின்கண் பொலிவுபெறவும், நகை தாழ்பு துயல் வரூஉம் வகையமை பொலங்குழை - ஒளிதங்கி அசையும் தொழிற் கூறமைந்த பொன்னாற்செய்த மகரக்குழை, சேண் விளங்கு இயற்கை வாள்மதி கவைஇ - சேய்நிலத்தே சென்று விளங்கும் இயல்பினையுடைய ஒளியை உடைய திங்களைச் சூழ்ந்து, அகலாமீனின் அவிர்வன இமைப்ப - நீங்காத மீன்கள் போல விளங்குவனவாய் ஒளியைக் கால, தா இல் கொள்கைத் தந்தொழின் முடிமார் - குற்றம் இல்லாத நோன்புகளையுடைய தமது தவத்தொழிலை முடிப்பாருடைய, மனன் நேர்பு எழுதரு வாள் நிறம் முகன் - நெஞ்சிலே பொருந்தித் தோன்றுகின்ற ஒளிமிக்க நிறத்தையுடைய திருமுகங்களிலே;

கருத்துரை : ஐவகை வடிவினையுடைய தொழில் முற்றுப்பெற்ற முடியோடே ஒன்றற் கொன்று மாறுபட்டு விளங்கும் அழகிய மணிகள் மின்னல் போன்று விளங்கித் தலையின்கண் பொலிவு பெறவும், ஒளி தங்கி அசையும் தொழில் நுட்பமைந்த பொன்னாற் செய்த மகரக்குழை தொலைவினும் சென்று ஒளிரும் திங்களைச் சூழ்ந்த விண்மீன் போன்று விளங்கி ஒளிரவும், குற்றமற்ற தவத்தொழில் முடித்தோருடைய தூய உள்ளத்தே பொருந்தித்தோன்றாநின்ற ஒளியும் நிறமுமுடைய திருமுகங்களிலே வைத்து என்பதாம்.

அகலவுரை : ஐவேறுருவிற் செய்வினை முற்றியபடி என்றது, தாமம் முகுடம் பதுமம் கிம்புரி கோடகம் என்னும் ஐந்துவகையாகச் செய்யப்படும் தொழிற்றிறம் முற்றிய தலையணிகலன் என்றவாறு.

தாம முகுடம் பதுமங் கோடகங்
கிம்புரி முடியுறுப் பைந்தெனக் கிளப்பர்

என்பது திவாகரம்.

கோடகங் கிம்புரி முகுடந் தாமம்
பதும முடியுறுப் பிவையைந் தாகும்

என்பது பிங்கலந்தை  (1169).

மணிகள் ஒன்றோடொன்று நிறத்தானே மாறுபட்டிருத்தலால் முரண்மிகு திருமணி என்றார். திரு - அழகு. உறழ் : உவமவுருபு. சென்னி - தலை. பொற்ப - பொலிவுபெற. முடியோடே மணி சென்னியின்கண் பொலிவுபெற என்க. நகை - ஒளி. தாழ்பு-தங்கி. துயல் வரூஉம்-அசைகின்ற. தொழிற் கூறுகள் எல்லாம் நன்கமைந்த மகரக்குழை என்பார், வகையமை பொலங்குழை என்றார். பொலங் குழை - பொன்னாற் செய்த மகரக்குழை. திங்கள் முகத்திற்கும் அதனைச் சூழ்ந்துள்ள விண்மீன், அணிகலனுக்கும் உவமை என்க. மிகச் சேய்மையினும் சென்று ஒளிர்தல் மதிக்கு இயல்பாகலின், சேண் விளங்கு இயற்கை வாண்மதி என்றார், வாள் - ஒளி. கவைஇ-சூழ்ந்து. மீன் - உரோகிணி முதலிய விண்மீன்; வியாழம் வெள்ளி முதலியனவுமாம். தா - வருத்தம்.

தவம்செய்வார் தங்கருமம் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

என்றோதுபவாகலான், தவத்தொழிலைத் தந்தொழில் என்றார். முடிமார் என்பது, எச்சப்பொருள் தாராமல் முடிப்பவர் என ஈண்டு முற்றுப்பொருள்தந்து நிற்றலறிக. தந்தொழில் முடிமார் என்றது. தவத்தொழிலிற் றலைநின்று முற்றுப்பெற்ற பெரியோரை என்க. அத்தகைய சான்றோரின் திருவுள்ளத்திலேதான் இறைப்பொருள் உருக்கொண்டு காட்சிதருதல் இயல்பு என்க. மலர்மிசை ஏகினான் என்னும் திருக்குறட்குப் பரிமேலழகர், அன்பானினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் என விளக்குதலும் ஈண்டு நினைவு கூர்க. அன்பருடைய உள்ளத்தே இறைப்பொருள் ஒளியாகவே தோன்றுமென்பவாகலான், மனன் நேர்பு எழுதரு வாணிறமுகன் என்றார். இதனை,

இறைஞானந் தந்து தாளீதல் சுடரிழந்த
துங்கவிழிச் சோதியும் உட்சோதியும் பெற்றாற்போல்
சோதிக்குட் சோதியாய்த் தோன்றிடுவன் காணே  (சித்தியார் சுபக். 290)

என்றும்,

சிந்தையினிற் பூசித்துச் சிவனைஞா னத்தால்
சிந்திக்கச் சிந்திக்கத் தர்ப்பணத்தை விளக்க
வந்திடும் அவ்வொளிபோல மருவிஅரன் உளத்தே
வரவரவந் திடுவன்பின் மலமான தறுமே  (சித்தியார் சுபக்.301)

என்றும் சான்றோர் கூறுமாற்றானும் உணர்க. இனி, (91) மாயிருள் என்பது தொடங்கி (102) நகையமர்ந்தன்றே என்னுந்துணையும் முருகக்கடவுளினுடைய ஆறு திருமுகங்களின் செயலையும் தனித்தனி விதந்தெடுத்து விளம்புகின்றார்.

திருமுகங்களின் செயல்

முதல் திருமுகம்

91-92 : மாயிருள் .......... ஒருமுகம்

பொருள் : ஒருமுகம் மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்க பல்கதிர் விரிந்தன்று - ஒருமுகம் பெருமையுடைத்தாகிய இருளாலே மறைக்கப்பட்ட உலகம் குற்றமின்றாய் விளங்கும் பொருட்டுப் பலவாகிய சுடர்களையும் தோற்றுவியா நின்றது;

கருத்துரை : பேரிருளாலே மறைக்கப்பட்ட உலகம் அவ்விருட் குற்றமகன்று விளங்கும் பொருட்டுப் பலவாகிய சுடர்களையும் தோன்றச் செய்தது ஒருமுகம் என்பதாம்.

அகலவுரை : மாயிருள் என்றது, ஆணவமலத்தை என்க. ஞாலம் - ஈண்டு உயிர். மறு - மயக்கம். ஆணவமலம் உயிரின் அறிவு விழைவு செயல்களை மறைத்தலான் இருள் என்றார். புறவிருள், பொருள்களை மறைத்துத் தன்னைக் காட்டி நிற்பதாக, இம்மலவிருள், பொருளை மறைத்துத் தன்னையும் காட்டாது நிற்றலின், அவ்விருளினும் கொடிய இருள் என்பார், மாயிருள் என்றார். என்னை?

ஒருபொருளுங் காட்டா திருளுருவங் காட்டும்
இருபொருளும் காட்டா திது  (திருவருட்பயன் - 23)

என்றோதுபவாகலான். மறுவின்றி விளங்கலாவது, ஆணவமல மறைப்பாலே தன்னையும் உணராதபடி மயங்கிக்கிடந்த உயிர், அம்மல மறைப்பொழிந்து தூயநிலையினை எய்துதல், இதனைச் சுத்தாவத்தை என்ப. உயிர் ஆணவமல மறைப்பாலே தன்னையும் மறந்து கிடத்தலை,

அறிவிலன் அமூர்த்தன் நித்தன் அராகாதி குணங்க ளோடும்
செறிவிலன் கலாதி யோடும் சேர்விலன் செயல்கள் இல்லான்
குறியிலன் கருத்தா வல்லன் போகத்திற் கொள்கை யில்லான்
பிறிவிலன் மலத்தி னோடும் வியாபிகே வலத்தில் ஆன்மா   (சித்தியார் சுபக். 228)

என்னும் மெய்ம்மொழியான் உணர்க. பல்கதிர் விரிந்தென்றது. மாயையினின்றும் நாதமுதல் மண்ணிறுதியாய பல்வேறு தத்துவங்களையும் விரித்துப் படைத்தென்றவாறு. இனி, மாயையும் ஒரு மலமேயாக அதனைக் கதிர் என்றதென்னையெனின்,

போதகா ரியம்ம றைத்து நின்றது புகல்ம லங்காண்
ஓதலாம் குணமு மாக உயிரினுள் விரவ லாலே
காதலால் அவித்தை சிந்தத் தரும்கலை யாதி மாயை
ஆதலால் இரண்டும் சோதி இருளென வேறா மன்றே  (சித்தியார் சுபக். 174)

என ஆணவத்தை இருளும் மாயையை ஒளியுமாக ஓதியிருத்தல் அறிக. இறைப்பொருள் மாயையைக் கொண்டே உயிரின் ஆணவ மலத்தை ஒழித்தலானே அதனைக் கதிர் என்றும், அம்மாயை தானும் நாதமுதல் மண்ணிறுதி பலவாதலின் பல்கதிர் என்றும் கூறினார். இதனால் இறைவன் உயிர்களின் மலமறுத்து இன்பவீடளித்தற் பொருட்டு மாயையைக்கொண்டு உலகினைப் படைத்தருளும் செயலைத் தன்னொரு கூற்றிலே உடையன் என்றவாறறிக. இச்செயலை முருகப்பெருமானின் ஒரு முகத்தின் செயலாக வைத்துக் கூறப்பட்டது. இனி, அறிவில்பொருளாகிய இவ்வுலகத்தைச் சூழ்ந்துள்ள புறவிருளை ஞாயிறு முதலியவற்றின் வாயிலாலே அகற்றி உலகம் நன்கு விளங்குமாறு செய்யும் ஒருமுகம் என்பதும் கொள்க.

இரண்டாவது திருமுகம்

92-94 : ஒருமுகம் .............. வரங்கொடுத்தன்றே

பொருள் : ஒரு முகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி - ஒரு முகம் தனபால் அன்பு செய்தவர்கள் வாழ்த்த அதற்குப் பொருந்தி, காதலின் உவந்து வரங்கொடுத்தன்றே - அவர்க்கு இனிதாக நடந்து அவர்மேற் சென்ற காதலாலே மகிழ்ந்து வேண்டும் பொருள்களை முடித்துக்கொடுத்தது;

கருத்துரை : ஒருமுகம் தன் அன்பர்கள் தன்னை வாழ்த்துங்கால் அதற்குப் பொருந்தி, அவர்க்கு இனிமையாக ஒழுகி அவர்பால் வைத்த காதலாலே மகிழ்ந்து அவர் வேண்டும் பொருள்களை முடித்துக் கொடாநிற்கும் என்பதாம்.

அகலவுரை : ஒரு முகம் - மற்றொரு முகம் என்க. ஈண்டு ஆர்வலர் என்றது அடிமை நெறி (தாத மார்க்கம்) மகனெறி (சற்புத்ர மார்க்கம்) தோழமை நெறி (சக மார்க்கம்) அறிவுநெறி (சன்மார்க்கம்) என்னும் நான்கு நெறியினும் நின்று தன்னை அன்பாலே வழிபடும் அடியவர்களை என்க. இவற்றைச் சரியை கிரியை யோகம் ஞானம் என்ப. அதற்குப் பொருந்தி என்றது, அவரவர் நிலைக்குத் தகத் தானும் நின்று என்றவாறு. எனவே, புறத்தொழில் மாத்திரையானே வழிபடுவார்க்குப் புறத்தே தோன்றியும், புறத்தும் அகத்தும் வழிபடுவார்க்கு அவ்விரண்டிடத்தும் தோன்றியும், அகத்தே வழிபடுவார்க்கு அகத்தே தோன்றியும், யாண்டும் காணவல்லார்க்கு யாண்டும் தோன்றியும் அருள் செய்தல் என்க.

இனி, துனியில் காட்சி முனிவர்க்கும், திருமால் முதலிய தேவர்கட்கும், புலராக் காழகம் புலர உடீஇ உச்சிக்கூப்பிய கையினராய்த் தற்புகழ்ந்து ஆறெழுத்தடக்கிய அருமறைக் கேள்வி நாவியன் மருங்கினவிலப் பாடுவார்க்கும், வேலன் வெறியாடற் களத்தும், அவ்வவர் நிலைக்குத் தக வெளிப்பட்டு அவ்வவர்க்கும் இனிமையாக ஒழுகி அவ்வவர் வேண்டும் வரங்களை அருளும் ஒருமுகம் என்பதும் கொள்க. இனி, வெவ்வேறு சமயங்களினும் வெவ்வேறு திருவுருவங்களிலே தன்னை வழிபடுவார்க்கும் அவ்வச் சமயக் கடவுளாய் வெளிப்பட்டு அவர்க்கு அருளும் ஒருமுகம் என்பதும் கொள்க. என்னை? இறைப்பொருள் ஒன்றே சமயங்கடோறும் வேறாய்த் தோன்றி அருள் செய்தலான் என்க. இதனை,

யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே
மாதொரு பாகனார் தாம் வருவர்  (சித்தியார் சுபக்.115)

எனச் சிவபெருமான்பால் வைத்து ஓதுமாற்றான் அறிக. ஈண்டு மாதொருபாகனார் என்றது. அருளோடு இயைந்த இறைப்பொருள் என்னும் பொருட்டாய் நின்றதறிக. இறைவன் இங்ஙனம் உலகினைப் படைத்தலும் ஆர்வலர்க்கியைந்தினி தொழுகலும் அவற்கியல்பாயுள்ள அருளே, பிறிதில்லை என்பார். காதலின் உவந்து என்றார். அடியார் தமக்கு வேண்டுவன இவை என அறிந்து கேளாதவிடத்தும் அவர்க்கு வேண்டுவன இவையெனத் தானே அறிந்து ஈந்தருளுவன் என்பார், ஆர்வலர் ஏத்த வரங்கொடுங்கும் என்றார். ஏத்திய வளவானே வேண்டுவன நல்குவன் என்றவாறு. எனவே, முன்னர்ச் சேவடிபடரும் செம்மல் உள்ளமொடு செலவு நீ நயந்தனையாயின், இன்னே பெறுதி நீ முன்னியவினையே என்றதற்கேற்ப அவ்விறைவன் ஏத்தவே வரங்கொடுக்கு மியல்பினன் என ஈண்டறிவுறுத்தவாறறிக. ஆர்வலர் - அன்புமிக்கோர்.

மூன்றாவது திருமுகம்

94-96 : ஒருமுகம் .............. ஓர்க்குமே

பொருள் : ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழா அந்தணர் வேள்வி ஓர்க்கும் - மற்றொரு முகம் மந்திரத்தினாலே மெய்ந்நூலுரைத்த முறைமையிடத்துத் தப்பாத அந்தணருடைய வேள்விகட்கு இடையூறு நேராதபடி நினையா நிற்கும்;

கருத்துரை : மற்றொரு முகம் மந்திரத்தை ஓதுதலோடே மெய்ந்நூல் கூறிய முறைமையிற் பிறழாத சான்றோருடைய வேள்விகட்கு இடையூறு நேராதபடி நினையாநிற்கும் என்பதாம்.

அகலவுரை : மந்திரம் - ஈண்டு முருகக்கடவுளுக்கு உரிய ஆறெழுத்து மறைமொழி. அவை சரவண பவ என்பன, நமக் குமாராய எனினுமாம். எனவே, அம்மந்திரத்தை ஓது முறைமையானே ஓதி மெய்ந்நூல்கள் கூறுமுறையானே ஒழுகும் அந்தணர் என்றாராயிற்று.

உயிரைத் தூய்மை செய்த பெரியோர்க்கும் வேம்பு தின்ற புழு அதனை ஒருவிக் கரும்பைத் தலைப்பட்டு அதன் சுவை தெரிந்துழியும் பயிற்சிவயத்தான் நோக்கிற்றை நோக்கி நிற்குமாறு போல, உள்ளம் பண்டைச் சிற்றுணர்வை நோக்கி நிற்குமாகலின். அவ்வாதனை நீக்குதற் பொருட்டு ஈண்டைக்கு வேண்டப்படுதலான் இனி மந்திரத்தை இவ்விதிப்படி ஓதுக என மெய்ந்நூல் விதித்தலான் மந்திரவிதி என்றார். மரபுளி வழா என்றது. நூல் கூறும் முறையிற் பிறழாது என்றவாறு. அந்தணர் - அருள்நிரம்பிய மேலோர். அவர் செய்யும் வேள்வியாவன, கன்மவேள்வி, தவவேள்வி, செபவேள்வி, தியானவேள்வி, ஞானவேள்வி என ஐவகைப்படும். இவை ஒன்றற்கொன்று முறையே உயர்ந்த வேள்விகளாம். இவ்வைவகை வேள்விகளையும் இயற்றுவோர் இயற்றுங்கால் அவற்றிற்கு இடையூறுண்டாகாதபடி இறைவனே முன்னின்று பாதுகாத்தருளி அவற்றிற்குரிய பயனையும் அளிப்பன் என்பது கருத்து. இனி, மந்திரவிதியின் என்பதற்கு, மந்திரத்தையுடைய வேதம் என்றும், அந்தத்தை அணவுவார் அந்தணர் என்றது வேதாந்தத்தையே நோக்குவார் என்றவாறு என்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் பொருள் கூறியதும் உணர்க.

நான்காவது திருமுகம்

96-98 : ஒருமுகம் ............... திசைவிளக்கும்மே

பொருள் : ஒருமுகம் எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி - மற்றொரு முகம் மெய்ந்நூல்களானும் கண்டுணர்த்த மாட்டாத பொருள்களைச் சான்றோர் காவலுறும்படி ஆராய்ந்துணர்த்தி, திங்கள்போல திசைவிளக்கும் - திங்கள் போலத் திசைகளெல்லாவற்றையும் விளக்காநிற்கும்;

கருத்துரை : ஒருமுகம் நூல்களாற் காட்டமுடியாது எஞ்சிய பொருள்களைத் தன் அன்பர்கள் காவலுறும்படி ஆராய்ந்துணர்த்தித் திங்கள்போலத் திசைவிளக்கும் என்பதாம்.

அகலவுரை : எஞ்சிய பொருள் - வீட்டின்பம்; அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருள்களுள் வீடு சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகலின் துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கண வகையால் கூறப்படாமையின் அதனை எஞ்சிய பொருள் என்றார். ஏம்-காவல்; ஏமம் என்பதன் கடைக்குறை, ஏமம் உற என்றது, தனது பாதுகாவலிலே பொருந்தியிருக்கும்படி செய்து என்றவாறு. எனவே, மீண்டும் பிறவியிலழுந்தாவகை காத்தருளி என்றவாறு. நாடுதல் - திருவுளத்தடைத்தல்.

சலமிலனாய் ஞானத்தாற் றமையடைந்தார் தம்மைத்
தானாக்கித் தலைவன்அவர் தாஞ்செய்வினை தன்னால்
நலமுடனே பிறர்செய்வினை ஊட்டிஒழிப் பானாய்
நணுகாமல் வினையவரை நாடிக் காப்பன்   (சித்தியார் சுபக். 307)

என்பர் பிற்றைநாள் மெய்கண்ட வித்தகர். உயிரின் ஏகதேச அறிவகற்றித் தனது வியாபகமுழுதும் உணர்ந்தின்புறும்படி அருளும் என்பார், திங்கள் போலத் திசைவிளக்கும்மே என்றார். எனவே, தன் அடியார் தனது திருவடியின்பத்தை நுகரப்பண்ணும் ஒருமுகம் என்பதாயிற்று கன்மவேள்வி முதலிய வேள்வியும் பலவாகலின், அவர்கள் எய்தும் வீட்டின்பமும் சாலோக முதலாகப் பலவென்பார், எஞ்சிய பொருள்கள் எனப் பன்மையான் ஓதினார். இதனை அனுபூதி என்பர். திசை விளக்குதலாவது, இறைப்பொருள் தனது வியாபகமெல்லாம் உயிருணர்ந்து இன்புறுமாறு உணர்த்துதல் என்க. இனி ஆசிரியர் நச்சினார்க்கினியர், ஒருமுகம் ஈண்டு வழங்காத வேதங்களிலும் நூல்களிலுமுள்ள பொருள்களை ஆராய்ந்து இருடிகள் ஏமமுறும்படி உணர்த்தித் திங்கள் போலத் திசைகளெல்லாம் விளக்குவிக்கும் என்று கூறிய உரையும் உணர்க.

தென்னன் பெருந்துறையான்,
காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித்
தாட்டா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி  (திருவம்மானை - 6)

எனவரும் மணிவாசகத்தால் ஏமுற நாடிக்காட்டும் எஞ்சிய பொருள்களிவை என உணர்க. கலை நிறைதலில் திங்கள் உவமை என்பர் நச்சினார்க்கினியர்.

ஐந்தாவது திருமுகம்

98-100 : ஒருமுகம் ............... களம்வேட்டன்றே

பொருள் : ஒருமுகம் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு செறுநர்த் தேய்த்து - மற்றொரு முகம் மேற்சென்ற போரிடத்தே நூழிலாட்டி வெகுண்ட நெஞ்சோடே அழித்தற்குரிய அசுரர் முதலியோரை அழித்து, களம்வேட்டன்றே - களவேள்வியை வேட்டது;

கருத்துரை : மற்றொருமுகம் மேற்சென்ற போரிடத்தே நூழிலாட்டி வெகுளியோடே அசுரர் முதலியோரை அழித்து மறக்கள வேள்வியை வேட்டது.

செல்சமம் - மேற் சேறற்குரிய போர். சமம் முருக்கி என்பதற்கு நடுவுநிலைமையைக் கெடுத்து என்பர் நச்சினார்க்கினியர். இறைவன் போரின்கண் சிலரை அழித்தல் நடுவுநிலை யன்றென்பது அடாது. அவர் செய்த வினைக்குத் தகவே அவரை ஒறுத்தல் இறைவன் செயல் ஆகலின், அச்செயல் நடுவுநிலைமையுடைய செயலே என்க. சமம் - போர் முருக்குதல் - கொன்றழித்தல் கறுவுதல் - வெகுளல். இவ்வெகுளி வேடமாத்திரையே அல்லது மெய்ம்மையன்றென்க. தீவினையே கன்றித் திரிதந்து தமக்கும் பிறர்க்கும் கேடே விளைவித்துக் கொள்ளும் இயல்புடையாரைக் கொன்றே நன்னெறியுய்க்க வேண்டுதலின் இச்செயலும் இறைவனுக்கு இன்றியமையாதாயிற்றென்க. இதனை,

வேகியா னாற்போற் செய்த வினையினை வீட்ட லோரார்
ஊகியா மூட ரெல்லாம் உம்பரின் ஒருவன் என்பர்  (சித்தியார் சுபக். 70)

எனவரும் சித்தியாரானும் உணர்க. களம் - ஈண்டு மறக்களம். வேட்டன்று - வேட்டது; வேள்வியைச் செய்தது. அது பகைவர் ஊனைப் பேய்கட்கு விருந்தூட்டல் என்க.

அடுதிறல் அணங்கார விடுதிறலான் களம் வேட்டன்று

என்பது, புறப்பொருள் வெண்பாமாலை, அரசுபட அமருழக்கி .......... களம்வேட்ட அடுதிறலுயர் புகழ்வேந்தே (மதுரைக். 128-30) என்றும், அரைசுபட அமருழக்கி ........ அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய (புறம் -26.6-11) என்றும் புலவுக்களம் பொலிய வேட்டோய் (புறநா - 372.12) என்றும் அறக்கள வேள்வி, செய்யா தியாங்கணும் மறக்கள வேள்வி செய்வோ யாயினை (சிலப் நடுகல்-131-2) என்றும் பிற சான்றோரும் கூறுதல் காண்க.

ஆறாவது திருமுகம்

100-102 : ஒருமுகம் ............. நகையமர்ந்தன்றே

பொருள் : ஒரு முகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு - மற்றொரு முகம் குறவருடைய இளமகளிராகிய பூங்கொடி போன்ற இடையையும் மடப்பததையும் உடைய வள்ளியோடே, நகையமர்ந்தன்று - மகிழ்ச்சியைப் பொருந்திற்று.

கருத்துரை : மற்றொரு முகம் குறவருடைய சிறுமியாகிய வள்ளியோடே மகிழ்தலைப் பொருந்திற்று. என்பதாம்.

அகலவுரை : மடம் - இளைமை. மடவரல் - மடப்பம் என்க. மடப்பமாவது: கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை என்னும் ஒரு பெண்மைக் குணம் என்ப. வள்ளி முருகக்கடவுளின் இச்சா சத்தி என்று கூறுப. காம நுகர்ச்சியில்லாத கடவுள் இவ்வாறு நகையமர்தல் உலகில் அன்புகெழீஇய இல்வாழ்க்கையில் உயிர்கள் அமர்ந்து இன்புறற் பொருட்டென்க. இதனை,

தென்பா லுகந்தாடும் தில்லைசிற் றம்பலவன்
பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடி
பெண்பால் உகந்திலனேற் பேதாய் இருநிலத்தோர்
விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ  (திருச்சாழல் -9)

என்னும் திருவாசகத்தானும்,

போகியா யிருந்துயிர்க்குப் போகத்தைப் புரிதல் ஓரார்
யோகியா யோகமுத்தி உதவுத லதுவு மோரார்  (சித்தி -70)

என்றும்,

கண்ணுதல் யோகிருப்பக் காமன்நின் றிடவேட்கைக்கு
விண்ணுறு தேவ ராதி மெலிந்தமை ஓரார் மால்தான்
எண்ணவேள் மதனை ஏவ எரிவிழித் திமவான் பெற்ற
பெண்ணினைப் புணர்ந்து யிர்க்குப் பேரின்ப மளித்த தோரார்  (சித்தி-73)

என்றும்,

இடப்பாக மாதராளோ டியைந்துயிர்க் கின்பமென்றும்
அடைப்பானாம்  (சித்தி - 74)

என்றும், வரும் சிவஞான சித்தியாரானும் உணர்க. இனி, இவ்வாறு முருகப்பெருமானுடைய ஆறு திருமுகங்களின் செயல்களை அழகாக விரித்துக் கூறியவர். மேலே அப்பெருமானுடைய பன்னிரண்டு திருக்கைகளும் அத்திருமுகங்களின் செயலுக்கேற்பத் தொழில் செய்வனவாதலை 102, ஆங்கம் மூவிருமுகனும் என்பதுமுதல் 118-பாற்படவியற்றி என்னுந் துணையும் தெரித்தோதுகின்றார் என்க.

முருகப்பெருமான் திருக்கைகளின் சிறப்பு

103-106 : ஆங்கு ............. தோள்

பொருள் : ஆங்கு அம்மூவிரு முகனும் முறை நவின்று ஒழுகலின் - அவ்வாறாக அவ்வாறு திருமுகங்களும் அத்தொழில்களிடத்துச் செய்யும் முறைமைகளைப் பயின்று நடத்துகையாலே அவையிற்றிற்கேற்ப, ஆரந் தாழ்ந்த அம் பகட்டு மார்பில் பொன்னாற் செய்த ஆரத்தைத் தாங்கிய அழகையுடைத்தாகிய பெரிய மார்பினிடத்தே கிடக்கின்ற, செம்பொறி வாங்கிய - உத்தம இலக்கணமாகிய சிவந்த மூன்று வரியினையும் தன்னிடத்தே வந்து விழும்படி வாங்கிக்கொண்ட, மொய்ம்பின் - வலிமை மிக்க, சுடர்விடுபு வண்புகழ் நிறைந்து - வேலை எறிந்து வென்று வளவிய புகழானே நிறையப்பெற்று, வசிந்து வாங்கு நிமிர்தோள் - பகைவருடலைப் பிளந்து மீட்டும் அவ்வேலை வாங்கா நின்ற நிமிர்ந்த திருத்தோள்களிலே;

கருத்துரை : அவ்வாறு அந்தத் திருமுகங்கள் அத்தொழிலிடத்தே செய்யும் முறைமைகளைப் பயின்று செய்யாநிற்ப, அத்திருமுகங்களின் செயல்கட் கேற்பப் டொன்மாலை கிடந்த அழகிய பெரிய மார்பிடத்தே கிடக்கின்ற உத்தம இலக்கணமாகிய சிவந்த வரிகள் மூன்றனையும் தம் பால் வாங்கிக்கொண்டனவும், வலிமிக்கனவும் வேற்படையை எறிந்து வளவிய புகழ்பெற்றுப் பகைவருடலைப் பிளந்து மீண்டும் அதனை வாங்கிக் கொள்வனவும் ஆகிய திருத்தோள்களிலே என்பதாம்.

அகலவுரை : திருத்தோள்களிலே இன்னின்ன தோள் இன்னின்ன செய்யும் எனத் தொடரும். ஆங்கு என்றது - மேலே கூறியாங்கு என்றவாறு. முகன்- முகம். முறை - அவ்வத்தொழில்கட் கேற்ற முறை. நவின்று - பயின்று; பலகாலும் செய்து என்றவாறு. இறைப்பொருள் எஞ்ஞான்றும் இடையறாது தொழில் செய்தலின் பயின்று ஒழுகலின் என்றார். ஆரம் - மாலை. முத்துமாலை எனினுமாம். அம்-அழகிய. பகடு பெருமை. மார்பினிடத்தே செய்ய வரிகள் மூன்றுளவாதல் உத்தம இலக்கணம் என்பர். இதனை,

வரையகன் மார்பிடை வரியும் மூன்றுள  (சீவக - 1462)

எனவரும் திருத்தக்க தேவர்  மொழியானும் உணர்க. செம்பொறி - சிவந்த வரி; அவ்வரிகள் தோளளவும் வந்து கிடக்கின்றமையால் வாங்கிய என்றார். சுடர், வேலுக்கு ஆகுபெயர். பொதுவாகப் படைக்கலன்கள் என்பாருமுளர். விடுபு-விட்டு; செய்பென்னும் வினையெச்சம். வசிந்து - பிளந்து. பகைவருடலைப் பிளந்தென்க. வாங்குதல் - மீண்டும் அப்படையைப் பெறுதல். மக்கள் படைக்கலன் போலாது முருகனுடைய படையாகிய வேல் அப்பெருமானுடைய ஞானசத்தியாகலான், சுடர்விடுபுவாங்கு தோள் என்றார். தோளிற்குச் சிறப்பாவது தெறலே ஆகலான் அதற்கியையவே படையெறிந்து வேல் வாங்குதலைக் கூறினார். வசிந்தென்பது பிளந்தென்னும் பொருட்டாதலின், செய்வதன் தொழிற்கும் செய்விப்பதன் தொழிற்கும் பொது. அசுரர் முதலியோரை அழிக்குங்காலத்துப் பன்னிரு கையினும் படைக்கலமேந்துவனென்றுணர்க. அஃது அறுவேறுவகையின் அஞ்சுவர மண்டி, (58) என்றதனாலுணர்க என்றும், வசிந்தென்பதற்குப் படைக்கலங்களால் வடுப்பட்டென்று பொருளுரைத்தல் இறைவனாதலாற் பொருந்தாது என்றும் நச்சினார்க்கினியர் விளக்கினர். இனி அவ்விறைவனுடைய பன்னிரண்டு தோள்களின் செயலைத் தனித்தனி விதந்தோதுகின்றார் என்க.

முதலிணைத் திருக்கைகளின் செயல்

107-108 : விண்செலல் மரபின் .......... ஒருகை

பொருள் : விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒருகை-வீட்டுலகத்தே செல்லும் முறைமையினையுடைய துறவிகட்குப் பாதுகாவலாக ஏந்தியது ஒருகை, உக்கம் சேர்த்தியது ஒருகை - மருங்கிலே வைக்கப்பட்டது அதற்கிணையாகிய மற்றொரு கை;

கருத்துரை : வீட்டுலகத்தே செல்லும் முறைமையினையுடைய துறவியர் தடையின்றிச் செல்லுமாறு அவர்கட்குப் பாதுகாவலாக ஏந்தியது ஒரு கை, அதற்கிணையாகிய மற்றொரு கை இடையிலே வைக்கப்பட்டது என்பதாம்.

அகலவுரை : விண் செலல் மரபின் ஐயர் என்றது-வீட்டுலகத்தை எய்தும் மரபினையுடைய தூய்நிலை எய்திய உயிரை. தூய்நிலை எய்திய உயிர் இறைப்பொருளோடொத்தலின் ஐயர் என்றார். ஐயர் - தலைமையை உடையோர். உயிர்கள் மறுவின்றி விளங்கவே இறைவன் உலகினைப் படைக்கின்றானாதலின் அத் தொழிற் பயனாகிய தூய்நிலை எய்திய உயிர் வீட்டின்பம் எய்துக என்று, அவ்விறைவனுடைய கை அவர்க்குப் பாதுகாவலாக ஏந்தியதென்க. தூய்நிலை - சுத்தாவத்கை; இதனானே மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிக்கும் திருமுகத்தின் செயற்கு இக்கையின் செயல் பொருந்துதலறிக. இங்ஙனம் இக்கையும் மனமும் இத்தொழிலின் முனைந்திருத்தலாலே அதற்கிணைந்த மற்றொரு கை வாளா மருங்கிலே கிடத்தல் இயல்பாதலறிக. உக்கம் - இடை; மருங்கு.

இனி நச்சினார்க்கினியர், வீண் செலன் மரபின் ஐயர்க் கேந்திய தொருகை, என்ற தொடர்க்கு எக்காலமும் ஆகாயத்தே இயங்குதல் முறைமையினையுடைய தெய்வ விருடிகட்குப் பாதுகாவலாக எடுத்தது ஒருகை எனப் பொருள் கூறி, மேலும், என்றது : ஞாயிற்றின் வெம்மையைப் பல்லுயிரும் பொறுத்தலாற்றாவென்று கருதித் தமதருளினாற் சுடரொடு திரிந்து அவ்வெம்மையைப் பொறுக்கின்ற முனிவரைப் பாதுகாக்கவே உலகத்தைத் தாங்கிக் காத்ததாயிற்று; இதனாலே இக் கை மாயிருண்ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரித்த முகத்திற்கு ஏற்ற தொழில் செய்ததாயிற்று. இது,

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
காலுண வாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருள  (புறம்-43: 1-4)

என்ற புறப்பட்டான் உணர்க என்றும் கூறியுள்ளமையும் காண்க. இனி இறைவன் தன்பணியினிற்பாரைத் தானே ஏன்றுகொள்ளும் இயல்புடையன் என்பதை அவ்விறைவனுடைய திருக்கையின் செயலாக வைத்து ஈண்டு ஓதப்பட்ட தென உணர்க. இதனை,

இவனுலகில் இதமகிதம் செய்த வெல்லாம்
இதமகிதம் இவனுக்குச் செய்தார்பால் இயையும்
அவனிவனாய் நின்றமுறை ஏக னாகி
அரன்பணியின் நின்றிடவும் அகலுங் குற்றம்
சிவனும்இவன் செய்தியெலாம் என்செய்தி என்றும்
செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும்
பவமகல உடனாகி நின்றுகொள்வன் பரிவாற்
பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே

என வரும் சிவஞான சித்தியாரானும் சித்தியார். சுபக். 304) உணர்க.

இரண்டாமிணைத் திருக்கைகளின் செயல்கள்

109-110 : நலம்பெறு ........... திரிப்ப

பொருள் : நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின் மிசை அசைஇயது ஒருகை - செம்மை நிறம்பெற்ற ஆடையையுடைத்தாகிய துடையின் மேலே கிடந்தது ஒருகை, அங்குசங் கடாவ ஒரு கை - தோட்டியைச் செலுத்தா நிற்ப மற்றொரு கை;

கருத்துரை : ஒருகை செய்ய நிறமுடைய ஆடையுடைத்தாகிய குறங்கின் மேலே கிடப்ப, அதற்கிணையாய மற்றைக் கை தோட்டியைச் செலுத்தாநிற்ப என்பதாம்.

அகலவுரை : நலம் - ஈண்டு நில நன்மை குறித்து நின்றது. கலிங்கம் ஆடை - குறங்கு - துடை. அசைஇயது கிடந்தது. அங்குசம் - யானையோட்டும் கருவி: தோட்டி, கடாவ செலுத்த.

முருகப்பெருமான் களிறூர்ந்து வருவர் என்பதனை, கடுஞ்சின விறல் வேள் களிறூர்ந்தாங்கு (பதிற் -11-6) என்றும், ஊர்ந்ததை எரிபுரையோடை இமைக்குஞ் சென்னிப், பொருசமம் கடந்த புகழ் சால் வேழம் என்றும், பிறசான்றோர் கூறுமாற்றானும் உணர்க. யானை ஊர்வோர் ஒருகையால் தோட்டியைச் செலுத்துங்கால் மற்றொருகை தொடையிலே வைத்திருத்தல் இயல்பாதலறிக. இனி, ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக் காதலினுவந்து வரங்கொடுக்கும் தொழிற்கு ஊர்திமேற் சேறலின், இக் கைகளின் செயல் அதற்கியைதல் அறிக.

மூன்றாமிணைத் திருக்கைகளின் செயல்கள்

110-111 : இருகை ................ திரிப்ப

பொருள் : ஐயிரு வட்டமொடு எஃகு வலந்திரிப்ப இருகை - இரண்டு கைகள் அழகிய பெரிய பரிசையோடே வேற்படையையும் வலமாகச் சுழற்றாநிற்ப;

கருத்துரை : ஏனை இரண்டு திருக்கைகளுள் ஒன்று அழகிய பெரிய பரிசையையும் மற்றொன்று வேற்படையையும் வலமாகச் சுழற்றா நிற்ப என்பதாம்.

அகலவுரை : ஐ - அழகு. இருமை - ஈண்டுப் பெருமை குறித்து நின்றது. ஐ வியப்பென்னும் பொருளும் உடைத்தாகலினானும், இருமை கருமைப் பண்பு குறிக்குமாகலானும் வியப்பையும் கருமையையுமுடைய பரிசை என்றார் நச்சினார்க்கினியர். இனி, வேள்வி செய்வார்க்கு இடையூறுற்றுழி அதனை அகற்றப் போர்ப்படையுடன் வரவேண்டுதலான், இத்திருக்கைகளின் செயல் ஒருமுகம் மந்திர விதியின் மரபுளிவழாஅ அந்தணர் வேள்வியோர்க்கும்மே என்ற திருமுகத்தின் செயற்குப் பொருந்துமாறறிக.

நான்காமிணைத் திருக்கைகளின் செயல்கள்

111-113 : ஒருகை ................ பொலிய

பொருள் : ஒரு கை மார்பொடு விளங்க - ஒரு கை முனிவர்கட்குத் தத்துவங்களைக் கூறி உரையிறந்த பொருளை உணர்த்தும் காலத்துத் திருமார்போடே விளங்காநிற்ப, ஒரு கை தாரொடு பொலிய - அதற்கு இணையாய மற்றொரு கை மார்பின் மாலை தாழ்ந்ததனோடே சேர்ந்து அழகு பெற;

கருத்துரை : ஒருகை முனிவர்கட்கு எஞ்சிய பொருளை ஏமுற நாடி உணர்த்துங்கால் மார்போடே விளங்க, அதற்கு இணைந்த கை தாழ்ந்து தூங்கும் மார்பின் மாலையோடே சேர்ந்து அழகுற என்பதாம்.

அகலவுரை : ஒரு கை மார்பினொடு விளங்க என்றது, ஒரு கை மேலான முத்திரை காட்ட என்றவாறு. இறைப்பொருள் உயிர்கட்கு உரையிறந்த பொருளைக் காட்டுங்கால் அமைதியின் அறிகுறியாகிய மோன முத்திரையைக் காட்ட அமர மாணாக்கர்களுக்கு வீட்டின்பம் உண்டாகி நிறையும் என்ப. இறைவன் மோனமுத்திரையத்தனாய்த் தானாயே யிருந்து காட்ட ஊமைத் தசும்புள் நீர் நிறைந்தாற்போல ஆனந்தமயமான ஒளி மாணாக்கர்க்கு நிறைதலின் அதற்குரிய மோனமுத்திரை கூறிற்று என்னும் நச்சினார்க்கினியர் அரிய விளக்கமும் காண்க. மேலும்.

இருவரும் உணரா அண்ணல் ஏனவெள் ளெயிறி யாமை
சிரநிரை யனந்த கோடி திளைத்திடு முரத்திற் சீர்கொள்
கரதல மொன்று சேர்த்தி மோனமுத் திரையைக் காட்டி
ஒருகணஞ் செயலொன் றின்றி யோகுசெய் வாரி லுற்றான்

எனவரும் கந்தபுராணச் செய்யுளானும்,

கல்லாலின் நீழல்தனில் ஒருநால் வர்க்கும்
கடவுள்நீ உணர்த்துவதுங் கைகாட் டென்றால்
சொல்லாலே சொல்லப்படுமோ சொல்லுந் தன்மை
துரும்புபற்றிக் கடல்கடக்கும் துணிபே யன்றோ  (கல்லாலின் -1)

எனவரும் தாயுமானவர் திருச்செய்யுளானும் உணர்க. இத்திருக்கைகளின் செயல் எஞ்சிய பொருளை ஏமுறநாடித் திங்கள் போலத் திசைவிளக்கும் திருமுகச் செயலுக்கு ஏற்புடைத்தாதலறிக.

ஐந்தாமிணைத் திருகைகளின் செயல்கள்

113-115 : ஒருகை .............. இரட்ட

பொருள் : ஒருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசை கொட்ப - ஒருகை கீழ்நோக்கி வீழும் தொடியோடே மேலே சுழன்று களவேள்விக்கு முத்திரை கொடுப்ப, ஒருகை பாடுஇன் படு மணி இரட்ட - அதற்கிணையாகிய மற்றைக் கை ஓசையினிதாகிய ஒலிக்கின்ற மணியை மாறி ஒலிக்கப் பண்ண;

கருத்துரை : ஒருகை தொடி நழுவும்படி மேலே சுழன்று களவேள்விக்கு முத்திரை கொடுப்ப, அதன் இணைக்கை இனிய ஓசையுடைய மணியை ஒலிப்பிக்க என்பதாம்.

அகலவுரை : கையை மேலே உயர்த்துங்கால் தொடி கீழே நழுவுதல் இயல்பாகலின், கீழ்வீழ் தொடியொடு என்றார். தொடி - ஒருவகை அணிகலன். மீமிசை-மேலே. கொட்ப-சுழல என்றுமாம். வேள்வியின்கண் மணி ஒலித்தலும், பலியை உண்ணும்படி முத்திரை கொடுத்தலும் உண்மையின், இக்கைகளின் செயல், செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்கும் திருமுகச் செயலுக்குப் பொருந்துமாறறிக. பாடு - ஓசை. இன் - இனிய. படுமணி - ஓசைபடுகின்ற மணி என்க.

ஆறாம் இணைத் திருக்கைகளின் செயல்கள்

115-117 : ஒருகை ............. சூட்ட

பொருள் : ஒரு கை நீல் நிற விசும்பின் மலிதுளி பொழிய - ஒருகை நீல நிறத்தையுடைய முகிலாலே மிக்க மழையைப் பெய்விக்க, ஒரு கை வான் அர மகளிர்க்கு வதுவை சூட்ட - ஒரு கை தெய்வமகளிர்க்கு மணமாலை சூட்டாநிற்ப;

கருத்துரை : ஒரு கை முகிலாலே உலகின்கண் மிக்க மழையைப் பெய்விக்க அதற்கிணையான மற்றைக்கை தெய்வமகளிர்க்கு மணமாலை சூட்டாநிற்ப என்பதாம்.

அகலவுரை : இறைப்பொருள் இவ்வுலகினை நடத்தும் அருள் ஏனைச் செயல்களினும் மழைபெய்விக்கும் செயலிலே நன்கு விளங்கித் தோன்றுதலால் தலைமைபற்றி அச்செயலையே எடுத்தோதினார். இறைப்பொருள் தன் ஒருகூற்றானே உலகத்தை நடத்துகின்றதென்பது கருத்து.

அம்மழைதானும் பெய்வித்தல் உலகில் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கேதுவாம் பொருட்டே யாகலான், அவை நடத்தற்குரிய இல்வாழ்க்கை நிகழ்தற்கு மணமாலை சூட்டல் வேண்டிற்று என்க. மணமாலை சூட்டற்கு ஆறாந்திருமுகத்திற்குக் கூறிய விளக்கமெல்லாம் ஈண்டும் கூறிக்கொள்க. இனித் திருவள்ளுவனாரும் கடவுள் அருள்விளக்கம் மழையின் கண் விளங்கித் தோன்றுதலானும் பின்னர்க் கூறப்போகும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாகலானும், கடவுள் வாழ்த்திற்குப் பின்னும் ஏனையவற்றிற்கு முன்னுமாக வான்சிறப்பு ஓதுதலும், அவ்வதிகாரத்திற்கு முன்னுரை கூறிய ஆசிரியர் பரிமேலழகரும் அஃதாவது : அக்கடவுளது ஆணையான் உலகமும் அதற்குறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற்கேதுவாகிய மழையினது சிறப்புக் கூறுதல்; அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும், என விளக்கிச் சேறலும் காண்க. இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியரும் என்றது வள்ளியொடு நகையமர்ந்த முகம் உலகிற்கு இல்வாழ்க்கை நிகழ்த்துவித்ததாகலின், அவ்வில்வாழ்க்கை நிகழ்த்துதற்கு மழையைப் பெய்வித்தது ஒருகை; ஒருகை; இல்வாழ்க்கை நிகழ்த்தற் பொருட்டு மணமாலையைச் சூட்டிற்று, என்று விளக்கினமையும் உணர்க. இவ்வாற்றான், இத்திருக்கைகளின் செயல் உலகின்கண் இல்லறம் நிகழ வேண்டிக் குறவர் மடமகளோடு நகையமர்ந்த திருமுகத்தின் செயலுக்குப் பொருந்துமாறுணர்க.

118. ஆங்கு ............. இயற்றி

பொருள் : ஆங்கப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி - அப்படியே அந்தப் பன்னிரண்டு கையும் ஆறு திருமுகங்களின் பகுதியிலே படும்படி தொழிற் செய்து;

கருத்துரை : மேலே கூறியவாறு அந்தப் பன்னிரண்டு திருக்கைகளும் திருமுகங்களின் பகுதியிலே படும்படி தொழில்செய்து என்பதாம்.

அகலவுரை : ஆங்கு என்றது, யாம் மேலே கூறியவாறு என்றவாறாம். பாற்பட - பகுதியிலே பொருந்த என்க. அஃதாவது முகத்தின் தொழிற் பகுதியிலே தாமும் பொருந்துமாறு என்றவாறு. இயற்றி - தொழில் செய்து.

இனி ஈண்டு நக்கீரனார் முருகப் பெருமானின் திருமுகங்களும் திருக்கைகளும் தொழில் செய்யுமாற்றை வகுத்தோதியவாறே பிற்றை நாளில், சிறந்த அனுபூதிச் செல்வராகிய குமரகுருபர அடிகளாரும் அப்பெருமானுடைய திருமுகம் திருக்கைகளின் செயலை,

வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூ ரனைத்தடிந்து
தெவ்வர்உயிர் சிந்துத் திருமுகமும் - எவ்வுயிர்க்கும்
ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப
வாழ்வுதரும் செய்ய மலர் முகமும் - சூழ்வோர்
வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்
முடிக்கும் கமல முகமும் - விடுத்தகலாப்
பாச விருள்துரந்து பல்கதிரிற் சோதிவிடும்
வாச மலர்வதன மண்டலமும் - நேசமுடன்
போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோகமளிக்கும் முகமதியும் - தாகமுடன்
வந்தடியிற் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்
தந்தருளுந் தெய்வமுகத் தாமரையும் - கொந்தவிழ்ந்த
வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த
பாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம்
தேவர்க் குதவுந் திருக்கரமும் சூர்மகளிர்
மேவக் குழைந்தணைந்த மென்கரமும் - ஓவாது
மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல்
சேர வணிந்த திருக்கரமும் - மார்பகத்தில்
வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்
உய்த்த குறங்கி லொருகரமும் - மொய்த்த
சிறுதுடிசேர் கையுமணி சேர்ந்ததடங் கையும்
கறுவுசமர் அங்குசஞ்சேர் கையும் - தெறுபோர்
அதிர்கே டகஞ்சுழற்றும் அங்கைத் தலமும்
கதிர்வாள் விதிர்க்குங் கரமும்

எனத் தமது கந்தர் கலிவெண்பாவில் அழகுறத் தொடுத்தமைத்திருந்தலறிக. இனி, வாணிற முகனின், ஒரு முகம் கதிர்விரித்தன்று; ஒருமுகம் வரங்கொடுத்தன்று; ஒருமுகம் வேள்வி ஓர்க்கும்; ஒருமுகம் திசை விளக்கும்; ஒருமுகம் களம் வேட்டன்று; ஒருமுகம் நகையமர்ந்தன்று; ஆங்கு அம்மூவிரு முகனும் ஒழுகலின், நிமிர் தோள்களில் ஒருகை ஏந்தியது; ஒருகை சேர்த்தியது; ஒருகை அசைஇயது; ஒரு கை கடாவ, இருகை திரிப்ப, ஒருகை விளங்க, ஒருகை பொலிய, ஒருகை கொட்ப, ஒருகை இரட்ட, ஒருகை மழைபொழிய, ஒருகை வதுவை சூட்ட இவ்வாறாகப் பன்னிர கைகளும் இயற்றி என முடிக்க. இனி. 119 முதல் 125 வரையில் முருகப்பெருமான் திருச்சீரலைவாயின்கண் எழுந்தருளுதலைக் கூறுகின்றார்.

திருச்சீரலைவாய்

119-125 : அந்தர .............. நிலைஇய பண்பே

பொருள் : அந்தரப் பல்லியம் கறங்க - விசும்பினது துந்துபி முழங்கவும், திண் காழ் வயிர் எழுந்து இசைப்ப - திண்ணிய வயிரத்தையுடைய கொம்பு மிக்கொலிப்பவும், வால்வளை ஞரல - வெள்ளிய சங்கு முழங்கவும், உரந்தலைக் கொண்ட உருமஇடி முரசமொடு - வலியைத் தன்னிடத்தே கொண்ட உருமேற்றினது இடிப்புப்போலும் ஓசையையுடைய முரசுடனே, பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ - பல பீலியையுடைய மயில் வெற்றிக் கொடியிலிருந்து அவன் ஆணையாலே அகவாநிற்ப, விசும்பு ஆறாக-வானமே வழியாக, விரை செலல் முன்னி - விரைந்த செலவினை மேற்கொண்டு, உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழுச்சீர் - நன்மக்களாலே புகழப்பட்ட மிக உயர்ந்த சிறந்த புகழினையுடைய, அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே - நாமனூரலை வாய என்னும் திருப்பதியிலே ஏற எழுந்தருளுதலும் அப்பெருமானுக்கு நிலைபெற்ற குணம்;

கருத்துரை : தேவதுந்துபி முழங்கவும், கொம்புகள் மிக் கொலிப்பவும் வெள்ளிய சங்குகள் முழங்கவும் இடியை ஒப்ப முழங்கும் முரசோடே வெல்கொடியிலிருந்து மயில் அகவவும், சான்றோர்களாலே புகழப்பட்ட மிக உயர்ந்த புகழினையுடைய நாமனூரலைவாய் என்னும் திருப்பதியில் ஏற எழுந்தருளுதலும் அவ்விறைவனுக்கு நிலைறெபற்ற குணம் என்பதாம்.

அகலவுரை : அந்தரப் பல்லியம் என்றது வானத்தின்கண் வாழும் தேவர்களுடைய இசைக்கருவியாகிய துந்துபி என்றவாறு. எனவே, அம்முருகப் பெருமான் எழுந்தருளுங்கால் தேவர்கள் துந்துபி முழக்கிக் கொண்டு கண்டு மகிழ்வர் என்றவாறு. கறங்குதல் - ஒலித்தல். வயிர் - கொம்பு என்னும் இசைக்கருவி. திண்காழ் வயிர் என்றது. திண்ணிய வயிரமுடைய கொம்பென, அதன் இசை நன்மைக்கு ஏதுக் காட்டியவாறென்க. வயிரினை ஊதுங்கால் தலைக்குமேலே நிற்கும்படி உயர்த்தூதலியல்பாகலின் எழுந்திசைப்ப என்றார். பின்னர் வெல்கொடி என்றதற்கேற்ப வெற்றிமுரசம் என்க. அதன் முழக்கத்தினது சிறப்போதுவார் உருமின் இடிப்பை உவமை எடுத்தோதினார். அம்முரசிடி போன்றே வெல்கொடி மயிலும் அகவும் என்பார், முரசமொடு மயில் அகவ என்று உடனிகழ்ச்சி ஒடுக்கொடுத்தோதினார்.

அவ்வழி - அடியிணை சேரா தவுணர் நுங்கிப்
பொடிபொடி யாகிய போர்ப்படு மாய
இடியுமிழ் வானத் திடைநின்றுங் கூஉம்
கொடியணி கோழிக் குரல்  (தொல்-செய்,152 மேற்.)

என்றார் பிறரும். அம்முருகப் பெருமான் ஆண்டுறைதலின் உலகம் புகழும் ஓங்குயர் விழுச்சீருடையதாயிற்று அத்திருப்பதி என்க. திருச்சீரலைவாய் - திருச்செந்தூர். நாமனூரலைவாய் என்பர் நச்சினார்க்கினியர். இனி, குன்றமர்ந்துறைதலும் உரியன் அதாஅன்று. வேழமேல் கொண்டு இயற்றிக் கறங்க இசைப்ப அகவ விசும்பாறாக அலைவாய்ச் சேறலும் அவற்கு நிலைபெற்ற பண்பு என அணுகக் கொண்டு காண்க. எனவே, அவ்வலைவாயின் கண்ணும் அப் பெருமானைக் காணல் கூடும், ஆண்டுச் செல்ல நினைதியேல் ஆண்டுச் செல்லுதி என அறிவுறுத்தி ஆற்றுப்படுத்தியவாறாதல் அறிக. இனி 126- சீரை தைஇய என்பது தொடங்கி, 176 - ஆவினன் குடிஅசைதலும் உரியன் என்னுந்துணையும் ஒரு தொடர். இதன்கண் முனிவர்களும் தேவர்களும் திருமால் முதலிய கடவுளரும் தனது அருள் வேண்டி வந்து தொழ முருகப்பெருமான் திருவாவினன் குடி என்னும் திருப்பதியில் எழுந்தருளியிருத்தலை அறிவுறுத்துகின்றார்.

திருவாவினன் குடி

துனியில் காட்சி முனிவர்

125-137: அதாஅன்று ............... முற்புக

பொருள் : அதாஅன்று - அத்திருச்சீரலைவாயையல்லாமலும், சீரை தைஇய உடுக்கையர் - மரவுரியை உடையாகச் செய்த உடையினை உடையவரும், சீரொடு வலம்புரி புரையும் வால் நரை முடியினர் - அழகோடு வடிவாலும் நிறத்தாலும் வலம் புரிச்சங்கினை ஒத்த வெள்ளிய நரைமுடியினை உடையவரும், மாசு அற இமைக்கும் உருவினர் - எக்காலத்தும் நீராடுதலின் அழுக்கற விளங்கும் வடிவினை யுடையவரும், மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார்பின் என்பு எழுந்து இயங்கும் யாக்கையர்-கருமானின் தோல்போர்த்த நோன்பாலே விட்ட பட்டினியால் தசைகெடுகின்ற மார்பின்கண் எலும்புகள் கோவை தோன்றி உலகம் உடம்பினை உடையவரும், நன்பகல் பலவுடன் கழிந்த உண்டியர் - எப்பொருளும் நுகர்தற்கு நன்றாகிய பகற்பொழுதுகள் பலவும் சேரக் கழிந்த உணவினையுடையவரும், இகலொடு செற்ற நீக்கிய மனத்தினர் - மாறுபாட்டோடே நெடுங்கால நிற்கும் செற்றத்தினையும் போக்கிய மனத்தை உடையவரும், யாவதும் கற்றோர் அறியா அறிவினர் - பலவற்றையும் கற்றோரும் சிறிதும் அறியப்படாத இயல்பான அறிவினையுடையவரும், கற்றோர்க்குத் தாம் வரம்பு ஆகிய தலைமையர் - பலவற்றையும் கற்றோர்க்கும் தாம் எல்லையாகிய தலைமையை உடையவரும், காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர் - அவாவோடே கடிய சினத்தையும் போக்கின அறிவினையுடையவரும், இடும்பை யாவதும் அறியா இயல்பினர் - தவத்தான் மெய்வருத்தம் உளவேனும் மனத்தான் வருத்தம் ஒருசிறிதும் அறியப்படாத இயல்பினையுடையவரும், மேவரத் துனியில் காட்சி முனிவர் முற்புக பொருந்துதல் வரும்படி ஒருவருடனும் வெறுப்பில்லாத நல்ல அறிவினையுடையவரும் ஆகிய முனிவர் முன்னே செல்லா நிற்ப;

கருத்துரை : மரவுரியை உடுத்தவரும், வலம்புரிச் சங்கையொத்த அழகிய நரைமுடியை உடையவரும் அழுக்கின்றி விளங்கும் திருமேனியை உடையவரும், கருமானின் தோலினைப் போர்த்தவரும், நோன்பாலை பட்டினி விட்டமையால் தசைகெட்ட மார்பின்கண் எலும்பின் கோவை இயங்கப் பெற்றவரும் பலநாள்கள் ஒருங்கே உண்ணாது கிடந்து இடையே உண்ணும் உணவினையுடையவரும், மாறுபாட்டோடே செற்றத்தையும் போக்கின மனத்தையுடையவரும், கற்றோரானும் அறியப்படாத அறிவினை உடையவரும் கற்றோர்க்குத் தாம் எல்லையாகிய தலைமையுடையவரும், அவாவுடனே சினத்தையும் போக்கிய அறிவினையுடையவரும், தவத்தானே உளவாம் மெய்வருத்தம் உளவேனும், மனத்தான் வருத்தம் சிறிதும் அறியப்படாத இயல்பினையுடையவரும், ஒருவருடனும் வெறுப்பில்லாத நல்லறிவினையுடையவரும் ஆகிய முனிவர் முற்படச் செல்லாநிற்ப என்பதாம்.

அகலவுரை : சீரை - மரவுரி. சீரை தைஇய உடுக்கையர் என்றதற்குச் சீரையைக் காவிக்கல்லைக் கரைத்த நீரிற் றோய்த்து உடுத்த உடையினர் என்பாருமுளர். இதற்குச் சீரை என்பதற்குத் துகில் என்று பொருள்கோடல் வேண்டும். சீர் - அழகு. வலம்புரியை அழகானன்றி வடிவானும் நிறத்தானும் ஒக்கும் முடியினர் என்றவாறு. நெடுங்காலந் தவத்துறை நின்றார் என்பது தோன்ற நரைமுடி கூறினார். மாசு - ஈண்டுப் புறவுடலின்கண் அழுக்கு முனிவர் ஒருநாளில் பலகால் நீராடும் வழக்கமுடையராதலின் அவர் புறவுடலும் மாசற்றுத் திகழ்வதாயிற் றென்க. இதனை,

நீர்பலகான் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச்
சோர்சடை தாழச் சுடரோம்பி - ஊரடையார்
கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல்
வானகத் துய்க்கும் வழி  (புறப் - வெ-வாகை-14)

என்பதனானும் அறிக. இமைத்தல்- விளங்குதல். மான் ஈண்டுக் கருமான். கருமானின் தோலை முனிவர் போர்த்துக்கோடல் வழக்கம், இதனைக் கிருட்டினாசனம் என்பர் வடநூலார். நீர்பலகால் என்ற வெண்பாவில் தோலுடையா என்று வருதலும் அறிக. உரிவை - தோல். உரிவை தைஇய மார்பு; ஊன் கெடுமார்பு எனத் தனித்தனி கூட்டுக. ஊன் கெடுதற்கேது நோன்புகளாலே பட்டினிவிடுதல் என்க. பட்டினியால் மார்பின்கண் தசைகெட்டமையின் என்புக்கோவை தோன்றிற்று என்க. முனிவர் மூச்சினை உள்வாங்கி வெளியே விடுந்தோறும் அவ்வென்பு உயர்ந்தும் அமிழ்ந்தும் இயங்கிற்றென்க. பல பகல்கள் சேரக் கழித்துப் பின்னர் உண்ணும் உணவினையுடையார் என்றபடி. இதனை மாதோபவாசம் என்பர் நச்சினார்க்கினியர். அஃதாவது ஒருதிங்கள் இடையறாது பட்டினி விடுமொரு நோன்பென்க. இதனால் முனிவர் தம்முடலைப் பொருளாகக் கொண்டு பேணாது தந்தவத்திற்குக் கருவியாமளவே அதனைப் போற்றுவர் என்பது புலனாதல் அறிக.

மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை  (குறள் - 345)

என்னுந் தமிழ்மறையானும் முனிவர்க்கு உடம்பு மிகையாதலறிக. இதனால் இவ்வுடம்பை யான் என்னும் அகப்பற்றிலாமை கூறினாராயிற்று. யான் என்னும் செருக்கிற் கேதுவாகிய உடம்பும் உருவுடம்பும் அருவுடம்பும் என இருவகைப்படும். ஆதலின், இதுகாறும் அம்முனிவர் புறவடம்பியல்பு கூறுமாற்றானே அவர்க்கதன்கண் பற்றின்மை காட்டி இனி அருவுடம்பாகிய அவர்தம் மனவியல்பினைத் தெரித்தோதுகின்றார் என்க. இகல் - மாறுபாடு. செற்றம் - பகைமைக்குணம். நெடுங்காலம் நிகழ்வது. இவ்விரண்டும் வெகுளியினின்றும் தோன்றும் தீக்குணங்கள் என்க. யாவதும் கற்றோர் அறியா அறிவினர் என்றது, இறையறிவு கைவரப் பெற்றோர் என்றபடி. என்னை? உலகறிவு உயிர் அறிவு இறை அறிவு என்னும் மூன்றனுள் உலகறிவும் உயிர் அறிவுமே கற்றோர் எய்திய அறிவாக, ஏனை இறையறிவு அருளாலே எய்தப் பெறுதலின், அவ்வறிவினையுடையார் என்பார், கற்றோர் யாவதும் அறியா அறிவினர் என்றார். இவற்றை, பாசஞானம் பசுஞானம் பதிஞானம் என்று கூறுப. இதனை,

பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும்
பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத் தாலே
நேசமொடும் உள்ளத்தே நாடிப் பாத
நீழற்கீழ் நில்லாதே  (சித்தியார் சுபக் - 292)

எனவரும் சிவஞானசித்தியாரானும் உணர்க. கல்விப்பயன் அஃதன்றிப் பிறிதில்லையாகலின், இறையறிவு கைவரப்பெற்று இம்மையிலேயே வீட்டின்பம் மருவப்பெற்ற இம்முனிவரே கற்றோர்க்கு எல்லையாகிய தலைமையுடையோராயினர். இவரைச் சீவன் முத்தர் என்ப. சீவன் முத்தராவார் இம்மையிலே வீடு பேறடைந்தோர் என்க. என்னை ?

புண்ணியமேல் நோக்குவிக்கும் பாவங்கீழ் நூக்கும்
புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தி னாலே
நண்ணியஞா னத்தினால் இரண்டினையும் அறுத்து
ஞாலமொடு கீழ்மேலும் நண்ணா னாகி
எண்ணுமிக லோகத்தே முத்திபெறும் இவன்றான்
எங்கெழில்என் ஞாயிறுஎமக் கென்றுகுறை வின்றிக்
கண்ணுதல்தன் நிறைவதனிற் கலந்து காயம்
கழிந்தக்கால் எங்குமாய்க் கருதரன்போல் நிற்பன்  (சித்தியார் சுபக் - 283)

என்பவாகலின் ;

காமம் வெகுளி மயக்கம் என்னும் முக்குற்றங்களின் நாமமும் கெட்ட மெய்க்காட்சியாளர் என்பார் காமமொடு கடுஞ் சினங்கடிந்த காட்சியர் என்றார்.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடு நோய்  (குறள்.360)

என்றார் பொய்யில் புலவரும். வினையெல்லாம் இவற்றின் காரியங்களாகலின், இவர் இருவினையறுத்துத் தூயராய் வினையினீங்கிய விளங்கிய அறிவின் முனிவர் என்பார் காட்சியர் என்றார். காட்சி - ஈண்டு மெய்க்காட்சி என்க.

உலகினில்என் செயலெல்லாம் உன்விதியே நீயே
உள்நின்றும் செய்வித்தும் செய்கின்றாய் என்றும்
நிலவுவதோர் செயலெனக்கு இன்றுன் செயலே என்றும்

நினைவாராய், இறையருள் வெள்ளத்தே மூழ்கி யான் செய்தேன் பிறர் செய்தார் என்னது யான் என்னும் இக்கோணை ஞான எரியால் வெதுப்பித் தாம் செவ்வே நிற்கும் மெய்க்காட்சியாளராகலின் இடும்பை யாவதும் அறியா இயல்பினர் என்றார். துனி-வெறுப்பு. திருமால் முதலிய தேவர்களினும் இத்துனியில் காட்சி முனிவரே முருகப் பெருமானாற் பெரிதும் விரும்பப்படுதல் பற்றி முனிவர் முற்புக என்றார். இனிச் சீரை தைஇய உடுக்கையர் என்பது முதல், முனிவர் முற்புக என்னுந்துணையும் தொடர்ந்த இவ்வடிகளில், இறைபணிநின்ற சான்றோருடைய இயல்பெல்லாம் தன்மை நவிற்சியாகத் தெரித்தோதி, ஓதுவோருளத்தே தூய முனிவர் கூட்டத்தைக் கண்கூடாகத் தோற்றுவித்த நல்லிசைப் புலமையின் மாண்பினையும் ஓர்ந்தின்புறுக.

யாழியக்கும் கந்தருவர் மாண்பு

138-142 : புகை ................ இன்னரம்புளர

பொருள் : புகை முகந்தன்ன மாசு இல் தூவுடை - புகையை முகந்துகொண்டாலொத்த அழுக்கேறாத தூய உடையினையும், முகைவாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து - மொட்டாம் நிலைமையினின்றும் வாய் நெகிழ்ந்த மாலை சூழ்ந்த மார்பினையும், செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின் நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் - எஃகுச் செவியாலே இசையை அளந்து நரம்பைக் கட்டின சுற்றுதலுறும் வார்க்கட்டினையுடைய நல்ல யாழின் இசையிலே பயின்ற நன்மையையுடைய நெஞ்சாலே, மென்மொழி மேவலர் இன் நரம்பு உளர - எக்காலமும் மெல்லிய மொழியே பேசுதல் பொருந்திய கந்தருவர் இனிய யாழ் நரம்பை இயக்குதற் பொருட்டு;

கருத்துரை : புகையை முகந்து கொண்டாலொத்த நுண்ணிய ஆடையுடையோரும், மொட்டலர்ந்த மாலை சூழ்ந்த மார்பினை உடையோரும், தமது எஃகுச் செவியாலே இசையை அளந்து பண்ணுறுத்திய வார்க்கட்டினையுடைய யாழின் இசையிலே பயின்று பயின்று நன்மையுடைத்தாகிய நெஞ்சுடைமையாலே எக்காலமும் இனிய மென்மொழியே பேசும் இயல்பினையுடையோரும் ஆகிய கந்தருவர் இனிய யாழ் நரம்பினை இயக்குதற் பொருட்டு என்பதாம்.

அகலவுரை : இயக்குதற் பொருட்டு மகளிரொடு விளங்க எனக் கூட்டுக. புகை என்பதற்குப் பாலாவி எனலுமாம். என்னை? ஆடையின் நுண்மைக்கும் நிறத்திற்கும் ஈண்டுப் புகை உவமையாகலான் ஏனைப் புகைகள் பருப்பொருளாய்க் கருமை முதலிய நிறமுடையனவாதலும் உண்மையின் அவை உவமையாகா என்க. பாலாராவிப் பைந்துகிலேந்தி என்று சீவக சிந்தாமணியினும் (1094) பானீர் நெடுங்கடற் பனிநா ளெழுந்த மேனீ ராவியின் மெல்லிதாகிய கழுமடிக் கலிங்கம் என்று பெருங்கதையினும் (2.7: 154:2) வருதல் காண்க. புகை விரிந்தன்ன பொங்கு துகில் (புறம் - 398: 2) ஆவியந்துகில் (சீவக - 873) ஆவியன்ன பூந்துகில் சீவக - 97) ஆவி நுண்டுகில் பெருங்.1-36: 64) எனப் பிறாண்டும் வருதலறிக.

மாசில் தூவுடை என்பதற்கு, தெய்வத் தன்மையால் அழுக்கேறாத உடை என்பர் நச்சினார்க்கினியர். முகை - அரும்பு. தகை - தகைக்கப்படுவது; கட்டப்படுவது என்னும் பொருட்டாய் மாலைக்கு ஆகுபெயராய் நின்றது. ஆகம் - மார்பு. செவி - ஈண்டுக் கூர்மையுடைய செவி என்க. இசையை நுண்ணிதின் உணர்தற்குரிய கூரிய செவி என்றவாறு எஃகுச் செவி யென்பர் நச்சினார்க்கினியர். எஃகு - கூர்மை; ஊராண்மை மற்றதன் எஃகு என்னும் திருக்குறளினும் அஃதப்பொருட்டாதலறிக. தோற்செவி, மரச்செவி எஃகுச் செவி எனச் செவியை மூவகைப்படுத் தோதுவர். எஃகு நுண் செவிகள் வீழ (2718) என்றார் சீவகசிந்தாமணியினும். செய்வுறுதல் - சுற்றுதல் முதலிய செய்கைகளை உடையதாதல். பண்ணுறுத்தப்படுதலுமாம். திவவு - வார்க்கட்டு. நல்லியாழ் என்றது, யாழ்க்குண்டாம் குற்றம் நீங்கிய யாழ் என்றவாறு. யாழ்ப்பயிற்சி மனத்தைப் பண்படுத்தி இனிமை உடையதாக்குமாகலின், இனிதுற மெத்தெனப் பேசுதற்கு யாழ்ப்பயிற்சியை ஏதுவாக்கிக் கூறிய நுணுக்கம் உணர்க. மென்மொழி-ஈண்டு இனிமையும் மென்மையும் உடைய மொழி என்க. இன்னரம்பு - இனிய யாழ் நரம்பு யாழ் நவின்ற மென்மொழி மேவலர் என்ற குறிப்பால் கந்தருவர் என்பது பெற்றாம். என்னை? கந்தருவரை யாழோர் என்றும் வழங்குப வாகலான்.

கந்தருவ மகளிர்

143-147 : நோய் ............... விளங்க

பொருள் : நோயின்று இயன்ற யாக்கையர் - மக்கட்குரிய நோய் இல்லையாக இயன்ற உடம்பினையுடையவரும், மாவின்அவிர் தளிர்புரையும் மேனியர் - மாவினது விளங்குகின்ற தளிரை ஒக்கும் நிறத்தினை யுடையவரும், அவிர்தொறும் பொன்னுரை கடுக்கும் திதலையர் - விளங்குந்தோறும் பொன்னுரை விளங்கினாற்போல விளங்கும் துத்தியினையுடையவருமாகிய, இன்நகைப் பருமந் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் மாசுஇல் மகளிரொடு கட்கினிய ஒளியினையுடைய பதினெண் கோவையாகிய மேகலையணிந்த தாழவேண்டியவிடம் தாழ்ந்து உயரவேண்டியவிடம் உயர்ந்த அல்குலையுடைய குற்றமில்லாத கந்தவருமகளிரோடே, மறுவின்றி விளங்க - தாமும் குற்றமின்றி விளங்காநிற்ப;

கருத்துரை : நோய் இல்லாதியன்ற நல்லுடம்பினையுடையாரும் மாந்தளிர் போன்ற திருமேனியுடையாரும், பொன்னுரை போன்று மிளிரும் துத்தியை உடையாரும் மேகலையணியப்பட்ட பணிந்தேந்தும் அல்குலையுடையாருமாகிய தம் மகளிரோடே குற்றமிலராய் விளங்கா நிற்ப என்பதாம்.

அகலவுரை : மென்மொழி மேவலர் நரம்புளரும் பொருட்டு யாக்கை முதலியவற்றையுடைய குற்றமற்ற தம் மகளிரோடே மறுவின்றி விளங்கா நிற்ப எனக் கூட்டுக.

நோயின்று என்பதன்கண் இன்றி இன்னும் குறிப்பு வினையெச்சம் உகரமாய் இன்று என்றாயிற்று. இதனை,

இன்றி என்னும் வினையெஞ் சிறுதி
நின்ற இகரம் உகரம் ஆதல்
தொன்றியல் மருங்கிற் செய்யுளுள் உரித்தே

எனவரும் தொல்காப்பிய (உயிர்மயங் - 35) விதியானே அறிக. யாக்கை - உடம்பு. மா - மாமரம். புரையும்: உவமஉருபு. அவிர்தல் - விளங்குதல். உரைகல்லில் உரைத்த பொன்னுரை. திதலைக்கு உவமை; திதலை-தேமல். இன்னகைப் பருமம் - கண்ணுக்கு இனிய ஒளியினையுடைய பருமம் என்க. பருமம், பதினெண்கோவையையுடைய மேகலை இதனை,

எண்கோவை காஞ்சி எழுகோவை மேகலை
பண்கொள் கலாபம் பதினாறு - கண்கொள்
பருமம் பதினெட்டு முப்பத் திரண்டு
விரிசிகை என்றுணரற் பாற்று

என்னும் வெண்பாவானுணர்க. (பருமம் பதினான்கு என்றும் பாடமுண்டு)

பணிந்தேந்து அல்குல் என்றது. தாழவேண்டிய இடம் தாழ்ந்து உயர வேண்டிய விடம் உயர்ந்துள்ள அல்குல் என்றவாறு; அவிழ்ந்து வீங்கு திவவு என்றாற் போன்று. மாசின்மை - ஈண்டு அகந்தூய்மை. இறைவனைப் பாடுமகளிராதலால் மாசின்மை வேண்டிற்று. மாசில் மகளிர்க்கேற்பவே மென்மொழிமேவலரும் மறுவின்றி விளங்கினர் என்க. இனி 148 முதல் - 151 வரையில், முருகப்பெருமான்பாற் குறை வேண்டிவரும் தேவர்களில் முதற்கண் திருமால் வருகையைக் கூறுகின்றார்.

திருமால்

148-151 : கடு ................ செல்வனும்

பொருள் : கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால்எயிற்று - நஞ்சுடனே உறைக்குள்ளே கிடந்த துளையினையுடைய வெள்ளிய எயிற்றினையும், அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல் - நெருப்பென்னும்படி நெட்டுயிர்ப்புக்கொள்ளும் கண்டார்க்கு அச்சந்தோன்றும் கடிய வலியினையும் உடைய, பாம்பு படப் புடைக்கும் - பாம்புகள் மாளும்படி அடிக்கின்ற, பல்வரிக் கொஞ்சிறைப் புள் அணி நீள்கொடிச் செல்வனும் - பல வரியினை உடைத்தாகிய வளைந்த சிறையினையுடைய கருடனை அணிந்த நீண்ட கொடியினையுடைய திருமாலும்;

கருத்துரை : நஞ்சோடே உறைக்குட் கிடந்த துளையினையுடைய வெள்ளிய பல்லையுடையனவும், தீக்கால்வது போன்று நெட்டுயிர்ப்புக் கொள்வனவும், கண்டார்க்கு அச்சந் தோற்றுவிப்பனவுமாகிய கொடிய வலியினையுடைய பாம்புகள் மாளும்படி அடிக்கும், பல வரிகளையுடைய வளைந்த சிறகையுடைய கருடன் அணிந்த நெடிய கொடியினையுடைய திருமாலும் என்பதாம்.

அகலவுரை : கடு - நஞ்சு. நஞ்சு, பையினுள்ளே இருத்தலால் ஒடுங்கிய என்றார். பாம்பினது நச்சுப் பல்லில் பல நுண்டுளைகள் உள; அப்பாம்பு ஒன்றனைக் கடிக்குங்கால் பற்கள் தம்மடியிலுள்ள நச்சுப் பையை அழுத்துவனவாம். அங்ஙனம் அழுத்துங்கால் பையிலுள்ள நஞ்சு பற்களின் துளைவழியே ஒழுகிக் கடியுண்ட உடலின் குருதியொடு கலந்து கொல்லும் என்ப. ஆசிரியர் நக்கீரர் ஈண்டுப் பாம்பின் இயல்பினை இரண்டடிகளிலே நன்கு தெரித்தோதுதலறிக.

தூம்பு - துளை. வால் எயிறு - வெண்பல் இவை காளி, காளாத்திரி, யமன் யமதூதி என நான்காம் என்பர் நச்சினார்க்கினியர். அழல் - பாம்பின் நெட்டுயிர்ப்பின் வெம்மைக்குவமை என்க. திருமாலினது கொடியாகிய கருடன் தன் பகையாகிய பாம்புகளைப் புடைத்தல் கூறினார். அத்திருமால் நச்சரவம் போன்று நல்லோர்க்குத் தீங்கியற்றும் அரக்கர் முதலியோரை அடர்த்து உயிர்களைப் பாதுகாப்பன் என்பது குறிப்பாற் றோன்றுமாறு, பல்வரிக் கொடுஞ்சிறைப்புள் என்றது கருடனை. செல்வன் என்றது, கடவுள் என்னும் பொருட்டு வடநூலோர். ஈசுவரன் என்பதுமது. புள்ளணி நீள் கொடி புணர்நிலை தோன்றும் (சிலப்-11:136) என்றும், மண்ணுறு திருமணி புரையும் மேனி விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும் என்றும் (புறம் - 56: 5 -6) பிறரும் ஓதுதல் காண்க.

உருத்திரன்

151 - 154 : வெள்ளேறு ............. செல்வனும்

பொருள் : வெள் ஏறு வலம் வயின் உயரிய - வெள்ளிய ஆனேற்றை வலப்பக்கத்தே வெற்றிக்கொடியாக உயர்த்திய பலர் புகழ் திணி தோள் - பலரும் புகழ்கின்ற திண்ணிய தோள்களையுடைய, உமை அமர்ந்து விளங்கும் - இறைவி ஒருபாகத்தே பொருந்தி விளங்காநின்ற, இமையா முக்கண் - இதழ்குவியாத மூன்று கண்ணினையுமுடைய மூவெயில் முருக்கிய - முப்புரத்தை எரித்த, முரண் மிகு செல்வனும் - மாறுபாடு மிக்க உருத்திரனும்;

கருத்துரை : வெள்ளிய ஆனேற்றை வெற்றிக்கொடியாக வலப்பக்கத்தே உயர்த்தவனும், பலரானும் புகழப்படுகின்ற திண்ணிய தோளை யுடையவனும், இறைவி ஒருபாகத்தே பொருந்தி விளங்கும் திருமேனியை உடையவனும் இமைத்தலில்லாத மூன்று கண்களையுடையவனும் முப்புரத்தை எரித்தவனும் மாறுபாடு மிக்கவனும் ஆகிய உருத்திரனும் என்பதாம்.

அகலவுரை : ஏறுவலன் உயரிய செல்வன்; தோளுடைய செல்வன்; உமையமர்ந்து விளங்குஞ் செல்வன்; முக்கட் செல்வன்; எயில் முருக்கிய செல்வன்; முரண்மிகு செல்வன் எனத் தனித் தனி கூட்டுக. உருத்திரனுக்கு ஊர்தியும், கொடியும் வெள்ளேறு என்பதனை,

ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வே றென்ப

எனவரும் புறப்பாட்டானுமறிக. வலவயின் என்பதற்கு வெற்றிக்களத்தே என உரைப்பர், நச்சினார்க்கினியர். இறைவனுடைய திருவருளே இறைவி எனலின். அவ்வருள் அவனின் வேறாகாமை தோன்ற தன்னொரு கூற்றிலே இறைவியைக் கொண்டனன் என்க. அமர்ந்து விளங்குதலாவது, எத்திறம் நின்றானீசன் அத்திறம் அவளும் நிற்றல் என்க. அமர்தல் - பொருந்துதல். என்னை?

சத்தியாய் விந்துசத்தி யாய்மனோன் மனிதா னாகி
ஒத்துறு மகேசை யாகி உமைதிரு வாணி யாகி
வைத்துறுஞ் சிவாதிக் கிங்ஙன் வருஞ்சத்தி ஒருத்தி யாகும்
எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்  (சித்தியார் சுபக் - 165)

என்பவாகலான். இனி இங்ஙனம் இறைவனும் இறைவியும் ஓருருவின் இயைந்து நிற்றலை ஆசிரியர் இளங்கோவடிகளார் இறைவியின் மேலேற்றி,

சடையும் பிறையும் தாழ்ந்த சென்னிக்
குவளை யுண்கண் தவளவாண் முகத்தி
கடையெயி றரும்பிய பவளச்செவ் வாய்த்தி
இடைநிலா விரிந்த நித்தில நகைத்தி
இடமருங் கிருண்ட நீல மாயினும்
வலமருங்கு பொன்னிறம் புரையும் மேனியன்
இடக்கை பொலம்பூந் தாமரை ஏந்தினும்
வலக்கை அஞ்சுடர்க் கொடுவாள் பிடித்தோள்
வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால்
தனிச்சிலம் பரற்றும் தகைமையள்  (சிலப். 23: 1-10)

என்று புனைந்த இவ்வழகிய அடிகளூடே அம்மையப்பரின் திருவுருக் காட்சியைக் கண்கூடாகக் கண்டுணர்க. என்றும் அழிவில்லான் ஆகலின், அவன் திருக்கண்களும் இமையாவாயின என்க மூவெயில் என்றது, முப்புரத்தை தேவர்கட்குத் தீங்கியற்றிய மூன்று அசுரருடைய எபிலைச் சிரித்தெரித்தான் என்பது புராணம். முரண் - வலியுமாம். மாறுபாடெனக் கொள்ளின் நிலனும் நீரும் தீயும் வளியும் வெளியுமாகிய பூதங்கடோறும் உறைந்து ஒன்றனோடொன்று மாறுபட்ட செயல்களை நிகழ்த்தும் செல்வன் என்க நீரிற்றண்மையும் தீயில் வெம்மையுமாய் நிற்றல் போல்வது மாறுபாடு என்க.

இந்திரன்

155-159 : நூற்றுப்பத்து ............... செல்வனும்

பொருள் : நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து - நூற்றைப் பத்தாக அடுக்கிய கண்களையும், நூறு பல் வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து-நூறென்னும் எண்ணாகிய பலவேள்விகளை வேட்டு முடித்ததனாற் பெற்ற பகைவரை வென்று கொல்கின்ற வெற்றியினையும் உடையனாய், ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடைத் தாழ் பெருந் தடக்கை உயர்த்த யானை - நான்காகிய முன்புறமுயர்ந்த கொம்பினையும் அழகிய நடையினையும் நிலத்தே கிடக்கின்ற பெரிய வளைவினையுடைய கையினையும் நூலோரானே உயர்த்துக் கூறப்படுதலையும் உடைய யானையினது, எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும் - புறக்கழுத்திலே ஏறிய திருமகளின் விளக்கமுடைய இந்திரனும்;

கருத்துரை : ஆயிரங் கண்களையும், நூறு வேள்விகளையியற்றிப்பெற்ற வெற்றியினையும் உடையனாய், நான்கு ஏந்திய கொம்புகளையுடைய நெடிய கையையுடைய புகழ்பெற்ற யானையின் பிடரிடத்தே ஏறிய திருமகள் நோக்கமிக்க இந்திரனும் என்பதாம்.

அகலவுரை : நூற்றுப்பத்தடுக்கிய என்றது, நூற்றைப் பத்தாக அடுக்கிய என்றவாறு. அஃதாவது ஆயிரம். இந்திரன் கவுதம முனிவருடைய சாபத்தாலே தன் உடலில் ஆயிரம் அல்குல்கள் உண்டாகப் பெற்று மீண்டும் அம்முனிவர்பால் இரந்து அவை கண்ணாம்படி பெற்றான் என்ப. இதனை,

தீவிழி சிந்த நோக்கிச் செய்ததை யுணர்ந்து செய்ய
தூயவன் அவனை நின்கைச் சுடுசர மனைய சொல்லால்
ஆயிரம் மாதர்க் குள்ள அறிகுறி யுனக்குண் டாகென்
றேயினள் அவையெ லாம்வந் தியைந்தன இமைப்பின் முன்னம்  (கம்பராமா - அகலி - 78)

என்றும்,

அந்தஇந் திரனைக் கண்ட அமரர்கள் பிரமன் முன்னா
வந்துகோ தமனை வேண்ட மற்றவை தவிர்த்து மாறாச்
சிந்தையின் முனிவு தீர்ந்து சிறந்தஆ யிரங்கண் ணாக்கத்
தந்தம துலகு புக்கார் தையலும் கிடந்தாள் கல்லாய்  (கம்பராமா - அகலி - 81)

என்றும் வரும் இராமாவதாரத்தானுணர்க. நாட்டம் - கண். இந்திரன் ஆவோன் நூறு பரிவேள்வி செய்து முற்றவேண்டும் என்ப. இவ்வேள்வி ஒவ்வொன்றும் இயற்றுங்கால் உலகில் குதிரையை விடுத்து அது சென்ற திசைக்கண் மன்னரை எல்லாம் வென்றடிப்படுத்தல் வேண்டுமாகலின், வேள்வி முற்றிய வென்றடு கொற்றம் என்றார். இதனானே இந்திரனுக்குச் சதமகன் என்னும் பெயருண்மையும் அறிக. இந்திரன் யானை யூர்தியை உடையோன்; இவ்வியானை ஐராவதம் எனப்படும். இதற்கு நான்கு கொம்புகள் உண்டென்ப ஆதலின், ஈரிரண்டேந்திய மருப்பின் என்றார். ஏந்திய என்றது கொம்பின் முன்புறம் உயர்ந்த என்றவாறு. இதனை ஏந்திய ஈரிரண்டு மருப்பின் என மொழிமாற்றி தலைகள் ஏந்தியிருக்கின்ற நான்காகிய கொம்பு என்றார் நச்சினார்க்கினியர். எருத்தம் - புறக்கழுத்து; பிடரி. வானுலகத்தார்க்கெல்லாம் அரசனாகலின் திருக்கிளர் செல்வன் என்றார். திருக்கிளர்தலாவது எல்லாச் செல்வமும் மிக்கிருத்தல்.

இத்தேவர்கள் முருகக்கடவுளைக் காணவருதற்குரிய காரணம்

160-165 : நாற்பெருந் தெய்வத்து ............ சுட்டி

பொருள் : நாற் பெருந் தெய்வத்து - பிரமன் திருமால் உருத்திரன் இந்திரன் எனப்படும் நான்கு பெருந்தெய்வங்களிலே வைத்து, நன்னகர் நிலைஇய உலகங்காக்கும் ஒன்றுபுரி கொள்கை - நல்ல நகரங்கள் நிலைபெற்றுள்ள உலகத்தை ஓம் புதற் றொழில் ஒன்றையே விரும்புங் கோட்பாட்டையுடைய, பலர்புகழ் மூவரும் தலைவராக - பலரானும் புகழப்படுகின்ற அயனை ஒழிந்த ஏனை மூவரும் தத்தம் தொழில்களை முன்புபோல நிகழ்த்தித் தலைவராக வேண்டி, ஏமுறு ஞாலந் தன்னிற்றோன்றி - பாதுகாவலுறுகின்ற இம் மண்ணுலகிலே வந்து தோன்றி, தாமரை பயந்த தாவில் ஊழி நான்முக ஒருவற் சுட்டி - திருமாலுடைய திருவுந்தித் தாமரை பெற்ற குற்றமற்ற ஊழிகளையுடைய நான்கு முகத்தையுடைய ஒருவனைப் பழைய நிலையிலே நிறுத்தலைக் கருதி;

கருத்துரை : அயன் திருமால் உருத்திரன் இந்திரன் என்னும் நான்கு பெருந் தெய்வங்களிலே நல்ல நகரங்கள் நிலைபெற்ற உலகத்தை ஓம்புதற்றொழில் ஒன்றையே விரும்புங் கோட்பாட்டுடனே பலரானும் புகழப்படுகின்ற அயனை ஒழிந்த மேலே கூறப்பட்ட மூன்று கடவுளரும், தத்தம் தொழிலைப் பண்டுபோற் செய்து தலைவராகக் கருதித் திருமாலின் திருவுந்தித் தாமரையாற் பெறப்பட்டவனும், அளவில்லாத ஊழியை உடையவனும், நான்கு திருமுகங்களையுடையவனுமாகிய அயனை விடுவிக்கக் கருதி என்பதாம்.

அகலவுரை : நாற்பெருந்தெய்வத்து மூவர் என்றது, அயன் முதலிய நான்கு பெருந் தெய்வங்களுள் வைத்து ஈண்டோதப்பட்ட திருமாலும் உருத்திரனும் இந்திரனுமாகிய மூவரும் என்றவாறு. இங்ஙனம் நேரிதிற் பொருள் காணாது நாற்பெருந் தெய்வமாவன இந்திரன் யமன் வருணன் சோமன் என்னுந் தெய்வங்கள் என்று நச்சினார்க்கினியர் இயைபற உரைத்தார். இன்னும் நாற் பெருந்தெய்வம் என்றார் அந்தணர்தெய்வம் அரையர்தெய்வம் வைசியர் தெய்வம் சூக்திரர் தெய்வம் என்பதற்கு, இதனைச் சிலப்பதிகாரத்துங் கண்டு கொள்க என்பாருமுளர்.

படைத்தல், காத்தல், அழித்தல், துறக்க நாட்டைக் காத்தல், என்னும் சிறந்த தொழிற்றலைவராதலின் பெருந் தெய்வம் என்றார். தொழில் வேறுபடினும் எவ்வாற்றானும் உலகம் காத்தலே இத்தெய்வங்களின் மேற்கோளாகலின் உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை என்றார். இத் தெய்வங்கள் படைத்தல் அழித்தல்களும் செய்யாநிற்ப உலகம் காத்தலாகிய ஒன்றையே விரும்பும் கோட்பாடுடையன என்றது என்னையோ எனில், ஈண்டு உலகம் என்றது உயிரையே ஆகலின், படைத்தல் முதலிய எல்லாத் தொழிலும் முடிவில் அவ்வுயிர்களை மருட் கேவலத்தினின்றும் சுத்தாவத்தையிற் செலுத்தி வீட்டின்பம் நல்கிக் காத்தற் பொருட்டேயாகலான் அனைத்தும், காத்தற் றொழிலே என விடுக்க. இதனை,

சொன்னஇத் தொழில்கள் என்ன காரணந் தோற்ற என்னின்
முன்னவன் விளையாட் டென்று மொழிதலு மாம்உயிர்க்கு
மன்னிய புத்தி முத்தி வழங்கவும் அருளால் முன்னே
துன்னிய மலங்கள் எல்லாம் துடைப்பதும் சொல்ல லாமே  (சித்தியார் சுபக் - 59)

என்றும்,

அழிப்பிளைப் பாற்றல் ஆக்கம் அவ்வவர் கன்ம மெல்லாம்
கழித்திடல் நுகரச் செய்தல் காப்பது கன்ம வொப்பில்
தெழித்திடல் மலங்கள் எல்லாம் மறைப்பருள் செய்தி தானும்
பழிப்பொழி பந்தம் வீடு பார்த்திடின் அருளே எல்லாம்  (சித்தியார் சுபக் -57)

என்றும் வரும் மெய்ம் மொழிகளானும் உணர்க. ஏனைத் தெய்வங்கள் எல்லாம் தொழத்தகும் தெய்வமாகலான் பலர் புகழ் மூவர் என்றார். மூவருந் தலைவராக என்றது என் சொல்லியவாறேவெனின்?

பண்டொரு காலத்தே முருகப் பெருமான் அகந்தை கொண்ட அயனை அவன் அகந்தையைப் போக்கும் பொருட்டுப் பிரணவமந்திரத்தின் பொருள் யாதென வினாவ, அவன் அதற்கு விடை தந்திடாமையின் தலையிற் குட்டிச் சிறையிட்டனன் என்றும், அயன் சிறைப்பட்டமையானே படைப்புத் தொழில் நடவாதொழிய ஏனைத் தேவர்கட்குரிய ஏனைத் தொழில்களும் நடவாதொழிந்தன என்றும் கூறுப. இதனானே தலைமையிழந்த தேவர்கள் அவனைச் சிறைவீடு செய்து மீண்டும் படைப்புத் தொழில் செய்விக்குமாற்றானே தத்தம் தொழிலைத் தாமும் பெற்றுத் தலைவராதலைக் கருதி என்றவாறு.

ஏம் - ஏமம் என்பது கடைகுறைந்து நின்றது. ஏமம் - காவல் என்னும் பொருட்டு. தங்கள் காவலைப் பொருந்தும் இம் மண்ணுலகத்தே தம் விண்ணுலகினின்றும் இழிந்து வந்து தோன்றி என்பார் ஏமுறு ஞாலந் தன்னிற் றோன்றி என்றார். தோன்றி என்றது, இவர் உலகில் தோன்றுதலரி தென்பதை உணர்த்தி நின்றது. தாமரை - திருமாலின் திருவுந்தித் தாமரை. அத்திருவுந்தித் தாமரையிலே அயன் தோன்றினன் என்ப. ஆகலின், தாமரை பயந்த ... நான்முகன் என்றார். பயந்த - ஈன்ற. தாவிலூழி - குற்றமற்ற பல ஊழிகளையுடைய என்க. ஊழியைப் படைக்கும் நான்முகன் எனினுமாம். நான்முக ஒருவற் பயந்த பல்லிதழ்த் தாமரைப் பொகுட்டென்றார் (403-4) பெரும்பாணாற்றுப் படையினும். இனித், தாமரை என்னும் பேரெண்ணினைப் பெற்ற குற்றமற்ற ஊழி எனினுமாம். சுட்டி என்பது உள்ளத்தே குறிக்கோளாகக் கொண்டு என்றவாறு.

இனி, நான்முகனை முருகப்பெருமான் சிறையிட்டமையை,

......................................... படைப்போன்
அகந்தை யுரைப்பமறை யாதியெழுத் தொன்று
உகந்த பிரணவத்தி னுண்மை - புகன்றிலையால்
சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ங னென்றுமுனம்
குட்டிச் சிறையிருத்தும் கோமானே  (கந்தர்கலி : 90-5)

எனப் பிறரும் ஓதுமாற்றான் உணர்க. இனி, மூவருந் தலைவராக என்றதற்கு, பிள்ளையார் அயனைச் சபித்தலின் அயன் படைத்தற் றொழிலைத் தவிரவே ஏனையிருவர்க்கும் காத்தற்றொழிலும் அழித்தற்றொழிலும் இன்றாமாகலின் மூவரும் தத்தமக்குரிய தொழில்களைப் பெற்றுத் தலைவராக என்றார் என்றும், சாபமென்றது: பிள்ளையார் அசுரரை யழித்துத் தேவரைக் காத்தற்கு இந்திரன்மகள் தெய்வயானையாரை அவர்க்குக் கொடுத்த விடத்தே, பிள்ளையார் தம் கையில் வேலை நோக்கி நமக்கு எல்லாந் தந்தது இவ்வேல் என்ன, அருகிருந்த அயன் இவ் வேலிற்கு இந்நிலை என்னால் வந்ததன்றோ என்றானாக, நங்கையில் வேலுக்கு நீ கொடுப்பதொரு சத்தியுண்டோ என்று கோபித்து, இங்ஙனம் கூறிய நீ மண்ணிடைச் செல்வாய் என்ற சாபத்தை என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். இதற் கேற்பவே ஞாலந் தன்னில் தோன்றி என்றதற்கு பிள்ளையார் சபித்தலாலே மண்ணிடத்தே தோன்றி என்று உரை கூறியுள்ளார்.

ஏனைத் தேவர்களின் வருகை

165-174 : காண்வர ............. காண

பொருள் : காண்வர - அழகுண்டாக, பகலில் தோன்றும் இகல் இல் காட்சி - பகுத்துக் காண்டற்கண் வேறுபடத் தோன்றியும் தம்முள் மாறுபாடில்லாத அறிவினையுடைய, நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு - நான்காகிய இயல்பினையுடைய வேறுபட்ட முப்பத்து மூவரும், ஒன்பதிற் றிரட்டி உயர்நிலை பெறீஇயர் - பதினெண் வகையாகிய உயர்ந்த நிலையைப் பெற்றவரும், மீன்பூத்தன்ன தோன்றலர் - விண் மீன்கள் மலர்ந்தாலொத்த தோற்றத்தையுடையராய், மீன் சேர்பு வளிகிளர்ந்தன்ன செலவினர் - மீன்கள் உலாவுகின்ற இடத்தைச் சேர்ந்து காற்று எழுந்தாலொத்த செலவினையுடையராய், வளியிடைத் தீ எழுந்தன்ன திறலினர் - காற்றிடத்தே நெருப்பு எழுந்தாலொத்த வலியினையுடையவராய், தீப்பட உரும் இடித்தன்ன குரலினர் - நெருப்புப் பிறக்க உருமேறு இடித்தாற் போன்ற குரலினை உடையராய், விழுமிய உறுகுறை மருங்கில் தம் பெறுமுறை கொண்மார் - இடும்பையாயுள்ள தமக்குற்ற குறைவேண்டும் பகுதியிலே தம் தொழில்களைப் பண்டு போலப் பெறுமுறையினை முடித்துக் கோடற்கு, அந்தரக் கொட்பினர் வந்துடன் காண வானத்தே சுழற்சியினையுடையராய் வந்து ஒருசேரக் காணா நிற்ப;

கருத்துரை : பகுத்துக் காணுங்கால் வேறுபடத் தோன்றியும் தம்முள் மாறுபாடில்லாத அறிவினையுடைய நான்காகிய வேறுபட்ட முப்பத்துமூவரும் பதினெண் வகையாகிய உயர்ந்த நிலையினையுடையாரும், விண்ணின்கண் மீன்கள் பூத்தாற்போன்று பொலிவுறத் தோன்றிக் காற்றுப் போன்று விரைந்த செலவினையுடையராய், காற்றிடைத் தீத்தோன்றினாற் போன்ற வலியினையுடையராய் இடி இடித்தாற்போன்று குரலினையுடையராய்த் தமக்கு இடும்பையாகிய குறையை முருகப் பெருமான்பாற் கூறியிரந்து தத்தம் தலைமையைப் பெறுமுறையை முடித்துக் கோடற்கு வானத்திலே சுழன்று வந்து ஒருங்கே காணாநிற்ப என்பதாம்.

அகலவுரை : பகல் - பகுத்தல்; பகுக்கும் முன்னர் ஆதித்தன் என ஒன்றாய்ப் பகுத்துக் காணுமிடத்தே பன்னிரண்டாய்த் தோன்றும் என்றவாறு. இவ்வாறே உருத்திரன் வசு மருத்துவன் என்னும் மூன்றற்கும் உரைத்துக் கொள்க. எனவே, ஆதித்தர் உருத்திரர் வசு மருத்துவர் என்னும் நால்வேறியற்கையையுடைய முப்பத்து மூவர் என்றவாறு. பதினொரு மூவர் - முப்பத்துமூவர். தேவர் ஆகலின் இகலில் காட்சியுடையோர் என்றார்.

ஒன்பதிற் றிரட்டி உயர்நிலை பெறீஇயர் என்றது, பதினெண் கணங்களை, அவராவார், தேவரும் அசுரரும் தைத்தியரும் கருடனும் கின்னரரும் கிம்புருடரும் இயக்கரும் விஞ்சையரும் இராக்கதரும் சித்தரும் சாரணரும் பூதரும் பைசாசகணமும் தாராகணமும் நாகரும் ஆகாயவாசிகளும் போகபூமியோரும் என்னும் இவர். இதனை,

கின்னரர் கிம்புருடர் விச்சா தரர்கருடர்
பொன்னமர் பூதர் புகழியக்கர் - மன்னும்
உரகர் சுரர்சா ரணர்முனிவர் மேலாம்
பரகதியோர் சித்தர் பலர்

என்றும்,

காந்தருவர் தாரகைகள் காணாப் பசாசகணம்
ஏந்துபுகழ் மேய விராக்கதரோ - டாய்ந்ததிறற்
போகா வியல்புடைய போகபூமி யோருடனே
ஆகாச வாசிகள்ஆ வார்

என்றும் வரும் வெண்பாக்களானும் அறிக (சிலப். 5: 176 - 8. அடியார் - மேற்.) பெறீஇயர் என்றது எச்சப்பொருள் அல்லது, வியங்கோட் பொருளில் வாராமல் தொழிற் பெயராக வந்தமை காண்க. வானத்தே ஒளியுடைய இத்தேவர் கூடியிருத்தற்கு மீன் பூத்திருத்தல் உவமை என்க. சேர்பு - சேர்ந்து. மீன் - ஈண்டு விண்மீன். வளி - காற்று. உரும் - இடி. விழுமம் - ஈண்டு இடும்பை என்னும் பொருட்டு; தமக்கு இடும்பையாகிய உறுகுறை என்க. அது நான்முகனைச் சிறையிட்டமை. பெறுமுறை கொண்மார் - முருகக்கடவுளிடத்து இரந்துபெறு முறை மைத்தாகிய சிறைவிடும் தம் தலைமையும் கொள்ளும் பொருட்டென்றவாறு.

திருவாவினன்குடி

175-176 : தாவில் ............... உரியன்

பொருள் : தா இல் கொள்கை மடந்தையொடு - குற்றமற்ற அறக் கற்பினையுடைய தெய்வயானையாருடன், சின்னாள் ஆவினன் குடி அசைதலும் உரியன் சிலநாள் திருவாவினன்குடி என்னும் ஊரிலே இருத்தலும் உரியன்.

கருத்துரை : குற்றமற்ற அறக்கற்பினையுடைய தெய்வயானையாருடனே சிலநாள் திருவாவினன் குடி என்னும் ஊரிலே இருத்தலும் உரியன் என்பதாம்.

அகலவுரை : ஆதலானே ஆண்டுச் சென்றாலும் அப்பெருமானை நீ காணக் கடவை என்பதாம்.

தா-குற்றம், கற்பு என்பது மேற்கோளே யாகலான் கொள்கை என்றார். தாவில் கொள்கை எனவே, அறக்கற்பு என்றாராயிற்று. மகளிர் மாண்பினில் எவற்றினும் தலைசிறந்தது கற்பே ஆகலின், அஃதொன்றனையே விதந்தோதினார். மடந்தையொடும் அடைதலும் உரியன் எனவே, இல்லறத்தார் இயல்பில் ஆண்டுறைகின்றான் ஆகலின் தன்பால் வந்த விருந்தினரை அவ்வறத்தானே நன்கு போற்றுவன் என்றாராயிற்று ஆவினன் குடி - பழனி. இவ்வூரைப் பற்றி, இனிச் சித்தன் வாழ்வென்று சொல்லுகின்ற ஊர் முற்காலத்து ஆவினன்குடி என்று பெயர் பெற்ற தென்றுமாம். அது :

நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன்வாழ்
வில்லந் தொறுமூன் றெரியுடைத்து - நல்லரவப்
பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின்
னாட்டுடைத்து நல்ல தமிழ்

என்று அவ்வையார் கூறியதனாலுணர்க. சித்தனென்பது பிள்ளையாருக்குத் திருநாமம் என்று கூறியுள்ளார் நச்சினார்க்கினியர். நக்கீரர் காலத்தினாதல் நச்சினார்க்கினியர் காலத்தினாதல் இது பழனி என வழங்கப்படவில்லை. திருவாவிநன்குடி எனத் தந்நகரமிட்டு எழுதுவாரும் திருவாவினன் குடி என றன்னகரமிட்டெழுது வாரும் என, இருதிறத்தாரும் உளர். திருவாவிநன்குடி யாயின் அழகிய வாவியை உடைய நல்ல குடியினையுடைய ஊரென்க. திருவாவினன் குடியாயின். திருஆ இனன் குடி எனக் கண்ணழித்துச் செல்வமாகிய ஆனினங்கள் மிக்க குடி என்க. பண்டைக்காலத்தே இது பொதினி என்னும் பெயருடைத்தாய் ஆவி என்னும் வேளிர் தலைவனுக்கு உரியதாயிருந்தது என வரலாற்றாசிரியர் கூறுவர். எனவே, ஆவி நன்குடி - ஆவி என்பானுக்குரிய நன்குடியை உடைய ஊர் என்றலே சாலப் பொருந்துதல் அறிக. இனி, முனிவர் முற்புக மேவலர் மகளிருடன் விளங்கத் திருமாலும் உருத்திரனும் இந்திரனுமாகிய பலர்புகழ் மூவரும் தலைவராக, நான்முக ஒருவற்சுட்டி முப்பத்து மூவரும் பதினெண் கணத்தாரும் தோன்றலர் செலவினர் குரலினர் கொட்பினராய் வந்து காண, மடந்தையொடு சின்னாள் ஆவினன் குடியில் அசைதலும் உரியன் என்று தொடர்பு காண்க. இனி, 176-அதாஅன்று என்பது தொடங்கி, 189 ஏரகத்துறைதலும் உரியன் என்னும் துணையும் ஒருதொடர். இதன்கண், முருகக்கடவுள் திருவேரகம் என்னும் திருப்பதியின்கண் வீற்றிருக்கும் மாண்பினை விரித்தோதுகின்றார்.

திருவேரகம்

இருபிறப்பாளர் முருகனை வழிபடு மாண்பு

176-189 : அதாஅன்று ............... உரியன்

பொருள் : அதா அன்று - அவ்வூரேயல்லாமல், இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது - ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றல் என்னும் ஆறாகிய நன்மைபொருந்திய இலக்கணத்தில் வழுவாமல், இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி - தாயும் தந்தையுமாகிய இருவர் குலத்தையும் உலகத்தார் நன்றென்று மதித்த பலவாய் வேறுபட்ட பழைய குடியிற் பிறந்த, அறுநான்கு இரட்டி இளமை நல் யாண்டு - இருபத்து நான்கின் இரட்டியாகிய நாற்பத்தெட்டாகிய இளமை மிக்க நன்றாகிய யாண்டுகளை, ஆறினிற் கழிப்பிய - மெய்ந்நூல் கூறும் நெறியானே கழித்த, அறன நவில் கொள்கை - அறத்தை எப்பொழுதும் கூறுகின்ற கோட்பாட்டினையும், மூன்றுவகை குறித்த முத்தீச் செல்வத்து -நாற்சதுரமும் முச்சதுரமும் வில்வடிவமுமாகிய மூன்றுவகையைக் கருதின ஆகவனீயம் தக்கிணாக்கினி காருகபத்தியம் என்னும் மூன்று தீயானுண்டாகிய செல்வத்தினையும் உடைய, இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல - நூலணிதற்கு முன்னர் ஒரு பிறப்பும் பின்னர் ஒரு பிறப்புமாகிய இருபிறப்பினையுமுடைய அந்தணர் தாங்கள் வழிபடுங் காலமறிந்து வாழ்த்துக்கூறா நிற்ப, ஒன்பதுகொண்ட மூன்று புரிநுண் ஞாண் - முந்நூல் கொண்டு முப்புரியாக்குதலின் ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தே கொண்ட ஒரு புரி மூன்றாகிய நுண்ணிய பூணூலையும் உடைய, புலராக் காழகம் புலர உடீஇ-நீராடுங்காற் றோய்க்கப்பட்ட கலிங்கம் உடம்பிலே கிடந்து புலரவுடுத்து, உச்சிக் கூப்பிய கையினர் - தலைமேலே குவித்த கையை உடையராய், தற் புகழ்ந்து - தன்னைத் துதித்து, ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி - ஆறெழுத்தினைத் தன்னிடத்தே அடக்கி இருக்கின்ற கேட்டற்கரிய மறைய ஓதப்படும் மந்திரத்தை, நா இயல் மருங்கின் நவிலப் பாடி - நாப் புடை பெயரும் அளவானே பயில ஓதி, விரை உறு நறுமலர் ஏந்தி - மணமிக்க நறிய பூவை எடுத்துத் தூவாநிற்ப, பெரிது உவந்து ஏரகத்து உறைதலும் உரியன் - அச்செயற்குப் பெரிதும் மகிழ்ந்து திருவேரகம் என்கின்ற ஊரிலே இருத்தலும் உரியன்.

கருத்துரை : ஓதல் முதலிய தமக்குரிய அறுவகைத் தொழில்களைச் செய்தலிலே வழுவாமல், தாயும் தந்தையும் என்னும் இருவர் குலமும் நன்றென்று உலகத்தார் மதித்தனவாகிய பல்வேறு பழங்குடிப் பிறப்பினராய் நாற்பத்தெட்டியாண்டாகிய நல்ல இளமைக்கால முழுதும் பிரமசரியங் காத்த பேராண்மையாளராய், அறங்கூறும் கோட்பாட்டையராய் நாற்சதுரம் முச்சதுரம் வில்வடிவம் என்னும் மூன்றுவகையாகக் கருதிய ஆகவனீயம் தக்கிணாக்கினி காருகபத்திய என்னும் மூன்று தீயானே உண்டாகிய செல்வத்தையும் இருபிறப்பினையும் உடைய அந்தணர் தாங்கள் வழிபடுதற்குரிய காலமறிந்து பூணுநூலையும் புலராத ஆடையையும் அணிந்துகொண்டு தலைமேலே குவித்த கையினராய் (முருகனாகிய) தன்னைப் புகழ்ந்து ஆறெழுத்தடக்கிய கேட்டற்கரிய மந்திரத்தை நாப்புடை பெயருமளவானே ஓதி, மணமிக்க மலர்களைச் சிதறி, வாழ்த்துக்கூறப் பெரிதும் உவந்து திருவேரகம் என்னும் ஊரிலே இருத்தலும் உரியன் என்பதாம்.

அகலவுரை : மெய்ந் நூலில் அந்தணர்க்கோதிய இயல்பு ஆறாகலின், இரு மூன்று எய்திய இயல்பு என்றார். அவை ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றல் என்பன. இதனை,

அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்  (தொல்.புறத் - 20)

என்னும் தொல்காப்பியத்தானறிக. இவ்வாறனுள், ஓதல் - இருக்கு முதலிய மறைகளையும் இலக்கணங்களையும் அறநூல்களையும் ஆறங்கங்களையும் பயிலுதல். ஓதுவித்தல் - கொள்வோன் உணர்வுவகையறிந்து அவன் கொள்வரக் கொடுக்கும் ஈவோன்றன்மையும், ஈதலியற்கையுமாம். வேட்டலாவது, ஐந்தீயாயினும் முத்தீயாயினும் உலகயற்றீயாயியினும் ஒன்று பற்றி மங்கல மரபினாற் கொடைச்சிறப்புத் தோன்ற மந்திர விதியாற் கொடுக்குஞ் செய்தி வேளாண்மை பற்றி வேள்வியாயிற்று. வேட்பித்தலாவது - வேள்வி யாசிரியர்க்கோதிய இலக்கண மெல்லாம் உடையனாய் மாணாக்கற்கு அவன் செய்த வேள்விகளால் பெரும்பயனைத் தலைப்படுத்துதல். ஈதலாவது - வேள்வியாசானும் அவற்குத் துணையாயினோரும் ஆண்டு வந்தோரும் இன்புறுமாற்றான் வேளாண்மை செய்தல். ஏற்றலாவது - கொள்ளத்தகும் பொருள்களை அறிந்து கொள்ளுதல் என்க.

ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல்என் றாறுபுரிந் தொழுகும்
அறம்புரி அந்தணர்

என்றார் பிறரும்.

இருவர் - தாயும் தந்தையும். தாயும் தந்தையுமாகிய இருவர் குடியும் உயர்குடி என்று உலகத்தாராற் சுட்டிப் புகழப்பட்ட நற்குடிப் பிறப்பினர் என்றவாறு. அந்தணர்க்குரிய நல்லொழுக்கத்தே வழுவாமல் நிற்றற்குத் தலைசிறந்த ஏதுவாவது உயர்குடிப் பிறப்பேயாகலின் அதனை விதந்தெடுத்தோதினார். என்னை ?

இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு  (குறள் - 651)

என்றும்,

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்   (குறள் - 653)

என்றும்,

நகையிகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு  (குறள் - 652)

என்றும் மெய்க்காட்சியாளர் ஓதுபவாகலானும், குடிப்பிறப்பின் குணமாகிய ஒழுக்கமில்வழி, பார்ப்பான் பிறப்புக்கெடும் என்பவாகலானும் என்க.

அறுநான் கிரட்டி - நாற்பத்தெட்டு. நாற்பத்தெட்டு யாண்டு பிரமசரியங்காத் தென்பார் ஆறினிற் கழிப்பி என்றார். ஆறு - நன்னெறி. கழித்தல் அருமை என்பது தோன்றக் கழிப்பி என்றார். உலகில் காம முதலிய நுகர்வார்க்குப் பதினாறாண்டு அகவைமுதல் நாற்பத்தெட்டாண்டிறுதியாகவுள்ள பருவமே தகுதியான பருவம் ஆதலால், அத்தகைய பருவத்தினும் காம முதலியவற்றில் உளம் போக்காது அடக்கிய அருமை தோன்ற நல்லியாண்டு ஆறினிற் கழிப்பி என்றார். என்னை?

மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்
டிடங்கழி நெஞ்சத் திளமை யானை
கல்விப் பாகன் கையகப் படாஅ
தொல்கா உள்ளத் தோடும்  (சிலப். 23: 36-9)

என்பவாகலான் அப்பருவத்தே மனமடக்கிப் பிரமசரியத்தே நிற்றல் அருமையாகலான் என்க. முத்தீ என்றதற்கு மூன்றாவன ஒன்று வேதத்தை வழங்கவும் ஒன்று தேவர்கட்குத் தக்கிணை கொடுக்கவும், ஒன்று பூலோகத்தை இரட்சை பண்ணவும் இவ்வாறாய முத்தீ என்பாருமுளர். பொழுதறிந்து நுவல என்பதற்கு, உதயகாலத்தும் மத்தியான காலத்தும் அத்தமன காலத்தும் தாபனம். அநுட்டானம், பூசையாகிய மூன்று தொழிலையும் முயன்று செய்ய என்பாருமுளர். நுவல - வாழ்த்துக்கூற (182) நுவல என்பதனை (188) ஏந்தி என்பதன் பின்னாக இயைத்துக்கொள்க. ஒவ்வொரு நூலும் மூன்று புரி உடைத்தாய் மூன்றாகலின் ஒன்பது கொண்ட மூன்று புரி நுண்ஞாண் என்றார். ஞாண் - ஈண்டுப் பூணும் நூல் என்க. நீராடிய ஆடை புலராதபடியிருந்து வழிபடுவார் என்பார், புலராக் காழகம் புலர உடீஇ என்றார். புலர - தம்முடம்பிலிருந்தே புலரும் படி என்க. காழகம் - ஆடை. களிறுமேற் கொள்ளவும் காழகம் நீப்பவும் (புறம்.41:9) என்புழியும் அஃதப்பொருட்டாதல் அறிக. உடீஇ - உடுத்து. தன் (முருகனாகிய) தன்னை, ஆறெழுத்தடக்கிய அருமறைக் கேள்வி என்றது. ஆறெழுத்து மறைமொழியை. அது சரவணபவ என்பது; நமோகுமாராய என்பதுமாம்.

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப

ஆகலான் ஆறெழுத்தடக்கிய அருமறை என்றார் எனினுமாம். நல்லாசிரியன் ஆணையால் மறைவாக மாணாக்கனுக்கு அறிவுறுத்தலின் மறைமொழியாயிற்றென்க. ஒலி, பிறர் செவியிற் படாதவாறு நாப்புடை பெயருமளவானே ஓதி என்பார் நாஇயல் மருங்கின் நவிலப் பாடி என்றார். இவ்வந்தணர் செயற்கு முருகக்கடவுள் பெரிதுவந்தார் எனவே மக்கள் தத்தம் பிறப்பிற்கேற்ற ஒழுக்கத்தே நிற்றல் இறைவன் பெரிதும் விரும்புவன் என்பதும் பெறப்பட்டது.

ஏரகம் - திருவேரகம் என்னும் ஊர். இதனை மலைநாட்டகத்தொரு திருப்பதி என்றார் நச்சினார்க்கினியர். சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் வெண்குன்றத்தைச் சுவாமிமலை எனலால் ஏரகம் மற்றொரு திருப்பதி என்று கருதினாராதல் வேண்டும். அருணகிரியார் சோழநாட்டிலுள்ள சுவாமிமலை என்னும் தலமே ஏரகம் என்று கொண்டனர். இதனை, காவிரியாற்றுக்கு ளேவருவளமைச் சோழநன்னாட்டுக்கு ளேரக நகரிற் சீர்பெறுமோட்சத்தை யேதருகுமரப்பெருமாளே! எனவும், யாவுமலை கொண்டுகைத்த காவிரி புறம்பு சுற்று மேரகம் அமர்ந்த பச்சை, மயில்வீரா எனவும் வரும் திருப்புகழானறிக. இனி, இருபிறப்பாளர் பொழுதறிந்து உடீஇ, புகழ்ந்துபாடி ஏந்தி நுவல உவந்து ஏரகத்து உறைதலும் உரியன் என்று முடிவு செய்க. இனி 190-பைங்கொடி என்பது முதல், 217- குன்றுதோறாடலும் நின்றதன் பண்பே என்னுந்துணையும் ஒரு தொடர். இதன்கண் முருகக்கடவுள் குறிஞ்சித் தெய்வமாதலான் எல்லா மலைகளினும் திருவிளையாடல் செய்வன் என்பதுபற்றிப் பொதுவிற் குன்றுதோறாடும் மாண்பு கூறப்படும்.

குன்றுதோறாடல்

வெறியாட்டயரும் வேல்மகனியல்பு

189-197 : அதாஅன்று ................ அயர

பொருள் : அதாஅன்று - அதுவேயன்றி, வேலன் பைங்கொடி நறைக்காய் இடைஇடுபு -படிமத்தான் பச்சிலைக்கொடியாலே நறுநாற்றத்தையுடைய காயை நடுவே இட்டு, அம்பொதிப் புட்டில் விரைஇ - அழகினையுடைத்தாகிய தக்கோலக் காயைக் கலந்து, குளவியோடு வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன் - காட்டுமல்லிகையுடனே வெண்டாளியையும் கட்டின கண்ணியை உடையவனாய், நறுஞ்சாந்து அணிந்த கேழகிளர் மார்பின் - நறிய சந்தனத்தைப் பூசிய நிறம் விளங்கும் மார்பினையுடைய, கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர் - கொடிய தொழிலையுடைய வலிய வில்லாற் கொல்லுதலைச் செய்த குறவர், நீடு அமை விளைந்த தேம் கள் தேறல் - நெடிய மூங்கிலிலே யிருந்து முற்றின தேனாற் செய்த கட்டெளிவை, குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து - மலையிடத்தேயுள்ள சிறிய ஊரிலே இருக்கின்ற தம் சுற்றத்தோடே உண்டு மகிழ்ந்து, தொண்டகச் சிறுபறை குரவை அயர - அந்நிலத்துக்குரிய தொண்டகமாகிய சிறுபறையினது தாளத்திற்குக் குரவைக் கூத்தை யாடாநிற்ப;

கருத்துரை : அத்திருவேரகமும் அல்லாமல் படிமத்தான் பச்சிலைக் கொடியாலே நறிய நாற்றத்தையுடைய காயை இடையே இட்டுத் தக்கோலக் காயையும் கலந்து காட்டுமல்லிகையுடனே வெண்டாளியையும் கட்டின கண்ணியை உடையனாய் நறிய சந்தனத்தைப் பூசிய மார்பினையுடைய கொடிய தொழிலையுடைய வில்லாலே கொல்லுதலைச் செய்த குறவர்கள் மங்கிற் குழாயிலே தேனைப் பெய்து முற்றச்செய்த கள்ளை மலைநிலத்துச் சிறிய ஊரிலுள்ள தம் சுற்றத்தாரோடே உண்டு மகிழ்ந்து தொண்டகப்பறையை முழக்கி அதன் தாளத்திற்கியைய ஆடாநிற்பர் என்பதாம்.

அகலவுரை : வேலன் என்னும் எழுவாய் ஆடலும் (217) பண்பு என்று முடியும். பைங்கொடி - பச்சிலைக் கொடி எல்லாவற்றிலும் பசுத்திருத்தலிற் பச்சிலை என்று பெயர் பெற்றது என்பர் நச்சினார்க்கினியர். நறைக்காய் - சாதிக்காய். இடைஇடுபு - நடுவேஇட்டு. தக்கோலக்காய் புட்டில் போறலின் புட்டில் எனப்பட்டது. விரைஇ - கலந்து. குளவி - காட்டுமல்லிகை. வெண்கூதாளம் - வெண்டாளி. சாந்து - சந்தனம். கேழ் - நிறம். கிளர்தல் - விளங்குதல். மார்பினையுடைய குறவர் எனக் குறவர்க்குச் சொற்கிடந்தவாறே அடையாக்குக. வேலனுக்கு ஏற்றி மொழிவர் நச்சினார்க்கினியர்.

கொடிய தொழிலையுடைய வலிய வில்லாலே கொலைசெய்த கானவர் என்க. இவர் குறிஞ்சி நிலமாக்கள். அவர் செய்தியும் தெரித்தோதினர் என்க. மூங்கிற் குழாயிற் றேனைப் பெய்து முதிர்வித்துக் கள் சமைத்தலை, வேய்ப்பெயல் விளையுட் டேக்கட் டேறல் எனவும், திருந்தமை விளைந்த தேக்கட் டேறல் (மலைபடு 171 - 522) எனவும் மலைபடு கடாத்தினும், தூம்பகம் பழுநிய தீம்பிழி எனப் பதிற்றுப்பத்தினும் நெடுங்கணாடமைப் பழுநிக் கடுந்திறற் பாப்புக்கடுப்பன்ன தோப்பி எனவும், அம்பணை விளைந்த தேக்கட்டேறல் (348: 6 -7. 368: 14) எனவும் அகத்தினும் பிற சான்றோர் கூறுதலானும் உணர்க. அமை - மூங்கில். இக் கள் மிக இனிதாதல் பற்றித் தேக்கட்டேறல் என்றார். தேம் - இனிமை. கட்டேறல் - கள்ளின் தெளிவென்க. குன்றகச் சிறுகுடி - மலையகத்தே உள்ள சிறிய ஊரிலுள்ள குடி என்க. சிறு குடியீரே! சிறு குடியீரே! (குன்றக் குரவை) என்றார் சிலப்பதிகாரத்தும். முருகனுக்கு மலைநிலத்தார் விழவெடுக்கும்போது தம் சுற்றத்தாராகிய அயலூரில் வாழ்வோரையும் அழைத்து அவரோடு கள்ளுண்டு மகிழ்ந்து குரவை ஆடுதல் வழக்கம் ஆதலை உணர்க. குறவர் இங்ஙனம் கூத்தாடுதலை,

அருங்குறும் பெறிந்த கானவ ருவகை
திருந்துவேல் அண்ணற்கு விருந்திறை சான்மௌ
நறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரொடு
மான்றோல் சிறுபறை கறங்கக் கல்லென
வான்றோய் மீமிசை யயருங் குரவை   (மலைபடு - 318-22)

எனவரும் மலைபடு கடாஅத்தானும் உணர்க. தொண்டகம் - குறிஞ்சிப்பறை. தொண்டகந் தொடுமின் சிறுபறை தொடுமின் (குன்றக்குரவை) என்றார் இளங்கோவும். குரவை - ஒருவகைக் கூத்து. இஃது எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைகோத்தாடும் கூத்தென்பர். வரிக்கூத்துள் ஓருறுப்பென்றும், விநோதக்கூத்து ஆறனுள் ஒன்றென்றும் உரைப்ப. விநோதக்கூத்து குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை என்னும் ஆறுமாம். குறவர்கள் குரவையாடி முருகவேளைப் பரவுதலைச் சிலப்பதிகாரத்தில் குன்றக் குரவையானே அறிக. அயர்தல் - ஆடுதல்.

மலைநிலத்து மகளிர் மாண்பு

198 - 205 : விரல் ............... மகளிரொடு

பொருள் : விரல்உளர்பு அவிழ்ந்த வேறுபடு நறுங் கான் - விரலது அலைப்பாலே மலர்ந்தமையாலே வேறுபடுகின்ற நறிய மணத்தையுடைய, குண்டு சுனைபூத்த வண்டுபடு கண்ணி - ஆழ்ந்த சுனையிற் பூத்த மலராலே புனையப்பட்ட வண்டு வீழ்கின்ற மாலையினையும், இணைத்த கோதை - பிணைக்கப்பட்ட மாலையினையும், அணைத்த கூந்தல் - சேர்த்தின கூந்தலையும் உடையராய், முடித்த குல்லை - இலையைத் தலையிலே அணிந்த கஞ்சங்குல்லையினையும், இலைஉடை நறும்பூச் செங்கரல் மராஅத்த வால் இணர் இடை இடுபு சுரும்பு உணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை - நறிய பூங்கொத்துக்களையும் செவ்விய காலினையுமுடைய மராத்திடத்தனவாகிய வெள்ளிய கொத்துக்களை நடுவே வைத்துச் சுரும்பு தேன் உண்ணும்படி தொடுத்த பெரிய குளிர்ந்த அழகினையுடைய தழையை, திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீகு - திருந்திய வடங்களையுடைய அல்குலிடத்தே அசையும்படி உடுத்து, மயில் கண்டன்ன மடநடை மகளிரொடு - சாயலுடைமையான் மயிலைக் கண்டாற்போன்ற மடப்பம் பொருந்திய நடையையுடைய மகளிரோடேயும்;

கருத்துரை : விரலாலே வலிந்து அலர்த்தப்பட்டமையானே மணம் வேறுபடுகின்ற சுனையிற்பூத்த மலராலே புனையப்பட்ட வண்டுகள் மொய்க்கும் கண்ணியையும், பிணைக்கப்பட்ட பிற மாலைகளையும், சேர்த்தின கூந்தலையும், உடையராய், கஞ்சங்குல்லையினையும், நறிய பூங்கொத்துக்களையும், மராமரத்து மலர்க்கொத்துக்களை இடையே இட்டுத் தொடுக்கப்பட்ட பெரிய குளிர்ந்த அழகிய தழையை வடங்கள் திருந்திய அல்குலிடத்தே ஆடையாக உடுத்து மயிலைக் கண்டாற் போன்ற சாயலையுடைய மகளிரோடேயும் என்பதாம்.

அகலவுரை : அலரும் பருவமுடைய அரும்பைப் பறித்து இயல்பாக அது மலர்வதன்முன் விரலால் அலைத்து அலர்த்தித் தொடுத்த கண்ணி என்க. இக்கண்ணி இயல்பாக மலர்ந்த மலர்நாற்றத்திற் சிறிது வேறுபட்ட நாற்றமுடைத்தென்பார் வேறுபடு நறுங்கான் என்றார். திரிந்து மோந்தன்ன சிறந்துகமழ் நாற்றம் (567) என்றார் மதுரைக் காஞ்சியினும். கான் - மணம். கான்பயந்த கண்ணி, (பெரும்பாண், இறுதிவெண்பா) என்புழியும், அஃதப்பொருட்டாதல் காண்க. தண்கயத்தமன்ற வொண்பூங்குவளை அரும்பலைத் தியற்றிய சுரும்பார் கண்ணி பின்னிப்புறந்தாழக் கொன்னே சூட்டி, (அகம்.180 : 5.7.) என்றும் கூருகிர் விடுத்ததோர் கோல மாலை, (சீவக-1466) என்றும் பிறரும் ஓதுதல் காண்க.

இணைத்த கோதை என்றது, வேறுவேறு மாலைகளை இணைத்த மாலை என்றவாறு. அணைத்த - சேர்த்திய. அணைத்த கூந்தலாவது, இடுமயிர் என்க. இனி, அக் குறிஞ்சிநில மகளிர் உடுத்துள்ள தழையாடையின் இயல்பு ஓதுகின்றார். குல்லை-கஞ்சங் குல்லை, இதனைக் கஞ்சா என்றும் கூறுப. கஞ்சங் குல்லை கஞ்சா வாகும், என்பது திவாகரம். இலையுடை நறும்பூ என்றது. இலையோடுகூடிய நறிய பூங்கொத்து என்றவாறு. செங்கால் - சிவந்த அடிப்பகுதி. மராம் - கடம்பு. வாலிணர் - வெள்ளிய பூங்கொத்து. இடையிடுபு - நடுநடுவே இட்டு, குல்லைப் பூவையும் கடப்பம்பூவையும் பெரிய அழகிய தழையிடையே இட்டு ஆடைபோலப் புனைந்து உடுத்தி என்க. பண்டைக்காலத்தே மகளிர் இங்ஙனம் தழையாலே ஆடை இயற்றி உடுத்தும் வழக்கமுடையர் என்பதை. பல்பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல் (நற்றிணை, 8-2) என்றும்,

தண்ணறும் பிடவமும் தவழ்கொடித் தளவமும்
வண்ணவண் டோன்றியும் வயங்கிணர்க் கொன்றையும்
அன்னவை பிறவும் பன்மலர் துதையத்
தழையும் கோதையும் இழையும் என்றிவை
தையினர் மகிழ்ந்து திளைஇ விளையாடு
மடமொழி யாயத் தவர்  (கலி. 102:2-7)

என்றும்,

அம்பூந் தொடலை அணித்தழை அல்குல்
செம்பொறிச் சிலம்பின் இளையோள்  (புறம்.341: 2-3)

என்றும்,

................ மென்றளிர்க்
கொழுங்கொம்பு கொழுதி நீர்நனை மேவர
நெடுந்தொடர்க் குவளை வடிம்புற அடைச்சி  (மதுரைக்.586-8)

என்றும்,

................ கிளையிதழ் பறியாப்
பைவிரி யல்குல் கொய்தழை தைஇ  (குறிஞ்சி. 101-2)

என்றும் பிறசான்றோர் ஓதுமாற்றானும் உணர்க. இம்மகளிர் முருகனைச் சேவிக்கும் மகளிர் என்பர் நச்சினார்க்கினியர்.

இதுவுமது

206-217 : செய்யன் ............... பண்பே

பொருள் : செய்யன் - சிவந்த திருமேனியுடையனாய், சிவந்த ஆடையன் - சிவந்த ஆடையை உடையனாய், செவ்வரைச் செயலைத் தண் தளிர் துயல்வரும் காதினன் - சிவந்த அரையினை யுடைய அசோகின் குளிர்ந்த தளிர் அசையாநின்ற செவியை உடையனாய், கச்சினன் - கச்சைக் கட்டியவனாய், கழனினன் - வீரக்கழல் கட்டியவனாய், செச்சைக் கண்ணியன் - வெட்சிமாலை சூடியவனாய், குழலன் - குழலை ஊதுபவனாய், கோட்டன -கொம்பைக் குறிப்பவனாய், குறும்பல்லியத்தன் - சிறிய இசைக் கருவிகளை ஒலிப்பவனாய், தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவலங் கொடியன் - கிடாயையும் மயிலையும் உடையனாய்க் குற்றமில்லாத கோழிக்கொடியை உயர்த்து, நெடியன் - தான்வேண்டிய வடிவு கோடலில் பிள்ளையாயிராது நெடுக வளர்ந்து, தொடியணி தோளன் - தொடியை அணிந்த தோளையுடையனாய், நரம்பு ஆர்த்தன்ன இன்குரல் தொகுதியொடு - நரம்பு ஆரவாரித்தாலொத்த இனிய மிடற்றையுடைய அம் மகளிர் கூட்டத்தோடேயும், குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல் - உதர பந்தனத்தின் மேலே உடுப்பதாகக் கொண்டதும் நறிய குளிர்ந்த மென்மையுடையதுமாகிய, மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன் - இடையிலே கட்டப்பட்ட நிலத்தினளவும் தூங்காநின்ற துகிலையுடையவனாய், முழவு உறழ் தடக்கையின் இயல ஏந்தி - முழவையொத்த பெருமையுடைய கைகளாலே பொருந்தத் தாங்கி, மென்தோள் பல்பிணை தழீஇ - மெல்லிய தோளையுடைய மான்பிணைபோலும் பல மகளிரைத் தழுவிக்கொண்டு, தலைத்தந்து-அவர்கட்கு ஏற்ற இருக்கை கொடுத்து, குன்றுதோறு ஆடலும் - மலைகள்தோறும் சென்று விளையாடுதலும், நிலைஇய பண்பே - தனக்கு நிலைநின்ற குணமாம்.

கருத்துரை : சிவந்த திருமேனியையுடையவனாய்ச், சிவந்த ஆடையை யுடையனாய், அசோகினது குளிர்ந்த தளிர் அசையாநின்ற செவியை உடையனாய்க் கச்சணிந்தவனாய்க் கழல்கட்டியவனாய், வெட்சிமாலை சூடியவனாய்க் குழலை ஊதிக் கொம்பைக் குறித்துச் சிறிய இசைக்கருவிகளை ஒலித்துக் கிடாயையும் மயிலையும் உடையவனாய்க் கோழிக் கொடியை உயர்த்தவனாய், நெடியனாய்த் தொடியை அணிந்த தோளுடையனாய், யாழ்நரம்புபோன்ற இனிய குரலுடைய மகளிர் கூட்டத்தோடேயும்; உதரபந்தனத்தின் மேலே உடுப்பதாகக்கொண்ட நறிய குளிர்ந்த மென்மைமிக்கதாகிய இடையிற் கட்டிய ஆடை நிலத்தளவும் தூங்கப்பெற்றவனாய் முழவை ஒத்த பெரிய கைகளாலே பொருந்த ஏந்தி மெல்லிய தோளையுடைய மான்பிணைபோன்ற பல மகளிரைத் தழுவிக்கொண்டு அவர்க்கு இடமளித்து மலைகள்தோறும் சென்று விளையாடுதலும் அம் முருகக்கடவுள் ஆண்டு நிலைநின்றதனால் உண்டாய குணமாம் என்பதாம்.

அகலவுரை : வேலன் கண்ணியனாய்க் கானவர் குரவை அயரக் கண்ணியையும் கூந்தலையும் உடையராய்த் தழையை உடீஇ மயில் கண்டன்ன மகளிரொடும் செய்யனாய்க் காதினனாய்க் கச்சு முதலியவற்றை உடையவனாய்த் தொகுதியொடும் கையினேந்திப் பிணை தழுவிக் குன்றுதோறும் ஆடுதலும் அம் முருகக்கடவுள் ஆண்டு நிலைத்து நிற்றலால் உண்டாகிய பண்பே எனக் கூட்டிக்கொள்க. ஆதலால், ஆண்டும் அவ்விறைவனைக் காணலாம் என ஆற்றுப்படுத்தவாறு.

இதனை இவ்வாறு பொருட் பொருத்தமுறப் பொருள் காணமாட்டாது தத்தம் மனம்போனவாறே பிறரெல்லாம் வெவ்வேறாக உரைத்தனர். அவருள் நச்சினார்க்கினியர், கானவர் குரவை யயர அதனைக் கண்டு மென்றோட் பல்பிணை குரவையாடி, அசைய அதனைப் பொறாதே செய்யன் வேலன் தொடுத்த கண்ணியைச் சூடி உடுத்துப் பொருந்திக் கட்டி யணிந்து சூடி ஊதிக்குறித்து எழுப்பிப் பின்னிட்டு ஏறி உயர்த்து வளர்ந்து தொடியை அணிந்து துகிலையுடுத்துத் தொகுதியுடனே மகளிரோடே மலைகடோறும் சென்று தழீஇ ஏந்தித் தலைத்தந்து ஆடலும் நின்றதன் பண் பென வினைமுடிவு செய்வர். ஈண்டுச் செய்யன் முதலியவற்றை முருகனுக்கேற்றி நச்சினார்க்கினியர் கூறுதல் வெளிப்படை. ஆசிரியர் நக்கீரர், இப்பகுதியால் உணர்த்துவது குறிஞ்சிநிலத்தின்கண் வேன்மகன், முருகக்கடவுளுக்குரிய ஆடை ஊர்தி கொடி முதலியவற்றை உடையனாய்க் குரவைக் கூத்தாடும் கானவரோடும் மகளிரொடும் பாடும் மகளிரொடும் குன்றுகளிலே முருகனுக்கு விழவெடுத்து ஆடுகின்றானன்றோ (அவ்வாடலினும் முருகன் அவ்வேன் மகன்மேற் றோன்றி நிற்கும் ஆதலின்) அவ்வாடலும் அக்கடவுள் ஆண்டு அவர் விழவினை ஏற்று வெளிப்பட்டு நின்ற குணத்தாலேயாகும். ஆதலால், ஆண்டும் முருகனைக் காணுதல் கூடும் என்பதாம். தெய்வமேறி யாடுவோர் அத் தெய்வத்திற்குரிய வேடங்கொண்டு ஆடுதலும் அங்ஙனம் ஆடுவார்மேல் அத்தெய்வமேறி மக்கட்கு அளித்தலுமான உண்மையைச் சிலப்பதிகாரத்துள் வேட்டுவவரியில் சாலினி (தேவராட்டி) தெய்வமுற்று மெய்ம்மயிர் நிறுத்துக் கையெடுத்தோச்சி ஆடி நின்றாளை,

சிறுவெள் ளரவின் குருளைநாண் சுற்றிக்
குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி
இளைசூழ் படப்பை இழுக்கிய ஏனத்து
வளைவெண் கோடு பறித்து மற்றது
முளைவெண் டிங்கள் என்னச் சாத்தி
மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற
மாலை வெண்பற் றாலிநிரை பூட்டி
வரியும் புள்ளியும் மயங்கு வான்றபுத்
துரிவை மேகலை யுடீஇப் பரிவொடு
கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத்
திரிதரு கோட்டுக் கலைமே லேற்றிப்
பாவையுங் கிளியும் தந்தனர் பரசி

அவளைக் கொற்றவையாகக் கொண்டு வழிபடுதலும், அங்ஙனம் வழிபடும் அவர்க்கு அக் கொற்றவைதானும் அருள் கூர்ந்து அச்சாலினியின் மேல் எழுந்தருளி அவள் நாவைத் தன்னாவாகக் கொண்டு அவர்க்கு அருள் வழங்குதலும், ஆண்டு ஒருசார் நின்ற கண்ணகியாரை அச்சாலினி முதலிய யாரும் முன்னர் அறியாராகவும், அவரை நோக்கியவுடன் உவந்து,

இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியா யுலகிற் கோங்கிய
திருமாமணி

என அப்பத்தினித் தெய்வத்தின் எதிர்கால நிலைமையினையும் மாண்பினையும் வாய்மையாக எடுத்தோதிப் புகழ்தலும் ஆகிய நிகழ்ச்சிகளால் தெற்றெனத் தெளிக. ஈண்டுச் சாலினிபாற் கொற்றவை நிலைநின்ற பண்பினை இளங்கோ கூறுமாறு போன்றே நக்கீரனாரும் முருகக் கடவுள் குன்றுதொறும் ஆடும் வேலன்மேனின்ற பண்பினை யுரைக்கின்றார் என்க. செய்யன் என்றது, சிவந்த மேனியுடையன்போன்று வேடங்கொண்டவனாய் என்றவாறு. செவ்வரைச் செயலை - சிவந்த அடிப்பகுதியையுடைய அசோகமரம். அசோகந் தளிரைச் செவியிலே அணிந்துகொள்ளும் வழக்கத்தை, வண்காது நிறைந்த பிண்டி யொண்டளிர் நுண்பூ ணாகந் திளைப்ப (முருகு - 31-2) என இவரே முன்கூறியமையானும் சாய் குழைப் பிண்டி தளிர் காதிற் றைஇயினாள், எனவும், கடிமலர்ப் பிண்டி தன் காதிற் செரீஇ (பரி-11. 59,12.89) எனவும், ஒண்பூம் பிண்டி யொருகாது செரீஇ (குறிஞ்சி - 119) எனவும், பிற சான்றோர் கூறுமாற்றானும் உணர்க. செச்சைக் கண்ணி - வெட்சிமாலை. கண்ணி - தலையிற் சூடுமாலை. தகர் - ஆட்டுக்கிடாய். மஞ்ஞை - மயில். நாரதமுனிவன் செய்த வேள்வியினின்று தோன்றிய ஆட்டுக்கிடாய் மூன்றுலகத்தையும் துன்புறுத்திய தென்றும், தேவர்கள் முறையிட்டமையால் முருகக் கடவுள் அதனை அடக்கித் தம் ஊர்தியாகக் கொண்டனர் என்றும் கூறுப. கடலிடத்தே மாமரமாய் நின்ற அசுரனைத் தடிந்தபொழுது இருகூறு பட்ட உடலில் ஒன்று மயிலாகவும் மற்றொன்று கோழியாகவும் வர அவற்றை நிரலே ஊர்தியாகவும் கொடியாகவும் முருகப் பெருமான் கொண்டருளினர் என்ப.

இதனை,

.................... நெருப்பிலுதித்து
அங்கட் புவனம் அனைத்தும் அழித்துலவும்
செங்கட் கடாவதனைச் சென்றுகொணர்ந்து - எங்கோன்
விடுக்குதியென் றுய்ப்பவதன் மீதிவர்ந் தெண்டிக்கும்
நடத்தி விளையாடு நாதா  (கந்தர்கலி - 89)

என்றும்,

...................... போரவுணன்
அங்கமிரு கூறாய் அடல்மயிலும் சேவலுமாய்த்
துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் - அங்கவற்றுள்
சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே - மாறிவரு
சேவற் பகையைத் திறல்சேர் பதாகையென
மேவத் தனித்துயர்த்த வேலோனே  (கந்தர்கலி-100-3)

என்றும் வரும் குமரகுருபர அடிகளார் மொழியானும் உணர்க. நரம்பு ஆர்த்தன்ன இன்குரற் றொகுதி என்றது, வேன்மகன் ஆட்டத்திற்கு இயையப் பாடுகின்ற மகளிர் கூட்டத்தை என்க. யாழ் நரம்பின் இசைபோன்ற இனிய குரலையுடைய மகளிர்குழாம் என்றவாறு. குறும்பொறி - உதரபந்தனம். இயல ஏந்தி - பொருந்த ஏந்தி. பல்பிணை - பலவாகிய மான்பிணை போன்ற மகளிர். தலைத்தந்து என்றற்கு முற்கை கொடுத்தென்பர் நச்சினார்க்கினியர். தலைத்தந்து என்பதற்கு, ஆடுதலிற் றலைப்பட்டென்றுமாம். ஆடலும் நின்ற தன் பண்பே என்றது, இவ்வாறு வேன்மகன் ஆடுகின்ற ஆடலும் அப்பெருமான் ஆண்டு நின்றதனால் உண்டாய பண்பே என்றவாறு. இனி, 217-அதாஅன்று என்பது முதல் 270-ஆண்டாண்டுறைதலும் அறிந்த வாறே என்னுந்துணையும் ஒருதொடர். இதன்கண் முற்கூறிய இடங்களேயல்லால் அவ்விறைவனைக் கண்டுஅருள் பெறுதற்குரிய பிற இடங்கள் இவை எனக் கூறுகின்றார்.

ஊரூர் கொண்ட சீர்கெழு விழவு

207-220 : அதாஅன்று ............. விழவினும்

பொருள் : அதாஅன்று - அவ்விடமன்றியும், சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து - சிறிய தினை அரிசியைப் பூக்களோடே கலந்து பிரப்பரிசியாக வைத்து மறியை அறுத்து, வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ - கோழிக் கொடியோடே தான் அவ்விடத்தே நிற்கும்படி நிறுத்தி, ஊர் ஊர் கொண்ட சீர்கெழு விழவினும் - ஊர்தோறும் ஊர்தோறும் எடுத்துக் கொண்ட தலைமை பொருந்தின விழாவின் கண்ணும்;

கருத்துரை : அவ்வாறு குன்று தொறும் ஆடற்கண் அப் பெருமான் நிற்றலேயன்றியும், சிறிய தினையரிசியைப் பூக்களோடே கலந்து பிரப்பரிசியாக வைத்து மறியறுத்துக் கோழிக் கொடியுயர்த்து அவ்விடத்தே அவ்விறைப் பொருள் நிற்பதாக நினைத்து நிறுத்தி ஊர்கள் தோறும் எடாநின்ற தலைமை பொருந்தின விழாவிடத்தும் என்பதாம்.

அகலவுரை : தினை - அரிசிக்கு ஆகுபெயர். குறுணியளவிற்றாகப் பல கொள்கலங்களில் அரிசியைப் பெய்து பரப்பிவைத்தலைப் பிரப்பரிசி வைத்தல் என்ப. மறிக்குர லறுத்துத் தினைப்பிரப் பிரீஇ (குறுந் - 264:1) என்றும், உருவச் செந்தினை குருதியொடு தூஉய், (அகம் 22-10) என்றும் வருதல் காண்க. விரைஇ - கலந்து மறி - ஆடு. வாரணம் கோழி. தொல்காப்பிய மரபியல் 67ஆம் சூத்திர உரையில் பேராசிரியர் கடனறிந்தோர் என்றதனான் வழக்கினும் செய்யுளினும் அவை வந்தமையிற் கடியலாகா என்றவாறு. இன்னும் இப்பரிகாரத்தாலே கோழியை வாரணம் என்றலும் வெருகினை விடை என்றலும் போல்வன பலவுங் கொள்க, என்றோதுதலும் காண்க. கானவாரணம் ஈனும் காடாகி விளியும் நாடுடையோரே, (5) எனப் புறத்தினும் முறஞ் செவி வாரணம் முன்சம முருக்கிய புறஞ்செவி வாரணம். (10.247-8) எனச் சிலப்பதிகாரத்தும், பொறிமயிர் வாரணங் குறுங்கூ விளிப்ப (7: 106 என மணிமேகலையினும் வருதல் காண்க. வயின்பட நிறீஇ - அவ்விடத்தே நிற்கும்படி நிறுத்தி என்க. ஊர் ஊர் என்ற அடுக்கு ஊர்கள் தோறும் என்னும் பொருட்டு. சீர், ஈண்டு தலைமைமேனின்றது. குறிஞ்சிநிலத் தெய்வம் முருகன் ஆகலான், அவற்கு எடுக்கும் விழாவே ஏனை விழாக்களினும் சிறந்ததாகல் பற்றிச் சீர்கெழு விழவென்றார்.

ஆர்வலர் உள்ளத்திருக்கோயில்

221 : ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்

பொருள் : ஆர்வலர் ஏத்த - தன்பா லன்புடையார் தன்னை வழிபட்டு ஏத்துதலாலே, மேவரு நிலையினும் - தன்மனம் பொருந்துதல் வந்த இடத்தினும்;

கருத்துரை : தன்பாலன்புடையோர் ஏத்துதலாலே தன் மனம் பொருந்துதலையுடைய அவ்விடத்தினும் என்பதாம்.

அகலவுரை : இவ்வாறு குறித்துக் கூறப்பட்ட இடங்களில் அன்றியும், தன்னை வழிபடும் அடியார் எவ்விடத்தே நின்று தன்னை ஏத்தினர் அவ்விடத்தேயும் அம்முருகப் பெருமான் தோன்றி அருள்செய்வன் என்பதாம். எனவே, நீயும் அன்போடு வழிபட்டேத்துவாயாயின் அவ்விடத்தேயும் அப்பெருமானைக் காணக்கடவை என்றறிவுறுத்தவாறு. நெஞ்சில், ஒருகால் நினைக்கின் இருகாலுந் தோன்றும், முருகா என்றோதுவார் முன், (திருமுருகு வெண்பா. 6) என வருதல் காண்க.

ஆர்வலர் - இறைபணி நின்ற அடியவர். ஆர்வலர் நெஞ்சாகிய தாமரையில் எழுந்தருளுதல் அவ்விறைவனுக்குப் பெரிதும் விருப்பமுடைய செயலாகலின், மேவருநிலை என்றார். மேவருதல் - பொருந்துதல், வருதல். ஆர்வலர் உள்ளமே எனையிடங்களினும் முருகப்பெருமான் விரும்பி உறைதற்குப் பொருந்தியவிடம் என்றவாறு. மலர் மிசை ஏகினான் என வள்ளுவனார் கூறுதலும் அறிக.

வெறியயர் களனும் பிற இடங்களும்

222-226 : வேலன் .......... நிலையினும்

பொருள் : வேலன் தைஇய வெறி அயர் களனும் - படிமத்தான் இழைத்த வெறியாடு களத்தினும், காடும் காவும் கவின் பெறு துருத்தியும் - காட்டினும் பொழிலினும் அழகிய யாற்றிடைக் குறையினும், யாறும் குளனும் வேறுபல் வைப்பும் - யாறுகளினுங் குளங்களினும் முற்கூறப்பட்ட ஊர்களன்றி வேறுபட்ட பலவாகிய ஊர்களினும், சதுக்கமும் - நாற்சந்தியினும், சந்தியும் - முச்சந்தியினும் ஐஞ்சந்தியினும், புதுப் பூங் கடம்பும் - புதிய பூக்களையுடைய கடப்பமரத்தினும், மன்றமும் - ஊர்க்கு நடுவாய் எல்லாருமிருக்கும் மரத்தடியினும், பொதியிலும் - அம்பலத்தினும், கந்து உடை நிலையினும் - திருவருட் குறியாக நடப்பட்ட தறியிடத்தினும்;

கருத்துரை : வேன்மகன் இழைத்த வெறியாடு களத்தினும், காட்டினும், சோலையினும், அழகுபெற்ற யாற்றிடைக் குறையினும், யாற்றினும் குளத்தினும், முற்கூறப்பட்ட ஊர்களன்றி வேறாகிய பற்பல ஊர்களினும், நாற்சந்தியினும், முச்சந்தியினும் ஐஞ்சந்தியினும் புதிதாக மலர்ந்துள்ள கடப்ப மரத்தினும் ஊர்நடுவே மக்கள் குழுமியிருக்கும் மன்றத்து மரத்தினும், ஊரம்பலங்களினும், அருட்குறியாக நடப்பட்ட தறியிடங்களினும் என்பதாம்.

அகலவுரை : வெறியயர்களன் என்றது, வேன்மகன் முருகப்பெருமானுக்குக் களனிழைத்து வெறியாட்டயரும் இடம் என்றவாறு. பண்டைக்கால மக்கள் தமக்கு உடல்நலமில்லாவழியாதல், பிற குறைகள் உண்டான பொழுதாதல், வேலன் கட்டுவிச்சி முதலியோரிடத்துக் குறி கேட்டலும், அவர் இக்குறை தெய்வத்தானே நேர்ந்தது என்று கூறினாலும், அல்லது தெய்வத்திற்கு வெறியாட்டயர்ந்தால் தாம் உற்ற துயர்நீங்கும் என்று கருதினாலும், எதிர்காலத்தே நிகழப்போவதனை முன்னரே அறிந்துகொள்ள விரும்பினாலும், அவ்வழி முருகப்பெருமானுக்கு வேலனைக் கொண்டு களன் இழைத்து மறியறுத்து, மலர் சிதறி, நறுமணப் புகை, சாந்தம் முதலியன கொடுத்து, வழிபாடு செய்தலும், அங்ஙனம் செய்யுங்கால், அக்கடவுள் அவ்வேலன்மேல் எழுந்தருளி ஆவன கூறி அவர் குறையைப் போக்குதலும் வழக்கமாம் ஆதலின், வெறியாடுதல் அகம் புறம் இரண்டற்கும் பொதுவாகிய நிகழ்ச்சி என்றறிக. ஆசிரியர் தொல்காப்பியனாரும்,

வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட் டயர்ந்த காந்தளும் 

என்று புறத்திணையினும்,

வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும்

என்று அகத்திணையினும் துறை வகுத்தோதுதல் காண்க. இதனை,

நெடுவேட் பேணத் தணிகுவள் இவள்என
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய்க் கூறக்
களனன் கிழைத்துக் கண்ணி சூட்டி
வளனகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்து
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்
முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்  (அகம் -22)
........................ நெடுவேள்
அணங்குறு மகளிர் ஆடுகளங் கடுப்பத்
திணிநிலைக் கடம்பின் திரளரை வளைஇய
துனியறை மாலையிற் கைவிடேஎம்   (குறிஞ்சி - 174-6)

என்றும்,

வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்  (குறுந் - 53:3)

என்றும்,

வேலனார் வந்து வெறியாடு வெங்களத்து
நீலப் பறவைமேல் நேரிழை தன்னோடும்
ஆலமர் செல்வன் புதல்வன் வரும்வந்தால்
மால்வரை வெற்பன் மணவணி வேண்டுதுமே  (சிலப் - குன்றக்.)

என்றும்,

இறைவனை நல்லாய் இதுநகை யாகின்றே
கறிவளர் தண்சிலம்பன் செய்தநோய் தீர்க்க
அறியாள் மற்றன்னை அலர்கடம்ப னென்றே
வெறியாடல் தான்விரும்பி வேலன் வருகென்றாள்
..............................    ..............................
நேரிழை நல்லாய் நகையா மலைநாடன்
மார்புதரு வெந்நோய் தீர்க்க வரும்வேலன்
தீர்க்க வரும்வேலன் தன்னினும் தான்மடவன்
கார்க்கடப்பந் தாரெங் கடவுள் வருமாயின்  (þ)

என்றும் வருவனவற்றாலுணர்க. தைஇய - இழைத்த; இயற்றிய. காடும் காவும் கவின்பெறு துருத்தியும் முதலிய இடங்களில் எல்லாம் முருகன் காணப்படுவான் என்றது, எங்கெல்லாம் அழகு உணர்ச்சி மிக்குப் புலனாகுமோ அங்கெல்லாம் கடவுட்காட்சியே மனத்திற்குப் புலனாகின்றது என்றதொரு சிறந்த உண்மையைப் பண்டைக்கால மக்கள் கொண்டிருந்தனர் என்பதை விளக்குதல் காண்க. இவ்வழகினைக் கண்ணாற்காணப்படும் கடவுள்தோற்றம் என்றே கொண்டு, அதற்கே முருகென்ற பெயரையிட்டு வழங்கினர் என்றறிக. எனவே, தமிழ்மக்கள் மனனுணர்ச்சிக்குப் புலனாம் அழகுண்மையாலேயே கடவுட்காட்சி பெற்றனர் என்பது உணரற்பாலது. முருகென்னும் சொல் அழகு இனிமை இளமை முதலிய பல பண்பினையும் உணர்த்துதலும் உணர்க.

ஆலமுங் கடம்பும் நல்யாற்று நடுவும்
கால்வழக் கறுநிலைக் குன்றமும்

அழகுமிக்க இடங்களாதலும் அறிக. இறைப்பொருள் யாண்டும் உளதாயினும், இவ்விடங்களில் மக்கள் உணர்ச்சிக்குப் புலனாகும் என்பது கருத்தென்க.

கவின்பெறு துருத்தி அழகிய யாற்றிடைக்குறை. யாற்றிடைக் குறை நீர்வளனும் நிலவளனும் ஒருங்கே பெற்று மரஞ்செடி கொடிகள் மாண்புற்றோங்கிக் கண்டோர் உளத்தைக் கவரும் அழகு (முருகு) உடைத்தாகலின் கவின்பெறு துருத்தி என்றார். வைப்பு - ஊர். திருப்பரங்குன்றம் முதலாக யாம் முன்னே குறித்துக் கூறிய ஊர்களினன்றி வேறாகிய பல ஊர்களினும் அப்பெருமானைக் காண்டல் கூடுமென்பார், வேறு பல் வைப்பும் என்றார். சதுக்கம் - நாற்சந்தி சந்தி என வேறு கூறியது ஏனை முச்சந்தி ஐஞ்சந்தி முதலியவற்றை எனக் கொள்க. இச்சந்திகளிடத்தே முருகவேளுக்குத் திருக்கோயிலெடுத்து வழிபடுதல் வழக்கம் என்க. மன்றம் என்றது ஊர்மக்கள் கூடியிருக்கும் மரத்தடியை. மன்றில் (மன்றாகிய இல் என்று மன்றத்தின் வேறாக வழங்குதலை, பொதியில் ஊர்மக்கட்குப் பொதுவாகவுள்ள மண்டபம் என்க. இதனை மன்றில் வதியுநர் சேட்புலப் பரிசிலர் (492) எனவரும் மலைபடுகடாத்தான் உணர்க. கடப்பமரம் முருகக் கடவுள் விரும்பியுறைவதொரு மரம். கடம்பமர் நெடுவேள் (பெரும்பாண். 75) என்றும், செல்வக் கடம்பமர்ந்தான் (ஐந்,ஐம்.1) என்றும் வருதல் காண்க. கந்துடைநிலை என்றது. இறைவன் அருட்குறியாகக் கல் தறி நட்டிருக்கும் இடத்தை. பண்டைக் காலத்தே ஊர்களில் இறை வணக்கம் செய்தற் பொருட்டுக் கல்தறி நட்டு அதனை வணங்கி வந்தனர். அக்கல் தறியே பிற்றை நாள் சிவலிங்க வுருவமாகக் கொள்ளப்பட்டதென்றறிக. இத்தகைய கடவுள் தறியைப் பொதியிலிடத்து நட்டனர் என்பதையும்; அக் கந்துருவினை மலர் முதலியவற்றால் ஒப்பனைசெய்து அவண் மெழுக்கிட்டு, விளக்கேற்றி, ஊர்மக்கள் வணங்கினர் என்பதையும்,

கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்  (பட்டினப் - 246-9)

எனவரும் பட்டினப் பாலையானும் உணர்க. கந்தினும் என்றதற்கு - ஆதீண்டு குற்றியையுடைய இடத்தினும், என்பர் நச்சினார்க்கினியர். யானைத்தறியிடத்தென்பாருமுளர்.

முருகாற்றுப் படுத்த உருகெழு வியனகர்

227-229 : மாண்டலை .......... சிதறி.......

பொருள் : மாண்தலைக் கொடியொடு அமைவர மண்ணி - மாட்சிமைப்பட்ட தலைமையினையுடைய கொடியோடே பொருந்துதல் வரச்செய்து நெய்யோடு ஐயவி அப்பி - நெய்யோடே வெண்சிறு கடுகையும் அப்பி, ஐதுரைத்து - தான் வழிபடுதற்குரிய மந்திரத்தைத் தோன்றாமல் உரைத்து, குடந்தம்பட்டு - வழிபட்டு, கொழுமலர் சிதறி - அழகிய மலர்களைத் தூவி;

கருத்துரை : மாட்சிமையுடைய தலைமைசான்ற கோழிக்கொடியோடே பொருந்துமா றியற்றி, நெய்யையும் வெண்சிறு கடுகையும் அப்பி, ஓதும் மந்திரத்தை மறைவாக ஓதி வழிபட்டுக் கொழுவிய மலர்களைத் தூவி என்பதாம்.

அகலவுரை : ஆண்டலைக் கொடி என்றும் பாடம். அப்பாடத்திற்குப் பேய் முதலியன பலியை நுகராமல் தலை ஆண்மகன்றலையும் உடல் புள்ளின் வடிவுமாக எழுதின கொடி என்க, என்பர் நச்சினார்க்கினியர்.

இனிச்சேவலின் தலை ஏனைப் பறவைகள் தலையைவிட மிக்க அழகுடைத்தாகலின் மாட்சிப்பட்ட தலையை உடைய கோழிக்குப் பெயராய் நின்ற தெனினுமாம். இப்பொருட்கு மாண்டலை என்பது அன்மொழித்தொகையாகக் கொள்க. மாட்சிமைத் தலைப்பட்ட கோழி யென்பாரும் ஆண்டலைக் கொடி என்ற பாடத்திற்கு மயிற் கொடி என்பாரும் உளர். ஐயவி-வெண் சிறு கடுகு. நெய்யும் வெண் சிறு கடுகும் அப்புதலை, ஐயவி யப்பி நெய்யணி நெடுநிலை, (நெடுநல் - 86) என்பதனானும், நெய்யோ டிமைக்கும் ஐயவித் திரள்காழ், (நற்.370 :3) என்பதனானும் உணர்க. குடந்தம் படுதலாவது, வணங்குதல். வழிபடுதல் என்பர் நச்சினார்க்கினியர். நான்கு விரலை மடக்கிப் பெருவிரலை நிறுத்தி மார்பினிடையே வைப்பது குடந்தம் என்பாருமுளர். குடவென்பது தடவென்பது போல வளையை உணர்த்துவதோர் உரிச்சொல்லாகலின், அதனடியாகப் பிறந்த பெயருமாம், என்பர் நச்சினார்க்கினியர் குடந்தம் பட்டென்பதற்கு, வணக்கம் பட் டென்பாருமுளர்.

இதுவுமது

230-234 : முரண் ............... இரீஇ

பொருள் : முரண்கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ - தம்மில் மாறுபட்ட வடிவினையுடைய இரண்டு அறுவையை உள்ளொன்றும் புறம்பொன்றுமாக உடுத்து, செந்நூல் யாத்து - சிவந்த நூலைக் கையிலே காப்புக்கட்டி, வெண் பொரி சிதறி - வெள்ளிய பொரியைச் சிதறி, மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடை - மிகுதியை உடைய வலி நிலைபெற்ற பெரிய காலையுடைத்தாகிய கொழுவிய கிடாயினது, குருதியொடு விரைஇய தூவெள் அரிசி - உதிரத்தோடே பிசைந்த தூய வெள்ளரிசியை சில் பலிச் செய்து பல்பிரப்பு இரீஇ - சிறு பலியாக இட்டுப் பல பிரப்பும் வைத்து;

கருத்துரை : மாறுபட்ட வடிவினையுடைய இருவேறு ஆடைகளை உள்ளொன்றும் புறம்பொன்றுமாக உடுத்துச் சிவந்த நூலைக் கையிலே காப்புக்கட்டி, வெண்பொரி தூவி. வலிமிக்கதும், பெரிய காலையுடையதும் ஆகிய கொழுத்த கிடாயினது குருதியோடே பிசைந்த தூய வெள்ளரிசியைச் சிறு பலியாக இட்டுப் பல பிரப்பு வைத்து என்பதாம்.

அகலவுரை : முரண் - ஒன்றற்கொன்று நிறத்தானும் வடிவானும் மாறுபடுதல். உரு - நிறம்; வடிவமுமாம். இரண்டுடை என்றும் பாடம். இரண்டு வெண்பட்டையும் என்பாருமுளர். உடன் உடீஇ - ஒருங்கே உடுத்தென்க. செந்நூல் - சிவந்த நூல். சிவந்த நூலாற் காப்புக்கட்டி என்க. இனிச் செந்நூல் யாத்தென்பதற்கு, செவ்விய நூல் பிடித்து எல்லைப்படுத்தி என்றுமாம்.

மதவலி - மிக்கவலி. நிலைஇய - நிலைபெற்ற. மா-பெரிய. தாள் - கால். கொழுவிடை - கொழுத்த ஆட்டுக்கிடாய். கொழுவிடை என்றதற்கு யானைத்திரள் என்பாருமுளர். சில்பலி-சிறிய பலி என்க. சின்மை ஈண்டு எண் குறியாது சிறுமையாகிய அளவு குறித்து நின்றது. பிரப்பு - 218-சிறுதினை என்பதன் அகலவுரையிற் காண்க. இனிப் பிரப்பங்கூடை என்பாருமுளர். இரீஇ - பரப்பி இருத்தி என்க.

இதுவுமது

235-239 : சிறுபசுமஞ்சள் ................ குறிஞ்சிபாடி

பொருள் : சிறு பசுமஞ்சளொடு நறுவிரை தெளித்து - சிறிய பசுமஞ்சளோடே நறிய சந்தன முதலியவற்றையுந் தெளித்து, பெருந்தண் கணவீரம் - பெரிய குளிர்ந்த செவ்வலரி மாலையினையும், நறுந்தண் மாலை - ஒழிந்த நறிய குளிர்ந்த மாலைகளையும், துணையுற அறுத்துத் தூங்க நாற்றி - தம்மில இணையொக்க அறுத்து அசையும்படி தூங்கவிட்டு, நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி - செறிந்த மலைப்பக்கத்திலுள்ள நல்ல ஊர்களைப் பசியும் பிணியும் பகையும் நீங்குகவென்று வாழ்த்தி, நறும்புகை எடுத்து - நறிய மணப்புகை கொடுத்து, குறிஞ்சி பாடி - அந்நிலத்திற்கு அடுத்த குறிஞ்சிப் பண்ணைப் பாடி;

கருத்துரை : சிறிய பசுமஞ்சளோடே நறிய சந்தன முதலியவற்றைத் தெளித்துப் பெரிய குளிர்ந்த செவ்வலரி மாலையையும், ஏனைய நறிய குளிர்ந்த மாலைகளையும் இணைஒக்க அறுத்து அசையும்படி நாலவிட்டுச் செறிந்த மலைப்பக்கத்துள்ள நல்ல ஊர்களைப் பசியும் பிணியும் பகையும் நீங்குக என்று வாழ்த்தி, நறிய மணப்புகை கொடுத்து அந்நிலத்திற்குரிய குறிஞ்சிப்பண்ணைப் பாடி என்பதாம்.

அகலவுரை : சிறுபசு மஞ்சள் என்றது, மஞ்சளிலே ஒருவகை எனினுமாம். நறுவிரை - சந்தன முதலிய மணப்பொருள்களுக்கு ஆகுபெயர். விரை - மணம். கணவீரம்-அலரி. அலரிப்பூ பரியனவும் குளிர்ந்தனவுமாயிருத்தல் இயல்பாகலின், பெருந்தண் கணவீரம் என்றார். நறுந்தண்மாலை என்றது, ஏனை மாலைகளை என்க. துணையுற அறுத்தலாவது, எல்லா மாலைகளும் ஓரளவாக அமையும்படி அறுத்தென்றவாறு. துணையற என்ற பாடத்திற்குத் தமக்கு ஒப்பில்லாதபடி என்க. நளிமலை-செறிந்த மலை; நளியென் கிளவி செறிவும் ஆகும். (உரி-25) என்பது தொல்காப்பியம். சிலம்பில் நன்னகர் என்றதற்கு மலையின்கண் அமைந்த முருகப்பெருமானுடைய நன்றாகிய கோயிலை என்றுமாம். இப்பொருட்கு வாழ்த்தி என்பதனைத் திருக்கோயிலை வாழ்த்தி என்க. இனி நகர் ஊர் எனக்கொள்ளின், ஊரிலுள்ளோர் பசியும் பிணியும் பகையும் நீங்கி வாழ்க என்று வாழ்த்தி என்க. பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி (5:72-3) எனச் சிலப்பதிகாரத்தும் மணிமேகலையினும் (1.70-71) ஓதியவாறுணர்க.

தூங்க - அசைய. நாற்றி - தூங்கவிட்டு. நறும்புகை - அகில் முதலியவற்றாலாய நறிய மணப்புகை என்க. குறிஞ்சி-குறிஞ்சி நிலத்திற்குரிய பண்.

இதுவுமது

240-244 : இமிழிசை ............... வியனகர்

பொருள் : இமிழ் இசை அருவியொடு இன்னியம் கறங்க - முழங்குகின்ற ஓசையினையுடைய அருவியோடே இனிய இசைக் கருவிகளும் ஒலியாநிற்க, உருவப் பல்பூத் தூஉய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பி - சிவந்த நிறத்தினையுடைய பல பூக்களையும் தூவி அச்சம் வரும்படி குருதி அளைந்த சிவந்த தினையினையும் பரப்பி, குறமகள் முருகு இயம் நிறுத்தி முரணினர் உட்க முருகு ஆற்றுப்படுத்த உருகெழு வியன் நகர் - குறவர் குடியிற் பிறந்த மகள் முருகன் உவக்கும் இசைக்கருவிகளை ஒலிக்கச் செய்து இறைவன் இலன் என்பார் அஞ்சும்படியாக அம்முருகக்கடவுள் வரும்படி வழிப்படுத்தின அச்சம் பொருந்தின அகற்சியையுடைய நகரின்கண்ணே;

கருத்துரை : முழங்குகின்ற ஓசையையுடைய அருவியோடே இனிய இசைக்கருவிகளும் முழங்காநிற்பச் சிவந்த நிறத்தினையுடைய பல பூக்களையும் தூவி, அச்சம் உண்டாகும்படி குருதி அளைந்த சிவந்த தினையினையும் பரப்பி, முருகப்பெருமான் உவக்கும் இசைக்கருவிகளை முழங்கப் பண்ணி, இறைவன் இலன் என்பார் அஞ்சும்படியாக அம்முருகப் பெருமான் வரும்படி வழிப்படுத்தின அச்சம் பொருந்தின அகற்சியையுடைய நகரின் கண்ணே என்பதாம்.

அகலவுரை : இமிழிசை: வினைத்தொகை. முழங்கும் இசை என்க. அருவி கூறினார் இருள் தூங்கித் துளித் தலைஇய கூதிர்க்காலம் என்றற்கு: என்னை? குறிஞ்சிக்கடவுளாகிய முருகப்பெருமான் உறையும் அந்நிலத்திற்குரிய பெரும்பொழுது கூதிராகலின் என்க. இதனை,

காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்  (தொல்.அகத்.6)

என்பதனானும் அறிக. இன்னியம் - இனிய இசைக்கருவி. கறங்க - முழங்க. உருவம் - நிறம்: வினைப்பயன் மெய்யுரு என்ற நான்கே (தொல்-உவம.1) என்புழியும் அஃதப்பொருட்டாதல் அறிக. நிறம் -ஈண்டுச் சிவந்த நிறம் என்க. தூஉய் - தூவி. குருதியைத் தினையரிசியோடே அளைந்தகாலை அதனைக் கண்டோர் அஞ்சுவராகலின் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பி என்றார். குறமகள் - குறவர் குடியிற் பிறந்த மகள். வேலன் வெறியாட்டயர்ந்த (தொல்.புற-5) என்புழி, சிறுபான்மை ஏனையோரும் ஆடுவாரென்றலின் குறமகள் வெறியாட்டுக் கூறினார் என்பர் நச்சினார்க்கினியர்.

முருகியம் - முருகன் உவக்கும் இசைக்கருவி என்க. அவை குறிஞ்சி யாழ், தொண்டகம், சிறுபறை, கோடு முதலியனவாம். முரணினர் - இறைப்பொருள் உண்டென்பாரோடு மாறுபட்டு அஃதின்றென்போர். எனவே, கடவுள் இல்லை என்போர் அக்காலத்தும் உளராதலறிக. குறமகள் மேல் முருகன் ஆவேசித்து மக்கள் அறிவாற் காணப்படாத எதிர்கால நிகழ்ச்சிகளைக் கூறக்கேட்டுக் கடவுள் இல்லை என்பார் அஞ்சினர் என்க முருகாற்றுப்படுத்தலாவது முருகன் தன்மேல் ஏறி ஆடப்பெறுதல். மக்கள் மேல் தெய்வம் ஏறியாடுதலை,

குரற்றலைக் கூந்தல் குலைந்துபின் வீழத்
துடித்தனள் புருவம் துவரிதழ்ச் செவ்வாய்
மடித்தெயி றரும்பினள் வருமொழி மயங்கினள்
திருமுகம் வியர்த்தனள் செங்கண் சிவந்தனள்
கைவிட் டோச்சினள் கால்பெயர்த் தெழுந்தனள்
பலரறி வாராத் தெருட்சியள் மருட்சியள்
உலறிய நாவினள் உயர்மொழி கூறித்
தெய்வமுற் றெழுந்த தேவந் திகைதான்  (30:38-45)

எனவரும் இளங்கோவடிகள் சொல்லோவியத்தானும் அறிக. உரு - அச்சம்; உரு உட்காகும் புரை யுயர்வாகும், என்பது தொல்காப்பியம். வியன் - அகற்சி. வியனகர் என்றது ஈண்டு மலையின்கட் கோயிலை என்க. குறமகள் மண்ணி அப்பி உரைத்துக் குடந்தம்பட்டுச் சிதறி உடீஇ யாத்துச் சிதறிச் செய்து இரீஇத் தெளித்து நாற்றி வாழ்த்தி எடுத்துப் பாடிக் கறங்காநிற்கத் தூய்ப் பரப்பி நிறுத்து ஆற்றுப்படுத்த நகரென வினைமுடிவு செய்க. இப் பகுதியானே பண்டைக்காலக் குறிஞ்சிநில மக்கள் முருகனை வழிபடும் முறை கண்ணாற் கண்டாங்கு நன்கு விளங்கித் தோன்றுதலறிக. இனி, அக் கோயிலிடத்தே முருகனை மக்கள் வழிபடும் முறை கூறுகின்றார்.

மக்கள் முருகப்பெருமானை வணங்கும் முறை

245-249 : ஆடுகளம் ................ அறிந்தவாறே

பொருள் : ஆடு களம் சிலம்பப் பாடி - அங்ஙனம் வெறியாட்டெடாநின்ற களம் ஆரவாரிப்ப அதற்கு ஏற்பனவற்றைப் பாடி, கோடுபலவுடன் வாய் வைத்து - ஊது கொம்புகள் பலவற்றையும் ஒருங்கே ஊதி, கொடுமணி இயக்கி - வளைவுடைய மணியை ஒலிப்பித்து, ஓடாப்பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி - கெடாத வலியினையுடைய பிணிமுகம் என்னும் பட்டத்தினை யுடைய யானையை வாழ்த்தி, வேண்டினர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட - காரியங்களை வேண்டினோர் தாங்கள் விரும்பின காரியங்களை விரும்பினபடி பெற்றாற்போல நின்று வழிபாடு செய்ய, ஆண்டாண்டு உறைதலும் அறிந்த ஆறே - அவ்வவ் விடங்களிலே தங்குதலும் உரியன், யான் அறிந்தபடியே கூறினேன்.

கருத்துரை : அங்ஙனம் வெறியாட்டயராநின்ற களம் ஆரவாரிக்கும்படி பாடி ஊதுகொம்புகள் பலவற்றையும் சேர ஊதி மணியை ஒலித்து அப்பெருமானுடைய யானையை வாழ்த்தி, குறை வேண்டினார் தாம் வேண்டியவற்றைப் பெற்றாற்போன்று நின்று வழிபாடு செய்ய அவ்விடங்களில் தங்குதலும் உரியன். அப்பெருமானைக் காண்டற்குரிய இடங்களை யான் அறிந்தபடியே நினக்குக் கூறினேன் என்பதாம்.

அகலவுரை : மலைநிலமாகலின் எதிரொலி செய்ய என்பார் ஆடுகளம் சிலம்ப என்றார். ஆடுகளம், அங்ஙனம் வெறியாடாநின்ற களம் என்க. சிலம்புதல்-ஒலித்தல். கோடுபலவுடன் என மாறுக. வாய்வைத்தென்றது, ஊதி என்றவாறு. கொடுமணி - தன்கண் வளைவு பொருந்திய மணி என்க. இயக்குதல்-அசைத்து ஒலிக்கச் செய்தல். கோடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின், (24:17) என்றார் சிலப்பதிகாரத்தும். களநன் கிழைத்துக் கண்ணி சூட்டி, வளநகர் சிலம்பப் பாடிப் பலி கொடுத்து, உருவச் செந்தினை குருதியொடு தூஉய், முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள், (அகம் 22:8-11) என்றார் பிறரும். பிணிமுகம் என்பதனைப் பட்டம் எனக் கொண்டு அதனையுடைய யானை என்றார் நச்சினார்க்கினியர். இப் பொருளில் பிணிமுகம் என்பது அன்மொழித் தொகை என்க. சேயுயர் பிணி முகம் ஊர்ந்து, என்றும் பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும் எனப் பிறாண்டும் வருதல் காண்க. பிணிமுகம் என்பதற்குப் பெரும்பாலோர் மயில் என்றே பொருள் கூறுவர். பிணிமுகம் என்பது முருகன் ஏறும் யானை ஒன்றற்கே பெயர் என்பாரும் உளர்.

பிணிமுகம் வாழ்த்தும் வழக்கத்தை, கடம்பும் களிறும் பாடி (தொல்-பொரு-16. ந மேற்.) என்பதனானும் அறிக இறைவனை வழிபடுவோர் இவ்வுலக வாழ்க்கைக்குரிய பொருட்பேற்றை விரும்புநரும் முத்திப்பேற்றை விரும்புநரும் எனப் பலதிறப்படுவர் ஆகலின், வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட என்றார். எய்தினர் என்றது, வழிபட்டதுணையானே எய்தினாரைப் போன்று என்றவாறு. வழிபட்டோர் வேண்டியது கைகூடப் பெறுதல் ஒருதலை யாகலின், அத்துணிவுபற்றி எய்தினாரைப் போன்று என்றார். எய்தி வழிபட என்றும் பாடம் உண்டு. ஆண்டாண்டு - அங்ஙனம் வழிபடுமிடந்தோறும் உரியன். யான் கூறினேன் என்பன வருவித்துக் கொள்க. அவ்விறைவன் உறைவிடம் முற்றும் அறிதல் யார்க்கும் இயலாதாகலின், யான் அறிந்த அளவிற் கூறினேன் என்றார்.

இனி, 250, ஆண்டாண்டாயினுமாக என்பது முதல், 295, பெறலரும் பரிசில் நல்குமதி என்னுந்துணையும் ஒருதொடர், இதன்கண் : ஆற்றுப்படுத்தும் நல்லாசிரியர் ஆற்றுப்படுத்தப்படும் மாணவனை நோக்கி, யான் கூறிய திருப்பரங்குன்றம் முதலிய இவ்விடங்களினாதல், பிற இடங்களினாதல் சென்று அப்பெருமானை வாழ்த்தி உன் எண்ணத்தை இயம்புதியாயின், ஆண்டுள்ள பணியாளர் நின் வருகையை முருகக் கடவுளிடம் சென்று அறிவிப்பர் என்றும், அங்ஙனம் அறிவித்த வழி, அக்கடவுள் நின் முன்னர்த் தோன்றி முகமன் மொழிந்து நீ வேண்டியதைத் தந்தருள்வன் என்றும் அறிவுறுத்தி யருள்கின்றார்.

முருகப்பெருமானைக் கண்டபொழுது செய்யக்கடவன

250-252 : ஆண்டாண்டு ................ வணங்கி

பொருள் : ஆண்டு ஆண்டாயினும் ஆக - யான் முற்கூறிய இடங்களிலே ஆயினும் ஆகப் பிறவிடங்களிலே யாயினுமாக, காண் தக முந்து நீ கண்டுழி -காணும் தகுதிபெற நீ நின்முன்னர் அப்பெருமானைக் கண்டபொழுது, முகன் அமர்ந்து ஏத்தி- முகத்தானே விரும்பி நோக்கி வாயானே வாழ்த்தி, கைதொழூஉப் பரவி - கையைத் தலைமேலே குவித்துப் புகழ்ந்து, காலுற வணங்கி - அப்பெருமானுடைய திருவடிகளிலே நின்றலை பொருந்தும்படி வீழ்ந்து வணங்கி;

கருத்துரை : யான் இதுகாறும் கூறிய இடங்களினாதல் பிற விடங்களினாதல் நீ அப்பெருமானை முற்படக் கண்டபொழுது முகத்தானே விரும்பி நோக்கி வாயானே புகழ்ந்து வாழ்த்திக் கையைத் தலைமேலே குவித்துத் தொழுது வாழ்த்தித் திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி, என்பதாம்.

அகலவுரை : இதனால் திருக்கோயில் வழிபாடு செய்யும் முறை இனிது விளங்குதல் அறிக.

கையுந் தலைமிசை புனையஞ் சலியன
கண்ணும் பொழிமழை யொழியாதே
பெய்யுந் தகையன கரணங் களுமுடன்
உருகும் பரிவின பேறெய்து
மெய்யுந் தரைமிசை விழுமுன் பெழுதரும்
மின்றாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர்கும் பிடுமவர்
ஆர்வம் பெருகுதல் அளவின்றால்  (பெரியபுரா. திருநாவு-167)

எனவரும் சேக்கிழாரடிகள் திருமொழியானும் அன்பர்கள் இறை வணக்கம் செய்யும் முறையினை உணர்க. இறைவன் இவ்விடத்துளன் என்று வரையறுத்துக் கூறப்படாதவன்; அவன் யாண்டுமுளன்; அன்பர் விழைந்த பொழுது விழைந்த இடத்தே வெளிப்பட்டருளுவன், ஆதலால் ஆண்டாண் டாயினு மாக என்றார். காண்டக என்றது நீ காணுந்தகுதி யுடைத்தாக என்றவாறு. முந்து - முற்பட, கண்டுழி-கண்டபொழுது. முகனமர்தல் என்றது, அகத்தேயுள்ள ஆர்வம் முகத்தின்கண் வெளிப்பட்டுத் தோன்றும்படி என்றவாறு. முகனமர்ந்து இனிது நோக்கி என்றார் வள்ளுவனாரும். ஏத்துதல் - வாழ்த்துதல். பரவுதல் - அவனுடைய புகழ்களை எடுத்துப் பாரித்தோதுதல். தொழூஉ - தொழுது. காலுற - காலிலே தலையுற என்க.

இனி, கைதொழூஉப் பரவி என்றவர் பரவுமாற்றைப் பாரித்து 28 அடிகளில் ஓதுகின்றார் என்க.

முருகன் புகழ்மாலை

253-259 : நெடும்பெரும் ........... குழவி

பொருள் : நெடும்பெரும் சிமையத்து நீலம் பைஞ்சுனை - நெடிய பெரிய இமவான் உச்சியிலே தருப்பை வளர்ந்த பசிய சுனையிடத்தே, ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப-விசும்பும் வளியும் தீயும் நீரும் நிலனுமாகிய ஐவருள் ஒருவனாகிய தீ தன் அங்கையிலே ஏற்ப, அறுவர் பயந்த ஆறமர் செல்வ-அருந்ததி யொழிந்த அறுவராலே பெறப்பட்ட ஆறுவடிவு பொருந்திய செல்வனே, ஆல்கெழு கடவுள் புதல்வ-கல்லாலின் கீழிருந்த கடவுளினுடைய மகனே!, மால் வரை மலைமகள் மகனே -பெருமையையுடைய மலையாகிய மலையரையன் மகளுடைய மகனே! மாற்றோர் கூற்றே - பகைவர்க்குக் கூற்றுவனே! வெற்றி வேல் போர்க் கொற்றவை சிறுவ - வெற்றியையுடைய வெல்லும் போர்த்தெய்வமான கொற்றவையின் மகனே! இழை அணி சிறப்பிற் பழையோள் குழவி - பூண் அணிந்த தலைமையினையுடைய காடுகிழாளுடைய குழவியே!

கருத்துரை : நெடிய பெரிய இமவானுச்சியிலே தருப்பை வளர்ந்த பசிய சுனையிடத்தே விசும்பும் வளியும் தீயும் நீரும் நிலனுமாகிய ஐவருள் ஒருவனாகிய தீக்கடவுள் தன் அங்கையிலே ஏற்ப அருந்ததி ஒழிந்த அறுவராலே பெறப்பட்ட ஆறுவடிவு பொருந்திய செல்வனே! கல்லாலின் கீழிருந்த கடவுளுடைய மகனே! பெருமையையுடைய மலையரையன் மகளுடைய மகனே! பகைவர்க்குக் கூற்றுவனே! வெற்றித் தெய்வமாகிய வெல்லும் போரையுடைய கொற்றவை மகனே! பூண்அணிந்த தலைமையினையுடைய காடுகிழாளின் மகனே! என்பதாம்.

அகலவுரை : உலகின்கண்ணுள்ள மலைகள் எல்லாவற்றினும் இமயமலையே பெரியதும் உயர்ந்ததுமாகலின், நெடும்பெருஞ்சிமையம் என்றார். சிமையம்-உச்சி. நீலப்பைஞ்சுனை என்றது, நீலநிறமான தருப்பை வளர்ந்த பசிய சுனை என்றவாறு. சரவணம்-தருப்பை. சரவணத்தை உடைத்தாகலின் அச்சுனையைச் சரவணப் பொய்கை என்றும் கூறுப. அதன்கண் தோன்றினமையால் சரவணபவன் என்பது முருகக் கடவளின் பெயராயிற்று. ஐவர் என்றது, ஐந்து பூதமாகிய தெய்வங்களை. அவை, நிலனும் நீரும் தீயும் காற்றும் வெளியுமாம். இப்பூதங்கட்கு அதிதெய்வமாவார் அயனும் அரியும் உருத்திரனும் மயேச்சுரனும் சதாசிவனும் என்ப, இதனை,

பாராதி ஐந்துக்கும் பன்னுமதி தெய்வங்கள்
ஆரார் அயனாதி ஐவராம்  (உண்மை விளக்கம், 7)

என்பதனான் அறிக.

ஐவருள் ஒருவன் என்றது, உருத்திரன் தெய்வமாகிய தீயை என்க. அவன் அங்கை ஏற்ப வென்றது, இறைவனிடத்தினின்றும் இந்திரன் வாங்கிய கருப்பத்தினை முனிவர் வாங்கித் தமக்குத் தரிக்கலாகாமையின் இறைவன் கூறாகிய முத்தீக்குண்டத்திட்டதனைக் கூறியவாறாம். அறுவர் என்றது, கார்த்திகை மகளிரை; அங்ஙனம் தீயிலிடப்பட்டதனால் சக்தி குறைந்த கருப்பத்தினைக் கார்த்திகை மகளிர்க்குக் கொடுப்ப, அவர் அதனை விழுங்கிச் சூன் முதிர்ந்து சரவணப் பொய்கையிலே பதுமப் பாயலிலே பெற ஆறுவடிவாக வளர்ந்தன்மையை அறுவர் பயந்த ஆறமர் செல்வ என்ற தொடர் குறிக்கின்றது.

ஐவர் அறுவர் என்பவற்றுள் முரண்தோன்றிச் செய்யுள் இன்பம் மிகுதலுணர்க. அகம்-கை-என்பன புணருங்கால் க என்பதன்கண் உள்ள உயிரும் மெய்யுங் கெட்டு மகரம் வருமொழி முதற்கினமாகத் திரிந்து அங்கை என்றாகும். இதனை,

அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே
முதனிலை யொழிய முன்னவை கெடுதலும்
வரைநிலை யின்றே ஆசிரி யர்க்க
மெல்லெழுத்து மிகுதல் ஆவயி னான  (தொல்-புள்ளி-20)

என்னும் இலக்கண விதியானே உணர்க. ஆல்-ஆலமரம். ஈண்டுக் கல்லாலினைக் குறித்து நின்றது; ஆல்கெழு கடவுள் என்றது தக்கிணாமூர்த்தியை. மால் வரை - இமயமலை. மலைமகள் என்றது பெயர் மாத்திரையாய் நின்றது; மலையரையன் மகளாகிய உமையின் மகனே என்றவாறு. கொற்றவை பழையோள் என்பன சத்தியின் வேறு வேறு வடிவங்களாகிய துர்க்கையையும், காடுகிழாளையும் குறிப்பன. வெற்றியின் அதிதெய்வமாகலின் வெற்றிக்கொற்றவை என்றும் மகிடாசுரனை வென்றமை கருதி வெல்போர்க் கொற்றவை என்றும் கூறினார். ஆதியில்லாதவளாகலின் பழையோள் என்றார். முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே! என்றார் மணி வாசகரும்.

இதுவுமது

260-269 : வானோர் ...................... முருக

பொருள் : வானோர் வணங்கு வில் தானைத்தலைவ - தேவர்கள் வணங்குகின்ற விற்பனைத் தலைவனே! மாலைமார்ப - இன்பத்திற்குரிய கடப்பமாலையணிந்த மார்பையுடையோனே! நூல் அறி புலவ - எல்லா நூல்களையும் அறிந்த புலவனே! செருவில் ஒருவ - போர்த்தொழிலில் ஒருவனாகி நிற்போய்! பொருவிறல் மள்ள - பொருகின்ற வெற்றியையுடைய இளைஞனே! அந்தணர் வெறுக்கை - அந்தணருடைய செல்வமாயிருப்போனே! அறிந்தோர் செரல்மலை - சான்றோர் புகழ்ந்து சொல்லப்படும் சொற்களின் ஈட்டமாயிருப்போய்! மங்கையர் கணவ -தெய்வயானையாரும் வள்ளிநாய்ச்சியாருமாகிய மகளிர்க்குக் கணவனே! மைந்தர் ஏறே - மறவருள் அரியேறு போன்றவனே! வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ-வேல் பொருந்தின பெருமையையுடைய கையானமைந்த பெரிய செல்வனே! குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ - குருகாற் பெயர்பெற்ற மலையைப் பிளந்த குறையாத வெற்றியையுடைய தேவருலகைத் தீண்டும் நெடிய மலைகளையுடைய குறிஞ்சிநிலத்திற்கு உரிமையுடையோனே! பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே - பலரும் புகழ்ந்து சொல்லும் நன்றாகிய சொற்களையுடைய புறச்சமயப் புலவர்கட்கு அரியேறு போன்றவனே! அரும்பெறன் மரபில் பெரும்பெயர் முருக - அரிதிற்பெறும் முறைமையினையுடைய பெரிய பொருளையுடைய முருகனே!

கருத்துரை : தேவர்கள் வணங்கும் படைத்தலைவனே! கடப்பமாலை யணிந்த மார்புடையோனே! எல்லா நூல்களையும் அறிந்த புலவனே! போரின்கண் ஒருவனாகி நிற்போனே! வெற்றியையுடைய இளைஞனே! அந்தணர்களுக்குச் செல்வமானவனே! சான்றோர் புகழும் சொற்களின் ஈட்டமாயிருப்போனே! தெய்வயானையும் வள்ளியுமாகிய மகளிர்க்குக் கணவனே! மறவர்களுள் அரியேறு போன்றவனே! வேல் பொருந்திய கையானமைந்த பெரிய செல்வனே! குருகுபெயர்க் குன்றங்கொன்ற குறையாத வெற்றியை உடையவனே! குறிஞ்சிநிலத்திற்கு உரிமை யுடையோனே! புறச்சமயப் புலவர்கட்கு அரியேறு போன்றவனே! அரிதிற்பெறு முறைமைத்தாகிய பெரிய பொருளையுடைய முருகனே! என்பதாம்.

அகலவுரை : வானோர் வணங்குந் தலைவ; விற்றானைத் தலைவ எனத் தனித்தனி கூட்டுக. வானோர் தானைத்தலைவ, வணங்குவிற் றலைவ எனக்கூட்டித் தேவர்கள் படைத்தலைவனே, வளையும் வில்லையுடைய தலைவனே, என்பர் நச்சினார்க்கினியர். முருகப்பெருமானைத் தேவ சேனாபதி என்றலும் அறிக. மாலை - ஈண்டு முருகனுக்குரிய கடப்பமாலை என்க. இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன் (10-11) என முன்னும் ஓதியமை காண்க. இம்மாலை முருகனுக்குரிய இன்பமாலை என்ப. இனி நூலறி புலவ என்றது - உயிர்கள் மெய்ந்நூற் பொருளை உணரும்பொருட்டுத் தானும் அவ்வுயிர் அறிவோடு இரண்டறநின்று இறைப்பொருள் உணர்தல் வேண்டுதலால் அங்ஙனம் அறிகின்ற புலவனே என்றவாறு. என்னை?

காணுங் கண்ணுக்குக் காட்டு முளம்போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரன்கழல் செலுமே  (சிவஞானபோ-11)

என்னும் இச்சூத்திரத்திற்கு, காட்டக் காணும் தன்மையுடைய கண் உருவத்தைக் காணும்படி அதனோடொருங்கியைந்து நின்று காட்டி, அவ்வுருவத்தைக்காணுகின்ற உயிர்போல, அறிவிக்க அறியும் இயல்புடைய அவ்வுயிர் யாதாமொரு பொருளை அறியும்படி முதல்வன் அதனோ டொருங்கியைந்து நின்று அறிந்து வருதலான், அக்கலப்பு நிலையினை மறவாது கடைப்பிடித்துச் செய்யும் அன்பானே அம்முதல்வன் திருவடியின்பத்தைத் தலைப்படும் என்பது பொருளாகலின், இறைவனாகிய முருகப்பெருமான் தன் அன்பர்கள் மெய்ந்நூலுணர்ந்து கட்டறுத்து வீடு பெறும்பொருட்டு அவர் உயிரோடு ஒன்றித்து நின்று அவர் உணரும்பொருட்டுத் தானும் அம் மெய்ந்நூல்களை உணர்வோன் என்பார் நூலறிபுலவன் என்றார் என்க. இன்னும்,

எவ்விடத்தும் இறையடியை இன்றியமைந் தொன்றை
அறிந்தியற்றி யிடாஉயிர்கள் ஈசன் றானும்
செவ்விதினி னுளம்புகுந்து செய்தியெலாம் உணர்ந்து
சேட்டிப்பித் தெங்குமாய்ச் செறிந்து நிற்பன்  (சித்தியார் சுபக்:10-6)

என்றும், முதல்வன் உயிரிற் கலந்துநின்று உயிருடன் ஒக்க அறிந்தாலன்றி அறிவித்தன் மாத்திரையான் உயிர் அறியமாட்டாதென்பதனை தொண்டனேன் நினையுமா நினையே என்றும், விரும்புமா விரும்பே, தொருடமா தொடரே நுகருமா நுகரே (திரு மாளிகைத்தேவர் திருவிசைப்பா 11-10-9-7) என்றும், அறிவானுந் தானே அறிவிப்பான் றானே, அறியா யறிகின்றான்றானே, (காரைக் - அற்புத-20) என்றும் வரும் சான்றோர் மெய்ம்மொழிகளானே உணர்க. எனவே, உயிர்கள் மெய்ந்நூல்களை அறியும்பொருட்டு அந்நூலை அறிகின்ற புலவனே என்றவாறு. புலவன் என்றார், தனக்காக அறிய வேண்டா வாலறிவன் என்பது தோன்ற.

இவ்வாற்றால் மாலையணிந்து உயிர்களை இம்மையின்பம் நுகர்விப்போனே நூலறிந்து உயிர்கட்கு வீட்டின்பம் நல்குவோனே என்றவாறு காண்க. அவ்வுயிர்கட்கு இடையூறு நேர்ந்துழித் தானே முன்னின்று காப்பன் என்பது வானோர் வணங்குந் தானைத் தலைவ என்பதனாற் கொள்க. செருவில் ஒருவ என்பதற்கு உலகை எல்லாம் அழித்தொழிக்கின்றபொழுது ஒருவனாய் எஞ்சிநிற்கின்றவனே என்றவாறாகக் கோடல் சிறப்பாம். என்னை? உலகினை ஒடுக்குங்கால் அனைத்தையும் விரித்தமுறையே ஒன்றனுள் ஒன்று ஒடுங்க ஒடுக்கி அனைத்தும் தன்னுள்ளே ஒடுங்க, அவ் விறைப்பொருள் ஒன்றே பிறிதொன்றில் ஒடுங்காது எஞ்சி நிற்பதாகலான் என்க. அழிக்குமிடமாகலான் செரு என்றார். இனிப் பொருவிறல் மள்ள என்றது, எல்லாவற்றையும் அழிக்கும் மறத்தன்மையுடையோன் என்றபடியாம். அந்தணர்-இறைபணி நின்ற மெய்க்காட்சியாளர். மெய்க்காட்சியாளர்க்கு இறைப்பொருள் ஒன்றே மெய்ப்பொருளாக ஏனைய பொய்ப் பொருளாதல் பற்றி அவ்விறைவனே செல்வமாயினான் என்க. இனி, அப்பெருமானின் இயல்பை அறிந்தோர் கூறாநின்ற மெய்ந்நூல்களின் ஈட்டம் எல்லாம் அவனன்றிப் பிறிதில்லை என்பார், அறிந்தோர் சொன்மலை என்றார். நூல்கள் சமயங்கடோறும் பலவாம் அளவிறந்தனவாதல்பற்றிச் சொன்மலை என்றார். என்னை?

விண்ணே விணாதியாம் பூதமே நாதமே
வேதமே வேதாந்தமே
மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள்
வித்தேய வித்திவின்விளைவே
கண்ணே கருத்தே என்எண்ணே எழுத்தே
கதிக்கான மோனவடிவே  (தாயுமான - கருணா -6)

என்றாங்கு மெய்ந்நூல்களும் அவனன்றிப் பிறிதில்லை யாகலின் என்க. மங்கையர் - வள்ளிநாய்ச்சியாரும் தெய்வயானையாரும் என்க. இச்சாசத்தியும், கிரியாசத்தியும் உடையவனே என்றவாறாம். மைந்தர் - வலியவர். வலியவருள் மிக்க வலியவனே என்றது, அவனது வரம்பிலாற்றலுடைமையை விதந்தோதியபடியாம். வேல் முருகப் பெருமானுக்கு ஞானசத்தி என்ப. எனவே, இச்சை கிரியை ஞானம் என்னும் மூன்று சத்தியும் உடையானே என்றவாறாம். ஞானமாகலின் அதனையே செல்வமாக உடையன் என்பார், வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ என்றார். குன்றம் - கிரவுஞ்சமலை. குருகு பெயர்க்குன்றம் கொன்ற நெடுவேலே, என்றும், குருகு பெயர்க்குன்றம் கொன்றான், என்றும் இளங்கோவடிகளாரும் ஓதுதல் காண்க. குன்றக் கொற்றம் என்றது பிறர் வெற்றிபோலாது என்றும் குறையாத வெற்றி என இறைத்தன்மை குறித்தவாறாம்.

சேயோன் மேய மைவரை யுலகம் எனத் தமிழ் நூலோர் உரிமை கூறியாங்கு உலகங்கட்கெல்லாம் உரியனாயிருந்தும் குறிஞ்சிக்குமட்டும் உரிமையுடையோன் போன்றிருப்போனே என்பதாம். புலவர் ஏறே என்றதற்குப் புறச்சமயப் புலவர்களாகிய யானைகட்கு அரிமாப்போல்வானே என்க. பெயர் - பொருள். அரும்பெறன் மரபிற் பெரும் பெயர் என்றது, வீட்டின்பத்தை. வீட்டின்பத்தையுடைய முருகப்பெருமானே என்க. எனவே, முருகா என்றோதும் அடியார்க்கு அவ்வீட்டின்பத்தை நிரம்ப அளிப்போன் எனக் குறிப்பாற் கூறியபடியாம். நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலுந் தோன்றும், முருகா என்றோதுவார் முன், எனல் அறிக. ஈண்டு இருகால் என்றது திருவடியாகிய வீட்டின்பத்தை என்க.

இதுவுமது

270-274 : நசையுநர்க்கு ............... இயவுள்

பொருள் : நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேராள - வீட்டினைப் பெறவேண்டுமென்று நச்சி வந்தோர்க்கு அதனை அளித்து நுகர்விக்கும் பெரிய புகழை ஆளுதல் உடையோனே, அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய் - இடுக்கப்பட் டெய்தினோர்க்கு அருள்பண்ணும் பொன்னாற்செய்த பேரணிகலன்களையுடைய சேயோனே! மண்டு அமர்கடந்த வென்ற ஆடு அகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள் - மிக்குச் செல்கின்ற போர்களை முடித்த வென்று அடுகின்ற நின்னுடைய மார்பிடத்தே இரந்துவந்தோரைத் தழுவி வேண்டுவன கொடுத்துப் பாதுகாக்கும் உட்குதல் பொருந்திய நெடிய வேளே! பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள் - வானோரும் அந்தணரும் ஓதி ஏத்தாநின்ற பெரிய மறைமொழியாகிய திருப்பெயரையுடைய இறைவனே;

கருத்துரை : வீட்டினைப் பெறவேண்டுமென்று விரும்பி வந்தோர்க்கு அதனை அளித்து நுகர்விக்கும் பெரிய புகழையுடையோனே! இடுக்கட்பட்டெய்தினோர்க்கு அருள்பண்ணும் சேயோனே! மிக்குச் செல்கின்ற போரைவென்ற நின் மார்பகத்தே இரவலரைத் தழுவிக்கொண்டு அவர் வேண்டுவன வேண்டியாங்கு நல்கிப் பாதுகாக்கும் நெடியவேளே! தேவர் முதலிய பெரியோர் ஓதிப்பரவும் ஆறெழுத் தருமறை மொழியாகிய பெயரையுடைய இறைவனே என்பதாம்.

அகலவுரை : நசையுநர் என்றது கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டு பிறவித் துன்பங்கட்கு அஞ்சி வீட்டின்பத்தின்கண் விழைவுடையராய்த் தன்பாற் புகல்புக்க மெய்யறிவாளரை. இங்ஙனம் புகல் புக்கார்க்கன்றி வீட்டின்பத்தை ஆர்த்துதல் கூடாமையின் அடைந்தார்க்கே ஆர்த்துவன் என்பார், நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேராள என்றார். உன்னில் உன்னும் உன்னாவிடின் விட்டிடும் என்றெழுந்த சான்றோர் மொழியும் உணர்க. ஆர்த்தும் - நுகர்விக்கும். அலந்தோர் - தீவினைப் பயனாலே இவ்வுலகில் அல்லலுற்று அத்துயரந் தீர்தல் கருதித் தன்பால் வந்து குறையிரந்தோர் என்க. எனவே, அழியாத பேரின்பத்தை விரும்பி உலகை வெறுத்துத் தன் அடியடைந்த பெரியோர்க்கு அவ்வீட்டின்பத்தை நல்கி நுகர்வித்தலும் இம்மையிலே துயருற்று அத்துயர் தீர்ந்து இன்புற எண்ணித் தன்பாலடைந்தவர்க்கு அவர்படுந் துயரகற்றி இம்மை வாழ்க்கையின்பத்தை அளித்தலும் உடையன் முருகப் பெருமான் என்றவாறாம்.

மண்டமர் - மனவெழுச்சியானே மிக்குச் சேறற்குரிய போர்த்தொழில். போரின்கண் வென்றோர் அவ்வெற்றிக் கறிகுறியாகச் சூடும் வாகைமாலை புரளுதலாலே அவ்வெற்றியை மார்பின்மேல் ஏற்றி வென்றாடு அகலம் என்றார். அடு - ஆடு என முதனீண்டது. அடுதல் கொல்லுதல். அகலம் - மார்பு. பகைவரைக் கொன்று வாகைசூடும் மார்பிடத்தே இரவலரைத் தழுவித் தாங்கி என்க. இது, அப்பெருமானுடைய திருவருட் பெருமையை விதந்தோதியவாறு. நெடுவேள் என்றதன்கண், நெடுமை, இறைமைத்தன்மை குறித்து நின்றது. மதவேளின் இவ்வேள் வேறாம் வேற்றுமை தெரிய நெடுவேள் என்றார் எனினுமாம். பெரியோர் - தேவர் முதலியோர்; இனி இறைபணிநிற்கும் சான்றோருமாம். ஏத்தும் பெரும்பெயர் என்றது, ஆறெழுத்து மந்திரமாகிய பெரிய திருப்பெயரினை. அதனை ஏத்துதல் இடையறாது நாவானே பயிலுதல் என்க. இவ்வாறு பயிலுதல் இறை பணி நிற்பார்க்கு இன்றியமையாச் செயல் என்க; என்னை?

ஊனக்கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி
உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத்
தண்ணிழலாம் பதிவிதி எண்ணுமஞ் செழுத்தே 

என்னும் சிவஞான போதத்துச் சூத்திரத்தின்கண்,  (சிவஞான.9)

இவ்வான்மாக்களுக்கு ஞானம் பிரகாசித்தும் அஞ்ஞானத்தை வேம்பு தின்ற புழுப்போல நோக்கிற்றை நோக்கி நிற்குமாகலின் அது நீக்குதற்கு இவ்விடத்தே திருமந்திரத்தை விதிப்படி ஓதுதல் வேண்டும் என விதிக்கப்படுதலான். மேலும் இறைவன் திருப்பெயராகிய அம் மந்திரத்தை ஓதுதன் மாத்திரையே அவர் அளவிறந்த இன்பம் எய்தும் இயல்புடையராதலானும் பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் என்றார். இயவுள்-கடவுள்; தலைவனுமாம்.

இதுவுமது

275-281 : சூர் ...................... அளவையின்

பொருள் : சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி - சூரபன்மாவின் குலத்தை இல்லையாக்கின வலியுடைமையாலே மதவலி என்னும் பெயரை உடையோய், போர்மிகு பொருந - போர்த் தொழிலின்கண் மிகுகின்ற வீரனே! குருசில் - தலைவனே! எனப் பலயான் அறி அளவையின் ஏத்தி ஆனாது-என்று பலவற்றையும் யான் அறிந்த அளவானே புகழ்ந்து அமையாதே, நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின்-நின் தன்மை யெல்லாம் முற்ற அளவிட்டறிதல் பல் உயிர்க்கும் அரிதாகையாலே, நின் அடி உள்ளி வந்தனன் - நின் திருவடியைப் பெற வேண்டுமென்று நினைத்து வந்தேன், நின்னொடு புரையுநர் இல்லாப் புலமையோய் என - நின்னோடு ஒப்பாரில்லாத மெய்யறிவுடையோனே என்று, குறித்தது மொழியா அளவையின் - நீ கருதிய வீடுபேற்றினை விண்ணப்பம் செய்வதற்கு முன்னரே;

கருத்துரை : சூரபன்மாவின் குலத்தை இல்லையாக்கிய வலியாலே மதவலி என்னும் பெயருடையோனே! போரின்மிக்க வீரனே! தலைவனே! என யான் அறிந்த அளவானே புகழ்ந்து நின் தன்மையெல்லாம் முற்ற அளந்தறிதல் உயிராகிய எம்மனோர்க் கியலாமையான் இடையறாது நின் திருவடியைப் பெறவேண்டும் என்று நினைந்து வந்தேன் நின்னோடு ஒப்பாரில்லாத மெய்யறிவுடையோனே என்று கூறி நீ கருதிய வீடுபேற்றை விண்ணப்பம் செய்தற்கு முன்னரே என்பதாம்.

அகலவுரை : சூர் - சூரபன்மா. மருங்கு - குலம். மொய்ம்பு - வலி. சூரபன்மாவைக் குலத்தோடு இல்லையாக்கிய வலியுடைமையானே மதவலி என்னும் பெயருடையோனே என மொய்ம்பினை ஏதுவாக்குக. மதவலி: அன்மொழித்தொகை. பொருந - மறவனே. குரிசில்-தலைவன். நினது புகழை முற்றுமறிதல் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினேனாகிய எனக்கு இயலாதாகலின் என் சிற்றறிவிற்கெட்டிய அளவே புகழ்ந்து வந்தேன் என்க என்று, செவியறிவுறுத்துவார், யானறியளவையின் ஏத்தி என்றார். ஆனாது-அமையாமல், ஏத்துமளவி னமையாதே உள்ளிவந்தேன் என்க.

உயிர் இறைவனை அளவைகளானே அளந்து காண்டல் இயலாதென்றலின், நின்னளந்தறிதல் மன்னுயிர்க்கு அருமையின் என்றார். அருமை ஈண்டு இயலாமை குறித்து நின்றது. என்னை?

சிவனையவன் திருவடிஞா னத்தாற் சேரச்
செப்புவது செயல்வாக்குச் சிந்தை யெல்லாம்
அவனை அணு காவென்று மாத லானும்
அவனடியவ் வொளிஞான மாத லானும்  (சித்தியார் சுபக்.295)

என்றும்,

கண்டிடுங்கண் தனைக்காணா கரணம் காணா
கரணங்கள் தமைக்காணா உயிருங் காணா
உண்டியமர் உயிர்தானும் தன்னைக் காணா
துயிர்க்குயிராம் ஒருவனையும் காணா தாகும்
கண்டசிவன் றனைக்காட்டி உயிருங் காட்டிக்
கண்ணாகிக் கரணங்கள் காணாமல் நிற்பன்
கொண்டரனை உளத்திற்கண் டடிகூடிற் பாசம்
கூடாது கூடினும் குறித்தடியின் நிறுத்தே  (சித்தியார் சுபக் - 296)

என்றும் உயிர் இறைப்பொருளைக் காணமாட்டாமையும் காரணமும் தெரித்தோதுதலான் அறிக. இறையை அளந்தறிதல் மன்னுயிர்க்கியலாதாயினும் அவன் திருவடி உள்ளுதல் வாயிலாகவே அவன் திருவருள் பெறக்கூடும் ஆகலின், நின்னடி உள்ளுதலைச் செய்து வந்தேன் என்க என்றார். இறைப் பொருள் உவமையற்றதாகலின் நின்னொடு புரையுநர் இல்லாப் புலமையோய் என்றார். புரையுநர் - ஒப்பாவார். தனக்குவமை யில்லாதான் எனத் திருவள்ளுவனாரும் ஓதுதலறிக. அறிவே கடவுளாகலின், புலமையோய் என்றார். புலமை - அறிவுடைமை. குறித்தது என்றது, திருவடிப்பேற்றினை. எவ்விடத்தேனுமாக நீ கண்டுழி ஏத்திப் பரவி வணங்கி, செல்வ, புதல்வ, மகனே, கூற்றே, சிறுவ, குழவி, தலைவ, மார்ப, ஒருவ, மள்ள, வெறுக்கை, சொன்மலை, கணவ, மைந்தரேறே, செல்வ, கிழவ, ஏறே, முருக, இசைபேராள, சேஎய், நெடுவேஎள், இயவுள், மதவலி, பொருந, குருசில் எனப் பல யான் அறியளவையின் ஏத்தி அளந்தறிதல் அருமையின் உள்ளி வந்தேன்! புலமையோய் என மொழியா அளவையின் எனத் தொடர்பு காண்க. இனி 281- குறித்துடன் என்பது முதல், 286-நனிபல ஏத்தி என்னுந் துணையும் ஒருதொடர்; இதன்கண், முருகக் கடவுளின் பணியாளராகிய கூளியர் புதுவதாக வந்தோனைப்பற்றி அப் பெருமானிடம் விண்ணப்பித்தல் கூறப்படும்.

கூளியர் விண்ணப்பம்

281-286 : குறித்துடன் .............. ஏத்தி

பொருள் : குறித்து உடன் - இங்ஙனம் நீ விண்ணப்பித்தலைக்குறித்து அப்பொழுதே, வேறுபல் உருவிற் குறும்பல் கூளியர் - வேறு வேறாகிய பல வடிவினையுடைய குறிய பலராகிய பணியாளர், சாறு அயர் களத்தின் வீறுபெறத் தோன்றி - விழா வெடுத்த களத்தின்கண் தாங்கள் பொலிவுபெறத் தோன்றுமாறு தோன்றி, அளியன் தானே முதுவாய் இரவலன் - அளிக்கத் தக்கான் இவ்வறிவு வாய்த்தலையுடைய இரவலன், வந்தோன் பெரும் நின் வண்புகழ் நயந்து - வந்துளன் பெருமானே நின்னுடைய வளவிய புகழினை விரும்பி, இனியவும் நல்லவும் நனிபல ஏத்தி - கேட்டோர்க்கு இனியவும் உறுதிபயப்பனவுமாக மிக்க பலவற்றை வாழ்த்தி, என - என்று கூறாநிற்ப;

கருத்துரை : நினது வருகையைக் குறித்து அப்பொழுதே வேறு வேறாகிய வடிவமைந்த குறிய பலராகிய பணியாளர்கள் விழாக்களத்தே தோன்றுதல்போன்று பொலிவுறுமாறு தோன்றி இவன் அளிக்கத்தக்கான் அறிவு வாய்க்கப் பெற்றோன் பெருமானே! நினது வளவிய புகழை விரும்பி இனியனவும் உறுதி பயப்பனவுமாகிய பலவற்றையும் கூறிப் புகழ்ந்து வந்தனன், என முருகக்கடவுள் திருமுன்னர்க் கூறாநிற்ப என்பதாம்.

அகலவுரை : வேறுபல் உரு என்றது. ஒருவரை ஒருவர் ஒவ்வாத பலவேறு வடிவினையுடையார் என்றவாறு. குறும்பல் கூளியர் என்றதற்குக் குறியராகிய பல பூதங்கள் எனினுமாம். கூளியர், பணியாளருமாம். என்னை? நின்கூர் நல்லம்பிற் கொடுவிற் கூளியர் (புறம். 23: 4-5) என்புழியும் அஃதப் பொருட்டாகலான் என்க. சாறயர்களம் - திருவிழாக் கொண்டாடும் களம். சாறயர் களத்தின் வீறுபெறத் தோன்றி என்றதற்குத் திருவிழா நிகழும் களத்திற்றோன்றுமாறு போலப் பொலிவுறத் தோன்றி என்க.

அளியன் - அளிக்கத் தக்கான். பாதுகாக்கத் தக்கவன் என்றவாறு. தான்: அசை. முதுவாய் - அறிவு வாய்த்தலையுடைய. எனவே, மெய்யறிவு வாய்க்கப் பெற்றவன் ஆதலால், அளிக்கத்தக்கான் என்றவாறு. மெய்யறிவு வாய்த்தலாவது திருவடிப்பேறொன்றே மெய்ப்பொருள் அல்லாதன வெல்லாம் பொய் என்னும் அறிவு வாய்க்கப்பெறுதல் என்க. திருவடி யின்பத்தைப் பெற இரந்து நின்றானாகலின் இரவலன் என்றார் என்க. என என்னும் எச்சத்தை ஏத்தி என்பதன் பின்னாக இயைத்துக் கொள்க. இனியவும் நல்லவும் எனப்பட்டன. ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப என்பதுமுதல் குரிசில் என்னுந் துணையும் கிடந்த புகழ்மாலைகள் என்க. என்னை? அவை கேட்டற்கு இனியனவும் உறுதியளிப்பனவுமாகலின் என்க.

முருகப் பெருமான் பரிசில் நல்கும் மாண்பு

287-295 : தெய்வம் .............. நல்குமதி

பொருள் : தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் - தெய்வத்தன்மை யமைந்த வலிவிளங்கும் வடிவினையும், வான்தோய் நிவப்பின் தான்வந்து எய்தி - வானைத்தீண்டும் வளர்ச்சியினையும் உடைய தான் நினக்கு முன்னர் எழுந்தருளி, அணங்குசால் உயர்நிலை தழீஇ - வருத்தமமைந்த தெய்வத்தன்மையை உள்ளடக்கிக்கொண்டு, பண்டைத் தன் மணங்கமழ் தெய்வத்து இளநலம் காட்டி - முன்புண்டாகிய தனது மணங்கமழ்கின்ற தெய்வத்தன்மை பொருந்திய இளைய வடிவைக் காட்டியருளி, அஞ்சல் ஓம்புமதி அறிவல் நின் வரவு என - அஞ்சாதேகொள் வீடுபெற நினைத்துவந்த நின்னுடைய வருகையை யான் முன்னரே அறிவேன் என்று கூறி, அன்புடை நன்மொழி அளைஇ - நின்மேல் அன்புடைமைக்கு அறிகுறியாகிய நல்ல மொழிகளைப் பலகாலும் அருளிச்செய்து, விளிவு இன்று இருள் நிற முந்நீர் வளைஇய வுலகத்து - ஒருகாலத்தும் கேடின்றாக இருண்ட நிறத்தையுடைய கடலாற் சூழப்பட்ட இப்பேருலகத்தே, ஒரு நீயாகித் தோன்ற - ஒருவனாகிய நீயே யாண்டுமாகித் தோன்றுமாறு, விழுமிய பெறலரும் பரிசில் நல்குமதி - சீரிய பிறராற் பெறுதற்கரிய வீடுபேற்றினைத் தந்தருளுவான்.

கருத்துரை : தெய்வத்தன்மை யமைந்த வலிவிளங்கும் வடிவினையும், வானைத்தீண்டும் வளர்ச்சியினையும் உடைய தானே நின்முன்னர் எழுந்தருளிச் செய்து வருத்தமமைந்த தெய்வத்தன்மையை உள்ளடக்கிக் கொண்டு பழையதாய் மணங்கமழ்கின்ற தனது மூவாவிளநலத்தைக் காட்டியருளி அஞ்சாதே கொள்! நீ வீடுபெறக் கருதி வந்தமையை யான் முன்னரே அறிகுவன் என, நின்மேல் அன்புடைய மொழிகளைப் பலகாலும் கூறிக் கடல் சூழ்ந்த இப்பேருலகத்தே நீ ஒருவனே உளையாகித் தோன்றுமாறு சீரிய பிறராற் பெறற்கரிய வீட்டினைத் தந்தருள் செய்வன் என்பதாம்.

அகலவுரை : அவன்றானே அருள் செய்தாலன்றி மக்கள் முயற்சியால் அவனைக் காண்டல் இயலாதென்பது தோன்ற, தான் வந்தெய்தி என்றார். வந்தெய்துதலாவது தனக்கியல்பாக வியாபக நிலையினின்றே ஒரு கூற்றில் அன்பர்கள் நினைந்த வடிவில் அருளுருக்கொண்டு எழுந்தருளுதல். வான்றோய் நிவப்பின் தான் என்றது, எங்கும் நிறைவாகிய வியாபகத்தினையுடைய தன்னிலையினின்றும் என்றவாறு. அணங்கு - வருத்தம். இறைப்பொருளின் முழுநிலையின் உயிர் எவ்வாற்றானும் அறிந்து கோடல் இயலாமையின் அவ்வுயிர் உணர்ச்சி தழுவும் படியாகத் தான் எழுந்தருளி என்பார் அணங்குசால் உயர்நிலை தழீஇ என்றார். தனது உயர்நிலையாகிய வியாபகத்தைத் தன்னுள் அடக்கிக்கொண்டென்றவாறு. அவ்வுயர்நிலை என்றென்றும் உயிர் அறியவொண்ணாத நிலை என்க. அதனை அறியமுயன்று முடிவுபோகாது உயிர் வருந்துதல் இயல்பாகலின், அதனை அணங்குசால் உயர்நிலை என்றார். இளநலம் என்றது தனது மூவாவிளந்தன்மையை. இத்தன்மையுடைமையாலே இறைவனை முருகன் என வழங்குவாராயினர் என்க. தன் மூவா இளநலம் காட்டி எனவே, அங்ஙனம் காட்டுமாற்றால் தனக்கு மகன் முறைமைத்தான உயிரின் இளநலமும் உணர்த்தி என்றவாறாயிற்று. அங்ஙனம் உணர்த்தாக்கால் தனது இன்பவீட்டை ஆளுந்தன்மை உயிர்க்குண்டாதல் இல்லை என்க. இங்ஙனம் காட்டுமாற்றால் உயிரின் ஏகதேச உணர்ச்சியை மாற்றித் தனது வியாபக முழுதினும் வியாபிக்குமாறு செய்தலால் பின்னர் உயிர் அஞ்சவேண்டாமையின் அச்சம் போக்கி அஞ்சல் ஓம்புமதி என்று அபயம் அளித்து என்க.

விளிவின்று - கேடில்லாமல். விளிவின்று ஒரு நீயாகித் தோன்ற என்றது, அவ்விறைப்பொருள் நின்னில் வேறாகாது நீயேயாகித் தோன்றுமாறு என்றபடி. எனவே தான் அவன் என வேறுபாடின்றி அவனே ஒரு நீயாகிய உண்மை நினக்குத் தோன்றுமாறு செய்து என்றவாறு. அது நீயாகின்றாய் என்றவாறாம். இவ்வுண்மை உயிர்க்குத் தோன்றாமல் இதுகாறும் மறைத்துக் கொண்டு நின்றதனால், இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து என்றார். இவ்வுலகத்திலேயே இம்மையிலேயே வீடுபேறடைவாய் என்பார் உலகத்து ஒருநீயாகித் தோன்ற என்றார். இதனை,

புண்ணியமேல் நோக்குவிக்கும் பாவங்கீழ் நூக்கும்
புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தி னாலே
நண்ணியஞா னத்தினால் இரண்டினையும் அறுத்து
ஞாலமொடு கீழ்மேலும் நண்ணா னாகி
எண்ணுமிக லோகத்தே முத்திபெறும் இவன்றான்
எங்கெழில்என் ஞாயிறெமக் கென்றுகுறை வின்றிக்
கண்ணுதல்தன் நிறைவதனிற் கலந்து காயம்
கழிந்தக்கால் எங்குமாய்க் கருதரன்போல் நிற்பன்

எனவரும் சிவஞான சித்தியாரானும் அறிக. (சித்தியார் சுபக். 283) வீடுபேற்றிற் சிறந்ததொரு பேறு பிறிதின்மையின் விழுமிய பரிசில் என்றும், அதனைப் பெறுதல் மிகவும் அரிதாகலின் பெறலரும் பரிசில் என்றும் ஓதினார். மதி என்னும் முன்னிலையசை படர்க்கைக்கண் நல்குமதி என வந்ததனை இடவழுவமைதியாகக் கொள்க. இனிக் கூளியர் தோன்றி அளியன் இரவலன் ஏத்திவந்தோன் எனத் தான் வந்தெய்தி உயர்நிலை தழீஇக் காட்டி நன்மொழி அளைஇ உலகத்து ஒருநீயாகித் தோன்றுமாறு பரிசில் நல்கும் எனத் தொடர்பு காண்க. இனி 296-பலவுடன் என்பது முதல் 317, மலைகிழவோனே என்னும் நூல் முடிவுகாறும் ஒருதொடர். இதன்கண், அங்ஙனம் நல்குவோன் யார் என்றெழுந்த வினாவிற்குப் பழமுதிர்சோலைமலை கிழவோன் என விடுக்கும் வாயிலாய் அப்பழமுதிர்சோலை மலையின் வளமெலாம் தோன்ற அதன் அருவியைப் பாடுகின்றார் என்க. நக்கீரருடைய இனிய இச்செய்யுள் இறுதியில் வெள்ளமாகப் பெருகி ஓடுங் காட்சியை இப்பகுதியிற் காணலாம்.

பழமுதிர் சோலைமலையின் அருவி

295-304 : பலவுடன் ............. வீசி

பொருள் : பலவுடன் வேறு பல் துகிலின் நுடங்கி - பலவும் ஒருங்கே இயைந்த வேறு வேறாகிய பல துகிற் கொடிகளைப் போன்று அசைந்து, அகில் சுமந்து ஆரம் முழுமுதல் உருட்டி - அகிலை மேற்கொண்டு சந்தனமாகிய பெரிய மரத்தைத் தள்ளி, வேரல் பூவுடை அலங்குசினை புலம்ப வேர் கீண்டு - சிறு மூங்கிலினது பூவுடைத்தான அசைகின்ற கொம்பு தனிப்ப வேரைப் பிளந்து, விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த தண் கமழ் அலர் இறால் சிதைய - விண்ணைத் தீண்டுகின்ற நெடிய மலையிடத்தே ஞாயிற்றின் மண்டிலத்தைப்போல ஈக்கள் வைக்கப்பட்ட தண்ணியவாய் மணக்கின்ற விரிந்த தேன்கூடு கெட, நன்பல ஆசினி முதுசுளை கலாவ - நன்றாகிய பல ஆசினிகளுடைய முற்றிய சுளை தன்னிடத்தே கலக்க, மீமிசை நாக நறுமலர் உதிர-மலையின் உச்சியின் உண்டான சுரபுன்னையின் நறிய மலர்கள் உதிர, யூகமொடு மாமுக முசுக்கலை பனிப்ப - கருங்குரங்கோடே கரிய முகத்தையுடைய முசுக்கலைகளும் நடுங்க, பூ நுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசி - புகரை யணிந்த மத்தகத்தையுடைய பெரிய பிடியானை குளிரும்படி வீசி;

கருத்துரை : பலவேறு துகிற்கொடிகள் ஒருங்கே அசைந்தாற் போன்று அசைந்து, அகிலைச் சுமந்து சந்தனமரத்தைச் சாயத்தள்ளி, சிறு மூங்கிலின் கொம்பு தனிக்கும்படி வேரைப் பிளந்து விண்முட்டிய மலையின்மிசைத் தொடுத்த ஞாயிற்று மண்டிலத்தை ஒத்த தேனிறால்களைக் கெடுத்து ஆசினிப்பலாவின் சுளைகள் தன்னிடத்தே கலக்கச் சுரபுன்னையின் மலர்கள் உதிரக் கருங்குரங்குகளும் முசுக்கலைகளும் நடுங்காநிற்பப் பிடியானைகள் குளிர்ப்ப வீசி என்பதாம்.

அகலவுரை : பலவிடங்களினும் பல்வேறு அருவிகள் விழுதற்குப் பலவேறு துகிற் கொடிகள் அசைதல் உவமை. துகிற்கொடி ஈண்டு வெண்டுகிலாலாய கொடி என்க. அவிர்துகில் புரையும் அவ்வெள்ளருவி (குறிஞ்சி. 55) என்றும், அறுவைத் தூவிரி கடுப்பத்துவன்றி மீமிசைத் தண்பல இழிதரும் அருவி (புறம். 154:10-12.) என்றும் பிறரும் ஓதுதல் காண்க. அகின்மரம் மிதந்து வருதலாலே, அகில் சுமந்து என்றார். ஆரம் - சந்தனமரம். முழுமுதல் - பரிய அடிமரம். வாழை முழுமுதல் எனப் பிறாண்டும் (307) ஓதுதல் காண்க. வேரல் - சிறு மூங்கில். அலங்குசினை - அசைகின்ற கொம்பு. புலம்ப - தனிப்ப. புலம்பே தனிமை (உரி-33) என்பர் தொல்காப்பியர். கீண்டு -பிளந்து. பரிதி-ஞாயிற்று மண்டிலம்; இது, தேனிறாலுக்கு உவமை. நெடுவரை நேமியிற் றொடுத்த, சூர்புகலடுக்கத்துப் பிரசம், (238-9) என்பர் மலைபடுகடாத்தினும். தண்கமழ் அலர் இறால் - குளிர்ந்த மணம் நாறுகின்ற விரிந்த தேனடை. நன்பல ஆசினி. என்றதற்கு நல்ல பலாமரமாகிய ஆசினி எனினுமாம். ஆசினி-பலாமரத்தின் ஒரு வகை என்க. முதிர்ந்த சுளை என்பார் முதுசுளை என்றார். ஆசினிப் பலாப்பழம் முற்றி வெடித்துச் சுளைகள் அருவிநீரில் வீழ்ந்து கலக்க என்றவாறு. மீமிசை - மிகவும் உயர்ந்ததாகிய உச்சி. நாகம்-சுரபுன்னை. யூகம் -கருங்குரங்கு. பைங்கணூகம் பாம்புபிடித் தன்ன (சிறுபாண் -221) என்புழியும் காண்க. முசு - ஒருவகைக் குரங்கு; முசுக்கலை என்றது, அக்குரங்கில் ஆண் என்றவாறு.

கலையென் காட்சி உழைக்கும் உரித்தே,
நிலையிற் றப்பெயர் முசுவின் கண்ணும் (மரபியல், 45-46)

என்பது தொல்காப்பியம். பனித்தல்-நடுங்குதல். பூ-புகர். நுதல் - நெற்றி. இரும்பிடி-கரிய பெண் யானை; பெரிய பெண் யானையுமாம். குளிரைத் தாங்குவதில் யானைகள் சிறப்புடையன; அவைகளும் குளிர்ப்ப என்றது குளிர்மிகுதி கூறியவாறு.

இதுவுமது

304-315 : பெருங்களிற்று ............... சிலைப்ப

பொருள் : பெருங்களிற்று முத்தடை வான்கோடு தழீஇ - பெரிய யானையினுடைய முத்தை உடையவாகிய வெள்ளிய கொம்புகளை உள்ளடக்கி, தத்துற்று நன்பொன் மணி நிறம் கிளர-குதித்து நல்ல பொன்னும் மணியும் நிறம் விளங்கும்படி செய்து, பொன் கொழியா -பொடியான பொன்னைத் தெள்ளி, வாழை முழுமுதல் துமியத் தாழை இளநீர் விழுக்குதலை யுதிரத் தாக்கி - வாழையினது பெரிய முதல் துணியத் தெங்கினது இளநீரையுடைய சீரிய குலை உதிர அவ்விரண்டினையும் மோதி, கறிக்கொடிக் கருந்துணர் சாய-மிளகினது கொடியின் கரிய கொத்துக்கள் சாய, பொறிப்புற மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் கோழி வயப்பெடை இரிய - பீலியையுடைய புறத்தினையும் மடப்பத்தையுடைய நடையினையும் உடைய மயில்கள் பலவற்றோடே அஞ்சிக் கோழியின் வலியுடைய பேடைகள் கெட்டோட, கேழலொடு வெளிற்றின் இரும்பனை புன்சாயன்ன குரூஉ மயிர் யாக்கைக் குடாவடி உளியம் பெருங்கல்விடர் அளைச்செறிய - ஆண் பன்றியுடனே உள்ளே வெளிற்றினையுடைய கரிய பனையினது புல்லிய செறும்பை ஒத்த கரிய நிறத்தையுடைத்தாகிய மயிரினையுடைய உடம்பினையும் வளைந்த அடியினையுமுடைய கரடி பெரிய கல் வெடித்த முழைஞ்சிலே சேர, கருங்கோட்டு ஆமா நல்லேறு சிலைப்ப - கரிய கொம்பினையுடைய ஆமாவினுடைய நன்றாகிய ஏறுகள் முழங்காநிற்ப;

கருத்துரை : பெரிய களிற்றுயானைகளின் முத்துக்களையுடைய வெள்ளிய கொம்புகளை உள்ளடக்கிக் கொண்டு குதித்து நல்ல பொன்னும் மணியும் நிறம் விளங்கும்படி செய்து பொடியாகிய பொன்னைக் கொழித்துக் கொண்டு, வாழையின் பரிய அடிமரம் ஒடியவும் தெங்கின் இளநீர்க் குலை உதிரவும் அவற்றைத் தாக்கி, மிளகினது கொடியின் கரிய கொத்துக்கள் சாய, பீலியையுடைய மயில்களோடே கோழிப் பெடைகள் கெட்டோட ஆண்பன்றியும் பனையின் செறும்பு போன்ற கரிய மயிரையுடைய உடலையுடைய கரடிகளும் மலைமுழைஞ்சுகளிலே புக்கொடுங்கவும், கரிய கொம்பினையுடைய ஆமானேறுகள் முழங்கா நிற்பவும் என்பதாம்.

அகலவுரை : நிலவளங் கூறுவார் பெருங்களிறு என்றார். யானைக் கொம்பின்கண் முத்துக்கள் தோன்றுதலுண்மையின் முத்துடைக்கோடு என்றார். வான்கோடு-வெள்ளிய கொம்பு. குரூஉப்புலி பொருத புண்கூர் யானை முத்துடை மருப்பின், (516-7) என்றார் மலைபடுகடாத்தினும். தத்துறுதல்-குதித்தல். அருவி செங்குத்தான இடங்களிற் குதித்தது என்றவாறு. பொன்னையும் மணியையும் அருவி நீர் உராய்ந்தோடலின் அவையிற்றின் நிறம் அராவினாற் போன்று விளங்கின என்க. பொன் கொழித்தென்றது பொடியான பொன்னைத் தெள்ளி என்றவாறு. வாழைமரம் வலியற்றதாகலின் முழுமுதல் துமிய என்றார். துமியல்-முரிதல். தெங்கின் அடியிலே மோதிய அதிர்ச்சியாலே இளநீர்க்குலை உதிர்ந்ததென அருவியின் ஆற்றல் கூறினார். முதிர்ந்த குலை தாமே உதிருமாகலின் உதிரும் இயல்பில்லாத இளநீர்க் குலை உதிர்ந்தமை ஓதினார். தாழை-தெங்கு. தாக்கி - மோதி. கறிக்கொடி -மிளகுக் கொடி. அது கரிய நிறமுடைத்தாகலின் கருந்துணர் என்றார். கருங்கொடி மிளகின் காய்த்துணர் (521) என்றார் மலைபடுகடாத்தினும். பொறி -ஈண்டுப் பீலிக்கு ஆகுபெயர் என்க. பொறி என்றது பீலியிற்கண்களை. மஞ்ஞை - மயில். கோழியும் வயப்பெடையும் எனினுமாம். வயப்பெடை-வலியுடைய பெண் கோழி. வயவலி யாகும் (உரி-68) என்பது தொல்காப்பியம். இரிதல்-கெட்டோடுதல். கேழல்-ஆண்பன்றி. வெளிற்றின் இரும்பனை என மாறுக. இரும்பனை-கரிய பனை. சாய்-செறும்பு. உளியம் - கரடி. இரும்பனஞ் செறும்பி னன்ன பரூஉமயிர்ச் சிறுகட்பன்றி (277: 7-8) என்றார் அகத்தினும். விடர்-வெடிப்பு. அளை - முழைஞ்சு; குகை. ஆமா -காட்டான். சிலைப்ப-முழங்க. துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும், இசைப்பொருட் கிளவி என்மனார் புலவர், (உரி-60) என்பர் தொல்காப்பியர்.

இதுவுமது

315-317 : சேண் .................... மலைகிழவோனே

பொருள் : சேண்நின்று இழும் என இழிதரும் அருவி - மலையின் உச்சியினின்றும் இழும் என்னும் ஓசைபடக் குதிக்கும் அருவியையுடைய, பழமுதிர்சோலை மலைகிழவோன் - பழம் முற்றின சோலைகளையுடைய மலைக்கு உரிமையை உடையோனாகிய முருகப்பெருமான்.

கருத்துரை : மலையுச்சியினின்றும் இழும் என்னும் ஓசையுண்டாகக் குதிக்கும் அருவியையுடையதும் பழம் முற்றின சோலைகளையுடையதும் ஆன மலைக்கு உரிமையை உடையோனாகிய முருகப் பெருமான் என்பதாம்.

அகலவுரை : பழமுதிர்சோலை மலைகிழவோன் என உடம்பொடு புணர்த்தலால் அப்பழமுதிர்சோலை மலையின்கண்ணும் எழுந்தருளியிருத்தலும் உரியன் என்பதும் கொள்க. இது மொழிந்த பொருளோ டொன்ற அவ்வயின் மொழியாததனையும் முட்டின்று முடித்தல், என்னும் உத்தியாற் கொள்ளப்பட்டது.

இழும் : ஒலிக்குறிப்பு. இழுமென்று வந்தீங் கிழியு மலையருவி, (சிலப் - குன்றக்குரவை) என்றார் இளங்கோவடிகளும். அருவிமலை பழமுதிர். சோலைமலை எனத் தனித்தனி கூட்டுக. முருகப் பெருமான் குறிஞ்சி நிலக் கடவுள் என்பது பற்றி இவ்வாறு அருவி பாய்கின்ற வளமுடைய மலைகட்கு உரிமையுடைய முருகக் கடவுள் என்பார், பழமுதிர்சோலை மலைகிழவோன் என்றார் அல்லது பழமுதிர்சோலை எனத் திருப்பரங்குன்றம் போன்றதொரு திருப்பதி உளதென்றுரைத்தார் அல்லது என்று கருதவும் இடலுண்டு. ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரையை நோக்குமிடத்து அவரும் பழமுதிர்சோலை என்பதனை மலைக்குரிய அடையாகக் கருதினர் என்பது விளங்கும். முருகப்பெருமான் மலைக்கு உரிய கடவுள் என்பதனை,

மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மையவரை யுலகமும்
வேந்தன் மேய தீம்புன லுலகமும்
வருணன் மேய பெருமண லுலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே  (தொல்-அகத்திணை - 5)

எனவரும் தொல்காப்பிய நூற்பாவானே உணரலாம். இனிப் பழமுதிர்சோலை என்பது, முருகப்பெருமானுடைய ஆறு படைவீடுகளுள் ஒன்றென்றும் அஃது இக்காலத்தே திருமால் திருப்பதியாக விளங்கும் (மதுரைக்கண்மையிலுள்ள) திருமாலிருஞ் சோலையேயாம் என்றும் சிலர் கூறுவர். அங்ஙனம் கூறுவோர் அது பண்டு முருகன் திருக்கோயிலாக இருந்ததற்குரிய சில சான்றுகளும் காட்டா நிற்பர். இச்செய்தி இன்னும் நன்கு ஆராய்ந்து முடிவு செய்யற்பாலது.

ஆசிரியர் நக்கீரனார் மலையின்கண் அருவியைச் சிறப்பிப்பார் போன்று முருகப் பெருமான் விரும்பியுறையும் மலையும் மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சிவளத்தை இப்பகுதியில் அழகாகப் புனைந்தோதியிருத்தல் காண்க. என்னை? யாண்டும் வெண்டுகிற் கொடி யசையுமாறு போன்று அருவிகள் நுடங்கிவீழ்தலும், ஆண்டு அகில் சந்தன முதலியன இருத்தலும் மூங்கில்கள் அடர்ந்திருத்தலும், மலைகளின் உச்சியிலே ஞாயிற்று மண்டிலம் போன்ற தேனிறால்கள் தூங்குதலும் ஆசினிப் பலாமரங்கள் பழுத்துதிர்தலும் சுரபுன்னைகள் பூத்துச்சொரிதலும் கருங்குரங்குகளும் முசுக்கலைகளும் திரிதலும் பிடியானைகளும் களிற்று யானைகளும் திரிதலும் பொன்னும் மணிகளும் திகழ்ந்து விளங்குதலும் பரிய வாழைகளும் தெங்குகளும் அடர்ந்திருத்தலும் வளமிக்க மிளகுக்கொடிகள் அடர்ந்து படர்ந்து காய்த்துக் கிடத்தலும் தோகையையுடைய மயில்களும் கோழிகளும் திரிதலும் பன்றிகளும் கரடிகளும் மலை முழைஞ்சுகளிலே பதுங்கிக் கிடத்தலும் ஆமானேறுகள் இடியென முழங்குதலும் உச்சியினின்றும் அருவிகள் இழுமென்னும் ஓசையோடே குதித்தலும் பழம் முதிர்ந்த சோலைகள் அடர்ந்து நிற்றலும் ஆகிய இனிய மலைக் காட்சிகள் எத்துணை அழகாக 296 ஆம் அடி முதல் இறுதிகாறுமமைந்த 22 அடிகளிலே கண்கூடாகத் தோற்றம் அளிக்கின்றன காண்மின்.

இனி, 265 பலவுடன் என்பது முதல் நுடங்கிச் சுமந்து உருட்டி வேர் கீண்டு இறால் சிதையச் சுளைகலாவ மலர் உதிர யூகமொடு முசுக்கலை பனிப்பப் பிடி குளிர்ப்ப வீசிக் களிற்றின் கோடு தழீஇத் தத்துற்றுப் பொன் மணி நிறம் கிளரக் கொழித்துத் துமிய உதிரத்தாக்கிச் சாயவெரீஇ இரியச் செறியச் சிலைப்ப இழும் என இழிதரும் அருவியையும் சோலையையும் உடைய மலைகிழவோன் என வினை முடிவு காண்க. இதன்கண் ஒரு பெரிய அருவிக் காட்சியைக் கண்டின்புறுக. இனி, கணவன் மார்பினன் சென்னியனாகிய சேஎயின் சேவடி படரும் உள்ளமொடு செல்லும் செலவை நீ நயந்தனையாயின் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப இன்னே பெறுதி நீ முன்னியவினை; அது பெறுதற்கு அவன் உறையும் இடம் கூறக் கேள் : அவன் குன்றமர்ந் துறைதலும் உரியன்; அதாஅன்று, அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பு; அதாஅன்று, குன்றுதோறாடலும் நின்றதன் பண்பு; அதாஅன்று, விழவின் கண்ணும், நிலையின் கண்ணும் கந்துடை நிலையினும் களன் காடு முதலியவற்றினும் உறைதலும் உரியன்; இது யான் அறிந்தபடியே கூறினேன்; யான் கூறிய இடங்களினாதல் வேறிடங்களினாதல் அவனை முந்துநீ கண்டுழி ஏத்திப் பரவி வணங்கி யானறி யளவையின் ஏத்தி நின்னடி உள்ளி வந்தேன் என்று நீ குறித்தது மொழியா அளவை, கூளியர் தோன்றிப் பெரும! அளியன்! இரவலன் ஏத்திவந்தோன், எனக்கூற அவனும் தானே வந்தெய்தி, தழீஇக்காட்டி அஞ்சலோம்பென்று நன்மொழி அளைஇ ஒருநீயாகித் தோன்றும்படி பரிசில் நல்கும் (அவன் யாரெனில்) பழமுதிர்சோலை மலைகிழவோன் என இப்பாட்டின் தொடக்க முதல் முடிவுகாறும் தொடர்ந்த வினைகளை முடிவு செய்க.

தனிப்பாடல்கள்

இனி, இத் திருமுருகாற்றுப்படையின் பின்னர், பிற்றை நாட்சான்றோர் இயற்றியமைத்தனவாகக் காணப்படும் இனிய வெண்பாக்கள் பத்துள்ளன; அவை:

குன்றம் எறிந்தாய்! குரைகடலில் சூர் தடிந்தாய்!
புன் தலைய பூதப் பொரு படையாய்!  என்றும்
இளையாய்! அழகியாய்! ஏறு ஊர்ந்தான் ஏறே!
உளையாய்! என் உள்ளத்து உறை.  1

குன்றம் எறிந்ததுவும், குன்றப் போர் செய்ததுவும்,
அன்று அங்கு அமரர் இடர் தீர்த்ததுவும்,  இன்று என்னைக்
கைவிடா நின்றதுவும், கற்பொதும்பில் காத்ததுவும்,
மெய் விடா வீரன் கை வேல்!  2

வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல்,  வாரி
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை. 3

இன்னம் ஒரு கால், எனது இடும்பைக் குன்றுக்கும்,
கொல் நவில் வேல் சூர் தடிந்த கொற்றவா!  முன்னம்
பனி வேய் நெடுங் குன்றம் பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும். 4

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்;
பின்னை ஒருவரை யான் பின்செல்லேன்பன்னிரு கைக்
கோலப்பா! வானோர் கொடிய வினை தீர்த்தருளும்
வேலப்பா! செந்தி வாழ்வே! 5

அஞ்சும் முகம் தோன்றின், ஆறுமுகம் தோன்றும்;
வெஞ் சமரில்,அஞ்சல் என வேல் தோன்றும்;  நெஞ்சில்
ஒரு கால் நினைக்கின், இரு காலும் தோன்றும்
முருகா! என்று ஓதுவார் முன். 6

முருகனே! செந்தி முதல்வனே! மாயோன்
மருகனே! ஈசன் மகனே!  ஒரு கை முகன்
தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன், நான். 7

காக்கக் கடவிய நீ காவாது இருந்தக்கால்,
ஆர்க்குப் பரம் ஆம் அறுமுகவா!  பூக்கும்
கடம்பா! முருகா! கதிர் வேலா! நல்ல
இடம்காண்; இரங்காய், இனி! 8

பரங்குன்றில் பன்னிரு கைக் கோமான்தன் பாதம்
கரம் கூப்பி, கண் குளிரக் கண்டு,  சுருங்காமல்,
ஆசையால், நெஞ்சே! அணி முருகு ஆற்றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல். 9

நக்கீரர்தாம் உரைத்த நல் முருகு ஆற்றுப்படையை
தற்கோல, நாள்தோறும் சாற்றினால்,  முன் கோல
மா முருகன் வந்து, மனக் கவலை தீர்த்தருளி,
தான் நினைத்த எல்லாம் தரும். 10

திருமுருகாற்றுப்படையை நாடொறும் ஓதும் சான்றோரால் கீழ்வரும் கட்டளைக் கலித்துறையும் ஓதப்படுகின்றது.

ஒருமுரு காவென்றன் உள்ளங் குளிர உவந்துடனே
வருமுரு காவென்று வாய்வெரு வாநிற்பக் கையிங்ஙனே
தருமுரு காவென்று தான்புலம் பாநிற்பத் தையல்முன்னே
திருமுரு காற்றுப் படையுட னேவருஞ் சேவகனே.

முருகவேளை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய  திருமுருகாற்றுப்படையும் அதற்குப் பெருமழைப் புலவர், பொ.வே. சோமசுந்தரனார் எழுதிய உரையும் முற்றுற்றன.

 
மேலும் திருமுருகாற்றுப்படை »
temple news
பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. சிவனுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar