தங்கக் குதிரை ஜொலிக்க.. பக்தர்கள் வெள்ளத்தில் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2023 06:05
மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி காலை நடைபெற்றது. அழகர் பச்சை பட்டு உடுத்தி, ஆண்டாள் சூடிய பரிவட்டம் மாலை ஆகியவற்றுடன் பக்தர்கள் வெள்ளத்தில், ஜொலித்த தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார்..
மதுரையில் வருடம் முழுவதும் உற்சவங்கள் நடைபெற்றாலும் மிகவும் பிரசித்தி பெற்றவை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் தான். இன்று முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. அழகர் பச்சை பட்டு உடுத்தி, ஆண்டாள் சூடிய பரிவட்டம் மாலை ஆகியவற்றுடன் பக்தர்கள் வெள்ளத்தில், ஜொலித்த தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். அழகர் வைகை ஆற்றில் இறங்கியதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். விழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் தண்ணீரை பீச்சியடித்து சாமி தரிசனம் செய்தனர். நாளை (மே.6) ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாளை 6ம் தேதி வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து சேஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்பட்டு, பின்னர் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல் வைபவமும், இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 7 ம்தேதி அதிகாலை மோகினி அவதாரத்தில் கள்ளழகர் காட்சியளிக்கிறார். பிற்பகல் ராஜாங்க அலங்காரத்தில் கள்ளழகர் அனந்தராயர் பல்லக்கில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுகிறார். 8 ம்தேதி அழகர் மலைக்கு பூப்பலாக்கில் திரும்புதல் வைபவம் நடைபெறுகிறது. 9ம் தேதி காலை 11.30 மணிக்குள் அழகர் மலை சேருவார். 10ம் தேதி அழகர் கோவிலில் உற்சவ சாற்று முறை நடைபெறுகிறது.
கள்ளழகருக்கு எதிர் சேவை: மதுரை வைகை ஆற்றி்ல் அழகர் இறங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு, முன்னதாக அழகர்மலையில் இருந்து புறப்பட்டு நேற்று தல்லாகுளம் பகுதி வந்த அழகரை வரவேற்கும் விதமாக எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் சர்க்கரை கிண்ணத்தில் நெய் தீபம் ஏற்றி கள்ளழகருக்கு வரவேற்பு அளித்தனர். வராரு..வராரு..அழகர் வராரு பாடல் எங்கும் எதிரொலிக்க மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.