பதிவு செய்த நாள்
12
மே
2023
03:05
மேலுார்: திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்ட ரிஷபவாகனத்தை சுமப்பதற்கு சீர்பாதங்களை கோயில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்யாமல் பழைய சிதிலமடைந்த ரிஷபவாகனத்தில் சுவாமி புறப்பாடு செய்வது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலுார், திருவாதவூரில் திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் கோயில் உள்ளது. இக் கோயிலில் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி உள்ளிட்ட மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறும். இதில் பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி மாதம் திருவிழாவின் போது சுவாமி வாகனங்களில் புறப்பாடாகி கோயிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதோடு மேலூருக்கு எழுந்தருள்வார். சுவாமிகள் புறப்பாடாகும் வானகங்கள் அனைத்தும் சிதிலமடைந்ததால் சுவாமி புறப்பாடு நடைபெறவில்லல என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து புதிதாக அனைத்து வாகனங்கள் செய்யப்பட்டது. இதில் ஒரு சில வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. திருவாதவூர் பக்தர் கிருஷ்ணன் கூறியதாவது : வைகாசி மாதம் நடைபெறும் திருவிழாவின் போது சுவாமிகளை கொண்டு செல்லும் 40 சீர்பாதங்களுக்கு அறநிலையத்துறை சார்பில் ரூ.72 ஆயிரம் பணம் கொடுக்கப்படுகிறது. ஆனால் சுவாமி துாக்குவதற்கு பெயரளவில் சிறுவர்கள் மட்டுமே சீர்பாதங்களாக வருகின்றனர். அதனால் பல லட்சம் ரூபாயில் செய்யப்பட்ட ரிஷபவாகனம் 4 வருடங்களாக காட்சி பொருளாக காணப்படுகிறது. பழைய சிதிலமடைந்த ரிஷபவாகனத்தில் திருமறைநாதர், பிரியாவிடை மற்றும் வேதநாயகி அம்பாளுடன் கொண்டு செல்லப்படுவதால் சுவாமி புறப்பாட்டின் போது அசம்பாவிதம் நடக்கும் சூழ்நிலை உள்ளது. அதனால் வரும் 11 நாட்களில் நடைபெறும் வைகாசி திருவிழாவின் போது அறநிலையத்துறை உயரதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சுவாமி புறப்பாடு மற்றும் திருவிழா நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும் என்றார். பேஷ்கார் வெங்கடேசன் கூறுகையில், "சீர்பாத நிர்வாகிகளிடம் பேசி 40 சீர்பாதங்களை கொண்டு திருவிழாவை முறைப்படி நடத்த ஏற்பாடு செய்து வருகிறேன்" என்றார்.