சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே சாமிநாதபுரம் மதுரைவீரன்சாமி, செல்வ விநாயகர், காளியம்மன், செல்லாண்டியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி நேற்று முன்தினம் ராமேஸ்வரம்,திருச்செந்தூர், அழகர் கோயில் மலை, வைகை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவில் முன் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து புண்யாஹவாச நீர்வழிபாடு, பஞ்சகவ்ய சேகரம், ஜேஷ்ட தேவி வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, வாஸ்து வழிபாடு,மஹா சங்கல்பம், கலச பூஜை, கோமாதா பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று கடம் புறப்பாட்டைத் தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்றி, கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் தி.மு.க., மாவட்ட பொருளாளர் க.விஜயன், ஒன்றிய செயலாளர் சேக் சிக்கந்தர் பாட்சா உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.