அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தெப்போற்சவம் : ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2023 11:05
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழாவின், தெப்போற்சவத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள வெகு விமர்சையாக நடைபெற்றது.
அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த 2,3 மற்றும் 4ம் தேதிகளில்,பெரிய தேர் மற்றும் அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, 12ம் நாள் தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்தேர் உற்சவம் கோவில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத சந்திரசேகர பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி நான்கு ரத தேர் வீதிகளிலும் உலா வந்து கட்டளைதாரர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது .அதனையடுத்து அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் சாமி எழுந்தருளி ஐந்து முறை குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் குழந்தைகள்,பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டு கழித்தனர். தெப்பதேர் நிகழ்ச்சியை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அவிநாசி தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.