மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2023 10:05
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் உள்ள மஹா மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 2ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினசரி அம்மன் கதை பாடும் பாரத நிகழ்ச்சி நடந்தது. மே. 9ம் தேதி காலை பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். மாலை ஊரணி பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். நேற்று காலை கழுமரம் ஏறும் நிகழ்வும், மதியம் காளி கோட்டை இடித்தல் நிகழ்வும் நடந்தது. மாலை கோவில் வளாகத்தில் தீமிதி விழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள், மஞ்சள் ஆடை அணிந்து பக்தியுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கீழ்ச்செருவாய் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.