பதிவு செய்த நாள்
12
மே
2023
03:05
பேரூர்: பேரூரில், நூற்றாண்டு பழமையான ஆஞ்சநோயர் சுவாமி கோவில், பழுதடைந்திருந்ததால், புதிய கோவில் கட்டுவதற்காக, பழைய கோவில் இடிக்கப்பட்டது.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் உபகோவிலான ஆஞ்சநேயர் சுவாமி கோவில், பேரூரில் உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவில், பழுதடைந்திருந்ததால், இக்கோவிலை புனரமைக்க, அறநிலையத்துறையினர் திட்டமிட்டனர். 36.90 லட்சத்தில், புதிய கோவில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு அரசின் அனுமதி பெறப்பட்டது. இதனையடுத்து, கடந்த, நவம்பர் மாதத்தில், பாலாலயம் செய்யப்பட்டு, ஆஞ்சநேயர் சுவாமியை, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் வைத்துள்ளனர். இந்நிலையில், ஆஞ்சநேயர் கோவிலை புனரமைப்பதற்காக, பழைய கோவிலை இடித்து அகற்றும் பணி, வருவாய்த்துறையினர் மற்றும் அறநிலையத்துறையினர் முன்னிலையில் நேற்று நடந்தது. அதோடு, ஆஞ்சநேயர் கோவிலை ஒட்டியுள்ள குமாரசாமி மடத்திற்கு சொந்தமான இடத்தில், 20 அடி, பேரூர் கோவிலுக்கு தானமாக வழங்கியுள்ளனர். இதனால், அந்த இடத்தில் உள்ள கடையின் கட்டங்களையும் இடித்து அகற்றி, கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வாகனங்கள் பார்க்கிங் மற்றும் யானை குளியல் தொட்டிக்கு செல்லும் வகையில் பாதையும் அமைப்பதற்கான பணியும் நேற்று துவங்கியது. நேற்று இரவு நேரமாகியதால், கட்டங்களை இடிக்கும் பணி, இன்று (12ம் தேதி) காலை முதல் மீண்டும் இடிக்கும் பணி மேற்கொள்ளப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.