பதிவு செய்த நாள்
11
மே
2023
10:05
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில், தொல்லியல், ஹிந்து சமய அறநிலையத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.
இக்கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலை, இரவு என, உற்சவங்கள் நடந்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா செல்கிறார். ஐந்தாம் நாள் உற்சவமாக, மே 8ம் தேதி, சுவாமி கருட வாகனத்தில் சேவையாற்றினார். ஏழாம் நாள் உற்சவமான நேற்று, திருத்தேரில் சுவாமி வீதியுலா சென்றார். காலை, வேத மந்திர முழக்கத்துடன், ரத பிரதிஷ்டை ஹோமம் நடைபெற்று, ராஜ அலங்கார நித்ய கல்யாண பெருமாள், தேவியருடன், திருத்தேரில் எழுந்தருளினார். ரதாரோகண வழிபாடு நடைபெற்றதைத் தொடர்ந்து, காலை 10:40 மணிக்கு, பக்தர்கள் கோவிந்தா என முழங்கி, தேரை வடம் பிடித்து இழுத்தனர். சுவாமி மாடவீதிகளில் உலா சென்று, 11:10 மணிக்கு நிலையை அடைந்தார். பக்தர்கள் சுவாமியை தரிசித்து வழிபட்டனர். அன்னதானம் வழங்கினர். மாலை, வசந்த மண்டபத்தில் திருமஞ்சனம் நடந்தது. இரவு, தோளுக்கு இனியான் அலங்கார சுவாமி, வீதியுலா சென்றார். 13ம் தேதி தெப்போற்சவம் நடக்கிறது.