பதிவு செய்த நாள்
11
மே
2023
09:05
சென்னை, வடபழநியில் அமைந்துள்ள ஆண்டவர் கோவில், முருகப் பெருமான் கோவில்களில் தொன்மையான தென்பழநிக்கு நிகரானது.
ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து, அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற்றும் தலமாகவும் இது திகழ்கிறது. தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது, இத்தலத்தை சுற்றியுள்ள மாடவீதிகள், குளக்கரைகள், பிரதான நுழைவாயில் ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. ஆற்காடு சாலையில் இருந்து வடபழநி ஆண்டவர் கோவில் நுழைவாயில் வரை, 40 அடி சாலை உள்ளது. சாலையின் இருபுறமும் கடைகள், உணவகங்கள் உள்ளன. கடைகளுக்கு வருவோர் தங்கள் வாகனங்களை, இச்சாலையை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர். பகல் நேரங்களில், கடைக்கு சரக்கு இறக்கும் வாகனங்களும், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. மேலும், புற்றீசலாக நடைபாதை கடைகள் ஆங்காங்கே முளைத்து விடுகின்றன. அவர்கள் சாலையை ஆக்கிரமித்து கடை விரிக்கின்றனர்.
மாநகராட்சியினர், போலீசார் வரும் நேரத்தில் மட்டும், தற்காலிகமாக கடையை காலி செய்கின்றனர். அவர்கள் சென்றவுடன், மீண்டும் கடை வைக்கின்றனர். இதன் காரணமாக, 40 அடி அகலமுள்ள சாலை, 20 அடி சாலையாக மாறிவிடுகிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், தவித்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சாலையின் இருபுறமும், நடைபாதைக்கான தடுப்பு வேலி அமைக்க வேண்டும். மேலும், சாலையின் நடுவே மீடியன் அமைப்பதன் வாயிலாக, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடைகள் முழுமையாக அகற்றப்படும். எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்து, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -நமது நிருபர் -