கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் சித்திரை விழா நிறைவு : பூப்பல்லக்கில் சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2023 08:05
ஆண்டிபட்டி: ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவின் நிறைவு நாளான 10ம் நாளில் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியருடன் பூப்பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இக்கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 25-ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமி திருக்கல்யாணம், திருத்தேர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்கு பின் மே 4, 5 தேதிகளில் நடந்த தேரோட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். நேற்று முன் தினம் இரவில் நடந்த நிறைவுநாள் சிறப்பு நிகழ்ச்சியில் சுவாமிக்கு 11 வகையான அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் செய்தனர். பின்னர் பூப்பல்லக்கில் கதலி நரசிங்க பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் முக்கிய வீதிகள் வழியாக சிறப்பு நாதஸ்வரம் மேளம் முழங்க வலம் வந்து அருள் பாலித்தார். சக்கம்பட்டி நாயுடு சமூகம் சார்பில் நடந்த மண்டகப்படி நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.