உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே இறந்தவர்களுக்கு வைக்கப்படும் நடுகல்லில் மாடக்கோயில் அமைப்புடன் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று, மூன்று அடுக்காக ஒன்பது அடுக்குகளில் சிற்பங்களுடன் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. உசிலம்பட்டி அருகே ஜோதில்நாயக்கனூர் ஊராட்சி மீளாட்சிபுரம் கிராமத்தில் மாலைக்காடு என்ற பகுதி உள்ளது. இந்தப்பகுதியில் வசிக்கும் (கவுண்டர்) ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இறந்தவர்களின் நினைவாக நடுகல் வைத்து ஆண்டுதோறும் வழிபாடு செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் நடுகல் அமைக்க தோண்டியபகுதியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையானதும் சுமார் 6 அடி உயரத்திலுமான மாடக்கோயில் கல்தூண் போன்ற நடுகல் கிடைத்துள்ளது. இதனை மக்கள் எடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் : நடுகல்லில் ஒரு அடி நீள அகலத்தில் கிழக்கு, வடக்கு, தெற்கு பகுதிகளில் மூன்று பாகங்களாக பிரித்து சிற்பங்கள் செதுக்கியுள்ளனர். அந்த காலகட்டத்தில் வளமையாக வாழந்தவரின் நினைவாக இந்த கல் அமைக்கப்பட்டிருக்கலாம். கிழக்கு பகுதியில் மேல் பகுதியில் கையில் வில்லுடன் தலைவன் தலைவியும், இரண்டாவது பகுதியில் கன்று பால்குடிக்கும் நிலையில் மாட்டை பிடித்திருக்கும் பெண்ணும், மூன்றாவது பகுதியில் இசைக்கருவிகள் வாசிக்கும் சிற்பங்களும் உள்ளன. கல்லின் தெற்கில் பெண்ணுக்கு ருடைபிடித்தபடி உள்ள சிற்பமும், இரண்டாவது பகுதியில் ஆடு, மூன்றாவது பகுதியில் தலைவனும் தலைவியும் உள்ள சிற்பமும் செதுக்கியுள்ளனர். வடக்கு பகுதியில் புல்லாங்குழல் ஊதும் தலைவனும் தலைவியும், அடுத்து மாடு, குதிரை என மூன்று சிற்பங்களும் உள்ளன. மேற்குப்பகுதியில் சிற்பங்கள் இல்லாமல் உள்ளது. நடுகல்லில் இப்படி நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுடன் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும் என்றார்.