பதிவு செய்த நாள்
10
மே
2023
04:05
தொண்டாமுத்தூர்: பூண்டி, வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள், தங்களின் பழைய துணிகளை வனப்பகுதிக்குள் விட்டு செல்ல வேண்டாம் என, வனத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
தென் கைலாயம் எனப்படும் பூண்டி, வெள்ளியங்கிரி மலையில், 7வது மலை உச்சியில் சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க, கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி முதல், பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். மலையேறும் பக்தர்கள், வனப்பகுதிக்குள் பிளாஸ்டிக் மற்றும் துணிகளை விட்டு செல்ல வேண்டாம். எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல கூடாது எனவும் அறிவித்திருந்தனர். இதனால், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், வனத்துறையினர், மலை ஏறும் பக்தர்களை சோதனை செய்து தீப்பிடிக்கும் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தபின், பக்தர்களை மலையேற அனுமதித்து வருகின்றனர். இந்நிலையில், ஆறாவது மலையில், பக்தர்கள் விட்டு செல்லும் பழைய துணிகள், வனப்பகுதி முழுவதும் குவிந்துள்ளது. இதனால், வனப்பகுதி மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்," வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்களை, சோதனை செய்த பின்பே மலையேற அனுமதிக்கிறோம். சோதனையின் போது பிளாஸ்டிக் இருந்தால் பறிமுதல் செய்கிறோம். பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களுக்கு, வைப்புத்தொகை பெற்று கொண்டு, ஸ்டிக்கர் ஒட்டுகிறோம். கீழே இறங்கிய பின், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை பெற்றுக்கொண்டு, அவர்கள் செலுத்திய வைப்பு தொகையை அவர்களுக்கு திரும்ப கொடுக்கிறோம். இதனால், வனப்பகுதியில் பிளாஸ்டிக் வீசுவது தடுக்கப்பட்டுள்ளது. இதுவரை, பக்தர்களிடம் இருந்து, 10.85 டன் பிளாஸ்டிக் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆறாவது மலை ஆண்டி சுனையில் குளிக்கும் பக்தர்கள், தங்களது ஆடைகளை வனப்பகுதியில் வீசி செல்கின்றனர். வனத்துறை சார்பில் ஆறாவது மலையில் உள்ள தன்னார்வலர்கள், பக்தர்கள் வீசி செல்லும் பழைய துணிகளையும் எடுத்து, வெயிலில் காயவைத்து, மூட்டைக்கட்டி அடிவாரத்திற்கு கொண்டு வந்துள்ளோம். இதுவரை, பக்தர்கள் விட்டுச் சென்ற, 500 கிலோ துணிகளை, வனப்பகுதியில் இருந்து எடுத்து அடிவாரத்திற்கு கொண்டு வந்துள்ளோம். மலையேறும் பக்தர்கள், இயற்கையை பாதுகாக்கவும், புண்ணிய ஸ்தலத்தை சுத்தமாக வைத்திருக்கவும், வனப்பகுதியில் துணிகள் வீசி வருவதை நிறுத்த வேண்டும்,"என்றனர்.