கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயிலில் வருடாந்திர உற்ஸவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2023 10:05
சாயல்குடி: சாயல்குடி அருகே கூராங்கோட்டையில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற தர்மமுனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு கடந்த மே 5 அன்று காப்பு கட்டுதல் மற்றும் கொடி ஏற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் தர்ம முனீஸ்வரர் புஷ்ப அலங்காரத்துடன் பல்லக்கில் எழுந்தருளினார். வெள்ளி தாமரை, வெள்ளி திரிசூலம், திருப்பாதங்களுடன் குண்டாற்றுக்கு வேட்டை மார்க்கமாக துஷ்ட விக்கிரக சுத்த பரிபாலனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 5:00 மணியளவில் கோட்டை விநாயகர், பாலமுருகன், கருப்பசாமி, வீரசக்தி, தர்ம முனிஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு குண்டாற்றில் இருந்து தீர்த்தவாரி சென்று அங்கிருந்து கோயில் பூஜகர்களால் கோயிலுக்கு வந்தனர்.
நேர்த்திக்கடன் பக்தர்களால் பால்குடம், காவடி, அக்னி சட்டி, அலகு குத்துதல் உள்ளிட்டவைகள் நடந்தது. காலை 9.30 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு தர்ம முனீஸ்வரர் அருள்பாலித்தார். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.